Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரர்களின் குறைகள் களையப்பட்ட ஓய்வூதிய திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் ஓய்வூதியத்தை திருத்தி அமைக்க தனது ஒப்புதலை வழங்கியது. 10.06.2013க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் குறித்த இந்தத் திருத்தத்தில், ஓய்வூதியத்தை நிர்ணயிக்க அடிப்படை ஊதியம்/ஓய்வூதியம் ஆகியவற்றுடன் 50 சதவீத அகவிலைப்படியை/அகவிலைப்படி நிவாரணத்தை இணைத்துக் கொள்வதற்கான சலுகையை வழங்குவதன் மூலம், அது நடைமுறையில் 78.2 சதவீத அகவிலைப்படி/அகவிலைப்படி நிவாரணம் கொண்டதாக, அமைய அனுமதிப்பது. (ஆ) ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய சலுகைகளை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு இருந்து வந்த பொறுப்பை திருத்தி அமைப்பது ஆகிய அம்சங்கள் இத்திருத்தத்தில் அடங்கியுள்ளன.

இதன்படி 10.06.2013க்கு முன் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள்/குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரின் ஓய்வூதியமானது தற்போது பணியில் உள்ள பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இணையான வகையில் 50 சதவீத அகவிலைப்படியை/அகவிலைப்படி நிவாரணத்தை இணைத்து, அதாவது நடைமுறையில் 78.2 சதவீத அகவிலைப்படி/ அகவிலைப்படி நிவாரணம் கொண்டதாக, 1.1.2007 முதல் கருத்தியலாக நிர்ணயிக்கப்பட்டு, 10.06.2013 முதல் உண்மையான பயன் கிடைக்கும் வகையில் திருத்தம் செய்யப்படுகிறது. எனினும், இந்த ஓய்வூதியர்களைப் பொறுத்தவரையில் பணிக்கொடை, கையிருப்பு விடுப்பினை காசாக்கிக் கொள்வது, ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே காசாக்கிக் கொள்வது (கம்யுட்டேஷன்) ஆகியவற்றுக்கான வரம்பு இந்த விஷயத்தில் அதிகரிக்கப்படாது.

தொலைத் தகவல் துறை/ தொலைத்தகவல் சேவைகள் துறை/ தொலைத் தகவல் செயல்பாடுகள் துறை ஆகிய துறைகளில் 01.10.2000க்கு முன்பு பணியாற்றி வந்த ஊழியர்களின் ஓய்வூதியத்தை இந்திய அரசு முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தது. இந்த ஊழியர்களின் ஓய்வூதியத்தைப் பொறுத்தவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு எவ்வித பொறுப்பும் இல்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் ஓய்வூதியப் பயன்கள் குறித்த பொறுப்பை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டிருந்த்து. அதே நேரத்தில், நிதி தொடர்பான விதிகள் 116 இன் படி அவர்கள் நிறுவனத்தில் வேலை செய்த காலப்பகுதிக்கு ஓய்வூதியத்திற்கென அதன் பங்களிப்பு என்ற வகையில் ஓய்வூதியத்திற்கான பொறுப்பை பி.எஸ்.என். எல். தொடர்ந்து ஏற்கும்.

இந்த திருத்தத்தின் விளைவாக தொடர்ச்சியான ஆண்டுச் செலவு ஓய்வூதியர்களைப் பொறுத்தவரை சுமார் ரூ. 129.63 கோடியாகவும், குடும்ப ஓய்வூதியர்களைப் பொறுத்தவரை ரூ. 24.93 கோடியாகவும், 2013-14 நிதியாண்டு முதல் தரப்படவேண்டிய நிலுவைத் தொகை ஓய்வூதியர்களைப் பொறுத்தவரை சுமார் ரூ. 239.92 கோடியாகவும், குடும்ப ஓய்வூதியர்களைப் பொறுத்தவரை சுமார் ரூ. 44.62 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் சுமார் 1,18,500 ஓய்வூதியதாரர்கள் இந்த திருத்தத்தின் மூலம் பயனடைவார்கள்.

10.06.2013க்கு முன் ஓய்வு பெற்ற, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை திருத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இந்தத் திருத்தம் அமைவதோடு, இதுவரை நிலவி வந்த குறைகளை களைந்ததன் மூலம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு இணையாக ஓய்வூதியர்களையும் கொண்டு வரும். மேலும் பி.எஸ்.என். எல். நிறுவனத்தின் நிதிச்சுமையை குறைக்கவும் இது உதவுவதோடு, அரசின் உறுதிமொழியை நிறைவேற்றியதன் மூலம் தொழிலமைதி சீர்குலைவதற்கான வாய்ப்புகளையும் அகற்றியுள்ளது.

பின்னணி:

10.06.2013க்கு முன்பும், அந்தத் தேதிக்குப் பிறகும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தை நிர்ணயிப்பதில் நிலவி வந்த வேறுபாட்டின் பின்னணியில்தான் அமைச்சரவையின் இந்த முடிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பி.எஸ்.என்.எல். உருவாவதற்கு முன்பு அரசு கொடுத்திருந்த ஓய்வூதியத்திற்கான அரசின் பொறுப்பு பற்றிய உறுதிமொழியை நிறைவேற்றுவது குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினராலும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த கோரிக்கைகளின் மீது பல்வேறு மட்டங்களிலும் ஆலோசனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.