Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லே பகுதியில் சோவா – ரிக்பா தேசிய நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


லே பகுதியில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ், தன்னாட்சி அதிகாரம் கொண்ட சோவா – ரிக்பா தேசிய நிறுவனம் அமைப்பதற்கும் கட்டுமான நிலையிலிருந்தே இந்தத் திட்டத்தின் அமலாக்கத்தை மேற்பார்வையிட இயக்குநர் நிலையிலான பதவியை உருவாக்குவதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கே உரிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக சோவா – ரிக்பா எனும் மருத்துவ முறைக்கான தேசிய நிறுவனத்தை ரூ.47.25 கோடி செலவில் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சோவா – ரிக்பா என்பது இமயமலைப் பகுதியின் பாரம்பரிய மருத்துவ முறையாகும். சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், டார்ஜிலிங் (மேற்கு வங்கம்), இமாச்சலப்பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் பிரபலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த மருத்துவமுறை தற்போது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது.

இந்தத் தேசிய நிறுவனத்தில் இந்திய மாணவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

தரமான கல்வி, அறிவியல்பூர்வமான மதிப்பீடு, சோவா – ரிக்பா மருந்துப் பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு, தர நிர்ணயம் ஆகியவற்றுக்கும் இது பயன்படும். மேலும், இளநிலை, முதுநிலை, முதுமுனைவர் நிலைகளில் சோவா – ரிக்பாவின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் இது பயன்படும்.

***