பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை 2016-17ஆம் ஆண்டில் விவசாயிகளின் கடனுக்கான வட்டியில் ஒரு பகுதியை மத்திய அரசே ஏற்கும் திட்டத்திற்குத் தனது ஒப்புதலை வழங்கியது. இதற்கென ரூ. 18,276 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. விவசாயிகள் ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ. 3 லட்சம் வரை 4 சதவீத வட்டியில் குறுகிய கால பயிர்க் கடனாகப் பெறுவதற்கு இத்திட்டம் உதவும்.
இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாவன:
அ) 2016-17 ஆண்டுக் காலத்தில் ஓராண்டு காலத்திற்கு திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ. 3 லட்சம் வரையில் குறுகிய காலப் பயிர்க் கடனை பெறும் அனைத்து விவசாயிகளும் செலுத்த வேண்டிய வட்டித்தொகையில் 5 சதவீதத்திற்கு மத்திய அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும். நடைமுறையில் இந்தக் கடனுக்கென விவசாயிகள் 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.
ஆ) இவ்வாறு வட்டிக்கு செலுத்த வேண்டிய தொகையாக இந்த 2016-17 ஆம் ஆண்டிற்கென மத்திய அரசு சுமார் ரூ. 18,726 கோடியை வழங்கவிருக்கிறது.
இ) அறுவடைக்காலத்திற்குப் பிறகு உற்பத்திப் பொருட்களை சேமித்து வைக்க 9 சதவீத வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் 2 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆறு மாத கால கடனாக 7 சதவீத வட்டியில் இந்த விவசாயிகள் கடன் பெற இயலும்.
ஈ) இயற்கைப் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள அவர்களது கடன் அளவின் மீது முதல் ஆண்டுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டித் தொகையில் 2 சதவீதத்தை அரசே வங்கிகளுக்குச் செலுத்தி விடும்.
உ) குறுகிய காலப் பயிர்க் கடன் வாங்கிய விவசாயிகள் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை எனில், அத்தகையோர் செலுத்த வேண்டிய வட்டியில் மேலே குறிப்பிட்ட 5 சதவீதத்திற்குப் பதிலாக 2 சதவீதத்தை மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும்.