Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்


திரு ஆர்.என்.ரவி அவர்களே, திரு எல்.முருகன் அவர்களே, திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களே, திரு நயினார் நாகேந்திரன் அவர்களே, திரு எ.வ.வேலு அவர்களே, மற்றும் தமிழ்நாட்டின் அன்பான சகோதர சகோதரிகளே, வணக்கம்!

புனிதமான, வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை நகரத்தில் இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரரை வணங்குகிறேன். இன்றைய நிகழ்வு தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. நான்காயிரத்து நானூறு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்துள்ளோம். இந்தத் திட்டங்கள் போக்குவரத்து இணைப்பை சிறப்பாக மாற்றும். பொருளாதாரத்தை மேம்படுத்தும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அத்துடன் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும். விவசாயிகள் சந்தைகளை அடைய சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதான பயண அனுபவம் ஏற்படும். வணிகங்களுக்கு விரைவான போக்குவரத்து கிடைக்கும். உயர்தர உள்கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களை மேம்படுத்துவதாகும்.

நண்பர்களே,

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசு தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைக் கட்டமைப்பில் மிகப்பெரிய முதலீடுகளைச் செய்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல் நான்காயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் இங்கு கட்டப்பட்டுள்ளன. இன்று, இரண்டு பெரிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவது, இரண்டாயிரத்து நூறு கோடி ரூபாய்க்கு மேல் முதலீட்டில் மரக்காணம்-புதுச்சேரி பிரிவின் நான்கு வழிச்சாலையாகும். இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடலோர சுற்றுலா, வர்த்தகம், பொருளாதாரத்தை வலுப்படுத்தும். இரண்டாவது, பரமக்குடி-ராமநாதபுரம் பாதையின் நான்கு வழிச்சாலை. இந்த திட்டத்தில், நாங்கள் ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்கிறோம். இது ராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களுக்கான போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்கும். இது யாத்ரீகர்களுக்கான பயணத்தை எளிதாக்குவதையும், விவசாய பொருட்கள் மற்றும் கடல் பொருட்களின் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்யும்.

நண்பர்களே,

கடந்த பத்து ஆண்டுகளில், ரயில்வே ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. இது நவீன, திறமையான, மக்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து அமைப்பாக வளர்ந்து வருகிறது. இந்த மாற்றம் குறிப்பாக தமிழ்நாட்டில் தெரிகிறது. எங்கள் அரசு அமைந்ததிலிருந்து தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. 2009 முதல் 2014 வரை, சராசரி ஆண்டு ரயில்வே ஒதுக்கீடு 880 கோடி ரூபாயாக இருந்தது. 2026–27-ம் ஆண்டில், ஒதுக்கீடு 7600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில், 1300 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 97% மின்மயமாக்கல் அடையப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் பாதுகாப்பையும் செயல்திறனையும் மேம்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இது இந்தியாவின் முதல் செங்குத்துத் தூக்குக் கடல் பாலமாகும். பொறியியல் சிறப்பின் அடையாளச் சின்னம் இதுவாகும். இந்தப் பாலம் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

தற்போது, 9 வந்தே பாரத் ரயில்களும் 9 அம்ரித் பாரத் ரயில்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு பயனளித்து வருகின்றன. இதுபோன்ற அதிவேக ரயில்களின் பெட்டிகள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிப்போம் (‘மேக் இன் இந்தியா’) என்ற நமது தொலைநோக்குப் பார்வை, தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்பது பெருமைக்குரிய விஷயம். அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், 77 ரயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையங்கள் வசதி, சிறந்த அணுகும் தன்மை, உள்ளூர் அடையாளம் ஆகியவற்றை இணைப்பதாக அமைகின்றன. இன்று, தமிழ்நாடு முழுவதும் எட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையங்களைத் திறந்து வைக்கிறோம். சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் நான்காவது பாதை அர்ப்பணிப்பு சென்னையில் பல்லாயிரக்கணக்கான பயணிகளுக்கு தினசரி பயனளிக்கும். கும்பகோணம், ஏற்காடு, வேலூர் ஆகிய இடங்களின் ஆகாஷ்வாணியின் புதிய பண்பலை டிரான்ஸ்மிட்டர்களைத் திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வானொலி நிலையங்கள் இன்று முதல் உங்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

நண்பர்களே,

தமிழ்நாட்டிற்கான உள்கட்டமைப்பு நிதி, முந்தைய பத்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இப்போது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் 2026-ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் மீது வலுவான கவனம் செலுத்தி இந்தப் போக்கு தொடர்கிறது. இந்த பட்ஜெட்டில், பெங்களூரு-சென்னை, சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் வழித்தடங்களை நாங்கள் முன்மொழிந்துள்ளோம். அவை இந்த முழு பிராந்தியத்தின் பொருளாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்தும். பட்ஜெட் தமிழ்நாட்டை அரிய பூமி வழித்தடங்களின் ஒரு பகுதியாக நிலைநிறுத்துகிறது. அரிய புவி வழித்தடங்கள், மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

நண்பர்களே,

தமிழ்நாடு வளமான வரலாற்றையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ளது. ஆதிச்சநல்லூர் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உலகளாவிய பாரம்பரிய இடங்களாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரி தொடர்பான திட்டம், பொதிகை மலையைச் சுற்றி சுற்றுச்சூழல் சுற்றுலா முயற்சி ஆகியவை இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதோடு புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். உற்பத்தியை அதிகரிக்க நாடு முழுவதும் சுமார் இருநூறு தொழில்துறை வழித்தடத் தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டு ஆதரிக்கப்படும். தமிழ்நாடு பல தொழில்களுக்கு தாயகமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இந்தத் திட்டம் இங்குள்ள இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.

நண்பர்களே,

2047-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியரும் ஒரு வளர்ந்த நாட்டைக் கட்டியெழுப்ப உத்வேகத்துடன் செயல்பட வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வளர்ச்சியடைந்த தமிழ்நாடு என்பதே நமது கூட்டு இலக்கு. உள்ளடக்கிய வளர்ச்சியையும் மாநிலத்தின் முன்னேற்றத்தையும் செயல்படுத்துவதில் மத்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

நன்றி!

***

(Release ID: 2234199)

TV/PLM/RK