பி.எம்.இந்தியா
வெளியுறவுத் துறை அமைச்சர் ரப்பானி அவர்களே,
மற்றும் எனதருமை ஆஃப்கானிய நண்பர்களே, சகோதர, சகோதரிகளே…
மீண்டும் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவிற்கு மிக நெருக்கமான அண்டைநாடு ஆஃப்கானிஸ்தான். எல்லைகளில் மட்டுமல்ல மனதளவிலும், எண்ணத்திலும் கூட இந்தியர்களும், ஆஃப்கானியர்களும் நெருக்கமான நண்பர்களாகவே இருக்கிறோம்.
நம் நட்பின் மற்றுமொரு சாதனையை கொண்டாடவும், இருநாடுகளின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்செல்லவும் இங்கு கூடியிருக்கிறோம்.
மேதகு கனி அவர்களே,
நல்ல நண்பர்களுடன் இணைந்து செய்த செயல்களின் வெற்றி தரும் மகிழ்ச்சி பெரும்பாலும் வேறெதிலும் கிடைப்பதில்லை. அப்படி பல செயல்களை கடந்த சில மாதங்களில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கும் எனக்கும் அமைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஃப்கானிய நாடாளுமன்றத்தின் துவக்க விழாவின்போது நீங்களும், ஆஃப்கான் மக்களும் எனக்கு பேராதரவு அளித்தீர்கள்.
நவீன ஆஃப்கானிஸ்தானின் அடித்தளத்தை பலப்படுத்துவதில் நம்மிடையே இருக்கும் ஒற்றுமையையும், ஆர்வத்தையும் அந்த துவக்கவிழா பறைசாற்றியது. இந்த ஆண்டு மே மாதம் நம்மிடையே கையெழுத்தான இந்தியா-ஆஃப்கானிஸ்தான்-ஈரான் கடவுத் தாழ்வாரம் தொடர்பான ஒப்பந்தம் நமக்குள் நிலவும் நட்பில் மற்றுமொரு மைல்கல்.
ஆஃப்கானிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கும், செழிப்புக்கும் உதவும் விதத்தில் பல புதிய திட்டங்களை கொண்டுவருவதில் நமக்கிடையே இருக்கும் உறுதியை அந்த ஒப்பந்தம் வெளிக்காட்டியது. அத்தோடு ஜூன் மாதம் நம்மால் ஆஃப்கானிஸ்தான்-இந்தியா நட்பு அணை திறந்துவைக்கப்பட்டது.
ஆஃப்கானிஸ்தான் ஹீராத் பகுதியின் பொருளாதார மற்றும் விவசாயத்துறைக்கு புத்துயிர் ஊட்டி புதுப்பிப்பதோடு நில்லாமல், ஆஃப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கப்போகிறது சல்மா அணை.
இன்று காணொளி காட்சியின் மூலம் நடக்கும் ஸ்டொர் அரண்மனையின் திறப்பு விழா முற்றிலும் புதுமையானது என்றாலும், நம் இருதரப்பு உறவுக்கும் அடிப்படையாகவும், புதிய பரிமாணம் அளிப்பதாகவும் உள்ளது. நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் இந்த நிகழ்வு ஆஃப்கானிஸ்தானின் கலாச்சார பாரம்பரியத்துக்கு புத்துயிர் ஊட்டும் நிகழ்வாகவும் இருக்கிறது.
பல முக்கியமான வரலாற்று சம்பவங்கள் நடைபெற்ற இடமாக ஸ்டொர் அரண்மனை திகழ்கிறது. ஆஃப்கானிஸ்தானில் நடைபெற்ற சில வன்முறைகளுக்கு அப்பாற்பட்டு அதன் வரலாற்றை பார்க்க முடியாதவர்களுக்கு ஆஃப்கானிஸ்தானின் வளமான பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் இடமாக ஸ்டொர் அரண்மனை விளங்குகிறது.
வரலாற்றுப்பாதையில் மறந்துபோன ஆஃப்கானிய சமூகத்தின் அழகியலையும், வளத்தையும், பகட்டையும் இன்றைய இளையதலைமுறைக்கு எடுத்துரைக்கும் இடமாகவும் இந்த அரண்மனை திகழ்கிறது.
நம் நிகழ்கால நட்பை, நமது வரலாற்றுத் தொடர்போடு இணைக்கும் பாலமாகவும் இந்த அரண்மனை விளங்குகிறது. ஸ்டொர் அரண்மனைக்கு புதுப்பொலிவூட்டும் நூதன வேலைக்காக இரவு பகல் பாராமல் உழைத்த ஓவியர்கள், கலைஞர்கள், நிபுணர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
நண்பர்களே,
ஆஃப்கானிஸ்தான் எங்களுக்கு நெருங்கிய நண்பன். நம் இருநாட்டு சமூகமும் எப்படி பழங்கால தொடர்பு உடையதோ, அதேபோல இருநாட்டு மக்களும் பல்லாண்டுகள் பழமையான தொடர்பு உடையவர்கள்.
அதனால்தான், வெளியில் இருந்து செயல்படும் சில தீய சக்திகளால் உங்கள் பெருமைமிகு நாடு வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் ஆளாவது பெரும் வேதனையை தருகிறது.
• செழிப்பான ஆஃப்கானிஸ்தானை கட்டமைப்பது
• சமூகத்தில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரதன்மையை கொண்டுவருவது
ஆகிய ஆஃப்கான் மக்களின் லட்சியத்திற்கு இந்தியாவின் 125கோடி மக்களும் உறுதுணையாக நிற்பார்கள் என உறுதி கூறுகிறேன்.
ஆஃப்கானிஸ்தானுடனான இந்தியாவின் கூட்டமைப்பின் உறுதியும், நட்பின் பலமும் அசைக்க முடியாதது.
நாம் இணைந்து செய்த, செய்யப்போகும் பல சாதனைகளுக்கு சாட்சியாக இன்றைய நிகழ்வு இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஆஃப்கான் செழிக்கவேண்டும் என்பதும், அதன்மூலம் ஆஃப்கானிய சமூகம் பயனடைய வேண்டும் என்பதுமே நாம் விரும்புவது.
என்ன மாதிரியான இடர்கள் வந்தாலும், அனைத்து ஆஃப்கானியர்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்தியா நிச்சயம் உறுதுணையாக இருக்கும்.
மேதகு கனி அவர்களே,
இறுதியாக, இந்திய தூதரகத்தையும், உதவித்தூதர் அலுவலகங்களையும் பாதுகாத்து, ஆஃப்கானிஸ்தானில் பணியாற்றும் இந்திய நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உங்களுக்கும், உங்கள் அரசுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ஆஃப்கானிய சகோதரர்கள் செய்திருக்கும் எண்ணற்ற தியாகங்கள் என்றுமே எல்லோரது நினைவிலும் இருக்கும். உங்கள் வருகைக்காக என் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். புதுப்பிக்கப்பட்ட ஸ்டொர் அரண்மனையை ஒருநாள் நேரில் பார்க்கவும் ஆர்வமாக உள்ளேன். மிக்க நன்றி.
Today's video inauguration of Stor palace is an entirely different, yet in many ways more fundamental, dimension of our engagement: PM
— PMO India (@PMOIndia) August 22, 2016
I say this because it brings back to life a valuable landmark of Afghanistan's cultural heritage: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 22, 2016
Afghanistan is a close friend. Our societies and people have had age old ties and links: PM @narendramodi https://t.co/6wY2MFrge1
— PMO India (@PMOIndia) August 22, 2016
The pledge of our partnership and strength of our friendship with Afghanistan is unwavering: PM @narendramodi
— PMO India (@PMOIndia) August 22, 2016