பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர் 2026 செப்டம்பர் 2 முதல் 4 வரை இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பெல்ஜியம் பிரதமருடன் அந்நாட்டுப் பாதுகாப்பு, வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் திரு தியோ ஃபிராங்கென், அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
பிரதமர் திரு டி வேவர் ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தி தமது பயணத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். முதலில் குறிப்பிட்ட நிலையிலும், பின்னர் தங்களுடைய பிரதிநிதிகள் நிலையிலும் பேச்சுகள் நடைபெற்றன. அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவின் அனைத்து அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய வெளியுறவு அமைச்சரும், பெல்ஜியம் வெளியுறவு அமைச்சரும் இணைந்து தலைமைத் தாங்கிய இந்தியா – பெல்ஜியம் இடையேயான முதலாவது உத்திசார் கலந்துரையாடல் 2026 ஜூலை 15 அன்று பிர்ஸ்ஸெல்ஸில் தொடங்கப்பட்டதை இரு தலைவரும் வரவேற்றனர். இந்திய – ஐரோப்பிய யூனியன் இடையே பரந்த அளவிலான உத்திசார் கூட்டாண்மையின் அடிப்படையில் அமைந்த இக்கலந்துரையாடல் வர்த்தகம், முதலீடு, பசுமை மாற்றம், தொழில் நுட்பம், போக்குவரத்து, பாதுகாப்பு, மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு வழக்கமான, விரிவான கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் உத்திசார் கலந்துரையாடலின் அடிப்படையில், அடையாளம் கண்டறியப்பட்ட முன்னுரிமைத் துறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு முக்கியத் தளமாக விரைவில் நடைபெறவுள்ள வெளியுறவுத் துறை நிலையிலான ஆலோசனைக் கூட்டங்களைத் இரு தலைவர்களும் வரவேற்பதாகக் குறிப்பிட்டனர்.
அமைதியான சர்வதேச ஒழுங்கைப் பின்பற்றுவதற்கும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப உலக நாடுகளைத் தயார்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மையமாகக் கொண்ட சீர்திருத்தப்பட்ட, பயன்மிக்க பன்முகத்தன்மை அவசியம் என்ற தங்களுடைய அழைப்பை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினார்கள்.
சீர்திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான இந்தியாவின் முயற்சிக்கான ஆதரவை பெல்ஜியம் மீண்டும் உறுதிப்படுத்தியது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கான இருதரப்பினரின் முயற்சிகளை ஆதரிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அதன்படி 2028-29-ம் ஆண்டில் இந்தியாவுக்கும், 2037-38-ம் ஆண்டில் பெல்ஜியமுக்கும் ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306302®=3&lang=1
***
SS/IR/GS/SH