Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முக்கிய கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு வெளிநாட்டு இருதரப்பு அமைப்புகளிடமிருந்து நிதியுதவியை மாநில அரசின் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நிதி அடிப்படையில் வலுவாக உள்ள மாநில அரசின் நிறுவனங்கள், முக்கிய கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இருதரப்பு அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை (Official development Assistance) வழங்கும் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக உதவியை பெறுவதற்கான கொள்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மும்பை வழியாக துறைமுகத்தை இணைக்கும் திட்டத்தை (Mumbai Trans Harbour Link -MTHL) செயல்படுத்துவதற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையிடமிருந்து (JICA), அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி கடனை நேரடியாக பெறுவதற்கு மாநில அரசு நிறுவனமான மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்துக்கும் (MMRDA) அனுமதி அளிக்கப்படுகிறது. மும்பை வழியாக துறைமுகத்தை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.17,854 கோடி செலவுபிடிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், ரூ.15,109 கோடியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை கடனாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நிபந்தனைகளின் அடிப்படையில், வெளிநாட்டு இருதரப்பு நிதி அமைப்புகளிடமிருந்து மாநில அரசின் நிறுவனங்கள், நேரடியாக நிதியை பெறுவதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழிவகை செய்யும். நிதி வழங்கும் நிறுவனங்களுக்கு அனைத்து கடன்கள் மற்றும் வட்டியை, கடனைப் பெறும் நிறுவனங்கள் நேரடியாக திருப்பி அளிக்கும். இந்தக் கடனுக்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்கும். இந்தக் கடனுக்கு கூடுதல் உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கும்.

மிகப்பெரும் கட்டமைப்புத் திட்டங்கள், சமூகத் துறை திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதிலும், நிறுவனத்தின் திறனை வலுப்படுத்தவும் வெளிநாட்டு நிதியுதவிகள் தற்போது முக்கியப் பங்கு வகிக்கின்றன. மாநில அரசுகள் செயல்படுத்தும் மிகப்பெரும் கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதித் தேவை அதிகரித்து வருவதால், இந்த இடைவெளியை நிரப்புவதில், வெளிநாட்டு நிதியுதவி முக்கியப் பங்கு வகிக்கின்றன. உலகமயமாக்கப்பட்ட பொருளாதார அமைப்பின்கீழ், போட்டித் திறனை வலுப்படுத்துவதில், இது அவசியமாகிறது. தற்போது, இந்திய அரசு, இருதரப்பு மற்றும் பல்தரப்பு வெளிநாட்டு வளர்ச்சி நிதியுதவியை பெற்று வருகிறது. அதாவது,

1. மத்திய துறையின் திட்டங்கள்/நிகழ்ச்சிகளுக்கு

2. மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்களுக்கு

3. மாநில அரசுகள் மற்றும்/அல்லது உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுத்த உள்ள மாநில துறையின் திட்டங்கள்/நிகழ்ச்சிகளுக்கு மாநில அரசுகள் சார்பாக வாங்கப்படுகிறது.

ஆனால், வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து நேரடியாக மாநில அரசு நிறுவனங்கள் நிதியுதவியைப் பெற நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனுமதிப்பதில்லை.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரும் கட்டமைப்புத் திட்டங்களை பல்வேறு மாநில அரசின் அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டங்கள், நீடித்திருக்கக் கூடிய மற்றும் வலுவான திட்டங்களாக இருந்தாலும், அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. இந்தத் திட்டங்களுக்கு மாநில அரசுகள் கடன் பெறும்போது, மாநிலங்களின் கடன்பெறுவதற்கான வரம்பை தாண்டிவிடலாம். எனவே, மற்ற துறைகளின் திட்டங்களுக்கான வெளிநாட்டு நிதியுதவியை விட்டுக் கொடுக்காமல், நாட்டில் மிகப்பெரும் கட்டமைப்புத் திட்டங்களில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, தற்போது பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளில், இருதரப்பு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசின் நிறுவனங்கள் நேரடியாக கடன்பெறுவதற்கு வழிவகை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால், நிதி அடிப்படையில் வலுவாக உள்ள மாநில அரசின் நிறுவனங்கள், மிகப்பெரும் கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான கடனை நேரடியாக வாங்கிக் கொள்வதுடன், நேரடியாகவே திருப்பிச் செலுத்த அனுமதிக்கப்படும். எனினும், மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்ததன் மூலம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசின் வாக்குறுதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

****