Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் நரேந்திர மோடி `தி டிரிபியூன்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி


உங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் இருந்த, காலஞ்சென்ற பிரதமர் ராஜீவ் காந்தி, தம் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் “அச்சம் தரும் வகையில்” இருப்பதாகக் கூறினார். ஓராண்டு நிறைவில், அரசை நடத்துவதில் உங்களுடைய கருத்து என்ன ?

நாட்டில் உள்ள வாய்ப்புகளை நான் பார்த்த வரையில், ஏழையாகவும், வளர்ச்சி இல்லாமலும் இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று நான் நம்புகிறேன். நம்மைவிட மிகவும் தாமதமாக சுதந்திரம் அடைந்த நாடுகள்கூட நம்மைவிட அதிகமாக வளர்ந்துவிட்டன; நாமும்கூட அந்த இடத்தை அடைந்திருக்க முடியும். நம் நாட்டில் இல்லாதது எதுவும் இல்லை. எங்கே தவறு நடந்தது அல்லது யார் தவறு செய்தார்கள் என்பது பற்றி நான் பேசப் போவதில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி தூய்மையான பாரதம் பற்றி நான் பேசியபோது, நான் ஆபத்தான வாய்ப்பைக் கையில் எடுக்கிறேன் என அறிந்திருந்தேன். ஆனால், அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து திகைப்படைந்திருக்கிறேன். அது எனது கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு உள்ளது. அரசைப் பற்றி வழக்கமாக குற்றம் சொல்லும் ஊடகங்கள் கூட (அது இயல்பானது, அப்படித்தான் இருக்க வேண்டும்), இந்த குறிப்பிட்ட இயக்கத்தை ஊக்கப்படுத்துகின்றன. பெற்றோர்கள் குப்பை போட்டால், குழந்தைகள் சுட்டிக்காட்டுகிற அளவுக்கு இன்றைக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  குப்பைகளைப் பார்க்கும்போது மனம் வருந்துகிறேன் என்பதை ஒப்புக்கொண்டாலும், தூய்மையான கலாசாரத்தை உருவாக்க முடியுமா  என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை. ஆனால் மக்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். இதில் அவர்களுக்கு தனிப்பட்ட லாபம் எதுவும் கிடையாது. ஆனாலும் அதற்காக அவர்கள் உழைக்கிறார்கள். நாட்டின் உண்மையான பலத்தை இது காட்டியுள்ளது.

அப்புறம் அரசு இயந்திரத்தின் பலத்தை நான் கண்டிருக்கிறேன். ஜனவரி 26  ஆம் தேதிக்குள் நாம் வங்கிக் கணக்குகள் தொடங்குவோம் என்று நான் அறிவித்தபோது, எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்; 60 ஆண்டுகளில் நடந்திராத ஒன்று இது, இதை இந்த மனிதர் சொல்கிறார் என்றார்கள் ! ஆனால் சுமார் 100 நாட்களுக்குள்ளாக, டிசம்பர் 25க்கு முன்னதாக, எல்லோரும் இலக்கை ஏறத்தாழ எட்டிவிட்டனர். அரசு இயந்திரமும் வங்கி அலுவலர்களும் மக்களின் வீடுகளுக்குச் சென்றார்கள். தெளிவான வழிகாட்டுதலும், பாதையும் அமைத்துக் கொடுத்தால், இலக்குகளை எட்டக் கூடிய திறன் அரசு அலுவலர்களுக்கு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

முதலாவது ஆண்டில் உங்களுடைய பிரதான குறிக்கோள் என்னவாக இருந்தது, எதைச் செய்ய விரும்பினீர்கள்?

நாடு `மோசமான நாட்களை’ பார்த்துவிட்டது. எல்லாமே ஸ்தம்பித்துப் போயிருந்தன. எனவே எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் எனது பிரதான கேள்வியாக இருந்தது. தில்லிக்கு நான் புதியவன், எனக்கு டெல்லி புதியது, தில்லி அல்லது அதன் அதிகாரவர்க்கத்துடன் நான் அதிகம் கலந்துரையாடியது கிடையாது. எனவே, நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிய, நிர்வாகத்தின் செயல்திறன் எனது மனநிலைக்கு ஏற்றதாக இருக்கிறதா, இல்லையா என்பதை அறிய சிறிய சோதனைகளுடன் நான் தொடங்கினேன். அது எனக்கு சரியான பொருத்தமாக உள்ளது என்பதை மூன்று மாதங்களுக்குள் கண்டறிந்தேன். அது எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. உதாரணத்துக்கு, பணிக்குச் சரியான நேரத்தில் வருவது என்ற கருத்து; நாங்கள் சுற்றறிக்கை எதுவும் அனுப்பவில்லை, நான் சரியான நேரத்துக்கு வரத் தொடங்கினேன். சீக்கிரமே எல்லோரும் அதேபோல செய்யத் தொடங்கியதைக் கண்டேன். இதுவரையில், தாமதமாக வந்ததற்காக யாரும் நடவடிக்கைக்கு ஆளாகவில்லை; இந்த விஷயத்தில் நான் மனிதாபிமானத்துடன் அணுகிறேன். ஒரு நபர் சில குடும்பப் பிரச்சினைகளால் தாமதமாகலாம், அதற்காக அவரை நீக்க முடியாது. எனவே, தனிப்பட்ட வாழ்வில், சுய ஒழுக்கத்தை இணைத்து, பிறருடன் மனிதாபிமான அணுகுமுறையைக் கையாள்கிறேன். இவை எல்லாவற்றிலும், எனது 13 ஆண்டு கால அனுபவம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

556965980d1ee [ PM India 153KB ]

குஜராத்தில் செய்ததைப் போல, ஒரு மாநில நிர்வாகத்தை நடத்துவதற்கும், நாட்டு நிர்வாகத்தை நடத்துவதற்கும் இடையில் என்ன வித்தியாசத்தைக் கண்டிருக்கிறீர்கள்?

அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஒட்டுமொத்தமாக, நீங்கள் நிர்வாகத்தை நடத்தியாக வேண்டும், மனிதவள மேலாண்மை செய்தாக வேண்டும். ஆனால் மத்தியில் பாதுகாப்புத் துறை அல்லது வெளிநாட்டு விவகாரம் போன்ற புதிய துறைகள் உள்ளன. மாநிலத்தில் பழக்கமான ஒரு அணி இருக்கும், ஆனால் மத்தியில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மாநிலங்களில் இருந்து வந்து சேர்ந்தவர்களின் அணியாக இருக்கும். எனவே, தில்லியில் அரசை நடத்துவதற்கு, ஒருமித்த கருத்துள்ள ஓர் அணியை உருவாக்க வேண்டும். 30 – 35 ஆண்டுகள் இங்கு இருக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும், இங்கே பணியாற்றக் கூடிய அணியாக இருக்க வேண்டும்.

`வளமான எதிர்காலம் எங்கே’ என்ற கேள்வியைக் கேட்டு உங்கள் மீது மக்கள் குற்றம் சொல்கிறார்கள். வளமான எதிர்காலம் என்பதன் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், உங்களால் அதை உருவாக்க முடிந்ததா?

நோயில் வாடுபவரைச் சந்தித்தால், கவலைப்பட வேண்டாம், அவர் குணமடைவார் என்று சொல்கிறோம். இங்கே `நல்லது’ என்ற வார்த்தை, நோயாளி தற்போதுள்ள `மோசமானது’ என்ற வார்த்தையின் சூழ்நிலையில் அமைந்தது. எனவே `வளமான எதிர்காலம்’ என்ற எனது சிந்தனை, அந்த மோசமானதை விரட்டுதல்தான். அதை நாங்கள் அடைந்துவிட்டதாகவே நான் நம்புகிறேன். எங்கள் எதிர்ப்பாளர்கள் இந்த சிந்தனையை கேலி செய்யத் தொடங்கினார்கள். ஒரு ரயில் தாமதமாக வந்தாலும் அது வளமானதா என்று ஒவ்வொரு முறையும் கேட்டார்கள். 1970ல் இருந்து காங்கிரஸின் `வறுமையை ஒழிப்போம்’ என்ற கோஷம் பற்றி இவர்கள் கேள்வி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், அது நடந்ததா ? நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு 415 உறுப்பினர்கள் இருந்தனர். ஒரு குடும்பத்தின் நான்கு பேர் நாட்டு நிர்வாகத்தை நடத்தியுள்ளனர். அவர்கள் என்ன சாதித்தார்கள்? ஆகவே வளமான எதிர்காலம் என்ற எனது வரையறையானது, தினசரி வாழ்வின் சூழ்நிலையிலானது மற்றும் அப்போது நிலவிய `மோசமான நாட்களை’ – லஞ்சம், ஊழல், கொள்கை முடக்கம், கறுப்புப் பணம், நிலக்கரி, அலைக்கற்றை . .. போன்றவை பற்றியது. இவற்றால் நாடு நொந்து போய்விட்டது.

நீங்கள் இந்த ஓராண்டில் அதை மாற்றி விட்டீர்களா ?

அதுபோன்ற எந்தக் கேள்வியும் இப்போது இல்லை. நிலக்கரி ஏலங்கள் பற்றி இப்போது நீங்கள் என்ன கேள்விப்படுகிறீர்கள்? ரூ.3 லட்சம் கோடி அரசு கருவூலத்துக்கு வந்து சேரும்.

`லஞ்சத்தை துடைத்தெறிவது’ என்பதை எப்படி கொண்டு வந்தீர்கள் ?

இந்த விஷயத்தில் உயர்ந்த நிலையில் சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. நான் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது. எனது உரை, நடத்தை, நடைபாங்கு, கொள்கை, பாரம்பரியம், எல்லாவற்றிலும் அது வெளிப்பட வேண்டும். நான் மட்டும் `தூய்மையாக’ இருந்தால் போதாது. எல்லாவற்றிலும் எழுத்துபூர்வமாக ஒரு கொள்கையை உருவாக்குவதுதான், இதை அடைவதற்கான வழி. குறைபாடுகளே இல்லாததாக இல்லாவிட்டாலும், அவை மிகக் குறைந்தபட்சமாக இருக்க வேண்டும். அப்போது அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருக்கும்; அதனால் ஊழலுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.

ஊழலைத் தடுப்பதற்கு இதுபோன்ற மேலும் நடவடிக்கைகள் இருக்கின்றனவா ?

நான் உதாரணங்களைத் தருகிறேன்: அரசாங்கம் எல்.இ.டி. பல்புகளை ரூ.348-க்கு வாங்கி வந்தது, இப்போது அது ரூ.80. ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.360-க்கு கொள்முதல் செய்யப்பட்டது, இப்போது அது ரூ.150 -எனது தொகைகள் மிகச் சரியாக இல்லாதிருக்கலாம்.

வாக்குறுதி அளித்தபடி கறுப்புப் பணத்தை மீட்டு வருவது எப்போது

முதலில், இதுவரை அதிகாரத்தில் இருந்த யாருக்கும் கறுப்புப் பணம் குறித்து எனது அரசை கேள்வி கேட்க உரிமை கிடையாது. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் இந்த கறுப்புப் பணமே உருவானது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும், அவர்கள் மூன்று ஆண்டுகளாக சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைக்கவில்லை. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய மோசடிகளை மூடி மறைப்பதற்கு இந்த காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொள்ள அவகாசம் தரப்பட்டிருப்பதாக அர்த்தம். நீதிமன்றம் உத்தரவிட்ட நாளிலேயே அவர்கள் செயல்பட்டிருந்தால், நாட்டுக்கு பில்லியன் கணக்கான ரூபாய் கிடைத்திருக்கும். எங்களுடைய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தின் முதலாவது முடிவே சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பதுதான். அந்தக் குழுவுக்கு அனைத்து தகவல்களும் தரப்பட்டு, அது சீலிட்ட உறைகளில் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. ஆம், நாங்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தவில்லை. ஏனென்றால் அதில் சர்வதேச சட்டப் பிரச்சினைகள் உள்ளன.  வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு, உலகெங்கும் உள்ள நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ஜி 20 மாநாட்டில், இறுதி தீர்மானத்தில் கருப்புப் பணம் குறித்த விஷயத்தில் ஒத்துழைப்பு பற்றிய விஷயத்தைச் சேர்ப்பதை நான் உறுதிப்படுத்தினேன்.

ஆகவே கறுப்புப் பணம் பதுக்கியுள்ள அனைவரும் பிடிக்கப்பட்டு, அவர்களுடைய பெயர்கள் வெளிப்படுத்தப் படுமா?

பெயர்களை நாங்கள் உச்ச நீதிமன்றத்திடம் தான் அளிக்க முடியும். ஏனென்றால் நாங்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டிருக்கிறோம். ஆனால், யாரையும் நாங்கள் விட்டுவைக்க மாட்டோம். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் பற்றி ஏதாவது தகவல் இருந்தால் தி டிரிபியூனையும் கூட நான் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து நாங்கள் உருவாக்கியதைப் போன்ற கடுமையான ஒரு சட்டத்தை உருவாக்க யாருக்காவது தைரியம் இருந்ததா?

ஊழலுக்கு எதிரான உங்களது நடவடிக்கைகள் இருந்தாலும், உங்களை `சூட்டு கோட்டு சர்கார்’ என்றும், கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே?

என்னுடைய அரசுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரு பட்டியலாக தொகுக்குமாறு மூத்த பத்திரிகையாளர்களின் குழு ஒன்றை கேட்டுக் கொள்ள நான் விரும்புகிறேன். சிலர் M.O.D.I என்ற எழுத்துகளுக்கான புதிய அர்த்தங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். சிலர் NDA என்பது MNDA என்கிறார்கள். சிலர் எங்களை தற்பெருமை பேசுபவர்கள் என்கிறார்கள், சிலர் சூட் அல்லது பூட் பற்றி, அல்லது கோட் அல்லது முடி பற்றி விவாதிக்கிறார்கள். அவர்களுக்கு சிந்தனையற்ற நிலையைப் பாருங்கள். உறுதியான ஒரு பிரச்சினை எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதான் எங்கள் அரசின் மிகப் பெரிய சாதனை.

குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கவலை தரக் கூடிய ஒரு விஷயம், விவசாயிகள் பிரச்சினைதான். பருவம் தவறிய மழையால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்ட போதும், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதும் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நீங்கள் ஏன் சந்திக்கவில்லை?

பதிவுகளை நாம் பார்க்கலாம். குஜராத்தின் முதல்வராக – ஒவ்வொரு ஆண்டும் பேரழிவால் பாதிக்கப்படும் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது – மத்திய அரசிடம் மனுக்கள் சமர்ப்பித்து நான் சோர்வடைந்துவிட்டேன். ஆனால் மத்திய அரசு எங்களை திரும்பிக்கூட பார்க்கவில்லை. இந்த ஆண்டு ஆலங்கட்டி மழை பாதிப்புக்குப் பிறகு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உடனடியாக விவசாயிகளை சந்தித்தார்கள். சேதத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். சேதம் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தால்தான் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது என்ற கொள்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதை நாங்கள் 30 சதவீதமாகக் குறைத்தோம். நஷ்டஈடு 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. முன்பு சேதமுற்ற தானியங்கள் அரசு நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படாது. இப்போது எல்லா தானியங்களையும் கொள்முதல் செய்ய நாங்கள் முடிவு செய்தோம். அதுவும் குறைந்தபட்ச ஆதார விலையைக் குறைக்காமலே கொள்முதல் செய்ய முடிவு செய்தோம். இதுபோன்ற முடிவுகளுக்காகத்தான் ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் போராடி வந்தனர். விவசாயிகளை நான் சந்திப்பதைப் பொருத்த வரையில், கடந்த 10 ஆண்டுகளில் பண்ணைகளை பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ஒருவராவது உண்டா என்று கூறுங்கள். அப்போது வேளாண்மையில் பேரழிவு ஏற்படவில்லையா ? ஒரு முதல்வராக நான் அடிக்கடி விவசாயிகளை சந்தித்திருக்கிறேன். இப்போது என்னுடைய பணி தகவல்களை சேகரிப்பது, முடிவுகள் எடுப்பது, அரசு இயந்திரத்தை அனுப்புவது போன்றவைதான். நேபாளத்துக்கும் கூட நான் செல்லவில்லை. ஆனால் அங்கே நாம் பணியாற்றவில்லையா?

உங்கள் கட்சி நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இப்போது அதைத் திருத்த முயற்சிக்கிறது. ஏன்? அது விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட்களுக்கு ஆதரவானது என மக்கள் புகார் கூறுகின்றனர்.

60 ஆண்டுகளாக அவர்கள் பழைய நிலம் கையகப்படுத்தும் சட்டங்களைப் பயன்படுத்தினார்கள். அந்தக் காலங்களில் அவை விவசாய விரோதமாக இருந்தனவா? 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தவர்கள், இப்போது புகார் கூறுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. முந்தைய சட்டம் 120 ஆண்டுகள் பழமையானது. அரசியல் ஆதாயத்துக்காக அவசர அவசரமாக அவர்கள் ஒரு சட்டம் கொண்டு வந்தனர். பா.ஜ.க. கூறும் யோசனைகளை, குறிப்பாக பாசனம் குறித்தவற்றை ஏற்பதாக நாடாளுமன்றத்தில் வாய்மொழியாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் பிறகு, வரைவில் இருந்து அவற்றை நீக்கிவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, நாங்கள் அவசரச் சட்டம் கொண்டு வராவிட்டால் விவசாயிகளின் நிலைமையை மோசமாக்கிவிடக் கூடிய வகையிலான சில அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். மேலும், கேரளா உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரினார்கள். 2013 ஆம் ஆண்டில் ஆதரித்தோம் என்ற காரணத்துக்காக, அதை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதம் காட்ட விரும்பவில்லை. வளர்ச்சிக்கு விரோதமான அம்சங்களை, விவசாயிகளுக்கு விரோதமான அம்சங்களை மட்டும் 2013 சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இந்தச் சட்டத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் அதிக பாசன வசதிக்கான வாய்ப்புகள், மின்சாரம் உள்ளிட்ட  ஊரக கட்டமைப்பு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும். விவாதம் என்பது தகுதியின் அடிப்படையில் அமைய வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா?

 

இது எனக்கு வாழ்வா சாவா பிரச்சினை அல்ல. எனது கட்சி அல்லது அரசின் செயல்திட்டமும் அல்ல. மாநிலங்களின் கோரிக்கைகளின்படி தான் இந்த முயற்சி மேற்கொள்ளப் படுகிறது. கூட்டாட்சி அமைப்பு என்ற முறையில், மாநிலங்களின் கோரிக்கையை ஏற்பது என்னுடைய கடமை. எனவே என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன். இப்போதும்கூட எந்த ஆலோசனைகளையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.

விவசாயிகளுக்கு புதிய சலுகை எதுவும் வழங்க திட்டமிடுகிறீர்களா?

விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு; மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விவசாயத் துறையின் பங்கு 15 சதவீதம் மட்டுமே. உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்த, விவசாயத்தை நாம் நவீனப்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் மண் ஆரோக்கிய அட்டைகளை அறிமுகம் செய்துள்ளோம். விவசாயிகள் தங்கள் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும் இது உதவும். பிரதமரின் விவசாய பாசனத் திட்டத்தால், நீர்ப்பாசன வாய்ப்புகள் மேம்படும். விவசாயிகளுக்கு வங்கி வசதிகளை அளிப்பதற்கு, நாங்கள் ஜன் தன் திட்டத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளோம். அதில் ஓவர் டிராப்ட் வசதியும்கூட உள்ளது.

கடந்த ஓராண்டில் உங்களுடைய பெரிய சாதனைகள் எவை என பட்டியலிடுவீர்கள்?

ஊழல் சம்பவம் ஒன்றுகூட இல்லை என்று நான் பெருமையுடன் கூற முடியும். எங்களுடைய முயற்சிகளும், உறுதிப்பாடும் நாட்டின் வளர்ச்சியை நோக்கியதாக உள்ளன. எங்கள் கொள்கைகளில் வெளிப்படையான, செம்மையான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு பாதையில் நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஜன் தன் திட்டம், தூய்மையான இந்தியா திட்டம், மண் ஆரோக்கிய அட்டை மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட, மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவை சாமானிய மக்களுக்கு அதிக வருமானம் மற்றும் பாதுகாப்பு அளிக்கக் கூடியவை.

கட்டமைப்புகளைப் பொருத்த வரையில், கடந்த ஆண்டு தினமும் 20 கிலோ மீட்டருக்கும் மேல் சாலை அமைப்பதற்கான திட்டங்களுக்கு அனுமதி தந்தோம். தினம் 11 கிலோ மீட்டருக்கும் அதிகமாக சாலைகள் அமைக்கும் அளவுக்கு எட்ட முடிந்துள்ளது. 2014 – 15 ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் அளவுக்கு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்காலத்தில் மட்டுமின்றி எதிர்காலத்தைப் பற்றியும் நாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அளிக்கும் முக்கியத்துவத்தின் மூலம் அறியலாம். சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்புத் துறைக்கு பொது மக்கள் முதலீடு மூலமாக ரூ.1 லட்சம் கோடி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நின்று போன மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் உர தொழிற்சாலைகளுக்கு எரிவாயு தொகுப்பை பயன்படுத்தியதால், முந்தைய அரசால் ஏற்பட்ட நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதில் எங்களுடைய உறுதிப்பாடு தெரிய வருகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் கழிப்பறை கட்டப்பட வேண்டும் என்ற முயற்சியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் நமது பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தக் கூடிய நிலையில் கழிப்பறைகள் இல்லாதிருப்பது துரதிருஷ்டவசமானது. எல்.பி.ஜி. மற்றும் உதவித் தொகைகளை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் எங்களுடைய முயற்சி, ஏழைகள் மற்றும் தேவை உள்ளவர்களுக்கு உதவி போய்ச் சேர வேண்டும் என்பதில் எங்களுடைய நோக்கத்தை நிரூபிக்கிறது. கங்கை நதி புத்துயிரூட்டல், தொழில் திறன் மேம்பாடு, அனைத்து கிராமங்களுக்கும் மொபைல் மற்றும் பிராட்பேண்ட் வசதி, மற்றும் `மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களில் எங்களுடைய முயற்சிகளால், வளர்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும். இது வெறும் ஆரம்பம்தான்.

 

பொருளாதார விஷயத்தில், பணவீக்கம், வேலைகள், உற்பத்தி வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகளில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களில் நீங்கள் திருப்தி அடைந்திருக்கிறீர்களா?

முந்தைய அரசின் 10 ஆண்டு காலத்தில் அதிக விலைகள், உயரும் பணவீக்கம் போன்றவற்றால் பீடிக்கப் பட்டிருந்தது. தேவை மற்றும் வழங்கல் அளவில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளால் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. பொருளாதாரத்தில் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பன்னாட்டு நிதியம் (IMF), உலக வங்கி மற்றும் OECD போன்ற சர்வதேச அமைப்புகளாலும் பாராட்டப் பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பதுக்கலுக்கு எதிராக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுத்து, கூடுதல் உணவு தானியங்களை சந்தையில் கிடைக்கச் செய்தோம். நாட்டில் பற்றாக்குறையாக இருந்த பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்தோம். இந்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்தது. 10 முதல் 12 சதவீதம் வரையில் ஊசலாடிக் கொண்டிருந்த பணவீக்கம் இப்போது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது.

அதிக பிரச்சினைகள் நிறைந்த பொருளாதார நிலையில் ஆட்சிக்கு வந்தபோதிலும், அவற்றை சரிப்படுத்தும் நடவடிக்கைகளை எங்களால் எடுக்க முடிந்தது. கடந்த ஆண்டு எங்களின் நிதிப் பற்றாக்குறையை 4 சதவீதத்துக்கு கட்டுப்படுத்தியதில் இருந்து அது வெளிப்படுகிறது. 4.1 சதவீதம் என்ற இலக்கிற்கு எதிராக 4 சதவீதம் என்ற அளவை எட்டினோம். அன்னிய நேரடி முதலீடு 39 சதவீதம் அதிகரித்துள்ளது. வெளிநாட்டு நிதியமைப்புகளின் முதலீடுகள் 800 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத வகையில் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவை எட்டியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம் நாட்டின் மீது அபரிமிதமான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதையும் இது காட்டுகிறது. கடந்த ஆண்டு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.4 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில், உலகில் பெரிய பொருளாதார நாடுகளில் அதிகபட்ச அளவை இந்தியா எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த பட்ஜெட்டில் அதிக முயற்சிகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். முத்ரா வங்கி 6 கோடிக்கும் மேற்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் வணிகங்களுக்கு உதவி செய்யும். இந்தப் பிரிவில் 61 சதவீதம் பேர் ஆதி திராவிடர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோராக உள்ளனர். நாங்கள் நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவையும் அறிமுகம் செய்துள்ளோம். அதை 2016 ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். `தொழில் செய்வதை எளிமையாக்கல்’ என்பதைப் பொருத்தவரை, நாங்கள் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறோம். எங்களுடைய வளர்ச்சி குறித்த கதையைப் பற்றி, இந்த நடவடிக்கைகள் விளக்குபவையாக இருக்கும். எங்களது நடைமுறைகள் மற்றும் படிவங்களை முறைப்படுத்தல் முயற்சிகளில் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறோம். ஆன்லைன் மூலமாக அதிக அளவில் அங்கீகரிப்புகள் செய்கிறோம். பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டை தளர்த்தி இருக்கிறோம், குறிப்பாக காப்பீட்டுத் துறையில்.

ஆனால், கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்ததால், பணவீக்கம் விஷயத்தில் நீங்கள் அதிருஷ்டசாலியாகிவிட்டீர்கள் என்று மக்கள் கூறுகிறார்கள்.

நான் அதிருஷ்டசாலி என்று நான் கூறினால், மக்கள் என்னை தாக்குகிறார்கள், அவர்கள் அதை விரும்பவில்லை! இது என்ன ? நாங்கள் பணவீக்கம் குறித்து நடவடிக்கைகள் எடுத்தோம். ஆனால் இது ஒரு நிலையற்ற விஷயம். தொடர்ந்து முயற்சிகள் எடுக்க வேண்டியுள்ளது. அதிருஷ்டத்தின் கையில் அதை நாங்கள் விட்டுவிட மாட்டோம்.

“மேக்-இன்-இந்தியா ” என்பது முக்கியமானது என்கிறீர்கள். வரவேற்பு எப்படி இருக்கிறது?

 

இந்த முயற்சிக்கு இந்தியாவில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் மிகவும் குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் நான் பயணம் சென்ற இடங்களில் எல்லாம், அந்த நாட்டில் தொழில் துறையில் மூத்த நிர்வாகிகளை சந்தித்தேன். நமது “மேக்-இன்-இந்தியா” திட்டம் குறித்து அவர்கள் ஆர்வம் காட்டினர். நாங்கள் கொள்கை சீர்திருத்தங்கள் மட்டும் செய்யவில்லை. நிர்வாக சீர்திருத்தங்களிலும் கவனம் செலுத்தியுள்ளோம். தொழில் நடத்துவதை எளிமையாக்கிட, அரசை அதிக பொறுப்புள்ளதாக்கிட, நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தல், அரசின் அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட சலுகையாலோ அல்லாமல், மத்திய, மாநில அரசுகள் கொள்கை அடிப்படையிலான நடைமுறையில் பதில் தெரிவிக்கும் வகையில், முழுக்க வேறுபட்ட நிலையில் சீர்திருத்த நடவடிக்கைகளை நாங்கள் முக்கியமாக மேற்கொண்டிருக்கிறோம். அதேபோல நமக்கு ராணுவத் தளவாடங்கள் வழங்கும் கம்பெனிகள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் நாம் வற்புறுத்துகிறோம்.

பாதுகாப்புத் துறையில், நீங்கள் பிரான்ஸ் சென்றபோது 36 ராபெல் போர் விமானங்களை வாங்குவதற்கு துணிச்சலான முடிவு எடுத்தீர்கள். அந்த நடவடிக்கையின் பின்னால் உள்ள நியாயம் குறித்து மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு நல்ல அரசாங்கம் என்பது பல்வேறு முன்னுரிமைகளுக்கு இடையே சமமான நிலையை உருவாக்கிட வேண்டும். “மேக் இன் இந்தியா” எனக்கு மிகவும் முக்கியமானது. அதே அளவுக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியமானது. இரண்டிலுமே நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். நமது பாதுகாப்புத் திறனை பாதிப்புகளைக் கருதி விமானப் படையின் செயல்பாட்டுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்யும் தேவையைக் கருத்திக் கொண்டு ராபெல் விமானம் வாங்கும் முடிவு எடுக்கப்பட்டது. அதை எப்படி கேள்வி கேட்க முடியும் ? உண்மையில், முந்தைய அரசாங்கம் விட்டுச் சென்ற சிக்கலைத் தீர்ப்பதுதான் சவாலாக இருந்தது. சில முடிவுகளை எடுத்தாக வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவருடனும் நாங்கள் கலந்து பேசினோம். அரசாங்கங்களுக்கு இடையிலானதாக மட்டும் பேரம் உருவாக்குவது என்று நாங்கள் முடிவு செய்தோம். அதில் வெளிப்படைத்தன்மை இருக்கும். எனவே, யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. இந்த விஷயத்தில் விரைவில், மேலும் கலந்துரையாடல்கள் இருக்கும். சமீபத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது, அங்கு பாதுகாப்பு தொழில்துறையின் மூத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நமது “மேக் இன் இந்தியா” திட்டத்தில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினார்கள் என்பதையும் குறிப்பிடுகிறேன்.

இந்த வழிதான் பாதுகாப்புத் துறை கொள்முதலின் எதிர்காலமாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

விஷயங்களின் அடிப்படையில் அது முடிவு செய்யப்படும்.

பாதுகாப்புத் துறையில் ஒரே அந்தஸ்திலான பதவியில் இருந்து ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் (OROP) என்ற வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றுவீர்களா?

OROP திட்டத்தை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆனால் OROP என்பதற்கான வரையறை பற்றி பாதுகாப்புத் துறையினருடன் கலந்து பேசி வருகிறோம். எங்கள் அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது. சம்பந்தப்பட்டவர்களை கலந்து ஆலோசிக்காமல் நாங்கள் எதையும் செய்ய முடியாது. பேச்சுவார்த்தை முறைகள் தீவிரமாக முயற்சிக்கப் படுகின்றன. இதில் சந்தேகம் கொள்ள எந்தத் தேவையும் இல்லை. பாதுகாப்புத் துறையினரை அதிக வாசகர்களாக தி டிரிபியூன் கொண்டுள்ளது. நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம் என்பதை உங்கள் மூலமாக அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். இன்னமும் அதுபற்றி நிறைய வரையறைகள் கூறப்படுகின்றன. சம்பந்தப்பட்ட அனைவரும் ஏற்கக் கூடிய ஒரு வரையறையை நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம். எனக்கு இது அரசியல் திட்டம் கிடையாது.

தொழில்திறன்மிக்க இந்தியா (skill India) என்ற திட்டத்தை நீங்கள் முன்னெடுத்தீர்கள். உலகின் தொழில் திறன் தலைமையிடமாக இந்தியாவை ஆக்குவதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இளைஞர்களின் மக்கள் தொகை நம்மிடம் பெருமளவு உள்ளது. அவர்களுக்குத் தேவையான கல்வியும், லாபகரமான வேலை பெறுவதற்கு தொழில்திறன் அளிப்பதும் மிகவும் முக்கியம். அதன்படி, இதற்கு அரசு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கிறது. தொழில்திறன்  மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கு புதிய அமைச்சகம் உருவாக்கி இருக்கிறது. நமது மக்களுக்கு நவீன தொழில் திறன்களை அளிப்பதற்காக புதிய மையங்கள் தொடங்குவது, இப்போதுள்ளவற்றின் தரத்தை உயர்த்துவது என்பதுதான் இதன் அணுகுமுறை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழில்திறன்கள் குறித்து கண்டறிய மாநில அரசுகளுடன் இந்த அமைச்சகம் கலந்தாலோசனை செய்கிறது. தொழில் திறன் பயிற்சித் திட்டம் மாற்றி அமைக்கப் படுகிறது. பயிற்சி தருபவர்களுக்கான பயிற்சியின் தரமும், தனியார் துறையினருடன் கூட்டு முயற்சியும் தொடங்கப் படுகிறது. இந்த நடவடிக்கைகள் மூலமாக, மிகவும் தொழில்திறன் மிக்கவர்களை பெருமளவுக்கு நம்மால் உருவாக்க முடியும் என்றும், அது “மேக் இன் இந்தியா’ திட்டத்துக்கு கிரியா ஊக்கியாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். அதுபோன்ற தொழில் திறன் மனிதவளம் குறைவாக உள்ள வேறு நாடுகளுக்கும் இது கிடைக்கும்.

வெளிநாட்டுக் கொள்கை என்பது உங்களுடைய வெற்றிகரமான பகுதியாக உள்ளது. உங்களுடைய வெளிநாட்டுக் கொள்கையின் உந்துதல் என்ன, இந்த நாடுகளுக்கு என்ன நோக்கத்துடன் சென்றீர்கள் ?

முதலில், முந்தைய பிரதமர்களைவிட நான் அதிகமான வெளிநாட்டுப் பயணங்கள் செல்லவில்லை. ஊடகங்கள் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும், தவறான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடாது. பிறகு, இதன் பலன்களை நீங்கள் பார்க்கலாம். இதுவரையில் நாம் அதிகாரத்தில் சமன்படுத்தும் வகையில் இருந்தோம், எப்போதும் பிறரிடம் ஆதாயங்களை எதிர்பார்த்திருந்தோம். எவ்வளவு காலத்துக்கு அப்படி இருக்க முடியும்? உலகில் முக்கிய நாடாக நாம் ஏன் வளரக் கூடாது? நாம் சமன்படுத்தும் நாடாக மட்டுமின்றி, உலகளாவிய அளவில் முக்கிய நாடாகவும் இருக்க முடியும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அமெரிக்காவாக இருந்தாலும் அல்லது சீனாவாக இருந்தாலும், அனைவருடனும் சம தூரம் என்று நாம் பேசுகிறோம். இன்றைக்கு உலகை நாம் அதிக தன்-உறுதிப்பாட்டுடன் அணுகுகிறோம். எல்லா பெரிய நாடுகளையும் ஒரே சமயத்தில் மற்றும் சிறப்பாக நம்பிக்கையுடன் கையாள முடியும் என்பதை நாம் காட்டியுள்ளோம்.

நமது ஏழு பக்கத்து நாடுகளுடன், நம்முடைய வழிகாட்டும் கோட்பாடானது மனிதாபிமான அணுகுமுறை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த அனைத்து ஏழு நாடுகளுடனும் நமது செயல்பாடுகள் மனிதாபிமான விஷயங்களில் தான் இருக்கின்றன என்பதை நாட்டில் உள்ள வெளிநாட்டுக் கொள்கை `நிபுணர்களும்’ கூட கவனிக்கவில்லை.  மாலத்தீவுகளுக்கு குடிநீருக்காக நாம் உதவினோம்; ஐந்து இந்திய மீனவர்களுக்கு இலங்கை மரண தண்டனை அறிவித்தது, ஆனால் அவர்களை நாம் உயிருடன் அழைத்து வந்தோம், பாகிஸ்தானில் இருந்து சரப்ஜித்சிங் என்ற ஒருவரை அவர்களால் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு) இயலாத போது நாம் இதைச் செய்தோம்; ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் கடத்தப்பட்ட பங்குத் தந்தை பிரேமை மீட்டு வந்திருக்கிறோம். நேபாளத்தில், பக்கத்து நாடு என்ற கடமையில் நாம் உடனடியாக உதவிக்குச் சென்றோம். ஏமனில் போர் சூழ்நிலையில் சிக்கியிருந்த 48 இந்தியர்களை நாம் மீட்டு வந்தோம்; பாகிஸ்தானைச் சேர்ந்த சிலரை நாம் காப்பாற்றினோம், நம் மக்கள் சிலரை பாகிஸ்தான் காப்பாற்றியது.

இராக் என்னவானது – பஞ்சாபியர்கள் இன்னும் அங்கு பிணை வைக்கப்பட்டுள்ளனர்.

இராக்கில், மக்கள் பலரை நாம் காப்பாற்றி இருக்கிறோம், செவிலியர்கள் உள்பட. அங்கு காணாமல் போயுள்ள மற்ற இந்தியர்களைப் பொருத்த வரை, மிகவும் உறுதியான தகவல்கள் நமக்கு இல்லை. எனவே, நல்லதே நடக்கும் என நம்புகிறோம்.

எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கண்ட பிறகு, நீங்கள் அடுத்த வாரம் வங்கதேசம் செல்கிறீர்கள். தீஸ்டா நதி நீரை பகிர்ந்து கொள்வது பற்றியும் ஒப்பந்தம் இருக்குமா?

வங்கதேசத்துடன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நில எல்லைப் பிரச்சினைகளை, அனைத்து தரப்பினரின் நம்பிக்கையைப் பெற்று நாம் தீர்த்துள்ளோம். இது மிகப்பெரிய சாதனை என்பதை ஊடகங்கள் உணராமல், மற்ற விஷயங்கள் பற்றிப் பேசுகின்றன. உலகில் வேறெங்காவது இப்படி நடந்திருந்தால், பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதைப் போல பெரிய அளவில் உதாரணம் காட்டி பேசியிருப்பார்கள். பகிர்ந்து கொள்ளும் வகையிலான வளமையான எதிர்காலத்துக்கான திட்டங்களை செயல்படுத்துதல் என்ற கருத்தை உணர்ந்த காரணத்தால், அனைத்து பக்கத்து நாடுகளிடமும் பெரிய அளவில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. நடைமுறையில் சாத்தியமான மற்றும் பலன் தரக் கூடிய ராஜதந்திரம்தான் என்னுடையது.

வங்கதேசத்துடன் செய்ததைப் போல, சீனாவுடன் எல்லைப் பிரச்சினையை இந்தியாவால் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இப்போதுதான் சீன தலைவர்களை நான் சந்தித்தேன். நம்பிக்கைக்கான கதவு திறந்திருப்பதை உணர்ந்து கொண்டேன். அது எங்கே அழைத்துச் செல்கிறது என்று பார்ப்போம். சிக்கல்கள் மற்றும் சவால்களைக் கொண்ட மிக முக்கியமான உறவாக இது இருக்கிறது. நமது உறவுகளை மேம்படுத்துவதில் நான் தீவிர உறுதியோடு இருக்கிறேன். அதிபர் க்ஸீ (Xi) என்னுடன் கலந்துரையாடிய போது, இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினார். நமது பொருளாதார பங்களிப்புகளை விரிவாக்கம் செய்ய அதிக சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதும், எல்லை குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதும்தான் உடனடி இலக்குகளாக உள்ளன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். பரஸ்பரம் உள்ள பிரச்சினைகள் குறித்து நாம் அக்கறை காட்ட வேண்டியுள்ளது. அதே சமயத்தில் பரஸ்பர அக்கறையானது நமது ஒத்துழைப்பு முயற்சிகளை வழி நடத்துவதாக இருக்க வேண்டும். இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சீனாவுடன் நமது வர்த்தக நிலைமை பெருமளவு பின்தங்கியுள்ளது. பொருளாதார விஷயத்தில் அவர்களுடன் பங்கேற்பது, சீன நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்து முதலீடு செய்வதை ஊக்குவித்து, இந்தப் பிரச்சினையை சரி செய்யும் முயற்சியாக அமையும்.

ஆனால் சீனர்கள் இரட்டை வேடம் போடுவது போல தெரிகிறதே?

இந்தியா தன்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உலக உறவுகள் சந்தேகத்தின் அடிப்படையில் அமையவில்லை.

பதவியேற்பு விழாவுக்கு நீங்கள் நவாஸ் ஷெரீபை அழைத்தீர்கள். ஆனால் அதற்குப் பிறகு உறவுகள் மேம்படவில்லையே?

பாகிஸ்தானுடன் நட்பை வளர்க்க வேண்டும் என்பதற்குத்தான் எல்லா நேரங்களிலும் எங்களின் முயற்சிகள் உள்ளன. வெடிகுண்டுகள் உதவாது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். போர்கள் நடந்துவிட்டன, பயங்கரவாதச் செயல்கள் நிகழ்ந்துவிட்டன, ஆனால் அவை நமக்கு எதையும் செய்யவில்லை. வறுமையை ஒழிக்க நாம் கைகளைக் கோர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இரண்டு நாடுகளிலும் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள். ஒத்துழைப்பு, இணைப்பு நிலை மற்றும் தொடர்புகள் ஏற்படுத்துதல் என்ற நோக்கங்களை நமது பக்கத்து நாடுகளுக்கு அளித்துள்ளேன். அவை அப்படியே உள்ளன. பயங்கரவாதம் இல்லாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நாம் முன்னேற்றம் காண முடியும். நம்முடைய பங்கேற்புக்கான அடிப்படையாக சிம்லா ஒப்பந்தமும், லாகூர் பிரகடனமும்தான் உள்ளன என்பதை அவர்கள் அறிவார்கள். அதன்படி அவர்கள் ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், நான் இரண்டடிகள் முன்னெடுத்து வைக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்க முடியாது.

ஜம்மு காஷ்மீரில் உங்களுடைய கட்சி PDP உடன் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவமானது. இந்த அரசு நிலைத்திருக்கும் என நினைக்கிறீர்களா ? ராணுவத்துக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) குறித்த பிரச்சினை ஒரு தடையாக இருக்குமா?

அங்குள்ள நிலைமை விரிவானது. மக்களின் தீர்ப்பை நாம் மதித்தாக வேண்டும். அது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருந்தாலும் அல்லது ஆளுநர் ஆட்சியாக இருந்தாலும். ஆளுநர் ஆட்சியாக இருந்தால், நமக்கு முழு கட்டுப்பாடு கிடைக்கும். ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை. இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் மிகவும் மாறுபட்டவை என்பது உண்மைதான். ஆனால் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் நாங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அரசியல் சூழ்நிலையில் இந்தக் கூட்டணிக மிக முக்கியமான மாற்றமாக உள்ளது. மக்களின் பங்கேற்பு மற்றும் நல்ல நிர்வாகத்தின் மூலம் மிகவும் கஷ்டமான தேசிய பிரச்சினைகளில் ஒன்றை தீர்க்கும் திறமை இந்தக் கூட்டணிக்கு இருக்கிறது. சில மிக முக்கியமான பிரச்சினைகளில் இரு கட்சிகளுக்கும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருந்தபோதிலும், மாநிலத்தின் மற்றும் அதன் மக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்ற நாங்கள் உறுதி எடுத்துக் கொண்டுள்ளோம். ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ட பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் இரு கட்சிகளும் கை கோர்த்துள்ளோம். இப்போது மாநில மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதும், அதில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதும் எங்களுடைய கடமையாக உள்ளது.

ராணுவத்துக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பற்றி ?

நான் கூறியது போல, குறைந்தபட்ச திட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதை அப்படியே பின்பற்றுவோம்.

வளர்ச்சிக்கு வலுவான திட்டங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சியில் உள்ள சில தலைவர்களும், அரசில் உள்ள சில அமைச்சர்களும் வரம்பு மீறி பேசுகிறார்கள். சுதந்திர தின உரையில் நீங்கள் கேட்டுக் கொண்டவாறு சமூக பதற்றத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற அழைப்பை உங்களுடைய தலைவர்கள் சிலரே மதிப்பதில்லை என்ற கருத்து ஏற்பட்டுள்ளது.

அது சரியானதல்ல. எங்களுடைய கோட்பாடுகளுக்கு மாறுபட்டு, தனிப்பட்ட கருத்துகள் எப்போதெல்லாம் தெரிவிக்கப்படுகிறதோ, உடனடியாக அதை நாங்கள் மறுத்திருக்கிறோம். ஒரு விஷயத்தை எவ்வளவு காலத்துக்கு சொல்லிக் கொண்டிருப்பீர்கள்? ஒரு அமைச்சர் பொருத்தமற்ற சில கருத்துகளைக் கூறினார், அவையில் அவர் மன்னிப்பு கேட்டார்; கட்சியும் நானும் அவருடைய அறிக்கையைக் கண்டித்தோம். இந்த விஷயங்களின் அடிப்படையில் தொடர்ந்து குற்றம் சொல்வது எந்தப் பலனையும் தராது. இது 1.25 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு, யாராவது முணுமுணுக்கும் எல்லாவற்றுக்கும் அரசைக் காரணம் கூற முடியாது. கடந்த ஓராண்டில் நாட்டில் என்ன நெருக்கடி ஏற்பட்டது என சொல்லுங்கள்.

எனவே சிறுபான்மையினர் பாதுகாப்பற்றதாக உணர எந்தக் காரணமும் இல்லையா ?

இதை ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதை மறுபடியும் வலியுறுத்துகிறேன்; இந்திய அரசியல்சாசனம்தான் எங்களை வழிநடத்தும் சக்தியாக இருக்கும். நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும்தான் எங்களுடைய மிக உயர்ந்த முன்னுரிமையாகும். அனைத்து மதத்தினர் மற்றும் சமூகங்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உண்டு. இந்தியர்கள் அனைவருக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது என்னுடைய அரசின் பொறுப்பாகும்.

இரண்டாவது ஆண்டில், அரசிடம் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கலாம் ?

அது வளர்ச்சி, வளர்ச்சி மற்றும் வளர்ச்சி. வேலைகள், வேலைகள் மற்றும் வேலைகள்.