பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜனவரி 17 18 ஆகிய தேதிகளில் அசாமுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஜனவரி 17-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், குவஹாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய போடோ கலாச்சார நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
ஜனவரி 18-ம் தேதி காலை 11 மணியளவில், பிரதமர் ₹6,950 கோடிக்கு மேல் மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நாகோன் மாவட்டத்தில் உள்ள கலியாபூரில் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
குவஹாத்தியில் பிரதமர்
குவஹாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானத்தில் போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான பகுரும்பா த்வோ 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்வில், போடோ சமூகத்தைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே நேரத்தில் பகுரும்பா நடனத்தை நிகழ்த்துவார்கள். மாநிலத்தின் 23 மாவட்டங்களில் இருந்து 81 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள்.
பகுரும்பா என்பது போடோ சமூகத்தின் நாட்டுப்புற நடனங்களில் ஒன்றாகும், இது இயற்கையால் ஆழமாக ஈர்க்கப்பட்டது. இந்த நடனம் பூக்கும் பூக்களை அடையாளப்படுத்துகிறது. மனித வாழ்க்கைக்கும் இயற்கை உலகிற்கும் இடையிலான நல்லிணக்கத்தை பிரதிபலிக்கிறது. பாரம்பரியமாக இளம் போடோ கலைஞர்களால் இணைந்து நிகழ்த்தப்படும் இந்த நடனம், பட்டாம்பூச்சிகள், பறவைகள், இலைகள், பூக்களைப் போன்ற மென்மையான அசைவுகளைக் கொண்டுள்ளது. நிகழ்ச்சிகள் பொதுவாக குழுக்களாக ஒழுங்கமைக்கப்பட்டு, நேர்த்தியாக காட்சியளிக்கும்.
பகுரும்பா நடனம் போடோ மக்களுக்கு ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது அமைதி, மகிழ்ச்சி, கூட்டு நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. மேலும் பிவிசாகு, போடோ புத்தாண்டு, டோமாசி போன்ற பண்டிகைகளுடன் தொடர்புடையது.
கலியாபூரில் பிரதமர்
₹6,950 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்குப் (என்ஹெச்-715-ன் கலியாபோர்-நுமலிகர் பிரிவின் 4-வழிப்பாதை) பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
86 கிலோ மீட்டர் நீளமுள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டம் சுற்றுச்சூழல் உணர்வுள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும். இது, காசிரங்கா தேசிய பூங்கா வழியாகச் செல்லும் 35 கிலோ மீட்டர் உயர வனவிலங்கு வழித்தடம், 21 கிலோ மீட்டர் புறவழிப் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை-715-ன் தற்போதைய நெடுஞ்சாலைப் பகுதியை நான்கு வழிச்சாலைகளாக 30 கிலோ மீட்டர் வரை அகலப்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்ட திட்டமாகும். பூங்காவின் வளமான பல்லுயிர் பெருக்க பாதுகாப்பை உறுதி செய்வதோடு பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் நாகோன், கர்பி அங்லாங், கோலாகாட் மாவட்டங்கள் வழியாகச் செயல்படுத்தப்படும். இது திப்ருகார் – தின்சுகியா இடையேயான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். உயர்த்தப்பட்ட வனவிலங்கு வழித்தடம் விலங்குகளின் தடையற்ற இயக்கத்தை உறுதி செய்யும். மனித-வனவிலங்கு மோதலைக் குறைக்கும். இது சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும். பயண நேரம் மற்றும் விபத்துகளைக் குறைக்கும். மேலும் பயணிகள், சரக்கு போக்குவரத்தை எளிதாக்கும். திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜகலபந்தா மற்றும் போககாட்டில் புறவழிச்சாலைகள் உருவாக்கப்படும். அவை நகரங்களின் நெரிசலைக் குறைக்கவும், நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்தவும், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களையும் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். குவஹாத்தி (காமாக்யா) – ரோத்தக் அம்ரித் பாரத் விரைவு ரயில், திப்ருகார்-லக்னோ (கோமதி நகர்) அம்ரித் பாரத் விரைவு ரயில் ஆகியவை அவை. இந்த புதிய ரயில் சேவைகள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் வட இந்திய மாநிலங்களுக்கும் இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான பயணம் எளிதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215248®=3&lang=1
***
TV/PLM/RK