பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட திட்டங்களை 2020 மார்ச் வரை நீட்டிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
• வடகிழக்கு கவுன்சில் சிறப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தற்போதைய நிதிப் பகிர்வு (90:10) அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் 100% மத்திய நிதியுதவியுடன் கூடிய புதிய திட்டங்கள்.
• வடகிழக்கு கவுன்சிலால் நிதி வழங்கப்படும் இதர திட்டங்களுக்கு, வருவாய் மற்றும் மூலதனம் ஆகிய இரண்டும் 100% மத்திய நிதியுதவி அடிப்படையில், தற்போதைய நடைமுறைகளின் படி, தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
• 100% மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வடகிழக்கு சாலை மேம்பாட்டுத் திட்டங்களை நீட்டித்தல்.
• காலாவதியாகாத மத்திய நிதி ஆதாரங்களை வடகிழக்கு கவுன்சிலுக்கு மாற்றுதல்
• பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான ஆதாரங்களை ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிசெய்தல்.
வடகிழக்கு கவுன்சிலால் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள், காலாவதியாகாத மத்திய நிதி ஆதாரங்கள் மற்றும் வடகிழக்கு பிராந்திய சிறப்பு வளர்ச்சித் திட்டங்கள், வடகிழக்கு பிராந்திய மக்களுக்கு சமூக – பொருளாதார பலன்களை ஒருங்கிணைப்பதுடன் அவர்களின் வாழ்வாதாரத்தையும், திறமையையும் மேம்படுத்தும்.
தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களில் வடகிழக்கு கவுன்சில் சிறப்பு வளர்ச்சித்திட்டம் மூலம் நிதியுதவி அளிக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் (மொத்தமுள்ள 840-ல் 599 திட்டங்கள்) 72.12% ஒப்பளிக்கப்பட்ட செலவினம் (ரூ.7453.02 கோடியில் ரூ.5375.12 கோடி) மற்றும் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகளில் 66% (ரூ.2299.72 கோடியில் ரூ.1518.64 கோடி) மத்திய மாநில அரசுகளால் 90:10 என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்பட்டு, அந்தப் பணி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும். இதுதவிர, வருவாய் மற்றும் மூலதன அடிப்படையில், 100% மத்திய நிதியுதவி மூலம், மத்திய மாநில அமைப்புகளால் செயல்படுத்தப்படும்.
வடகிழக்கு கவுன்சில் சிறப்பு வளர்ச்சித் திட்டம், முன்பு நடைமுறையில் உள்ள 90:10 என்ற வீதத்திற்கு பதிலாக 100% நிதியுதவியுடன் கூடிய மத்திய அரசின் திட்டமாக மாற்றியமைக்கப்படும். மற்ற திட்டங்களும் தற்போதுள்ளபடி, 100% மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டங்களாக கருதப்படும்.
இவை தவிர, முக்கியமான மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், வடகிழக்கு சாலை சிறப்பு வளர்ச்சித் தொகுப்பின் கீழ், வடகிழக்கு கவுன்சிலால் செயல்படுத்தப்படுகிறது. வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறையிலிருந்து வடகிழக்கு கவுன்சில் மூலம் செயல்படுத்துவதற்காக மாற்றப்படும் திட்டங்கள் 100% மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அகர்தலா-அகாரா ரயில் பாதை, மஜூலி தீவில் கரை அரிப்பு தடுப்பு போன்ற, தற்போது வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறையால் நிதியுதவி அளிக்கப்படும், ”காலாவதியாகாத மத்திய நிதி ஆதாரங்கள்-(மத்திய)” திட்டங்களுக்காக சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது முகமைகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இந்த திட்டமும் வடகிழக்கு கவுன்சிலுக்கு மாற்றப்பட்டு செயல்படுத்தப்படும்.
இதற்கு முன்பு, மாநில அல்லது மத்திய தொகுப்பாக நிதியுதவியை பிரித்து வழங்குவதற்கான நிரந்தர நடைமுறை ஏதுமில்லை. தற்போது வடகிழக்கு கவுன்சிலுக்கு கிடைக்கும் மொத்த நிதி இரண்டு தொகுப்புகளாக (மாநில தொகுப்பு 60% மற்றும் மத்திய தொகுப்பு 40% என பிரிக்கப்படவுள்ளது) மாநில தொகுப்பு நிதி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒழுங்குமுறை ஒதுக்கீட்டு அடிப்படையில் அவர்களது பங்கு அடிப்படையில் பயன்படுத்தப்படும். மத்திய தொகுப்பை பொறுத்தவரை, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள், பல்வேறு அமைச்சகங்களின் தலையீடு உள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும். மூங்கில், பன்றித் தொழுவம், பிராந்திய சுற்றுலா, உயர்கல்வி, மூன்றாம் நிலை சுகாதார சேவை & பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான சிறப்புத் திட்டங்கள், வாழ்வாதார திட்டங்கள், அறிவியல் தொழில்நுட்பம், நிலஅளவை & புலனாய்வு, வடகிழக்கு பிராந்திய மேம்பாடு போன்ற திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காணப்படும்.
உரிமை உள்ளவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டியதை தெளிவாக பிரித்துக் கொடுப்பதன் மூலம், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை மற்றும் வடகிழக்கு கவுன்சில் ஆகியவை ஒரே திட்டத்தை செயல்படுத்துவது தவிர்க்கப்படும்.
வடகிழக்கு பிராந்தியத்தில் சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் வகையில், இலக்கு மற்றும் சுற்றுக்கான அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுற்றுலாத்துறையில் நிலுவையில் உள்ள கடன் தொகுப்புகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
மேலும், ரூ.5-15 கோடி செலவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் பிரதிநிதிகள் அடங்கிய நிலையான நிதிக்குழு ஒன்று வடகிழக்கு கவுன்சில் செயலாளர் தலைமையில் அமைக்கப்படும். மத்திய அரசின் மற்ற துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிலையான நிதிக்குழு மூலமும் செயல்படுத்துவதை தடுக்க இந்த நடைமுறை ஏற்படுத்தப்படும்.