Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மனதின் குரல் நிகழ்ச்சியின் 140-வது அத்தியாயத்தில் 29.11.2026 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்


எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்களனைவரையும் வரவேற்கிறேன்.  மனதின் குரல், சமூகத்தின் அனைத்து பிரிவினர், தேசத்தின் அனைத்து பாகங்களின் சாதனைகளை முன்னிறுத்தும் ஒரு மேடை, மேலும் இதிலே நாம் சமூகத்தின் முன்பாக நிலவும் சவால்களைப் பற்றிப் பேசுகிறோம், மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறோம்.  இன்றைய மனதின் குரலிலே, நான் முதன்மையாகப் பேசவிருக்கும் விஷயம், போதைப்பொருள் பற்றியது.  நண்பர்களே, உலகில் இன்று பாரதத்தின் இளைஞர்களின் திறமைகள் பற்றி வியந்து பேசப்பட்டு வருகிறது.  நமது இளைஞர்கள், பெரிய பெரிய கனவுகளைக் காண்கிறார்கள், அவற்றை நிறைவேற்ற தங்களிடம் இருக்கும் அனைத்து ஆற்றலையும் அர்ப்பணித்து உழைக்கிறார்கள், ஆனால், இளைஞர்களின் இந்தக் கனவுகளின் முன்பாக, போதைப்பொருள் என்பது ஒரு பெரும்சவாலாக உருவெடுத்திருக்கிறது.  இன்று தேசத்திலே, போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தின் ஆக்கப்பூர்வமான தன்மை அதிகரித்து வருவது எனக்கு நிறைவை அளிக்கிறது.  போதைப்பழக்கம் இல்லா இளைஞர்கள் இயக்கமும் கூட வலுப்பெற்று வருகிறது.  இப்படி எத்தனையோ கருத்தூக்கமளிக்கும் எடுத்துக்காட்டுகள் நம்முன்பாக வருகின்றன.  பல இளைஞர்கள் தங்களுடைய முனைப்பின் துணையால், போதைப் பொருளின் போதையிலிருந்து மீண்டிருக்கிறார்கள், கடினமான சூழ்நிலைகளில் போராடி வெளியேறியிருக்கிறார்கள்.  அவர்கள் தங்களோடு போராடுவது மட்டுமல்லாமல், தங்களுடைய வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையையும் அளித்திருக்கிறார்கள்.  இன்று மனதின் குரலில் இப்படிப்பட்ட ஒரு இளைய நண்பருக்கு நான் தொலைபேசி அழைப்பு ஒன்றை விடுத்தேன்.  போதைப்பழக்கத்துக்கு எதிராக அவருடைய இந்த  வாழ்க்கைப் போராட்டம் எப்படி இருந்தது என்பதை நாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

#####

இளைஞர்:  வணக்கம் சார், எப்படி இருக்கீங்க நீங்க?

பிரதமர்:  வணக்கம்ங்க.  எனக்கு இன்னைக்கு ஒரு புதிய நண்பர் கிடைச்சிருக்காரு.  நான் உங்களை முன்னபின்ன சந்திச்சதில்லை, ஆனா நான் கேள்விப்பட்ட வரைக்கும்.

இளைஞர்:  ஆமாம் சார்.

பிரதமர்:  உங்ககூட பேசணும்னு என் மனசு விரும்பிச்சு.

இளைஞர்:  ஆமா சார், கண்டிப்பா.

பிரதமர்:  நண்பா, எப்படி நீங்க போதைப்பழக்கத்தில சிக்கினீங்கன்னு சொல்லுங்களேன்.

இளைஞர்:  சார்.  நான் தில்லி சதர் பஜார்ல வசிச்சிட்டு இருந்தேன்.  அங்க என் அம்மாவழிப் பாட்டியோட வீடு இருந்திச்சு.  அந்தப் பகுதியில இருந்த சூழல் எப்படீன்னா, சின்னச்சின்ன பசங்ககூட போதைப்பழக்கத்தில ஈடுபட்டிருந்தாங்க, அவங்களைப் பார்த்தப்ப அவங்க கண்கள் மங்கலா மயக்கமா இருந்திச்சு, அவங்க என்னவோ பண்றாங்கன்னு மட்டும் தெரிஞ்சுது.  அந்த நேரத்தில பள்ளிக்கூடத்தில என் சீனியர்களையும் பார்த்தேன்.   அவங்களும் கூட ஒரு வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்திட்டு இருந்தாங்க.  நான் அந்த விஷயங்களை அதிகம் கண்டுக்கலை.  பத்தாவதுல நான் சின்ன அளவுல போதைப்பொருளை எடுக்க ஆரம்பிச்சேன்.  மெல்ல மெல்ல, நான் எடுக்கற அளவு அதிகரிக்கத் தொடங்கிச்சு.  நான் ஏதோ ஒரு ஆர்வத்தில எடுத்துக்கப் போக அது எப்ப எனக்கு பழக்கமாவே மாறிச்சுன்னு தெரியலை, வேணும்னு நினைச்சா கண்டிப்பா வேணும்.  அத எடுக்காம என்னால எதையுமே செய்ய முடியலை.  எனக்கு ரொம்ப ஜாலியா இருந்திச்சு.  ஜாலியா ஒரு மயக்கம் வரும்ல அதுல தான் நான் ஆரம்பிச்சேன்.  ரொம்ப ஜாலியா இருந்திச்சு.  எவ்வளவு நல்லா இருந்திச்சுன்னா, எல்லாம் சரியா போயிட்டிருக்குன்னு தோணும்.  அட்டகாசம்!!  ஆனா இதுக்கு என்ன விலை கொடுக்க வேண்டியிருக்கும்னு எனக்கு அப்ப தெரியலை.

பிரதமர்:  நிறைய பணம் செலவு செய்ய வேண்டியிருந்திருக்குமே!!  இது காரணமா மேலும் நிறைய கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டிருக்குமே?

இளைஞர்:  ஆமாம் சார்.  வீட்டுல புத்தகம் வாங்கணும்னு காசு வாங்கிட்டுப் போவேன், இல்லை பள்ளிக்கூடக் கட்டணம்னு வாங்குவேன், சில சமயம் பிக்னிக் போகணும்பேன்.  ஆனா, அத்தனை பணத்தையும் போதைப்பொருள் வாங்க செலவழிச்சேன்.

பிரதமர்:  சரிங்க, உங்க போதைப்பழகக்த்திலேர்ந்து வெளிய வரணும்னு தீர்மானிச்ச, உங்க வாழ்க்கைக்கு ஒரு புதிய திசை அளிக்கக்கூடிய என்ன மாதிரியான திருப்புமுனை உங்க வாழ்க்கையில ஏற்பட்டிச்சுன்னு சொல்லுங்க. 

இளைஞர்:  சார், நான் தொடக்கத்தில என் அம்மாவழி தாத்தா பாட்டியோட தான் வசிச்சிட்டு இருந்தேன்.  எங்கப்பா எனக்கு சின்ன வயசா இருக்கும் போதே இறந்து போயிட்டாங்க, அப்ப எங்க பாட்டி என்னை அவங்க கூட கூட்டிட்டு வந்துட்டாங்க, என்னையும் எங்க அம்மாவையும் என் கூடவே இருங்கன்னு கூட்டிட்டு வந்துட்டாங்க.  மெல்லமெல்ல நான் வளர்ந்திட்டு வந்தேன்.  என் மேல பல கனவுகளை அவங்க வச்சிருந்தாங்க, நம்ம பையன் என்னைக்காவது ஒருநாள் நல்லபடியா வருவான்னு.  ஆனா அப்படி அவங்களுக்கு எதுவுமே தென்படலை.  முதல்ல எங்கம்மா இறந்தாங்க, பிறகு என் பாட்டியும் இறந்து போயிட்டாங்க.  எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சியா இருந்திச்சு ஏன்னா எனக்கு அந்த சமயத்தில அவங்களை விட்டா வேற யாரும் என்னை பார்த்துக்கறதுக்கு இல்லை.  நான் அனாதையாயிட்டேன், தெருவுக்கே வந்துட்டேன்.  நான் என் வாழ்க்கையை தெருவுலேயே கழிச்சேன்.  உருளைக்கிழங்கு பண்டத்தைத் தின்னேன், அன்னதானம் எடுத்துக்கிட்டேன், அதாவது, இந்த போதைப் பழக்கம் காரணமா ரொம்ப மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருந்திச்சு.  எனக்கு முன்னால மரணதேவன் நிக்கறா மாதிரி, என் கையை பிடிக்க முயலறா மாதிரி தோணும், ஆனா நான் அவன் என் சுண்டுவிரலை பிடிக்ககூட விடலை.  இதையெல்லாம் பார்த்துட்டு, நான் உள்ளுக்குள்ள நொறுங்கிட்டு இருந்தேன்.  இனி என்ன ஆகும், என் வீட்டுல எல்லாரும் என்னை ஒதுக்கிட்டாங்க, ஓரம்கட்டிட்டாங்க.  ஏன்னா எங்கப்பாவோ என் சிறுவயசிலயே இறந்துட்டாரா, எங்கம்மாவும் என்னை என் பாட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்களா, அங்க என் வீட்டு பக்கத்தில யாரோடயும் நான் தொடர்புல இல்லை.  எங்கப்பா வழி தாத்தா பாட்டியோடவும் எந்த தொடர்பும் இல்லை.  என்னால அவங்க பசங்களும் பாதிக்கப்படுவாங்களோங்கற பயத்தில, என் மாமா-மாமியும் கூட என்னை கைகழுவிட்டாங்க.  எந்த உறவுக்காரங்களும் என்னைக் கண்டுக்கவே இல்லை.  நான் மொத்தமா திசைமாறிப் போயிட்டேன்.  என் நண்பர்களும் போதைப்பழக்கத்துக்கு அடிமையா இருந்தாங்க.   எல்லா தப்புத்தண்டா செய்யறவங்க, போதைக்கு அடிமையான நண்பர்கள், அதாவது போதையில இருப்பது, அதை எப்படி அடையறது.  என்ன வேலை பார்க்கலாம்?  எப்படி தவறான வேலையை செய்யறது?  இந்த விஷயங்கள்ல தான் நான் மூழ்கிட்டேன். 

பிரதமர்:  இந்த நிலைமையில அப்படி என்ன திருப்பம் ஏற்பட்டிச்சு, நீங்க இந்த தீமைகள்லேர்ந்து, இந்த நரகவாழ்க்கையிலிருந்து வெளியேறணும்னு நினைச்ச கணம் என்னது?

இளைஞர்:  சார், அது என்ன சமயம்னா, எனக்கு ஒரு கூட்டாளி இருந்தான், அவன் எனக்கு ஓரளவுக்கு ஆதரவா இருந்தான்.  யப்பா, நான் போதைப் பழக்கத்தை விட்டொழிக்க விரும்பறேன், எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுன்னு நான் அவன்கிட்ட சொன்னேன்.  அவன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருந்திச்சு.  கடைசி நேரத்தில அவனும் கையை விரிச்சான், இல்லைப்பா இதில நான் உன்கூட ஒத்துழைக்க முடியாதுன்னுட்டான்.  நான் உடைஞ்சு போயிட்டேன், எனக்குன்னு இருந்த கடைசி ஆதரவும் அவன் தான், ஒரு போதையால எங்கம்மாவை இழந்தேன், பாட்டியை இழந்தேன், குடும்பத்தை இழந்தேன், கடைசிகடைசியா இவனையும் இழந்தேன்.  இனி திருந்தியே ஆகணும்னு தீர்மானிச்சேன்.  பிறகு எனக்கு மறுவாழ்வு மையம் பத்தி தெரிய வந்திச்சு, SPYM (Society for the Promotion of Youth and Masses) என்கிற இளைஞர்கள் மற்றும் வெகுஜனங்ளுக்கு ஆதரவளிக்கும் மையம் பத்தி தெரிய வந்திச்சு.  தலைமை அலுவலகம் தில்லியில இருக்கு வசந்த் குஞ்ஜ் பகுதியில.  நான் அங்க போனேன்.  அங்க சிகிச்சை எடுத்துக்கிட்டேன்.  தனியா இருந்தேன், சிகிச்சை எடுத்தேன், வெளிய வந்தேன், ஆனா மறுபடி தொத்திக்கிச்சு.  மறுபடி அவங்க கூப்பிட்டாங்க, வந்து எடுத்துக்க சொன்னாங்க.  இப்படி மூணு முறை சிகிச்சைக்கு போனேன். பிறகு நான் என் மொத்த பிரச்சினையையும் சொன்னேன், நான் தனியா இருக்கேன் அப்படீங்கறதை சொன்னேன்.  மையத்திலே இருந்து திரும்பிப் போனேன்னா, எங்க போகறதுன்னே எனக்குத் தெரியாது, எங்க வசிக்கறது, வீடு எங்க, ஒண்ணும் தெரியாது.  சுத்திச்சுத்தி திரும்பவும் போதைப்பழக்கத்தில மூழ்கியிருந்த அதே ஆளுங்க கிட்டவே போக வேண்டியிருந்திச்சு.  ஏன்னா எனக்கு வேற போக்கிடமே இல்லை, எங்க போய் நான் வசிப்பேன்?

பிரதமர்:  நீங்க ரொம்ப மோசமான நாட்களை கடந்திருக்கீங்க.  இந்த போதைப்பழக்கத்திலேர்ந்து வெளியேறக்கூடிய முயற்சியிலயும் இடர்களை சந்திச்சிருக்கீங்க.  அதாவது இந்தக் காலகட்டம் ரொம்பவே சவாலானதா இருந்திருக்கு.  ஏன்னா வெளியறும்னு விரும்பியும் கூட பிரச்சினை ஏற்பட்டிருக்கு.

இளைஞர்:  சார், என் மனசுக்குள்ள ஒரு குரல் சொல்லிக்கிட்டே இருந்திச்சு, விட்டொழின்னு.  இன்னொரு குரல் என்னன்னா, வாழப்போறது கொஞ்சகாலம் தான், அதனால சும்மா ஜாலியா வாழ்ந்திட்டு செத்துப் போயிடுன்னு சொல்லிச்சு.  நான் இந்தக் குரலைக் கேட்காம இன்னொரு குரல் சொல்றதைக் கேட்டேன், இல்லைப்பா நீ உன் வாழ்க்கையை திருத்திக்கங்கறதை.  நான் வாழ்க்கையில எனக்காக சிலதை செஞ்சுக்கணும், என்னால ஒண்ணும் சாதிக்க முடியாதுன்னு சொன்னவங்களுக்கு என்னால முடியும்ங்கறதை நிரூபிக்கணும்.  என்னை என் வீட்டுக்காரங்க ஒதுக்கிட்டாங்க, எல்லாரும் என்னை கைகழுவி விட்டுட்டாங்க. 

பிரதமர்:  உங்க சொந்த அனுபவங்களோட அடிப்படையில, இன்னமும் போதைப்பழக்கத்தில ஈடுபட்டுக்கிட்டு இருக்கற நாட்டோட இளைஞர்களுக்கு நீங்க செய்தி சொல்ல விரும்பினீங்கனா, அவங்களுக்கு நீங்க சொல்லக்கூடியது என்னவா இருக்கும்.

இளைஞர்:  சார், நான் அவங்ககிட்ட என்ன சொல்லிக்க விரும்பறேன்னா, தொடக்கத்தில இது காரணமா ரொம்பவே ஜாலியா இருந்திச்சு.  ஆனா அதுக்குப் பின்னால ஏற்படக்கூடிய கஷ்டம் இருக்கே, அதை நம்மோட சேர்ந்து நம்ம குடும்பமும் அனுபவிக்கும்.  இதனால எந்தவொரு ஆதாயமும் கிடையாது.  வெறும் பிரச்சினை, கஷ்டம், பிரச்சினை, கஷ்டம் மட்டும் தான், இதை விட்டா வேறா ஒண்ணும் இல்லை.  யாரு இந்த போதைக்கு அடிமையா இருக்காங்களோ, அவங்களுக்கு ஒரு சின்ன செய்தியை சொல்லிக்க விரும்பறேன்.  நம்ம வாழ்க்கை ரொம்ப அழகானது.  ரொம்ப நல்லது.  நாம அதை முறையா வாழணும், சும்மா காமாசோமானு எல்லாத்திலயும் ஜாலியா இருக்கணும்னு வாழக்கூடாது.

பிரதமர்:  சரி உங்ககூட உரையாடினதுல ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி.  நீங்க நடத்துன போராட்டத்தில ஜெயிச்சதுக்கு, உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.  நீங்க தொடர்ச்சியா வெற்றி பெறணும்.  மறுபடி இதில விழாம இருக்கணும்.  மேலும், நீங்க சந்திக்கறவங்களுக்கும் இத புரிய வையுங்க, நீங்க போகற பாதை தவறுன்னு.   

இளைஞர்:  சரி சார். தேங்க்யூ.

பிரதமர்:  பலப்பல நல்வாழ்த்துக்கள் நண்பா.  பலப்பல நல்வாழ்த்துக்கள். 

இளைஞர்:   தேங்க்யூ சார்.

பிரதமர்:  நண்பரே, நான் மீண்டும் உங்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.  நீங்க போதைப்பொருள் என்கிற பயங்கரமான பழக்கத்திலேர்ந்து வெளியேறியிருக்கீங்க.  மனசுல உறுதி மட்டும் இருந்திச்சுன்னா போதும், எந்த ஒரு இலக்கையும் சுலபமா அடையலாங்கற விஷயத்தை.  நீங்க சொன்னதைக் கேட்டு, போதைப்பழக்கத்திலேர்ந்து வெளியேற நினைக்கற பல இளைஞர்களுக்கும் சக்தி கிடைக்கும்.  குடும்பத்துக்காக, நாட்டுக்காக, இளைஞர்கள் போதைப்பழக்கத்திலேர்ந்து வெளியேறணும்.  போதைப் பழக்கத்தை விட்டொழிச்சதுக்கு உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். 

            எனதருமை நாட்டுமக்களே, வாழ்க்கையில் நாம் ஒன்றைப் புதிதாகக் கற்கும் வேளையிலே, ஒரு வித்தியாசமான ஆனந்தத்தை நாம் அனுபவிக்க முடிகிறது, அந்த வகையிலே கற்பதற்கு எந்த வயது வரம்பும் இல்லையே.  இன்று நான், உங்களுடன், புதிதாக ஒன்றைக் கற்கும் ஆர்வம் நிரம்பிய இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களைப் பற்றி பேச விழைகிறேன்.  இவர்களில் பலர் 20-25 ஆண்டுகளாக அரசுப்பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.  இத்தனை நீண்டநெடிய அனுபவத்தைத் தாண்டி, இவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றும் அதே நேரத்தில், சில புதிய விஷயங்களை கற்பதற்கும் நேரத்தை ஒதுக்குகிறார்கள்.   மேலும் இதன் பொருட்டு, அவர்கள் ஒரு டிஜிட்டல் தளத்தின் உதவியை நாடுகிறார்கள்.  இதன் பெயர் ஐகாட் கர்மயோகி ஆகும்.  இந்த தளத்திலே, அரசுப் பணியாளர்களுக்காக 17 இந்திய மொழிகளிலே, 7000த்திற்கும் மேற்பட்ட படிப்புகள் இருக்கின்றன.  இலட்சக்கணக்கான பணியாளர்கள் பல படிப்புகளை நிறைவு செய்திருக்கிறார்கள்.  சிலர் செயற்கை நுண்ணறிவு பற்றிப் படிக்கிறார்கள், சிலர் இந்திய குறியீட்டு மொழியைக் கற்கிறார்கள்.  செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் படிப்பு குறித்து நமது பணியாளர்களிடையே சிறப்பான ஆர்வத்தைக் காண முடிகிறது.  இதோடு இணைந்த 200க்கும் மேற்பட்ட படிப்புகளை, மூணேகால் கோடிக்கும் மேற்பட்டவர்கள் நிறைவு செய்திருக்கிறார்கள்.  நமது ஆஷா சகோதரிகள், ஆங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் என இவர்கள் அனைவரும் அரசு இயந்திரத்தின் எப்படிப்பட்ட நண்பர்கள் என்றால், இவர்களோடு அன்றாடம் நாட்டுமக்களுக்கு தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.  இந்த நண்பர்கள் புதிதாக ஒன்றை ஐகாட் கர்மயோகி வாயிலாக கற்கும் போது, இவர்கள் கர்மயோகி ஆகி விடுவதோடு, இதனால் ஆதாயம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது.  நண்பர்களே, குடிமக்களே இறைவர்கள் என்ற குறிக்கோள் தான் கர்மயோகியின் மூலமந்திரம் ஆகும்.  தேசத்தின் இலட்சக்கணக்கான அரசுப் பணியாளர்களிடம் கற்க வேண்டும் என்ற உற்சாகம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற பயணத்திற்கு மிகப்பெரிய சக்தியாகும்.

            என் மனம்நிறை நாட்டுமக்களே, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!  உங்களுடைய செல்பேசி எங்கோ தொலைந்து போனால், எத்தனை சிரமமாக இருக்கும்.  செல்பேசியில் உங்களுடைய தொடர்புகள், புகைப்படங்கள், முக்கியமான ஆவணங்கள், இன்னும் எத்தனையோ முக்கியமான தகவல்கள் இருக்கும்.  ஒருமுறை செல்பேசி தொலைந்து போனால், அதைத் திரும்ப பெறும் நம்பிக்கை மெல்ல மெல்ல குறைந்து போகத் தொடங்கும், ஆனால் இப்போது அப்படி அல்ல.  நீங்கள் உங்களுடைய தொலைந்து போன செல்பேசியைத் திரும்ப பெற முடியும்.  இதிலே பாரத அரசின் டிஜிட்டல் தளம் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.  அந்த தளத்தின் பெயர் சஞ்சார் சாதீ.  இதுவரை சஞ்சார் சாதி வலைவாசலுக்கு 30 கோடிக்கும் அதிகமானோர் வருகை புரிந்திருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 3 கோடி முறை இந்த செயலி தரவிறக்கம் செய்யப்பட்டு விட்டது. 

            நண்பர்களே, கேள்வி என்னவென்றால், சஞ்சார் சாதி, இந்தப் பணியை எப்படி புரிகிறது?  உள்ளபடியே, அனைத்து செல்பேசிக்கும் என ஒரு தனி அடையாளம் உண்டு.  இதை ஐ எம் ஈ ஐ எண் என்பார்கள்.  சஞ்சார் சாதீ இந்த அடையாளத்தின் துணையோடு உங்களுடைய தொலைந்து போன செல்பேசியைத் தேடுவதிலே உதவுகிறது.  நீங்கள் காவல் துறையினரிடம் புகார் அளிப்பதோடு கூடவே, சஞ்சார் சாதியிலும் உங்களுடைய செல்பேசியின் ஐ எம் ஈ ஐ எண்ணையும், சில முக்கியமான தகவல்களையும் அளித்து காணாமல் போன உங்களின் செல்பேசியை செயலிழக்கச் செய்யலாம்.  இதன் பிறகு எந்த ஒரு நபராலும் அதிலே சிம் அட்டையைப் பொருத்தி அதைப் பயன்படுத்த முடியாது.  ஆனால் இதன் சிறப்பம்சம் இதோடு முடிவு பெறுவதில்லை.  யாராவது அந்த செல்பேசியிலே புதிய சிம் அட்டையைப் பொருத்தி வலைப்பின்னலோடு இணைய முயன்றால், அவருடைய இருப்பிடம் தெரிந்து கொள்வது காவலர்களுக்கு சுலபமாகி விடும்.  நண்பர்களே, இந்த அமைப்பின் உதவியால் நாடெங்கிலும் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொலைந்துபோன செல்பேசிகள் மீட்கப்பட்டிருக்கின்றன, அவற்றின் உரிமையாளர்களிடம் அவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.  அதாவது எந்த செல்பேசி தொலைந்த பிறகு திரும்ப கிடைக்கும் நம்பிக்கையே இல்லையோ, இன்று தொழில்நுட்பத்தின் துணையோடு அதை மீட்டெடுக்கும் நம்பிக்கைக்கு உரம் சேர்த்திருக்கிறது. 

            நண்பர்களே, சஞ்சார் சாதீ பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுக்கிறது.  ஒருவேளை உங்களிடம் ஒரு செல்பேசி அழைப்பு வருகிறது, ஏமாற்றுவதற்காக ஒருமுறையே பயனாகும் கடவுச் சொல்லை உங்களிடம் கேட்கிறார் எனும் போது, இது ஏமாற்று வேலை என்று தெரிந்து நீங்கள் இணைப்பைத் துண்டிக்கிறீர்கள்.  ஆனால் நீங்கள் எந்த எத்தனிடமிருந்து தப்பினீர்களோ, அவன் அடுத்து ஏதோ ஒரு முதியவரை அழைத்து, அவரும் இவனுடைய வலையிலே விழுந்து விடுகிறார் என்று வைத்துக் கொள்வோமே!!   இந்த நிலையிலே நீங்கள் சஞ்சார் சாதீயிலே இந்த சந்தேகப்படக்கூடிய அழைப்பு பற்றிய தகவலை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.  புணேயிலே வசிக்கும் ஹிமான்சு சிங் அவர்கள் இப்படி 300க்கும் மேற்பட்ட எண்களைப் பற்றி சஞ்சார் சாதீயிலே புகார் அளித்திருக்கிறார்.  இவருடைய முயற்சி கடந்த ஓராண்டிலே, சுமார் 18,000 செல்பேசி இணைப்புகள் ரத்து செய்வதில் உதவியாக இருந்திருக்கிறது.  இப்படித்தான் ஆந்திர மாநிலத்தின் நெல்லூரிலே வசிக்கும் விவேக் அல்ஹரி அவர்களும் கூட.  ஒரு விழிப்பான குடிமகன் என்ற வகையிலே தன்னுடைய பங்களிப்பை ஆற்றி, சுமார் 900க்கும் மேற்பட்ட மோசடி எண்களை சஞ்சார் சாதீயிலே வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார்.  இவருடைய முயற்சி காரணமாக 17,000 செல்பேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதில் உதவிகரமாக இருந்திருக்கிறது.  நீங்களும் கூட இதிலிருந்து கண்டிப்பாக கற்றுக் கொள்ளலாம்.  உங்களுடைய இந்தச் சின்ன முயற்சியால், தேசத்தின் வேறோர் இடத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தின் ஆயுட்கால சேமிப்பு காப்பாற்றப்படலாம். 

            நண்பர்களே, சஞ்சார் சாதீயில் நமது வங்கிகள், பணப்பரிமாற்றப் பயன்படும் செயலிகள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், காவல் துறையினர் என, 1600க்கும் மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன.  இதன் காரணமாக சைபர் மோசடியின் பல முயற்சிகள், சரியான நேரத்திலே செயலிழக்கச் செய்யப்படுவதற்கு உதவிகரமாக இருக்கிறது.  இந்த அமைப்பின் உதவியோடு இதுவரை 5000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட அளவிலான மோசடிகள் தடுக்கப்பட்டிருக்கின்றன.  இந்தச் செயலி 23 மொழிகளிலே இருக்கிறது, இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிது.  நீங்களும் சஞ்சார் சாதீ பற்றி அதிகமானோருக்குத் தெரியப்படுத்துங்கள்.  நம்முடைய சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், டிஜிட்டல் உலகை நம்மனைவருக்கும் பாதுகாப்பானதாக ஆக்க முடியும்.

            என் கனிவான நாட்டுமக்களே, எப்போதெல்லாம் நான் புதியதோர் இடத்திற்கு வருகிறோமோ, அப்போது நமது ஆசை என்னவென்றால், அங்கே இருக்கும் புகழ்மிக்க இடங்களைப் பார்க்க வேண்டும், அங்கே இருக்கும் உணவுகளை சுவைத்துப் பார்க்க வேண்டும் என்பதாக இருக்கும்.  உங்களிடத்திலே எனக்கு ஒரு வேண்டுகோள்.  நீங்கள் சுற்றிப் பார்க்க எங்கே சென்றாலும், அங்கே இருக்கும் அருங்காட்சியகத்தை கண்டிப்பாக சென்று பாருங்கள்.   சில காலம் முன்புதான், இந்தியாவின் அருங்காட்சியகத்தோடு இணைந்த சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன, இவை அதிக உற்சாகத்தை அளிப்பவை.  நண்பர்களே, பட்னாவிலே இருக்கும் பிஹார் அருங்காட்சியகம், உலகின் 100 மிகச் சிறந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது.  இந்தப் பட்டியலிலே பிஹாரின் அருங்காட்சியகம் தான், ஒட்டுமொத்த ஆசியாவிலும் முதலிடம் வகிக்கிறது.  நீங்கள் பாரீஸ் நகரின் லூவ்ரு அருங்காட்சியகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  நியூயார்க்கிலே, தி மெட் அருங்காட்சியகம் தான் உலகின் மிகப் புகழ் வாய்ந்த ஒன்று.  பிஹாரின் அருங்காட்சியகம் இந்தப் பட்டியலிலே இந்த இரண்டையும் விட முந்தி இருக்கிறது.  நண்பர்களே, குஜராத்தின் வட்நகரிலும் கூட ஒரு மிகவும் வித்தியாசமான அருங்காட்சியகம் உண்டு.  இதன் பெயர் அனந்த் அனாதி வட்நகர் ஆர்கியலாஜிகல் எக்ஸ்பெரிமெண்டல் மியூசியம் ஆகும்.  வட்நகரிலே தொல்லியல் துறை நிலத்தைத் தோண்டிய போது, வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களோடு இணைந்த பல பொருட்கள் கிடைத்தன.  எந்த இடத்திலே தோண்டப்பட்டதோ, அதே இடத்தில் இந்த அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட்டது.  இங்கே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பாதையிலே பயணிக்கும் போது, பூமிக்கு பல மீட்டர் அடிவரை தோண்டப்பட்டிருப்பதை உங்களால் காண முடியும்.  வட்நகர் அருங்காட்சியகத்தின் 5000த்திற்கும் அதிகமான பண்டைய கலைப் படைப்புகளும் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.  இதே மாதத்தில் பெர்லின் நகரிலே, வட்நகர் அருங்காட்சியகத்திற்கு டிசைன் அதாவது வடிவமைப்பு உலகின் பெரிய விருதான ‘Red Dot: Best of the Best Award’ கிடைத்திருக்கிறது.  இத்தகைய பெருமையைப் பெற்றுள்ள பாரதத்தின் முதல் அருங்காட்சியகம் இதுதான்.   நண்பர்களே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உயிர்ப்போடு இருக்கும் வட்நகர், காசியைப் போலவே, தற்செயல் நிகழ்வை பாருங்கள்!!  வட்நகரிலே தான் நான் பிறந்தேன், காசியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன்.  சில நாட்கள் முன்பு தான் காஞ்சி காமகோடி பீடத்தீன் வணக்கத்திற்குரிய சங்கராச்சாரியாரும் கூட வட்நகருக்குச் சென்றிருந்தார்.  அவர் வட்நகரை, குஜராத்தின் காசி என்ற வகையில் அடையாளப்படுத்தியிருக்கிறார். 

            நண்பர்களே, கலையின் இந்த உலகிலேயும் கூட பாரதம் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது.  இத்தாலியின் வெனிஸ் நகரிலே ஒரு மிகவும் புகழ்மிக்க கலைக் கண்காட்சி நடக்கும், இதன் பெயர் வெனிஸ் ஆர்ட் பியன்னால்.  இதை கலையுலகின் ஒலிம்பிக் என்றும் அழைப்பார்கள்.  இந்த முறை அங்கே சுமார் நாலரை இலட்சம் மக்கள், பாரதத்தின் மண்டபத்திற்கு வந்து சுற்றிப் பார்த்தார்கள்.  இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், உலகெங்கிலுமிருந்தும் வந்த பார்வையாளர்கள் வாக்களித்து, பாரதத்தின் மண்டபம் தான் மிகச் சிறந்ந்தது என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.  பாரத நாட்டின் பாரம்பரியக் கலைகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து காட்சிப்படுத்தினால், அது மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறது என்று நமது கலைஞர்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.  நண்பர்களே, இப்போது பாரதத்திலும் கலை, சிற்பக்கலை, வடிவமைப்பு ஆகியவை தொடர்பாக மிகப்பெரிய உற்சாகம் கொப்பளிக்க இருக்கிறது.  டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திலே தில்லியிலே இந்தியா பியன்னால் தொடங்க இருக்கிறது.  இந்த முறை மொத்த 108 நாட்கள் வரை தேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியன இந்தக் கொண்டாட்டத்திலே பங்கெடுக்கும்.  உங்களனைவரிடமும் என்னுடைய விண்ணப்பம் என்னவென்றால், சற்று நேரம் ஒதுக்கி, உங்களுடைய குழந்தைகளையும் நீங்கள் இந்த ஏற்பாட்டிற்குக் கண்டிப்பாக கூட்டிச் செல்லுங்கள் என்பது தான்.  நமது பாரம்பரியம் குறித்து நாம் எத்தனை அதிகம் தெரிந்து கொள்கிறோமோ, பாரதத்தைப் புரிந்து கொள்ளும் நமது பயணம் அந்த அளவுக்கு நிறைவானதாக ஆகிக் கொண்டே இருக்கும்.

            எனதருமை நாட்டுமக்களே, குளிர்காலம் எனும் போது, வெல்லம் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியுமா?  குளிர்காலத்திலே நமது வீடுகளிலே சுவையும், ஆரோக்கியமும் அள்ளித்தரும் கருவூலம் வெல்லம்.  இன்று இது உலகெங்கிலும் சென்று சேர்கிறது.  தமிழ்நாட்டிலே, ஈரோட்டின் இயற்கையான பனை வெல்லம், முதன்முறையாக ஐரோப்பா சென்றிருக்கிறது.  இதிலே வெல்லத்தின் பாரம்பரியமான சுவையோடு கூடவே தரத்திலும் சிறப்பானது.  மனதின் குரலின் இந்தப் பகுதியில்,  நாம் முன்னே கூட தேனின் சுவை மற்றும் இனிமைப் புரட்சி குறித்து பேசியிருக்கிறோம்.  இப்போது நமது வெல்லத்தின் இனிமையும் கூட, புதியபுதிய சந்தைகளைச் சென்றடைந்து வருகிறது.

            நண்பர்களே, பாரதத்தின் சாக்லேட்டும் கூட உலகிலே தனது சிறப்பான முத்திரையைப் பதித்து வருகிறது.  கடந்த ஆண்டு, சாக்லேட் மற்றும் கோகோவால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி சுமார் 25 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  தேசத்தின் பல்வேறு இடங்களில் சாக்லேட் தயாரிக்கும் தொழில்முனைவோரும் கூட புதிய கருத்துக்களைப் புகுத்தி முன்னேறி வருகிறார்கள்.  இன்று இந்தத் துறையிலே, நமது பல ஸ்டார்ட் அப்புகள் புதுமைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  பல ஸ்டார்ட் அப்புகள் உள்ளூரிலே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு புதியபுதிய சுவைகளோடு தயாரித்து வருகிறார்கள்.  இதனால் நமது விவசாயிகள், தாய்மார்கள்-சகோதரிகள், இளைய தொழில்முனைவோர் என அனைவருக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.  நண்பர்களே, சாக்லேட்டுக்கும் குஜராத்தின் கட்சுக்கும் இடையே ஒரு அற்புதமான தொடர்பு இருக்கிறது எனபதை நீங்கள் அறிவீர்களா?  ஒரு தொடர்பு என்னவென்றால், ஒட்டகப்பாலில் தயாரிக்கப்படும் சாக்லேட்.  இங்கே ஒட்டகம் வளர்ப்பவர்கள் அளிக்கும் பாலை பயன்படுத்தி, சாக்லேட் கேசர் சுவை கொண்ட பால், ராஜ்போக் ஐஸ்கிரீம் தயாரிப்பதிலே அமுல் நிறுவனம் பயன்படுத்துகிறார்கள்.  ஒட்டகப்பாலோடு தொடர்புடைய புள்ளிவிவரங்கள் மிகவும் உற்சாகம் பயப்பதாகும்.  சர்ஹத் பால்பண்ணையிலே ஒட்டகப்பால் சேகரிப்பு தினசரி 1300 லிட்டரிலிருந்து அதிகரித்து, 5500 லிட்டர் வரை சென்றடைந்திருக்கிறது.  2017-18உடன் ஒப்பிடுகையில், இது நான்கு மடங்கு அதிகம்.  இப்போது ஒட்டகப்பால் பொதிகளில் அடைக்கப்பட்டு, இவை நீண்ட நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்படி செய்யப்படுகிறது.  இது தூளாகவும் தயார் செய்யப்படுகிறது.  இதனால் கட்சிலிருந்து தொலைவில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இது சென்று சேர முடிகிறது.  நண்பர்களே, ஒட்டகப்பாலிலே பல உடல்நல ஆதாயங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.  யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் இருக்கிறதோ, அவர்களுக்கு இது பயனுடையதாக கருதப்படுகிறது.  லேக்டோஸ் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இது மிகச் சிறப்பான மாற்றாக கருதப்படுகிறது.  இதிலே கொழுப்புச் சத்தும், கொலஸ்ட்ராலும் குறைவாக இருக்கிறது. 

            நண்பர்களே, சூரத்தின் ஷ்மிடன் சாக்லேட்டும் கூட இன்று இந்தியாவில் தயாராகும் சிறப்பான சாக்லேட்டாக உலகெங்கிலும் தனது சிறப்பான முத்திரையை ஏற்படுத்தி வருகிறது.  நமது தேசத்திலே இன்று பகட்டான சாக்லேட் பொடீக்குகள் என்ற புதிய போக்கும் காணப்படுகிறது.  இங்கே சாக்லேட்டுடன் கூடவே ஒரு பகட்டான அனுபவமும் கிடைக்கிறது, இதிலே பாரதநாட்டின் சாயல் காணப்படுகிறது.  இனிமையின் நமது பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம், இன்றும் கூட புதியபுதிய நூதனங்களோடு கூட முன்னேறி வருகிறது.  இதன் இனிமை நமது விவசாயிகள், இளைய தொழில் முனைவோரின் வாழ்கையிலும் கலந்து இனிக்கிறது.

            நண்பர்களே, சாக்லேட் பற்றி இத்தனை பேசிய பிறகு, இப்போது சற்று உடற்பயிற்சி பற்றியும் பேசலாம் தானே!!  சைக்கிள் ஓட்டுதல் என்பது இதற்கு மிகச் சிறந்த வழிமுறை.  உடல் உறுதி இந்தியாவிலே, சண்டேஸ் ஆன் சைக்கிள், இதுவரை 100 பதிப்புகளைக் கடந்துவிட்டது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.  டிசம்பர் 2024ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்ட பிறகு இன்று வரை, இந்த ஏற்பாடு நடக்காத எந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையும் கடந்து செல்லவில்லை எனலாம்.  30000த்துக்கும் மேற்பட்ட இடங்களிலே சுமார் 37 இலட்சம் மக்கள் இதோடு இணைந்திருக்கிறார்கள்.  மேலும் ஒரு நல்ல செய்தி புணேவிலிருந்து வந்திருக்கிறது.  இங்கே 2032ஆம் ஆண்டிலே UCI Road World Championship நடைபெற இருக்கிறது.  விளையாட்டுத் துறையில் பாரதம் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.  நமது கால்பந்தாட்ட அணியானது, சாதனையாக 10ஆவது முறை SAFF Championshipஇலே வென்றிருக்கிறது.  பேட்மிண்டன் விளையாட்டிலே லக்ஷ்ய சேன் அவர்கள், ஜெர்மனி மற்றும் ஜப்பானிலே தொடர்ந்து இரண்டு சூப்பர் 500 விருதை வென்றிருக்கிறார்கள்.  Kumamoto Masters இலே ஜெயித்த முதல் இந்தியர்கள் ஆவார்கள்.  அதே வேளையிலே, பி.வி. சிந்து, ஹைலோ ஓபனிலே வென்று, மேலும் ஒரு விருதினை பாரதத்துக்கு வென்று கொடுத்திருக்கிறார்.  தெலங்காணாவின் ஆறு நகரங்களில் 11 முதல் டிசம்பர் 22 வரை எட்டாவது கேலோ இண்டியா இளைஞர்களுக்கான விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  நான் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், விளையாடுங்கள், வளருங்கள்.

            நண்பர்களே, தேசத்தின் பல பாகங்களில் குளிர்காலம் தொடங்கிவிட்டது.  மாறிவரும் பருவநிலையிலே நாம் நமது உடலுறுதியின் மீது மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  உடலுறுதி இந்தியா இயக்கத்தினை நாம் முழு உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  உணவிலே எண்ணெயின் பயன்பாட்டினை 10 சதவீதம் குறைக்க நான் உங்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன், அதையும் நினைவில் கொள்ளுங்கள்.  உடல் பருமன் நமது தேசத்தின் முன்பாக இருக்கும் மிகப்பெரிய சவால்.  நாம் இதை கண்டிப்பாக எப்போதும் புறக்கணிக்கக்கூடாது.  அதிகரித்துவரும் உடல்பருமன் பலவகையான நோய்களின் காரணியாகும்.  ஆகையால், நீங்கள் உங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சி தொடர்பாக எப்போதும் விழிப்போடு இருக்க வேண்டும்.

            நண்பர்களே, நமது பாரத பூமியில் பெருகிவரும் சேவையுணர்வு, உலகனைத்திலும் சென்றடைந்து வருகிறது.  பல்வேறு நாடுகளிலும் நமது அயல்நாடுவாழ் இந்திய சமூகத்தினரும் கூட இப்படிப்பட்ட பல சேவை காரியங்களை முன்னெடுத்து பங்களிப்பு அளித்து வருகிறார்கள்.  நான் அவ்வப்போது மனதின் குரலிலே உங்களுக்கு பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் இத்தகைய சேவைகள் பற்றி தெரிவித்து வருகிறேன்.  தற்போது தான் கனடாவில் நடைபெற்றுவரும் சில முயற்சிகள் பற்றி எனக்குத் தெரிய வந்தது.  இவற்றிலே ஒன்று தான் சாயி தாம் ஃபுட் பேங்க்.  இதன் நோக்கம் என்னவென்றால், யாருமே பட்டினியோடு இருக்கக் கூடாது என்பதுதான்.  இந்த முன்னெடுப்பின்படி, இன்று ஒவ்வொரு மாதமும் கிரேட்டர் டொரோண்டோவிலும், ஹாமில்டனிலும் சுமார் 60000 மக்களுக்கு உதவிகள் கிடைத்து வருகின்றன.  இந்த உணவு வங்கியிலே வயதானோர், மாற்றுத் திறனாளிகள் வரை கூட உணவு சென்றடைகிறது.  கனடாவில் ரெட் எஃப் எம்மோடு தொடர்புடைய குல்விந்தர் சங்கேரா அவர்களைப் போன்ற பல மெச்சக்தக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.  அவர்கள் சமுதாய வானொலியை, மக்களை இணைப்பது மற்றும் சேவை காரியங்களுக்கான ஊடகமாக ஆக்கியிருக்கிறார்கள்.  அவர்களின் இந்த முயற்சிகளுக்கான உள்ளெழுச்சி எல்லாம் ஸ்ரீ குரு நானக் தேவ் அவர்களின் போதனைகள் மற்றும் சீக்கிய தர்மத்தின் சேவை உணர்வு தாம்.

            எனதருமை நாட்டுமக்களே, சில நாட்கள் முன்பாக பிறந்த நாளை நாம் கொண்டாடினோம்.  தில்லியிலே ஷபத் கீர்த்தனத்தில் பங்கெடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  இந்த புனிதமான அனுபவம் என்னோடு எப்போதும் நிலைத்திருக்கும்.  நண்பர்களே, நமது சீக்கிய குருமார்களின் படங்களைப் பார்க்கும்போது, மனம் அர்ப்பணிப்பு உணர்வில் மூழ்கி விடுகிறது.  இந்த புனிதமான படங்களை யார் உருவாக்கினார்கள் என்று சிலர் வியக்கலாம்?  சீக்கிய குருமார்களின் இந்தப் படங்களை உருவாக்கியவர் மகத்தான கலைஞரான ஷோபா சிங் அவர்கள் தாம்.  இன்று நவம்பர் மாதம் 29ஆம் தேதி அவருடைய 125ஆவது பிறந்த நாளாகும்.  ஷோபா சிங் அவர்கள் சில ஆண்டுகள் வரை இராணுவத்தில் வரைவாளராகப் பணியாற்றினார்.  இந்த காலகட்டத்திலே,, அவர் பாக்தாதிலும் கூட தனது சேவைகளை ஆற்றியிருக்கிறார்.  ஷோபா சிங் அவர்களின் 125ஆவது பிறந்த நாளன்று, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலே ஒரு நினைவு நாணயம் வெளியிடுவதில் சீக்கிய சமுதாயமும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.  நண்பர்களே, மேலும் ஒரு மகத்தான ஆளுமையைப் பற்றி மனதின் குரல் நேயர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.   அவர் தாம், பீ. என். ராவ் அவர்கள்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதில் பீ. என். ராவ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது.  இரண்டு நாட்கள் முன்பு தான் நாம் அரசியலமைப்புச்சட்ட நாளைக் கொண்டாடினோம்.  நாளை அதாவது நவம்பர் மாதம் 30ஆம் தேதியன்று பீ. என். ராவ் அவர்கள் மறைந்த தினம்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவருடைய வரலாற்றுரீதியான பங்களிப்பை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.  நான் அவருக்கும் கூட எனது மிகப் பணிவான நினைவாஞ்சலிகளை சமர்ப்பணம் செய்கிறேன். 

            எனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு மாதமும் மனதின் குரலுக்காக நீங்கள் அனுப்பும் செய்திகள், இவற்றின் மூலம் தேசத்தின் பல்வேறு பாகங்களில் நடக்கும் அற்புதமான முயற்சிகள் பற்றித் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கிறது.  எத்தனையோ பேருடைய நல்ல பணிகள், உங்கள் காரணமாக தேசத்தின் முன்பாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றது.  நீங்கள் இன்று போலவே என்றும் உங்களுடைய ஆலோசனைகளை என்னுடன் பகிர்ந்து வாருங்கள்.  அடுத்த மாதம் நாம் மீண்டும் சந்திப்போம், அப்போது நாட்டுமக்களின் இப்படிப்பட்ட உத்வேகமளிக்கும் செய்திகள் குறித்து விவாதிப்போம்.  நீங்கள் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார் மீதும் கவனம் செலுத்துங்கள், உடலுறுதி இந்தியாவை மறவாதீர்கள், சூழல் நன்றாக இருக்கிறது, கண்டிப்பாக கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்கள்.  பலப்பல நல்வாழ்த்துக்கள்.  நன்றி.

****

(Release ID: 2343387)

RJ