பி.எம்.இந்தியா
புதுதில்லியில் நஜாஃப்கர் என்ற இடத்தில் உள்ள ஊரக சுகாதார பயிற்சி மையத்தில் 100 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனையை ரூ.95 கோடி மதிப்பீட்டில் அமைத்து செயல்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
73 கிராமங்களைச் சேர்ந்த 13 லட்சத்து 65 ஆயிரம் மக்கள் மருத்துவ சேவை பெறும் வகையில் நஜாஃப்கரில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அமைப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த உத்தேச மருத்துவமனையில், மருத்துவம், மகப்பேறு மற்றும் பாலியல், குழந்தை மருத்துவம், அறுவை சிகிச்சை ஆகிய நான்கு பெரிய பிரிவுகளில் மருத்துவ சேவைகள் அளிக்கப்படும். இதில் ரத்த வங்கி, நோய் அறியும் சேவைகள், தனியான வெளி நோயாளிகள் பிரிவு ஆகியன இடம்பெற்றிருக்கும். வெளிநோயாளிகள் பிரிவில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், கண் மருத்துவம், காதொலி மருத்துவம், பச்சிளங்குழந்தைகள் பராமரிப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கும். வெளிநோயாளிகள் பிரிவில் 30 மருத்துவர்கள், 40 செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் 50 பேர் பணியாற்றுவார்கள்.
உள்ளூர் மக்களின் மருத்துவ வசதி, குறிப்பாக மகளிர், குழந்தைகள் உள்ளிட்ட எளிதில் பாதிக்கக்கூடிய பிரிவினரின் மருத்துவ வசதி தொடர்பான நீண்டகாலம் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும். குழந்தைகள் மற்றும் மகப்பேறு சேவைகள், அவசர சிகிச்சை, அடிப்படைத் தொடக்க நோய் அறியும் சோதனைகள், மருந்து வசதிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், தொற்றுநோய்த் தடுப்பு சேவைகள் ஆகியவற்றை இந்த பகுதி மக்களுக்கு இந்த மருத்துவமனை வழங்கும்.
2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்த மருத்துவமனை முழு அளவில் செயல்பாட்டில் வரும் என்றும் அப்போது இதன் அனைத்து துறைகளிலும் போதுமான மருத்துவர்களும், இதர ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.