Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்துக்கு சத்திஸ்கரில் அடிக்கல் நாட்டி பிரதமர் உரை.

பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்துக்கு சத்திஸ்கரில் அடிக்கல் நாட்டி பிரதமர் உரை.


மேடையில் வீற்றிருக்கும் முக்கியப் பிரமுகர்களே, சகோதர சகோதரிகளே, சாய் ராம் அவர்களே. வெங்கையா அவர்கள் எனது வேலையை சுலபமாக்கி விட்டார். நான் இப்போது பெயர்களின் எழுத்துக்களை படிக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் சில பெயர்கள் விடுபடுவது குறித்து அவர் கவலைப்படுவதேயில்லை. ஒரு விரைவு ரயில் வண்டியைப் போன்ற வெங்கையா அவர்களின் உரையைக் கேட்டீர்கள்.

சிறிது நேரத்துக்கு முன்னால் ரமன் சிங் அவர்கள், விடுமுறையான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பிரதமர் தொடங்கி வைத்தள்ளார் என்றார். எனக்கு இது விடுமுறைதான். விடுமுறை என்றால் அது புனித தினம். அந்த நாளில் எந்தெந்த வேலைகள் முடியுமோ அந்தந்த வேலைகளைச் செய்ய வேண்டும். இன்று இரவு நான் படுக்கைக்கு செல்கையில் ஐந்து மாநில பயணங்களை முடித்திருப்பேன். டெல்லியிலிருந்து கிளம்பி சத்திஸ்கர் வந்துள்ளேன். பிறகு ஒடிசா செல்வேன். ஒடிசாவிலிருந்து மேற்கு வங்கம் செல்வேன். அதன் பின்னர் உத்தரப் பிரதேசம் செல்வேன்.

ஜன்தா ஜனார்தன் உங்களுக்கு சில பொறுப்புகளை அளிக்கும்போது அதை முழு மனதோடு செய்து முடிக்க வேண்டும். அனைவரும் முயற்சிக்க வேண்டும். இன்று சாய்பாபா அவர்களின் சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த மருத்துவமனை ஏழைகளுக்கு இலவச சேவை செய்கிறது. குறிப்பாக குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுகிறது. புட்டபர்த்திக்கு சென்றவர்கள் பெரிய மருத்துவமனையை பார்த்திருப்பார்கள். சாய்பாபாவின் சேவைகளின் மீது குறைவாக கவனம் செலுத்தப்பட்டு அவர் புரிந்த மாயங்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது. குடிநீர் வழங்கல், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் அவரின் சேவை ஊக்கமளிக்கக் கூடியது. நாம் அவரின் மாயங்களைப் பற்றி பேசா விட்டாலும், அவரின் இந்த பணிகளே மாயம்தான். நான் மாய மந்திரங்களைப் பற்றி பேசவில்லை. ஒரு மாயத்தைப் பற்றி பேசுவதே பெரிய மாயம்தான். சாய்பாபாவின் பெரிய பணிகளுக்காக அவரை வணங்குகிறேன். புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் தொடங்குவது குறித்த ஒரு வரைவு அறிக்கை உங்கள் முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திசையை நோக்கி சிந்திக்கும் ரமன் சிங் மற்றும் அவரது அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு அரசு என்ன செய்ய முடியும், அரசு என்ன செய்யும், மக்கள் என்ன செய்ய வேண்டும், மக்களும் அரசும் இணைந்து என்ன செய்ய முடியும் என்பதற்காக திட்டம் அதில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் முன்னேறிய நாடுகளைப் பார்த்தோமேயானால், அவர்களின் முன்னேற்றத்துக்கான அடிப்படையாக புதிய கண்டுபிடிப்புகள் விளங்கியுள்ளன. பல்வேறு புதிய விஷயங்களை அவர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அவர்கள் கொண்டு வந்த பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் பின்னாளில் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த கண்டுபிடிப்புகள் சமூகத்துக்கு பயனளித்ததோடு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது. புதிய கண்டுபிடிப்புகள் இல்லையென்றால் ஒரு தேசம் ஸ்தம்பிக்கும். தடைகளை உருவாக்கும். வாழ்வின் தன்மையே காலத்துக்கு ஏற்றார்ப்போல மாறுவதுதான். கண்டுபிடிப்புகளின் பாரம்பரியம் தொடர வேண்டும். சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.

தொழில்மயமாக்கல். நமது மக்கள் தொகையில் 65 சதவிகதம் இளைஞர்கள். உலகம் இந்த மக்கள் தொகை இடைவெளியை ஒரு பெரிய சக்தியாக பார்க்கிறது. நமது மக்கள் தொகையில் 65 சதவிகிதம் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறுவது எந்த வகையிலும் பயனளிக்காது. இந்த 65 சதவிகித மக்கள் தொகைக்கு திறன் பயிற்சி வேண்டும். திறனை மேம்படுத்த பொருளதார மேலாண்மை வேண்டும். அரசின் கொள்கைகள் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும். நமது இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது. வேலை வழங்குபவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கனவோடு இருக்க வேண்டும். தனக்கான வேலை தேடக் கூடாது. இப்படிப்பட்ட சூழல் இந்தியாவில் உருவாக வேண்டும். அரசால் உருவாக்கப்பட்டுள்ள திட்டம் இவை அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. ஒரு பட்டம் பெற்று, அந்த பட்டத்தை வைத்துக் கொண்டு வேலை தேடி அலைவது எனது நாட்டின் இளைஞர்களின் வாழ்வாக இருக்கக் கூடாது. எனது நாட்டின் இளைஞர்களின் கனவு நனவாகக் கூடிய ஒரு சூழல் உள்ள நாடாக இது மாற வேண்டும். இந்த திசையை நோக்கி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, இளைஞர்களின் கனவுகளை நனவாக்க பாடுபட்டு வருகிறது.

திறன் வளர்ச்சி இளைஞர்களுக்கு திறன் அளிப்பதாக உள்ளது. முத்ரா யோஜனா திட்டம், புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்டது. வங்கிகளுக்குக் கூட செல்ல முடியாத சில பிரிவினருக்கு உத்தரவாதம் கூட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் கடன் அளிப்பவர்கள் அவர்களை தொல்லைக்குள்ளாக்கி இருந்தனர். வட்டி விகிதம் மிக அதிகம். சில நேரங்களில் தன் ஊரை விட்டே ஓடி, சில நேரம் உலகத்தை விட்டே செல்ல நேர்ந்தது. இப்படி தனியார் கடன் வழங்குபவர்களின் பிடியிலிருந்து இளைஞர்களை காப்பாற்றும் நோக்கத்திலேயே முத்ரா திட்டம் உருவாக்கப்பட்டது. துணி வெளுப்பவர், முடி திருத்துபவர், பானை விற்பவர், துணி விற்பவர், மெழுகுவர்த்தி விற்பவர், போன்ற சாதாரண மனிதர்களுக்கு அதிகபட்ச தேவை 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை. இதற்காக அவர்கள் தனி நபர்களிடம் கடன் பெற்று தங்களையே அடகு வைத்துக் கொண்டனர். இந்தத் திட்டத்தின் கீழ், 50,000 முதல் 10 லட்சம் வரை உத்தரவாதம் இல்லாத கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வரை 20 மில்லியன் மக்களுக்கு ஏறக்குறைய ஒரு பில்லியன் ரூபாய் உத்தரவாதம் இல்லாமல் கடனாக வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கி ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென்பதே இதன் நோக்கம். ஒன்று இரண்டு நான்கு என்று பலருக்கு அவர்கள் வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறார்கள். தனியார் துறையும், பொதுத்துறையும் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா போன்ற நாட்டுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் இன்னொரு முறை அவசியமாக இருக்கிறது. தனியார் துறைக்கு அதன் முக்கியத்துவம் உண்டு. பொதுத்துறைக்கு அதன் முக்கியத்துவம் உண்டு. ஆனால் தனி நபர் துறைதான் ஒவ்வொரு தனி நபரையும் தொழிலதிபர் ஆக்குகிறது. அவர் முத்ரா யோஜனாவிலிருந்து நிதி உதவி பெற்று, திறன் வளர்ச்சித் திட்டத்தில் திறமைகளை வளர்த்துக் கொண்டு, ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். உதவிகளைப் பெற்ற இரண்டு பில்லியன் மக்களில் 70 சதவிதித்தினர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தொழில் முனைவதற்கு பெண்களும் ஏராளமான எண்ணிக்கையில் முன்வந்துள்ளனர். இதனால் உருவாக்கப்படும் தொழில் முனைவோர் மற்றும் சத்திஸ்கர் அரசும் இணைந்து ஒரு சிறந்த பலனை உருவாக்கும். மாநில அரசுகளும் மத்திய அரசும் இணைந்தால் வளர்ச்சி துரிதமாக இருக்கும். சத்திஸ்கர் மாநில இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.

“பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா” என்ற திட்டமும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்று ஏராளமான ஆண்டுகள் கடந்த பின்னாலும் ஐந்து பில்லியன் மக்களுக்கு இன்னும் வீட்டு வசதி கிடைக்கவில்லை. 20 மில்லியன் மக்கள் நகரங்களிலும் 30 மில்லியன் மக்கள் கிராமங்களிலும் இருக்கிறார்கள். இந்த மக்களால் தங்களுக்காக ஒரு சொந்த வீட்டை கட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த மக்களுக்கு சொந்த நிலமும் கிடையாது, பணமும் கிடையாது. அரசுகள் சில நேரங்களில் வளர்ச்சிக்கான பெரிய பங்கை வகிக்கின்றன. ஏழைகளிலும் ஏழைகள் வாழ்வதற்கு எப்படியாவது வழியை தேடிக் கொள்கிறார்கள். சேரிகளில் வாழ்கிறார்கள். வேலைக்கு வெளியில் சென்று விட்டு படுப்பதற்காக இரவு திரும்புகிறார்கள். அவர்கள் தங்குமிடத்தில் குடும்பத்துக்கோ, கனவு காணுவதற்கோ இடமில்லை. அவர்களுக்கு ஒரு சிறிய வீட்டைக் கொடுத்தால் திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறார்கள். அரசும் வங்கிகளும் உதவ முன்வந்தால், இந்த தனியார் அரசு கூட்டு முயற்சி முன்னேற வழி வகுக்கும்.

ஒரு வீடு கிடைத்து விட்டால், அடுத்த விஷயம் நினைவுக்கு வருகிறது. விருந்தினர் வந்தால் அவர்கள் கால்களை துடைக்க வாசலில் ஒரு மிதியடி வேண்டும். பத்து ரூபாயை சேமித்து மிதியடி வாங்குகிறான். சேரி என்றால் பரவாயில்லை. இந்த வீட்டில் விருந்தினர் வந்தால் ஒரு தரை விரிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவான். சில நாட்கள் கழித்து தனது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டுமென்று எண்ணுவான். அவன் குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணுவான்.

தலைக்கு மேல் கூரை வந்து விட்டால் சுவர்கள் வந்து விடும். அவனது கனவுகளுக்கு அது புதிய உத்வேகத்தை அளிக்கும். புதிய விஷயங்களை செய்யத் தொடங்குவான்.

இதனால் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், “பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம்” உட்கட்டமைப்பு திட்டமல்ல. அது நிலம் வழங்கி அதில் சுவர்களை எழுப்பும் திட்டமல்ல. மக்களின் கனவுகளை நனவாக்கி அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய திட்டம். ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் இந்திய குடிமகனுக்கும் சொந்த வீடு வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் அந்த ஏழைகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுவதேயில்லை. எந்த ஏழையும் தனது குழந்தையும் ஏழையாக இருக்க வேண்டுமென்பதை விரும்ப மாட்டான். அவர்களுக்கு எதையாவது அளிக்க வேண்டுமென்று நினைக்கிறான். இது போன்ற மக்களின் கனவுகளை நனவாக்க, அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.

2022ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும், பொதுவாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் சிந்தனையாளர்களாக இருப்பவர்கள் அனைவரும், 2022ம் ஆண்டில், இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில், இந்திய சுதந்திரத்துக்கா தங்கள் வாழ்வை இழந்தவர்கள், இளமையை சிறையில் கழித்தவர்கள், தூக்கிலிடப்பட்டவர்கள் ஆகியோருக்கு நாம் எப்படி கைமாறு செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். இதுவே இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தீர்மானமாக இருக்க வேண்டும். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகையில் இந்தியாவின் ஏழைகள் அனைவருக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் கனவாக இருக்க வேண்டும்.

2022ம் ஆண்டுக்குள் 50 மில்லியன் வீடுகள் கட்டி முடிக்க வேண்டும் என்பது எளிதான காரியம் அல்ல. ஏராளமான மனிதவளம் வேண்டும். ஆனால் அது ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சிமென்ட், இரும்பு, செங்கல், களிமண் ஆகியவை அதிகமாக விற்பனையாகும். வேலையாட்களுக்கு அதிக வேலை கிடைக்கும். இளம் தலைமுறையினருக்கு அதிகமான வேலை வாய்ப்பு உருவாகுவதை நாம் காணப்போகிறோம். நம் வாழ்வை மாற்றும் திட்டம் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் இது குறித்து சிந்தித்து விரைந்து செயலாற்ற வேண்டும். வீடுகள் கட்ட இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்காக பணியாற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து இந்தியாவின் ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்க முயற்சி எடுக்கும். இந்த புதிய வீடுகளால் அவனது கனவுகளுக்கு புதிய உயிரோட்டம் கிடைக்கும். அந்த கனவுகளோடு இந்தியா 2022ம் ஆண்டில் புதிய உயரங்களைத் தொடும். இந்த நம்பிக்கையோடு ரமன் சிங் அவர்களுக்கும், இரவு பகலாக பணியாற்றும் இத்துறையின் அமைச்சர் வெங்கையா அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கனவு நனவாகும் என்று நம்புகிறேன்.

நன்றி.

****