Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்ட செயல்பாட்டு விதிமுறைகள் – பிரதமர் வெளியிட்டார், சேஹோரில் நடைபெற்ற விவசாயிகள் நல்வாழ்வு கூட்டத்தில் உரையாடினார்.

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்ட செயல்பாட்டு விதிமுறைகள் – பிரதமர் வெளியிட்டார், சேஹோரில் நடைபெற்ற விவசாயிகள் நல்வாழ்வு கூட்டத்தில் உரையாடினார்.


மத்திய பிரதேச மாநிலம் சேஹோரில் நடைபெற்ற விவசாயிகள் நல்வாழ்வு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் செயல்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டார்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பலன்களை விவரித்த பிரதமர், கடினமான நேரங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு இது நல்ல தீர்வை வழங்கும் என்று கூறினார். மேலும் பிரதமர் கூறியதாவது: முன்னாள் பயிர் காப்பீட்டுத் திட்டங்களின் பிரச்சினைகளை தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து விவசாயிகளிடையே நம்பிக்கையை வளர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதை உறுதி செய்யவும் விவசாயிகள் இதன் பயனை அடையவும் திட்டத்தில் தொழில்நுட்பம் வெகுவாக பயன்படுத்தப்படும்.

விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விவரித்தார். பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பிரதமர் விளக்கினார்.

டிஜிட்டல் இந்தியா இயக்கம் குறித்து பேசுகையில் விவசாயிகள் இத்திட்டத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று பிரதமர் கூறினார். பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 2016 அன்று தேசிய வேளாண் அங்காடியின் கணிணி தளத்தை துவக்க உள்ளதாக அறிவித்தார். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு தக்க விலை கிடைக்கும்.

வேளாண் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள மண்வள அட்டைத் திட்டம், பிரதமரின் விவசாய நீர் பாசனத் திட்டம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விவசாயம், தேவையான அளவு யூரியா கிடைப்பதை உறுதி செய்வது போன்ற பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கூறினார்.

மத்திய பிரதேச மாநிலம் வேளாண் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக அம்மாநிலத்தின் முதலமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுஹான் மற்றும் அம்மாநிலத்தின் விவசாயிகளுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளையும் காப்பீடு சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.

***