பி.எம்.இந்தியா

மதிப்புமிகு நாடாளுமன்ற சபாநாயகரும், மாலத்தீவின் முன்னாள் அதிபரும், எனது அருமை நண்பருமான மேதகு முகமது நஷீத் அவர்களே,
நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களே,
சிறப்புவாய்ந்த விருந்தினர்களே,
நமஷ்கார் (மாலை வணக்கம்).
130 கோடி இந்திய மக்களின் சார்பிலும், தனிப்பட்ட முறையில் எனது சார்பிலும் வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். புனித ரமலான் திருவிழாவின் மகிழ்ச்சியும், உற்சாக இன்னும் நம்முடன் உள்ளது. இந்த விழாவையொட்டி, உங்களுக்கும், மாலத்தீவு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
மாலத்தீவு என்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளின் தொகுப்பு. இது இந்தியப் பெருங்கடலுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகுக்கும் அரிதான மாணிக்கமாகத் திகழ்கிறது. இதன் எல்லையில்லா அழகு மற்றும் இயற்கை வளங்கள், பல நூறு ஆண்டுகளாக மக்களைக் கவர்ந்து வருகின்றன. மனிதர்களால் வெல்ல முடியாத இயற்கையின் சக்திக்கு இந்த நாடு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வர்த்தகம், மக்கள் தொடர்பு, கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து பெறும் நாடாக மாலத்தீவு உள்ளது. இதன் அழகான தலைநகரான மாலே, இந்தியப்பெருங்கடல் பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் வருவதற்கான நுழைவுவாயிலாக மட்டுமல்லாமல், நிலையான, அமைதியான மற்றும் வளமான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை ஏற்படுத்துவதற்கு ஒட்டுமொத்த உலகத்துக்கும் மையமாக உள்ளது.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
மாலத்தீவில் உங்கள் அனைவருடனும், இந்த சிறப்புவாய்ந்த நாடாளுமன்றத்திலும் இருப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். சபாநாயகராக மதிப்புமிகு திரு.நஷீத் தேர்வுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல் கூட்டத் தொடரிலேயே பங்கேற்க என்னை அழைக்க ஒருமனதாக நாடாளுமன்றம் தேர்வுசெய்ததை, நான் பெருமையாகக் கருதுகிறேன். உங்களது இந்த செயல்பாடு, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது பெருமை மற்றும் கவுரவத்தை அதிகரித்துள்ளது. இதற்காக, மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே, உங்களுக்கும், இந்த பெருமைமிகுந்த அவையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது சார்பிலும், ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பிலும் எனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இது மாலத்தீவுக்கு நான் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம். மேலும், நாடாளுமன்றத்தின் வரலாற்றுப்பூர்வ செயல்பாடுகளை இரண்டாவது முறையாக நான் பார்க்கிறேன். கடந்த நவம்பர் மாதத்தில் அதிபர் சோலி-யின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதை மிகுந்த மகிழ்ச்சியாகவும், மிகப்பெரும் கவுரவமாகவும் கருதினேன். அந்த பதவியேற்பு விழா, திறந்தவெளி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்றது. வரலாற்றுப்பூர்வமான ஜனநாயக வெற்றியின் நம்பிக்கை, தீர்மானம் ஆகியவை அந்த வெற்றியின் அடிப்படையாகும். அந்த பதவியேற்பு விழா, மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உண்மையான ஜனநாயகத்தின் முதல் சக்தியை மாலத்தீவில் நான் நேரடியாக உணர்ந்தேன். அந்த நாளில், ஜனநாயகத்துக்காகவும், சபாநாயகர் அவர்களே, உங்களைப் போன்ற தலைவர்கள் மீதான அன்புக்காகவும் மாலத்தீவைச் சேர்ந்த பொதுமக்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் உறுதியை நான் கண்டுகளித்தேன். மேலும் இன்று, மாலத்தீவில் ஜனநாயகத்தின் கொடியை ஏந்திச் செல்லும் உங்கள் அனைவருக்கும் வணக்கம் தெரிவிக்கிறேன்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்த அவை, அதாவது, இந்த நாடாளுமன்றம், வெறும் செங்கல் மற்றும் காரைகளால் கட்டப்பட்ட கட்டிடம் இல்லை. இது சாதாரண மக்கள் கூடும் இடம் இல்லை. இந்த அவையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கருத்துக்கள் மற்றும் பேச்சு மூலம், நாட்டின் நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு வெளிப்படும் ஜனநாயகத்தின் சக்தி மையமாக உள்ளது. மக்களின் கனவுகளும், விருப்பங்களும், உங்களது முயற்சிகள் மூலம் இங்கு நனவாகிறது. நாட்டின் ஜனநாயகம், வளர்ச்சி மற்றும் அமைதிக்காக பல்வேறுபட்ட கொள்கைகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது ஒத்த தன்மையுடைய விருப்பங்களை இங்கு ஒன்றுசேர்க்கின்றனர்.
இதேபோன்றுதான், சில மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகத்தின் சிறந்த உதாரணத்தை மாலத்தீவு மக்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த உலகுக்கும் வெளிப்படுத்தியுள்ளனர். உங்களது அந்தப் பயணம், முழுமையான சவால்களைக் கொண்டதாக இருந்தது. ஆனால், இதில் மக்கள் வெற்றிபெற்றார்கள் என்பதை மாலத்தீவும், நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். இது ஒரு சாதாரண வெற்றியல்ல. உங்களின் இந்த சாதனை, ஒட்டுமொத்த உலகின் ஜனநாயக பலத்துக்கு மிகப்பெரும் ஆதாரமாக உள்ளது. மாலத்தீவின் இந்த சாதனைக்காக மிகவும் பெருமைப்படுபவர்களாகவும், மகிழ்ச்சியடைபவர்களாகவும் யார் இருந்திருக்க முடியும்?
இந்த கேள்விக்கான விடை வெளிப்படையானது.
அது உங்களது அண்டை நாடு, மிகவும் நெருங்கிய நண்பரான மற்றும் உலகின் மிகப்பெரும் ஜனநாயகமான இந்தியா தான். மாலத்தீவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக இந்தியாவும், அனைத்து இந்தியர்களும் உங்களுடனேயே எப்போதும் இருப்போம் என்று இந்த மாபெரும் கூட்டத்தில் இன்று நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
மதிப்புமிகுந்த சபாநாயகர் அவர்களே,
இந்தியாவிலும் கூட, வரலாற்றில் மிகப்பெரும் ஜனநாயக நடவடிக்கைகளை அண்மையில் நிறைவுசெய்தோம். 130 கோடி இந்தியர்களுக்கு இது ஒன்றும் சாதாரண தேர்தல் அல்ல, மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவின் கொண்டாட்டம். தகுதிவாய்ந்த வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர், அதாவது 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், தங்களது வாக்குகளை செலுத்தினர். வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்காக பெருவாரியான வெற்றியை அவர்கள் அளித்தனர்.
மதிப்புமிகுந்த சபாநாயகர் அவர்களே,
எனது அரசின் அடிப்படை மந்திரமான “சப்கா சாத், சப்கா விகாஸ் அவுர் சப்கா விஸ்வாஸ்” (அனைவரும் ஒன்றிணைந்து, அனைவரின் வளர்ச்சிக்காக மற்றும் அனைவரின் நம்பிக்கையுடன் பணியாற்றுவது) என்பது இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. இது எனது அரசின் வெளியுறவுக் கொள்கை, மிகப்பெரும் உலகிற்கான நிலைப்பாடு, குறிப்பாக நமது அண்டை நாடுகளுடனான நிலைப்பாட்டில் இதுவே அடிப்படை தத்துவமாக உள்ளது.
“அண்டை நாடுகளே முதலாவது” என்பதில் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். அண்டை நாடுகளில் மாலத்தீவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே, இன்று உங்கள் முன்பு நான் இருப்பது எதேச்சையாக நடந்தது இல்லை.
கடந்த டிசம்பர் மாதத்தில், தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு அதிபர் சோலி வந்தார். மாலத்தீவின் அன்பார்ந்த இந்த அழைப்பு காரணமாக, எனது புதிய ஆட்சிக்காலத்தில் முதலாவது வெளிநாட்டுப் பயணமாக நான் இங்கு வந்துள்ளேன். சிறிது நேரத்துக்கு முன்னதாக, வெளிநாட்டினருக்கு மாலத்தீவு வழங்கும் மிக உயரிய கவுரவத்தை அதிபர் சோலி-யிடமிருந்து வாங்கும் பாக்கியத்தை நான் பெற்றேன். எனது நன்றியைத் தெரிவிப்பதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவு, வரலாற்றைவிட மிகவும் பழமையானது. நமது நினைவுக்கு தெரியாத காலம் முதலே, கடல்நீர் எங்களது கடற்கரையை தொட்டுச் செல்கின்றன. மிகப்பெரும் கடலின் அலைகள், நமது மக்களுக்கு இடையேயான நட்புறவை தெரிவிப்பவையாக உள்ளன. அவர்கள் நமது கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தால் கூட வளர்ந்தவர்கள். பெருங்கடல்களின் ஆழம் மற்றும் அகலத்தால் நமது நட்புறவு பெருகியுள்ளது. எனது சொந்த மாநிலமான குஜராத் உள்ளிட்ட இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையேயான வர்த்தகம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, உலகின் மிகப் பழமையான துறைமுகங்களில் ஒன்றாக கருதப்படும் லோதலுடன் மாலத்தீவு வர்த்தகம் செய்துள்ளது. அதற்குப் பிறகு, சூரத் போன்ற நகரங்களுடன் வர்த்தகம் தொடர்ந்தது. இந்திய குழந்தைகள் கூட, மாலத்தீவின் சிப்பிகளை பயன்படுத்துகின்றனர். இசை, இசைக்கருவிகள், சடங்குகள் மற்றும் பாரம்பரியங்கள் ஆகியவை நமது பழமையான பிணைப்புக்கான உதாரணமாக திகழ்கின்றன.
திவேஹி மொழியை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். “வாரம்” என்பதை இந்தியாவில் “ஹப்தா” என்று அழைக்கிறோம். திவேஹி மொழியிலும் ஹப்தா என்றே அழைக்கப்படுகிறது. வார நாட்களின் பெயர்களைப் பார்க்கலாம். “ஞாயிற்றுக்கிழமை” என்பது திவேஹி மொழியில் ஆதித்தா என்று அழைக்கப்படுகிறது. இது ஆதித்யா அல்லது சூரியனுடன் தொடர்புடையது. திங்கட்கிழமை என்பது ஹோமா என்று அழைக்கப்படுகிறது. இது சோமா அல்லது நிலவு என்ற வார்த்தையுடன் ஒத்துப் போகிறது.
திவேஹி மொழியில் அழைக்கப்படும் துனியே என்ற வார்த்தையும், இந்தியாவில் அழைக்கப்படும் துனியா என்ற வார்த்தையும் ஒரே மாதிரியாக உள்ளது. இதற்கு உலகம் என்று பொருள். மேலும், துனியா என்பது மாலத்தீவின் பிரபலமான பெயரும் கூட. இந்த உலகம் மட்டுமல்ல. நமது மொழியின் ஒத்த தன்மையானது, சொர்க்கம் மற்றும் நரகத்துக்கும் கூட நீடித்துள்ளது. திவேஹி வார்த்தைகளான “சுவுருஜ்” மற்றும் “நாரகா” ஆகியவை, இந்தியில் உள்ள “ஸ்வரக்” மற்றும் “நாரக்” ஆகியவற்றைப் போன்றது.
இதேபோன்ற ஒத்த தன்மை, மிகவும் நீளமானது. இதனை நான் தொடர்ந்தால், ஒட்டுமொத்த அகராதியும் கிடைக்கும்.
நாம் உணரும் ஒவ்வொரு நடவடிக்கையும், நாம் ஒரே தோட்டத்தின் பூக்களாக உள்ளோம் என்பதை வெளிப்படுத்துகிறது என்று கூறலாம். எனவே, மாலத்தீவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கையெழுத்துப் பிரதியை பாதுகாக்க வேண்டியதும், திவேஹி அகராதியை உருவாக்குவதும் நமக்கு மிகவும் முக்கியமானது. இதன் காரணமாக, வரலாற்றுப்பூர்வ வெள்ளிக்கிழமை மசூதியைப் பாதுகாக்க இந்தியா ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை இன்று அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற பவள மசூதி, மாலத்தீவுக்கு வெளியே எந்த இடத்திலும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, நிபுணத்துவம் பெற்ற மாலத்தீவு மக்கள், கடலின் வளத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட கட்டமைப்பை உருவாக்கினர். இது இயற்கையின் மீதான அவர்களின் மரியாதை மற்றும் நல்லிணக்கத்துக்கு சான்றாக அமைகிறது.
வருத்தப்படும் வகையில், இதே கடல்வளம், இன்று மாசுபாடுகளால் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இதேபோன்று, இந்த அற்புதமான பவள மசூதியைப் பாதுகாப்பது என்பது, நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த உலகுக்கும் அளிக்கும் செய்தியாக இருக்கும்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
மாலத்தீவுடன் அதன் சுதந்திரம், ஜனநாயகம், வளம் மற்றும் அமைதிக்காக இந்தியா தோளோடு தோள் கொடுத்து நிற்கும். 1998ல் நடந்த சம்பவமாக இருக்கட்டும், அல்லது 2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அல்லது மிகவும் அண்மையில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறை போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வது என எதுவானாலும், உங்களுடன் இருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். அனைத்து நேரங்களிலும், ஒவ்வொரு படியிலும் உங்களது முயற்சிகளுக்கு ஆதரவாக உள்ளோம்.
தற்போது, வளர்ச்சி, வளம் மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நமது இரு நாடுகளிலும் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி, நமது ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்தியாவுக்கு அதிபர் சோலி பயணம் மேற்கொண்டபோது, ஒப்புக்கொண்டபடி, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பொருளாதார நிதித் திட்டத்தை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உங்களது மாபெரும் நாட்டுடனான, இந்தியாவின் வளர்ச்சி ஒத்துழைப்பானது, மாலத்தீவு மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவது என்பதில் உறுதியாக உள்ளது. மாலத்தீவில் நீர் விநியோகம், சுற்றுப்புறத் தூய்மை, கட்டமைப்பை ஏற்படுத்துதல், சுகாதாரம் மற்றும் கல்விக்கான வசதிகளை உருவாக்குதல் என எதுவாக இருந்தாலும், மாலத்தீவு நாட்டின் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில், மக்களின் நலனை கவனத்தில் கொண்டே இந்தியாவின் ஒத்துழைப்பு இருக்கும்.
நாம் மேற்கொண்டுவரும் 10-க்கும் மேற்பட்ட சமூக மாற்றம் மற்றும் மற்ற ஒத்துழைப்புத் திட்டங்கள், இந்த நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பங்களிப்பைச் செய்யும். மாலத்தீவின் ஜனநாயகம் மற்றும் வளத்துக்கு நம்பத்தகுந்த, வலுவான மற்றும் முன்னணி பங்குதாரராக இந்தியா தொடரும். இந்த ஒத்துழைப்பானது, மாலத்தீவு மக்களின் பிரதிநிதியாக உள்ள உங்களது கரங்களை வலுப்படுத்தும்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, அரசுகளுக்கு இடையேயான உறவாக மட்டும் நின்றுவிடவில்லை. இவை மக்களுக்கு இடையேயான வலுவான உறவிலிருந்து சக்தியைப் பெற்றுள்ளது. எனவே, இரு நாட்டு மக்கள் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பயணப்படகு போக்குவரத்தை தொடங்க இன்று ஒப்புக் கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விசா வசதிக்கான உடன்பாட்டை கடந்த ஆண்டில் இறுதிசெய்ததன் மூலம், மாலத்தீவிலிருந்து இந்தியாவுக்கு வர்த்தகம், மருத்துவ சிகிச்சை, கல்வி, ஓய்வு, சுற்றுலா உள்ளிட்டவற்றுக்காக ஆயிரக்கணக்கான மாலத்தீவு மக்கள் வருவதற்கு எளிதாகியுள்ளதால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
நமது பரஸ்பர ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்துச்செல்லும் அதே வேளையில், நம்மைச்சுற்றி இன்று நிலவிவரும் பல்வேறு நிலையற்ற தன்மைகள் மற்றும் தீவிரமான சவால்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பலதுருவ உலகில் பொருளாதார மற்றும் பாதுகாப்பு வல்லமையின் அச்சில் ஏற்பட்ட மாற்றங்கள், போட்டிகள் மற்றும் எதிர்தன்மை ஆகியவற்றால் பல்வேறு சவால்கள் உருவாகியுள்ளன.
இருந்தாலும், நமது இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான மூன்று விவகாரங்களை குறிப்பிட நான் விரும்புகிறேன்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
நமது காலத்தில் தீவிரவாதம் என்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. இது ஒரு நாடு அல்லது பிராந்தியம் மட்டும் எதிர்கொள்ளும் சவால் இல்லை. அனைத்து மனிதர்களும் எதிர்கொண்டுவரும் சவாலாக உள்ளது. தீவிரவாதத்தின் கோர முகம் வெளிப்படாமலும், ஏதாவது ஒரு இடத்தில் அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்காமலும் எந்தவொரு நாளும் இருப்பதில்லை. தீவிரவாதிகளுக்கு சொந்தமான வங்கிகள் இல்லை. அவர்களுக்கு சொந்தமான பணம் அச்சடிக்கும் இடமோ, ஆயுதத் தொழிற்சாலைகளோ கிடையாது. ஆனால், அவர்களுக்கு பணமோ, ஆயுதமோ பற்றாக்குறையாக இருப்பதில்லை. இவற்றை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள்? அவர்களுக்கு தேவைப்படும் வசதிகளை யார் வழங்குகிறார்கள்?
தீவிரவாதத்துக்கு அரசே உதவிசெய்வது மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
தற்போதும் கூட, நல்ல தீவிரவாதிகள், கெட்ட தீவிரவாதிகள் என்று வேறுபடுத்திப் பார்க்க சிலர் முயற்சி மேற்கொள்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த செயற்கையான வேறுபாடுகள் குறித்து பேசி நாம் போதுமான நேரத்தை வீணடித்துள்ளோம். தற்போது இதற்கு மேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. மனிதநேயத்தை ஆதரிக்கும் அனைத்து சக்திகளும், தீவிரவாதத்தை சிறந்த முறையில் எதிர்கொள்ள ஒன்றுசேர வேண்டும்.
தீவிரவாதம் மற்றும் தீவிரவாத செயல்களின் மோசமான சக்தியை எதிர்கொள்ள எந்த மாதிரியான வழியைப் பின்பற்றுகிறோம் என்பது இன்றைய தலைவர்களின் மிகப்பெரும் சோதனையாக உள்ளது. வானிலை மாற்றத்தால் ஏற்படும் கொடுமையான அச்சுறுத்தல் குறித்து பல்வேறு கருத்தரங்குகளையும், சர்வதேச மாநாடுகளையும் சர்வதேச சமூகம் மிகவும் தீவிரமாக நடத்துகிறது. ஆனால், தீவிரவாதம் குறித்து விவாதிக்காதது ஏன்?
அனைத்து சர்வதேச அமைப்புகளும், அனைத்து முன்னணி நாடுகளும் தீவிரவாதம் குறித்த சர்வதேச கருத்தரங்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். இதன்மூலமே, தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்வது குறித்து பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்த முடியும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க நாம் மேலும் தாமதப்படுத்தினால், நமது தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகள் எப்போதும் நம்மை மன்னிக்காது.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
வானிலை மாற்றம் குறித்து குறிப்பிட்டேன். நமது காலத்தில் இது அரங்கேறியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வறண்டுவிட்ட ஆறுகள் மற்றும் வானிலையின் நிலையற்ற தன்மை ஆகியவை நமது வேளாண்மை மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது. இருந்தாலும், அதைவிட, பனிப்பாறைகள் உருகுவது, கடல் நீர் மட்டம் உயர்வது ஆகியவை மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. கடல் மாசுபாடுகளால், பவளத்தீவுகள் மற்றும் பெருங்கடல்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்த ஆபத்துகள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடலுக்கு அடியில், உலகின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தும் உங்களது தைரியத்தை யாரால் மறக்க முடியும்?
நீடித்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக அரிதான பல்வேறு நடவடிக்கைகளையும் மாலத்தீவு மேற்கொண்டுள்ளது.
சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பில் மாலத்தீவு இணைந்ததால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா மேற்கொண்டது, நமது பூமியைப் பாதுகாப்பதற்கான நடைமுறைக்கு உகந்த நடவடிக்கைகளை உலகின் சில நாடுகள் மேற்கொள்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. வானிலை மாற்றத்தால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு சிறந்த மாற்று முறையாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைந்துள்ளது.
2022-ம் ஆண்டில் 175 ஜிகாவாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்திருப்பதை இங்கு கூடியுள்ளவர்கள் நன்கு அறிவீர்கள். இந்த இலக்கை எட்டுவதில், அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி முன்னேற்றம் பெற்றுள்ளோம்.
அண்மையில், இந்தியாவின் ஒத்துழைப்பு மூலம், மாலே நகரில் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், 2,500 எல்இடி பல்புகள் பொருத்தப்பட்டு, வீதிகள் ஒளிர்ந்து வருகின்றன. மேலும், மாலத்தீவில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு சுமார் 2 லட்சம் எல்இடி பல்புகள் சென்றுசேர்ந்துள்ளன. இவை அற்புதமான மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும். மேலும், மின்சார கட்டணத்தை குறைக்கச் செய்யும்.
சிறு தீவுகளின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அவர்களின் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல், பல்வேறு சர்வதேச அமைப்புகளிலும் அந்தப் பிரச்சினைகளை நாங்கள் எடுத்துரைத்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம். எனினும், இந்த விவகாரத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதன்மூலமே, போதுமான அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நம்மால் மேற்கொள்ள முடியும். வானிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் வெறும் தொழில்நுட்ப நடவடிக்கைகள் போதுமானது என்று கருதுவது தவறாகவே இருக்கும். நமது மதிப்புகள், நிலைப்பாடு, வாழ்க்கை முறை மற்றும் சமூக அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவராமல், வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை போதுமான அளவில் கட்டுப்படுத்திவிட முடியாது. பூமியை தாயாகவும், நம் அனைவரையும் பூமித்தாயின் குழந்தைகளாகவும் பழங்கால மனிதர்கள் நம்பி வாழ்ந்தனர். இந்த கிரகத்தை நமது தாயாகக் கருதினால், அதற்கு மதிப்பு மட்டுமே அளித்து பாதுகாப்போம். அதற்கு தொந்தரவு செய்ய முடியாது. நமது பூமியான இந்த வீடு, பரம்பரை சொத்து என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனை நமது எதிர்கால சந்ததியினருக்காக நம்பிக்கையுடன் பாதுகாத்து வைக்க வேண்டும். மேலும், இது நமது சொந்த சொத்து கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தோ-பசிபிக் என்பது நமது மூன்றாவது விவகாரம். இது நாம் பகிர்ந்துகொண்ட பிராந்தியம். உலக மக்கள்தொகையில் 50 சதவீதம் பேர் இந்தப் பிராந்தியத்தில்தான் உள்ளனர். பல்வேறுபட்ட மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகள் உள்ளன. ஆனால், விடைகிடைக்காத பல்வேறு கேள்விகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகளும் உள்ளன. நமது உலகில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது. இது நமது வாழ்வாதாரமாக உள்ளது. வர்த்தகம் மற்றும் வளத்துக்கான பாதையாகவும் திகழ்கிறது. நமது பகிர்ந்து அளிக்கப்பட்ட எதிர்காலத்தின் திறவுகோலாக உள்ளது. எனவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படையான நிலை, ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையுடன் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் ஒவ்வொருவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சிங்கப்பூரில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நான் கூறினேன். இதன்மூலமே, நாடுகளுக்கு இடையே நம்பிக்கை உறுதிப்படுத்தப்படும். இது மட்டுமே விதிகள் அடிப்படையிலான நிலைத்தன்மை மற்றும் பலதரப்பு பிராந்தியமாக தொடர்வதை உறுதிப்படுத்தும்.
மதிப்புமிகுந்த சபாநாயகர் அவர்களே,
4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துக்கான இந்தியாவின் திட்டம் மற்றும் உறுதியை S.A.G.A.R. என்ற வடிவில் வெளிப்படுத்தினேன். இந்தி மொழியில் இந்த வார்த்தை “கடல்” என்று அர்த்தம் தரும். இந்த வார்த்தையின் சுருக்கம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கானது. இது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நமக்கு செயல் திட்டமாக அமைந்துள்ளது.
இன்று, உள்ளடக்கிய செயல்பாடுகளின் கொள்கையை மீண்டும் ஒரு முறை வலியுறுத்த விரும்புகிறேன். தனது சொந்த வளம் மற்றும் பாதுகாப்புக்காக மட்டுமே தனது திறன் மற்றும் பலத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளின் திறனை மேம்படுத்துவதிலும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். பேரிடர் காலங்களில் மனிதநேய உதவிகளை வழங்கி அவர்களை சென்றடைகிறோம். மேலும், அனைவருக்குமான சிறந்த எதிர்காலம், பாதுகாப்பு, வளம் ஆகியவற்றுக்காகப் பணியாற்றுகிறோம். திறமையான, வலிமையான மற்றும் வளமான இந்தியா என்பது, தெற்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகுக்கும் வலுவான தூணாக உள்ளது.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்த கனவை நனவாக்கவும், கடல் பொருளாதாரத்தின் பயனைப் பெறுவதில் ஒத்துழைப்புக்காகவும், நமக்கு மாலத்தீவை விட சிறந்த நட்புநாடு கிடையாது. ஏனெனில், கடல் அடிப்படையில் அண்டை நாடுகளாகவும், நண்பர்களாகவும் உள்ளோம். நண்பர்களுக்குள் பெரியவர் அல்லது சிறியவர், வலுவானவர் அல்லது பலவீனமானவர் என்று யாரும் கிடையாது. அமைதியான மற்றும் வளமான அண்டை நாடுகளுக்கான அடித்தளம் என்பது நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே உள்ளது. இந்த நம்பிக்கை என்பது, ஒவ்வொருவரின் கவலைகள் மற்றும் நலனில் மற்றவர் கவனம் செலுத்தும் நம்பிக்கையிலிருந்து உருவாகிறது. எனவே, நமது இரு நாடுகளும் அதிக வளம் மற்றும் அதிக பாதுகாப்பைப் பெற முடியும்.
நமது பரஸ்பர நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை என்பது நல்ல நேரங்களில் மட்டுமன்றி, நெருக்கடியான காலங்களிலும் வலுவாக இருக்கும்போதுதான் இது சாத்தியமாகும்.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
“அனைவரும் ஒரே குடும்பம்” என்பதே நமது இரு நாடுகளின் கொள்கை மற்றும் தத்துவம். ஒட்டுமொத்த உலகமுமே ஒரே குடும்பம் என்பதுதான் இதன் பொருள். நமது காலத்தின் மாபெரும் மனிதரான மகாத்மா காந்தி கூறும்போது, “நமது அண்டை நாடுகளுக்கு நமது சேவைகளை வழங்குவதில் எந்த எல்லையும் இல்லை” என்றார். தனது சாதனைகளை எப்போதுமே உலகுடன், குறிப்பாக அண்டை நாடுகளுடன் இந்தியா பகிர்ந்துகொண்டுள்ளது. எனவே, எங்களது வளர்ச்சி ஒத்துழைப்பு என்பது, மக்களை மேம்படுத்துவதற்காகவே உள்ளது. அவர்களை பலவீனப்படுத்துவதற்காகவோ, எங்களை சார்ந்திருக்க வைத்திருப்பதற்காகவோ இல்லை. வருங்கால சந்ததிகள் மீது சுமக்க முடியாத கடன் சுமைகளை சுமத்துவதும் கூட இல்லை.
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே,
இது மிகவும் நெருக்கடியான, முற்றிலும் சவால் நிறைந்த காலம். இருந்தாலும், சவால்களும் கூட வாய்ப்புகளை ஏற்படுத்தும். இன்று, மாலத்தீவுக்கும், இந்தியாவுக்கும் கீழ்க்கண்ட வாய்ப்புகள் உள்ளன:
மேற்குறிப்பிட்ட இந்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும், இதனை விட்டுவிடக் கூடாது என்று வரலாறும், நமது மக்களும் எதிர்பார்ப்பார்கள். இந்த முயற்சிகளில் முழுவதுமாக ஒத்துழைப்பது என்று இந்தியா உறுதியுடன் தீர்மானித்துள்ளது. மேலும், மாலத்தீவுடனான மதிப்பிட முடியாத நட்புறவை வலுப்படுத்த உள்ளது. இந்த உறுதியான வாக்குறுதியை உங்கள் முன்பு நான் இன்று அளிக்கிறேன்.
உங்களுடன் இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு அளித்ததற்கும், எனக்கு அளித்த பெருமைக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நட்புறவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கு மிக்க நன்றி.
******
Honoured to address @mvpeoplesmajlis. Watch my address. https://t.co/0cEhKQk7PJ
— Narendra Modi (@narendramodi) June 8, 2019