செயலூக்கமான ஆளுகை, குறித்த நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட, தகவல் தொழில்நுட்பத்தால் இயங்கும் பல்முனைத் தளமான ‘பிரகதி’யின் 54-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் சேவா தீர்த்தத்தில் நடைபெற்றது. திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள தடைகளைக் களைவதற்கும், திட்டங்கள், நலத்திட்டங்களின் விநியோகத்தை மேம்படுத்துவதற்கும் இந்தத் தளம் மத்திய, மாநில அரசுகளை ஒன்றிணைக்கிறது.
இந்தக் கூட்டத்தின் போது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும், சுமார் ரூ. 16 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே, ஒற்றுமை மால்கள், மருந்து உற்பத்தி பூங்காக்கள் தொடர்பான உள்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் ஆய்வு செய்தார். பொருளாதார வளர்ச்சி மற்றும் பொது நலனுக்கு மிக முக்கியமான இந்தத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தபோது, அவற்றை முடிப்பதற்கான காலக்கெடு, பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, சிக்கல்களை உடனுக்குடன் தீர்ப்பது முதலியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசம், குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மொத்த மருந்து உற்பத்தி பூங்காக்களை ஆய்வு செய்த பிரதமர், தன்னிறைவை வலுப்படுத்த, மருந்துகளின் மூலப்பொருட்கள், அத்தியாவசிய உள்ளீடுகளின் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள இடைவெளிகளைக் களைவதற்கும், தகுதியுள்ள பயனாளிகளுக்குப் பலன்கள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர்களுடன் திட்டங்களின் வளர்ச்சி நிலைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தலைமைச் செயலாளர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார். செலவினங்களைக் காட்டிலும் விளைவுகளில் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுச் செலவினங்கள், மக்களின் வாழ்வில் உறுதியான முன்னேற்றங்களாக மாறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னேற விரும்பும் மாவட்டங்கள், முன்னேற விரும்பும் வட்டாரங்கள் முன்முயற்சிகளைக் குறிப்பிட்டு, பின்தங்கிய பகுதிகளில் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் ஒருங்கிணைப்பு, வழக்கமான கண்காணிப்பு, உள்ளூர் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் பங்கை அவர் எடுத்துரைத்தார். நிர்வாகத்தை வலுப்படுத்தவும், நலத்திட்டங்களை வழங்குவதை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகளால், சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னுரிமை அடிப்படையில் தடைகளை விரைந்து களையவும், மத்திய – மாநில அரசுகளுக்கும் பல்வேறு துறைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், உயர் மட்டத்தில் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். அனைத்து நிலைகளிலும் கூடுதல் பொறுப்புணர்வுடன் கூடிய முனைப்பான பணிக் கலாசாரத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய சவால்களை முன்கூட்டியே கண்டறிதல், உரிய நேரத்தில் முடிவுகளை எடுத்தல், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான தெளிவான பொறுப்புகளை நிர்ணயித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329801®=3&lang=1
***
SK/BR/SH
Chaired the 54th PRAGATI meeting yesterday. The focus areas: Reviewed projects worth over Rs. 16,000 crore across 31 States and UTs. Faster redevelopment of railway stations as multimodal hubs. Boosting self-reliance in pharma manufacturing. Ekta Malls to empower artisans and local businesses. The focus is clear…substantive outcomes, timely execution and long lasting benefits for people. https://t.co/EbUfWNEl7U
— Narendra Modi (@narendramodi) October 29, 2026