பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சார உற்பத்திச் செலவினத்தைக் குறைக்க உள்நாட்டு நிலக்கரியைப் பயன்படுத்துவதில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திறன்பட்ட மின் உற்பத்தி நிறுவனங்களில் மின்சார உற்பத்திக் கட்டணத்தை குறைப்பது, உள்நாட்டு நிலக்கரியை பயன்படுத்துவதில் நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கும் திட்டத்தின் நோக்கமாகும். இதனால் மாநில மின் பகிர்வுக் கம்பெனிகளின் மின்சாரக் கொள்முதல் கட்டணங்கள் குறையும். நிலக்கரியைப் பயன்படுத்துவதில் இத்தகைய நெகிழ்வுத்தன்மை அதனை மின்சாரமாக மாற்றும் நடைமுறையை மேம்படுத்தவும் கருவிகளின் திறனுக்கு உதவவும் கொண்டு செல்லும் செலவினத்தைக் குறைக்கவம் உதவும்.
இதனால் திறன், இயற்கை ஆதாரங்களின் அதிகபட்ச பயன்பாடு, நாட்டின் மின்சாரத் துறையில் பொருளாதார நன்மைகள் ஆகியவற்றில் புதிய தாக்கம் உருவாகும். இந்த நடவடிக்கையால் நிலக்கரி கொண்டு செல்லும் செலவினம் குறையும், கொண்டு செல்வதில் பயன்படுத்தப்படும் மின்சாரம் சிக்கனமாகும், ரயில்வே கட்டமைப்பில் நெரிசல் நிலை நீக்கப்படும். இந்த நடைமுறை சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்ததான ஒரு ஏற்பாடு. அதாவது குறைவான நிலக்கரியைக் கொண்டு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதும் நிலக்கரியைக் கொண்டு செல்லும் தூரம் குறைக்கப்படுவதாலும் இந்த நிலை உருவாகிறது.
இந்தத் திட்டம் மத்திய அரசின் UDAY திட்டத்திற்கு உகந்ததாக அமைகிறது. UADY திட்டத்தின் படி திறனில்லா மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நிலக்கரியை திறனுள்ள நிலையங்களுக்கு மாற்றித் தருவது, நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து தொலைவிலுள்ள மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து அருகில் உள்ள மின் நிலையங்களுக்கு மாற்றித் தருவது ஆகிய நடவடிக்கைகளால் மின் உற்பத்திக் கட்டணம் குறைகிறது.
இந்தத் திட்டத்தின்படி மாநில மின் உற்பத்தி நிலையங்களின் நீண்டகால நிலக்கரி இணைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்ட முகமைகளுக்கு வழங்கப்படும். இதே போல மத்திய அரசு மின்உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி இணைப்புகளும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு இந்த உற்பத்தி நிலையங்களை நடத்தும் கம்பெனிக்கு வழங்கி நிலக்கரியின் திறம்பட்ட பயன்பாடு மேம்படுத்தப்படும்.
மாநிலங்களுக்குச் சொந்தமான மின்உற்பத்தி நிலையங்களிடையேயும் இதர மாநில மின்உற்பத்தி நிலையங்களிடையேயும் மத்திய மின்உற்பத்தி நிலையங்களிடையேயும் சுயேச்சையான மின்சார உற்பத்தியாளர்களிடையேயும் ஒன்றுக்கொன்று நிலக்கரிப் பயன்பாட்டைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நெகிழ்வுத் திட்டம் உதவும்.
மாநில / மத்திய மின்சார உற்பத்தி நிலையங்களைப் பொறுத்தவரை ஆலைத்திறன், கொண்டு செல்லும் செலவினம், மின்சாரம் எடுத்துச் செல்லும் செலவினம், மின்சார ஒட்டுமொத்த உற்பத்திக் கட்டணம் ஆகியவையே இத்திட்டத்தில் முடிவு எடுக்க உதவும் நிபந்தனைகள் ஆகும்.
மாநிலத்தில் உள்ள தனியார் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி ஒதுக்கீடு பொறுத்தவரை தனியார் துறை மின்உற்பத்தி நிலையங்களில் நிலக்கரிக்கு பதில் மின்சாரம் என்ற கொள்முதல் ஏல அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். நிலக்கரி எங்கிருந்து வருகிறது, நிலக்கரியின் அளவு, கிடைக்கும் மின்சார அளவு, வழங்கப்படும் மின்சாரம் எந்த இடத்தில் வழங்கப்படும் போன்றவை ஏலத்துக்கு முன்னதாகவே குறிப்பிடப்பட வேண்டும்.
மத்திய மின்சார ஆணையம் அனைத்து அக்கறை கொண்ட அமைப்புகளின் ஆலோசனையின் பேரில் மாநிலங்களின் சொந்த மின்உற்பத்தி நிலையங்கள், இதர மாநில மின்உற்பத்தி நிலையங்கள், மத்திய அரசு மின்உற்பத்தி நிலையங்கள், சுயேச்சையான மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்படும் நிலக்கரி அளவு குறித்த திட்ட அமலாக்க நடைமுறையை இறுதி செய்யும். அதே போல மத்திய அரசு மின்உற்பத்தி நிலையங்களுக்கு உரிமை ஏற்கம் கம்பெனி தனது சொந்த உற்பத்தி நிலையங்கள் அல்லது வேறு திறமையான மின்உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றுக்கு நிலக்கரி பயன்பாடு குறித்த நடைமுறையை மத்திய மின்சார ஆணையம் இறுதி செய்யும்.
பின்னணி:
நாட்டின் மின்சார உற்பத்தியில் நிலக்கரிதான் முக்கியமான ஆதாரம். முக்கியமாக இரண்டு வகை நிலக்கரி அடிப்படை அனல் மின் நிலையங்கள் உள்ளன. (i) சுரங்க அடிவாரத்தில் உள்ள மின்நிலையங்கள், இவை நிலக்கரிச் சுரங்கங்கள் அருகே அமைந்திருக்கும். (ii) மின்சுமை மைய அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள், இவை மின்சுமை மையங்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும். மின்சார உற்பத்தி நிலையங்களின் எவ்வளவு நிலக்கரிக்கு எவ்வளவு மின்சாரம் என்கிற திறன் நிலவரம் அவை பயன்படுத்தும் தொழில்நுட்பம், பிரிவுகளின் உற்பத்தித் திறன் போன்றவற்றின் அடிப்படையிலும் அமையும். தற்போது திறன் மிக்க மின்உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாகவும் திறனைக் குறைவாகப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்களில் அதிகமான நிலக்கரி இருப்பும் இருக்கும் நிலைமை நிலவுகிறது.