Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாரத ஸ்டேட் வங்கியுடன், அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆஃப் பிகானிர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகியவற்றை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி (துணை வங்கிகள்) சட்டம் 1959 மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் சட்டம் 1956 ஆகியவற்றை நீக்குவதற்கான மசோதாவை, நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த இணைப்பு நடவடிக்கையால், முதல் ஆண்டில் மட்டும் செயல்பாட்டு திறனை வலுப்படுத்துதல் மற்றும் செலவைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம், ரூ.1,000 கோடிக்கும் மேல் சேமிப்பு ஏற்படும். துணை வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் சர்வதேச இணைப்பு மூலம் பயனடைவார்கள். 6 வங்கிகள் தனித்தனியாக கண்காணிப்பதைவிட, அவற்றை இணைப்பதால், உயர் மதிப்பு கடன் வாய்ப்புகளை உன்னிப்பாக கண்காணிப்பது மற்றும் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் சிறந்த மேலாண்மைக்கு வழி ஏற்படும்.
பாரத ஸ்டேட் வங்கி சட்டம் 1995-ன் 35-வது பிரிவின் கீழ், மேற்கொள்ளப்படும் இந்த இணைப்பு நடவடிக்கை மூலம், வலுவாக இணைக்கப்பட்ட வங்கி உருவாக்கப்படும். இதன்மூலம், புவிஇடங்கள் அடிப்படையில், துணை வங்கிகள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் குறையும். இது செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், பொருளாதார அளவை அதிகரிக்கச் செய்யும். மேலும், இடர் மேலாண்மையை மேம்படுத்துவதுடன், ஒருங்கிணைந்த கருவூல செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்.

பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து வங்கித்துறையை வலுப்படுத்துவதன் முக்கிய நடவடிக்கையாக பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது அரசின் இந்திராதனுஷ் செயல்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இது வங்கித் துறையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திறனையும், வருவாயையும் அதிகரிக்கச் செய்யும்.