Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடி, லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான ஐந்து வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

பிரதமர் திரு நரேந்திர மோடி, லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான ஐந்து வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு நரேந்திர மோடி லடாக்கில், ரூ.3,350 கோடி மதிப்பிலான ஐந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களைத் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்பகுதியின் வளர்ச்சியில் புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், மின்சாரம், குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், பழமையான பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஜன்ஸ்காரில் பனிப்பொழிவுக்கு இடையே மூவர்ணக் கொடியை அசைத்த மக்களின் உற்சாகம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், இந்தக் கடினமாக பணிகளைச் சிறப்பாக நிறைவு செய்த பொறியாளர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் பணியாளர்கள், எல்லைச் சாலைகள் அமைப்பு ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி கூறினார். இத்திட்டங்களுக்காக லடாக் மக்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திரு மோடி தெரிவித்தார்.

லே-வில் உள்ள குஷோக் பகுலா ரின்போச்சே விமான நிலைய முனையத்திற்கு தான் ஏற்கனவே அடிக்கல் நாட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர், ரூ.650 கோடி மதிப்பிலான இப்புதிய முனையத்தைத் திறந்து வைத்தது மகிழ்ச்சியளித்ததாகக் கூறினார். விமானங்களின் செயல்பாட்டுத் திறனை மூன்று மடங்காக அதிகரிப்பதோடு வருடாந்திர பயனாளிகள் வரவு எண்ணிக்கையை 10 லட்சத்திலிருந்து 35 லட்சமாக இது அதிகரிக்கிறது. கடுமையான பருவநிலைக்கு ஏற்ப சூரிய சக்தியுடன் புவி வெப்பமூட்டும் வசதியைக் கொண்ட இந்தியாவின் முதலாவது முனையம் இதுவாகும். இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதே சூழலில், உள்ளூர் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். உள்ளூர் சுற்றுச்சூழலை முழுமையாக பாதுகாக்கும் அதே வேளையில் லடாக்கில் உள்கட்டமைப்பை உருவாக்குவதே தங்களுடைய நோக்கம் என்று திரு மோடி கூறினார்.

பிராந்தியப் போக்குவரத்து வசதியின் உத்தி சார்ந்த பொருளாதார முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், ரூ.2,500 கோடி மதிப்பிலான நிம்மு – பதும் – தார்சா சாலையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இது சாலைவழி பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக குறைக்கிறது. பயணிகளின் நேரத்தைச் சேமிப்பது மட்டுமின்றி இந்த முக்கியப் பாதை உள்ளூர் வணிகத்தையும் பெருமளவில் ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீநகர் – லே-யில் ஏற்கனவே மின் பரிமாற்றப் பாதையைத் திறந்து வைத்ததையடுத்து, தற்போது ஹனு நீர்மின் திட்டத்தையும் அதனோடு தொடர்புடைய மின் பரிமாற்றக் கட்டமைப்பையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். அத்துடன், புகா பள்ளத்தாக்கில் நவீன மின் உற்பத்தி முன்முயற்சிகள் நடைபெற்று வருவதையும் அவர் எடுத்துரைத்தார். தடையற்ற மின்சாரம் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றியமைக்கும் என்றும் வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதுடன் குழந்தைகளின் கல்வி, சுகாதார வசதிகள், சிறு தொழில்கள் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என்று அவர் விவரித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2323795&reg=3&lang=1

***

(Release ID: 2323795)

SS/IR/SM/SU