பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத்தில் 2026 அக்டோபர் 30, 31-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 30 அன்று காலை 9.30 மணியளவில் பனஸ்கந்தாவிலுள்ள கருமுட்டை பரிமாற்றத் தொழில்நுட்பம் – ஐவிஎஃப் ஆய்வகம், பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பண்ணையைப் பிரதமர் பார்வையிட உள்ளார். காலை 10.30 மணிக்கு பனஸ்கந்தாவில் ரூ.14,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி, புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அத்துடன் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ் 24-வது தவணையாக ரூ.19,000 கோடியை விடுவித்து, இரண்டு ரயில் சேவைகளைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
அதை தொடர்ந்து பிரதமர் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகருக்குச் செல்கிறார். மாலை 5 மணியளவில் பாரத் திருவிழா 2026-ஐ அவர் தொடங்கி வைக்கிறார். இரவு சுமார் 7.45 மணியளவில் ஒற்றுமை பிரகாச திருவிழா நிகழ்ச்சியை காண்கிறார். இரவு 8.15 மணிக்கு நர்மதை ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அக்டோபர் 31 அன்று காலை 9 மணியளவில் பிரதமர் ஒற்றுமை சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு காலை சுமார் 9.15 மணிக்கு ஏக்தா நகரில் ரூ.400 கோடிக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பின்னர் ஏக்தா நகரில் உள்ள ரெயின் ஃபாரஸ்ட், வாமன் விருக்ஷா வாடிகா ஆகிய பகுதிகளைப் பார்வையிடுகிறார். மாலை 5.30 மணிக்கு சர்தார் வல்லபாய் படேலின் 151-வது பிறந்த தினத்தையொட்டி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
பனஸ்கந்தாவில் பிரதமர்
குஜராத்தின் பனஸ்கந்தாவிலுள்ள பில்தியில் அமைந்துள்ள பாரத கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 127 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இம்மையம் சிறப்பு அதிநவீன மையமாக அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் கால்நடை இனப்பெருக்கம், மரபணு மேம்பாடு, நவீன இனப்பெருக்க தொழில்நுட்பம் ஆகியவற்றை வலுப்படுத்தும். இது இனப்பெருக்க முறையை 10 முதல் 20 மடங்கு வரை அதிகரிக்கும். இது கன்க்ரெஜ் இன மாடுகளுக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முதல் மையமாகும்.
தாரத், ரத்தன்பூர் ஆகிய இடங்களில் பனாஸ் பால் பண்ணை நிறுவனத்தின் இரண்டு உயிரி சிஎன்ஜி ஆலைகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இவை நாள் ஒன்றுக்கு முறையே 75 மெட்ரிக் டன், 100 மெட்ரிக் டன் சாணத்தைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டவையாகும்.
அகமதாபாத் மெட்ரோவின் இரண்டாம் கட்டம் – 2ஏ (விமான நிலைய விரிவாக்கம்), கட்டம் – 2பி (கிஃப்ட் சிட்டி விரிவாக்கம்) ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இவற்றின் இரண்டாம் கட்டத்தின் 2ஏ பகுதி, கோதேஷ்வர் சாலை முதல் விமான நிலையம் வரை 6 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் ஐந்து நிலையங்களைக் கொண்டிருக்கும். அதேபோல், 2பி பகுதி கிஃப்ட் சிட்டி முதல் ஷாபூர் வரை 3.3 கிலோமீட்டருக்கும் மேலான தொலைவில் மூன்று நிலையங்கள் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329999®=3&lang=1&_gl=1
***
SS/IR/ GS/PS