Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பொலிவுறு இந்தியா கணினிசார் மாநாட்டின் (2018) நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரின் உரை (2018, மார்ச் 30)


இந்தப் பின்மாலை நேரத்திலும் நாட்டின் இளைஞர்கள் இங்கே கூடியிருந்து நாட்டின் முன்னேற்றத்துக்கான பணியில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது. நமது நாடு மாறி வருகிறது, முன்னேறி வருகிறது.

நாட்டின் பல்வேறு மையங்களிலிருந்து வந்து இந்தப் பொலிவுறு கணினிசார் மாநாட்டில் (Smart India Hackathon) பங்கேற்பதற்காகப் பாராட்டுகிறேன். குறிப்பாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகரையும் அவரது குழுவினரையும் இந்தச் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காகப் பெரிதும் பாராட்டுகிறேன்.

பொலிவுறு இந்தியாவுக்கான புதுமையாக்கத்தில் ஈடுபடுவோரின் மத்தியில் பங்கேற்கும் அனுபவம் மிகவும் மகிழ்ச்சிகரமானது. தொழில்நுட்பத்தின் மூலமாகப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் பெரிதும் பாராட்டத் தக்கவை.

கடந்த சில மணி நேரமாக நீங்கள் உங்களது பணியில் ஈடுபட்டுவருகிறீர்கள். உங்களது உற்சாகம், நம்பிக்கை, ஆர்வம், விருப்பங்கள் ஆகியவற்றை என்னால் உணர முடிகிறது. இது விஷயத்தில் சோர்வு, மனஅழுத்தம் ஆகியவற்றுக்கு இடமில்லை. உங்களைப் பார்ப்பதை அடுத்து மனஅழுத்தத்திலிருந்து நான் விடுபடுகிறேன். நாட்டைக் கட்டமைப்பதில் இன்றைய தலைமுறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளால் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான இலக்குகள் வலுவடைகின்றன.

நண்பர்களே,

நான் இதற்கு முந்தைய பொலிவுறு இந்தியா கணினிசார் மாநாட்டிலும்  பங்கேற்றிருக்கிறேன். இப்போதைய மாநாட்டில் பங்கேற்கும்படி அழைக்கப்பட்டபோது மறுசிந்தனையின்றி இசைவு தெரிவித்தேன். இளைஞர்களாகிய உங்களைச் சந்திப்பதிலும் உங்களது கருத்துகளைக் கேட்பதிலும் விருப்பத்துடன் இருக்கிறேன். உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயல்கிறேன்.

ஒரு மனிதன் தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைப்பதைப் போல பெரிய தவறு வேறு ஏதுமில்லை என்று கருதுகிறேன். அதைப் போல், தன்னால்தான் எல்லாவற்றையும் செய்துவிட முடியும் என்று அரசாங்கம் கருதுவதும் பெரிய தவறு. ஆகையால், பங்களிப்புடன் கூடிய ஆளுகையையே நான் பெரிதும் வலியுறுத்துகிறேன்.

நமது 125 கோடி இந்தியர்களின் மனித ஆற்றல் மற்றும் மன உறுதி ஆகியவற்றை விடப் பெரிய சவால் உலகில் ஏதுமில்லை. நாட்டில் 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். அவர்கள் குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு உறுதிபூண்டால் சாத்தியமில்லாதது எதுவுமேயில்லை.

இளைஞர்களின் நெஞ்சில் உற்சாகம், ஆர்வம், நம்பிக்கை நிரம்பி வழிகின்றன. அத்தகைய நிலை புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எனது நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கிறது. ஆம், இந்தியா உலக அரங்கில் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தை 21 ஆம் நூற்றாண்டில் அடையும்.

இளம் தொழில்வல்லுநர்கள், இளம் தொழிலதிபர்கள், இளம் விஞ்ஞானிகள், இளம் அதிகாரிகள் ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பை நான் தவறவிடுவதேயில்லை என்பதற்கான பெரிய காரணங்களில் இது ஒன்றாகும். உங்களது உற்சாகம் புதிய இந்தியாவின் கனவு நிறைவேறுவதற்கு முக்கியமான தூண்டும் சக்தியாக உள்ளது.

எனினும், புதிய இந்தியாவைப் படைப்பதற்கான கனவு வெறும் குறைந்த முயற்சிகளால் சாத்தியமாகிவிடுமா என்பது கேள்வி. அதற்குப் பதில் இல்லை என்பதே. பிரச்சினைகளின் வேரை அடையாளம் காண்பதும் அதற்கான மாற்றுச் சிந்தனையும், நவீன தீர்வுகளும் அவசியமானவை.

நமது அரசாங்கத்தின் இந்த முயற்சி பொலிவுறு இந்தியாவின் கணினிசார் திட்டங்களுக்கு அடித்தளமாக உள்ளது.

கடந்த முறை நடைபெற்ற கணினிசார் மாநாட்டின்போது இறுதி செய்யப்பட்ட 60 திட்டங்களில் பாதி திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன என்று அறிகிறேன். மீதியுள்ள திட்டங்களும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடைந்துவிடும் என்றும் தெரிகிறது. கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த முறை மாநாட்டு நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு மாநாட்டில் மத்திய அரசின் 27 அமைச்சகங்களுடன் மாநில அரசுகளும் பங்கேற்கின்றன. கணினிசார் மாநாடு தொடர்பான சாஃப்ட்வேர் பதிப்புடன் இன்னும் சில மாதங்களில் ஹார்டுவேர் பதிப்பும் தயாராகிவருவதாக நான் அறிகிறேன்.

இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து இளைஞர்கள், பல்வேறு அமைச்சகங்கள், மாநில அரசுகளைப் பாராட்டுகிறேன்.

உணவு மேலாண்மை, காடுகளில் ஏற்படும் தீ போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நீங்கள் கண்டறியப்போகிறீர்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறை நமது குறிக்கோளை எட்டுவதற்குத் துணைபுரியும் என்று நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்நிலையில் அறிவுதான் சக்தி, புதுமையாக்கம்தான் வளர்ச்சிக்கான உத்வேகம் ஆகும். அதாவது, அறிவுதான் ஆற்றலைப் போல் ஆகிவிடுகிறது. ஆனால், அந்த ஆற்றலை விரிவுபடுத்துவதற்குப் புதுமையாக்கம் தேவைப்படுகிறது. புதுமையாக்கம் பெரிய அளவில் இருந்தால், நாடும் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். புதுமையாக்கம் என்பது வெறும் ஒரு சொல் அல்ல. புதுமையாக்கம் செய்வது விருதுகளை அளித்து, கொண்டாடி விடைபெறுவது போல ஏதோ ஒரு நிகழ்வு அல்ல, போட்டியும் அல்ல. புதுமையாக்கம் என்பது தொடர்ச் செயல்பாடு ஆகும். ஒரு பிரச்சினையை ஆழமாகப் புரிந்துகொள்ளும்போதும், கேள்விகளை எதிர்கொள்ளும் போதும் புதிய சிந்தனைகளை முன்வைக்கும்போதும், அந்தச் சிந்தனைளை அரசு செயல்படுத்தும்போதும்தான் உங்களால் புதுமையாக்கத்தில் ஈடுபட முடியும்.

அதனால்தான் நான் இணைய நிகழ் வழங்கு மற்றும் மேம்பாடு (Internet presence provider and promoter)  என்ற கருத்தியலை நான் முன்வைத்தேன். இதன் விளக்கம் புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் வளமை (Innovate, Patent, Produce and Prosper) என்பதாகும். இந்த நான்கு அம்சங்களும் நாட்டை வேகமாக முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதற்குப் பெரிதும் துணைபுரியும். மேலும் புதுமையாக்கம், விரைந்த காப்புரிமை, உற்பத்தி ஆகியவற்றின் மூலம் மேலும் வேகமாக நம்மால் முன்னேற இயலும்.

ஆகையினால், நமது அரசாங்கம் புதுமையாக்கத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. “அடல் புதுமையாக்க இயக்கம்” (Atal Innovation Mission – AIM) என்ற திட்டத்தின் மூலம் புதுமையாக்கம், தொழில்முனைவுத் திறன் ஆகியவற்றுக்கு உகந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்கால நுணுக்கங்களைச் சிறுவயதிலேயே மாணவர்கள் அறிந்துகொள்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவதே நமது குறிக்கோள் ஆகும். அப்போதுதான் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), பிளாக் செயின் டெக்னாலஜி (Block Chain Technology) எனப்படும் புதிய தொடர் தொழில்நுட்பம், முப்பரிமாணம் (3D), ரோபாட்டிக்ஸ் (Robotics) ஆகிய இணையம் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

 

சிறுவர்களிடையில் சின்ன வயதிலேயே புதுமையாக்கத்துக்கான மனநிலையை உருவாக்குவதற்காக நாடு முழுதும் 2,400 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். எதிர்காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதைச் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். அடல் அறிவூட்டு ஆய்வகங்களில் 6வது முதல் 12ஆவது வரையிலான மாணவர்களை ஈடுபடுத்துவதில் கவனம் செலுத்திவருகிறோம். இந்த ஆய்வகங்களில் கல்வி, பயிற்சி முறையை சிறுவர்கள் அறிந்துகொள்ள நவீனத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. பதின்மவயதிலேயே மாணவர்களிடையில் புதுமையாக்கத்துக்கான மனநிலை வளர்ந்துவிட்டால், பாதி வேலை முடிந்துவிடும். அதன் பிறகு, தொழில்நுட்பக் கல்வியில் மாணவர்களிடையில் ஆய்வுப்பணியில் ஈடுபடுவதை வலுப்படுத்தி, ஊக்கமளிப்பதிலும் கவனம் செலுத்த இருக்கிறோம். இது தொடர்பாக முக்கியமான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஆய்வுப் பணியை ஊக்கப்படுத்துவதற்காகப் பிரதம மந்திரி ஆய்வு நிதி நல்கை (Prime Minister’s Research Fellowship – PMRF) என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. மாணவர்களே, நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இத்திட்டத்தின் கீழ் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT), இந்திய அறிவியல் கல்விக்கழகம் (IISc) அல்லது தேசிய தொழில்நுட்பக் கல்விக்கழகம் (NIT) ஆகியவற்றில் பி.டெக்., எம்.டெக்., எம்எஸ்ஸி படிக்கும் மாணவர்களுக்கு   நல்கை அளிக்கப்படும். ஆண்டுதோறும் 1000 மாணவர்கள் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரையில் ஐந்து ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். அத்துடன் சர்வதேசக் கருத்தரங்குகள், மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிப்போருக்கு ஆய்வு நல்கையாக ரூ. 2 லட்சத்தை மத்திய அரசு அளிக்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னேறிய நாடுகளில் பொதுவான ஓர் அம்சம் காணப்படுகிறது. அந்நாடுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான வகையில் பல நிறுவனங்களில் புதுமையாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அதையடுத்து, உயர்கல்வி நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் சுதந்திரம் அளிப்பதை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அத்துடன், உலகத்தரம் வாய்ந்த இருபது “மேம்பட்ட கல்வி நிறுவனங்களை” (‘Institutions of Eminence) உருவாக்கவும் அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது. இவற்றில் பத்து  பொதுத் துறை நிறுவனங்களுக்காக மத்திய அரசு ரூ. 10,000 கோடி உதவி அளிக்க இருக்கிறது.

எதிர்காலத்துக்கு ஏற்ற சூழலை மேம்படுத்துவதற்கு ஒரு புறம் பாடுபட்டுவருகிறோம். மறுபுறம் தொழில்முனைவோர்களுக்குச் சாதகமான சூழல் அமைவதற்கு “தொடங்குக இந்தியா” (Start-up India) போன்ற திட்டங்களின் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் 6000 தொடக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மத்திய அரசு நிதியுதவியை அளித்து வருகிறது.

 

 

நண்பர்களே,

   உலகச் சவால்களைப்  பார்க்கும்போது புதுமைப் படைப்புப் பண்பாட்டை நாம் கடைப்பிடிப்பது மிகவும் அவசியமாகிறது. இதர நாடுகள் மஞ்சள், வேம்பு, பாஸ்மதி அரிசி ஆகியவற்றுக்குப் பதிவு உரிமை பெற்றுவரும் நிலை நமக்கு வேதனை அளிக்கும் ஒன்றாகும். எனவே நமது அரசு பதிவுஉரிமை மற்றும் காப்புரிமை அமைப்புகளில் மேம்பாடு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பயனாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 11,300-க்கும் அதிகமான பதிவு உரிமைகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக 2013-14-ம் ஆண்டில் நான்காயிரம் பதிவுஉரிமைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்தத் தகவல் உங்களுக்குப் பெருமை அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போதைய அரசு பதவிக் காலத்தில் முந்தைய அரசின் காலத்தைப்  போல மூன்று மடங்கு இவை அதிகரித்துள்ளது. வர்த்தகச் சின்னங்கள் பதிவு இந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. 2013-14-ல் 68,000ஆக இருந்த வர்த்தகச் சின்னப் பதிவு தற்போது இரண்டரை லட்சமாக உயர்ந்துள்ளது.

    புதுமைப் படைப்பு, பதிவுஉரிமை ஆகியவற்றுக்கு மட்டும் நமது அரசு முக்கியத்துவம் தருவதோடு நில்லாமல் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் தயாரிப்போம், என்பது ஒரு வர்த்தகப் பெயராகவே மாறியுள்ளது, இது குறித்து அகில உலகமுமே பேசிவருகிறது.  நான் தரும் உதாரணத்தைப் பார்த்தால் முழுத் தெளிவு ஏற்பட்டுவிடும். நண்பர்களே, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மொபைல் தொலைபேசியை உற்பத்தி செய்வதற்கு நாட்டில் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. நீங்கள் அனைவரும், இதே துறையில்தான் உள்ளீர்கள்: எனவே நான்கு  ஆண்டுகளில் மொபைல் தொலைபேசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நாட்டில் இரண்டிலிருந்து 120ஆக  அதிகரித்திருப்பது இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் விரைந்த முன்னேற்றத்தின் காரணமாகத்தான் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும்.

  புதுமைப்படைப்பும், பதிவுஉரிமையும், உற்பத்தியும் தத்தம் அதிகபட்ச நிலையில் செயல்படும்போது, நாட்டின் வளமும், விரைவாக வளர்ச்சியடைகிறது. எனினும், இது தொடர்பாக மற்றொரு கேள்வி எழுகிறது. புதுமைப் படைப்பு யாருக்காக? அது நமக்காகவா அல்லது நாட்டிற்காகவா அல்லது நாட்டில் உள்ள ஏழைகளுக்காகவா? அது நமது தேவைகளை நிறைவு செய்வதற்காகவா அல்லது நமது நாட்டின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவா?

     நமது இளைய நண்பர்கள் முன்னிலையில் இந்தக் கேள்விகளை வேண்டுமென்றேதான் கேட்டிருக்கிறேன். ஆராய்ச்சி முடிவு அறிக்கை சர்வதேச அரசிதழில் அல்லது பத்திரிகையில் பிரசுரிக்கப்படலாம். அல்லது அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வெளியிடப்படலாம். ஆனால், சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்பு நாட்டின் மக்களுக்கு  உதவியாக இருந்தால்தான் நாம் திருப்தியடைய முடியும், எனவே, இதனையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எது புதுமைப்படைப்பாக இருக்கவேண்டும்? நாட்டின் சவால்களுக்குத் தீர்வுகள் வழங்குவதாகவே அவை இருக்கவேண்டும். 

   நாட்டில் பல்வேறு ஹேக்கத்தான்களை அமைத்து நடத்துவது ஒரு நடவடிக்கையாக இருக்கமுடியும், உதாரணமாக, சுகாதார ஹேக்கத்தான், சட்ட ஹேக்கத்தான்,  கட்டடக்கலை ஹேக்கத்தான், விவசாய ஹேக்கத்தான், கிராமப்புற ஹேக்கத்தான் எனப் பல. இன்னும் இது போன்ற துறைகளை நாம் கண்டுபிடிக்கமுடியும்.  விவசாயிகள், கட்டடக்கலை நிபுணர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் எனப் பலவகை புதுமை படைக்கும் அறிவாற்றல் நாட்டுக்குத் தேவை.

    இந்த ஹேக்கத்தான்கள் இளைய தலைமுறை திறன் பெற்றோருக்குப் புதிய மேடைவாய்ப்புக்களை வழங்கும் ஊடகமாக விளங்கும். சுகாதாரம், தெளிவு மேலாண்மை, பொதுப்போக்குவரத்து ஆகியவற்றில் புதிய படைப்புகளை இவற்றின் மூலம் நாம் கொண்டுவர முடியும். இதனால்  நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்களின் எண்ணிக்கை குறையும். அதனால் அவர்களின் வாழ்க்கை  மேம்படும். மேலும் உங்களது புதுமைப்படைப்புகள் நாட்டுக்கும் சேவை புரியும்.

    இந்த ஹேக்கத்தானில் உயர் நுணுக்கம் கொண்ட படங்களைத் தயார் செய்ய ஆளில்லா சிறிய விமானங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று நான் அறிந்தேன். இது தொடர்பான எந்தப் புதுமைப்படைப்பும் நாட்டிற்கு ஆற்றும் பெரிய சேவையாக அமையும்.

    இந்த ஆளில்லா சிறிய விமானங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை அரசின் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக நமது அரசு இணைத்துக்கொண்டுள்ளது என்பதை அறிய உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

     பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம், பிரதம மந்திரி நீர்ப்பாசனத் திட்டம் போன்ற திட்டங்களைக் கண்காணிப்பதில் புவி பெயர் இணைத்தல் மற்றும் வரைப்படம் தயாரித்தல் முக்கிய பங்காற்றி நிறைவடையாத திட்டங்களை நிறைவு பெறச்செய்யும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கும் பெரிதும் உதவும்.

   சென்ற மாதம் நடைபெற்ற பிரகதி ஆய்வுக்கூட்டத்தில், கேதார் காட்டி மறுசீரமைப்புத் திட்டம்,  நேரலையாக ஆளில்லா சிறு விமான கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக இடையே சிறிது தடங்கல் ஏற்பட்டாலும், நான் இதன்மூலம் விரிவான காட்சியைக் காணமுடிந்தது. 

  இந்த முழுப் பணி நிலவரத்தையும் தில்லியிலிருந்தபடியே என்னால் கண்காணிக்க முடிந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் புதுமையைக் கொண்டுவந்தால் எதிர்காலத்தில் இத்தகைய பயன்பாடுகள் மிகவும் சாதாரணமானவையாக ஆகிவிடும்.

   பிரகதி கூட்டங்கள் பற்றி தெரியாத இளம் நண்பர்களுக்கு அது பற்றித் தெரிவிக்க விரும்புகிறேன். நமது அரசு  திட்டப்பணிகளின் கண்காணிப்புக்கென நவீன அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதன்படி பிரதமர் அலுவலகத்தில் இருந்தபடியே, நம்முடன் மாநில அரசு அதிகாரிகள் செயற்கைக்கோள் இணைப்பு மூலம் காணொளியாகப்  பேச முடிகிறது. இதனையடுத்து திட்டங்கள் குறித்த உண்மைநிலை போன்ற கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. திட்டம் நிறைவு பெறுவதில் காலதாமதம், திட்டங்களில் உள்ள அடிப்படை பிரச்சினைகள், முடிவடைந்த பணிகளின் அளவு, போன்றவை மதிப்பிடப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

நண்பர்களே,

   மாறிவரும் காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் அதன் புதுமைப்படைப்பு திறனைப் பொறுத்துதான் உள்ளது. நமது நாட்டில் ஆதாரங்களுக்கு எவ்விதமான பற்றாக்குறையும் இல்லை. நமது இளைஞர்களின் பலம் அளவிடற்கரியது. நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களிடையே பல கனவுகள் இருக்கும், அவற்றை நிறைவேற்ற பல நடவடிக்கைகளை எடுப்பீர்கள். கனவை மடிந்துவிட மட்டும் அனுமதிக்காதீர்கள். கனவை நனவாக்க எந்த அளவுக்கும் போக நீங்கள் உறுதியுடன் செயல்பட்டால் அதனைக் கட்டாயம் அடைந்தே தீருவீர்கள்.

   நாட்டின் விடுதலைக்காகப் போராடவோ அல்லது அதற்காக வாழ்க்கையைச் சிறையில் கழிக்கவோ நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்யவோ, உங்கள் தலைமுறைக்கோ அல்லது எனது தலைமுறைக்கோ வாய்ப்பில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனினும், நாட்டிற்காக வாழ்வதற்கான வாய்ப்புகள் நமக்கு உள்ளன. நாட்டின் ஏழைமக்கள் சாதாரண மக்களுக்காக வாழ்வதற்கு நமக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது, எனவே உங்கள் திறனையும், வலுவையும் நாட்டிற்காகப் பயன்படுத்துங்கள். நாட்டின் நலனுக்காகத் தொழில்நுட்பத்தை மேலும் சிறப்பாகப் பயன்படுத்தும் பல்வேறு வழிப் வகைகள் குறித்து சிந்தித்து முயற்சியுடன் செயல்படுங்கள்.

நண்பர்களே,

   நீங்கள் இன்று காலை முதல் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்  என்றும் நாளை இரவு வரை பணியில் ஈடுபட்டு இருப்பீர்கள் என்று எனக்குத்  தெரியும். 36 மணி நேரம் என்பது அதிக அளவு நேரம்தான். இன்றைய உங்கள் அனுபவத்தைப் பற்றிக் கேட்டறிய நாம் விரும்புகிறேன். இத்தகைய இறுக்கமான  சூழ்நிலையில் பிராணாயமா மூலம் உங்கள் இறுக்கத்தை தளர்த்திக்கொள்ளுங்கள், ஆழமாக மூச்சை இழுத்துவிடுங்கள்,  தசைகளை  நீட்டித் தளர்த்தி  சற்றுப் பயிற்சி செய்யுங்கள். சிறிது நேரம் தளர்த்துதல் காரணமாகப் புதிய கருத்துக்கள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் ஈடுபட்டிருக்கும்  பணிக்கான வித்திடும் பணியை நான் மேற்கொண்டுள்ளேன். உங்கள் முன்னிலையில் நான் இருப்பதால் முதலாவதாக உங்களது அனுபவங்கள் குறித்துக்  கேட்டறிய விரும்புகிறேன். பல்வேறு பகுதிகள் பற்றி நான் விசாரிப்பேன். முதலில் பானிபட் இளைஞர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கக்கூடும் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது.