பி.எம்.இந்தியா
ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இத்தாலி குடியரசின் எஸ்.பி.ஏ.வான பெர்ரோவி டெல்லோ ஸ்டேட்டோ இதாலியனேவுடன் 31 ஜனவரி 2017ல் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே துறையில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் லாபகரமான செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், கலந்துரையாடவும் இந்திய ரயில்வேக்கு ஒரு தளத்தை அளிக்கிறது.தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, நிபுணர்களின் கூட்டங்கள், கருத்தரங்குகள், தொழில்நுட்ப பயணங்கள் மற்றும் கூட்டாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு, திட்டங்களை செயல்படுத்துதல் ஆகியவற்றையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊக்குவிக்கும்.
பரஸ்பர ஆதாயத்துக்காக, ரயில்வே துறையில் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் லாபகரமான செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு செயல்பாடுகளை மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். பின்வரும் விஷயங்களில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இது வழி வகுக்கும் : –
a. இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு அம்சங்களையும், ரயில்கள் இயக்குவதில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளையும் தணிக்கை செய்வது;
b. ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலை 4 (SIL 4) அளவுக்கான முன்னேற்றம் கண்டுள்ள தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான பாதுகாப்பு பொருட்கள் மற்றும் முறைமைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் சான்றளித்தல்;
c. முன்னேற்றம் கண்டுள்ள சிக்னல் செய்தல் மற்றும் ரயில் பாதுகாப்பு முறைமைகள் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி பயிற்சி அளித்தல் மற்றும் போட்டித்திறனை மேம்படுத்துதல்;
d. பராமரிப்பு மற்றும் குறைகளைக் கண்டறிதலில் நவீன போக்குகள்;
e. பங்கேற்பாளர்களால் கூட்டாக அடையாளம் காணப்படும் வேறு ஏதாவது விஷயங்கள்.
பின்னணி :
பெர்ரோவி டெல்லோ ஸ்டேட்டோ இதாலியனே குழுமம் (FS குழுமம்) , இத்தாலிய ரயில்வே துறையை, ரயில்வே தொடர்பான வியாபாரங்களில் கவனம் செலுத்தும் தனது கம்பெனிகளின் மூலம் நிர்வகிக்கும் தொழில் நிறுவனமாகும். பிரதானமானவை : ட்ரெனிட்டாலியா – ரயில் போக்குவரத்து. ரெட்டே பெர்ரோவியாரியா இத்தாலியனா – ரயில்வே கட்டமைப்பு மேலாண்மை செய்தல், இத்தால்பெர் – பொறியியல் நிறுவனம், இததால்செரிபர் – ரயில்வே முறைமைகள் மற்றும் பாகங்களுக்கு சான்றளிக்கும் அத்தாட்சி அமைப்பு. FS குழுமம் முழுமையாக அரசுக்குச் சொந்தமானது. இத்தாலியின் கருவூல அமைச்சகத்தின் கீழ் இது செயல்படுகிறது.
ரயில்வே அமைச்சகம் பல்வேறு வெளிநாட்டு அரசுகள் மற்றும் தேசிய ரயில்வேக்களுடன், ரயில்வே துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளது. அதிவேக வழித்தடங்கள், தற்போதைய வழித்தடங்களில் வேகம் அதிகரித்தல், உலகத் தரமான ரயில் நிலையங்களை உருவாக்குதல், பெரிய சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் ரயில்வே கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல் போன்றவை ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்டுள்ள விஷயங்களில் அடங்கும். ரயில்வே, தொழில்நுட்பம் & செயல்பாடுகள், அறிவு பகிர்தல், தொழில்நுட்ப பயணங்கள், பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களில் பயிற்சி & கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் மூலம் இந்த ஒத்துழைப்பு எட்டப்படும்.
ரயில்வே துறையில் சமீபத்திய மேம்பாடுகள் மற்றும் அறிவை பகிர்தல் மற்றும் கலந்துரையாடலுக்கு இந்தியாவுக்கு ஒரு தளத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அளிக்கின்றன. தொழில்நுட்ப நிபுணர்கள், அறிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்கள் பரிமாறிக் கொள்வது, குறிப்பிட்ட துறைகளில் பயிற்சி மற்றும் கருத்தரங்குகள் / பயிலரங்குகள் நடத்துவது மற்றும் அறிவு பகிர்தலுக்கான பிற கலந்துரையாடல்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வகை செய்கின்றன.