பி.எம்.இந்தியா
வறுமை மற்றும் பசி ஒழிப்புக்கு இந்தியா, பிரேசில் மற்றும் தெற்கு ஆபிரிக்கா நிதிக்கான முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்கு – தெற்கு ஒத்துழைப்பில் முக்கிய காரணமாக உள்ள இந்தியா, பிரேசில் மற்றும் தெற்கு ஆபிரிக்கா நிதியை (இ.பி.தெ.ஆ. நிதி) வலுப்படுத்த இந்த முடிவு உதவும். இ.பி.தெ.ஆ நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ரூ 10 கோடி இந்த நிதிக்காக வழங்குகிறது. ஜனவரி 2015 வரை இதில் 2.28 கோடி அமெரிக்க டாலர் திரட்டப்பட்டு உள்ளது. இதில் 2.62 கோடி அமெரிக்க டாலர் அமலாக்கப்பட்ட / ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கவைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 91 லட்சம் அமெரிக்க டாலர் திட்டமிடுதலுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி அடையாத மூன்றாவது நாடுகளின் முன்னேற்றத் திட்டங்களை இ.பி.தெ.ஆ. நிதி மேற்கொள்கிறது. இ.பி.தெ.ஆ. நிதி ஆதரவு அளிக்க உள்ள முதல் திட்டம் வேளாண் மற்றும் கால் நடை வளர்ச்சி தொடர்பான திட்டமாகும். டிசம்பர் 2006ல் நியூ யார்க்கில் நடைபெற்ற 2006 ஐக்கிய நாடுகள் தினத்தன்று தெற்கு – தெற்கு பங்குதரரர் விருது இ.பி.தெ.ஆ. நிதிக்கு வழங்கப்பட்டது. தெற்கு – தெற்கு வளர்ச்சி ஒத்துழைப்பில் இ.பி.தெ.ஆ. நிதியின் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் குறிக்கிறது.
இ.பி.தெ.ஆ யின் பேச்சுவார்த்தை குழுவின் ஒத்துழைப்புக்கான மூன்று தூண்களில் ஒரு தூணாக வறுமை மற்றும் பசி ஒழிப்புக்கான இ.பி.தெ.ஆ. நிதி 2004 துவங்கப்பட்டது. சர்வதேச அரசியல் பிரச்சனைகள் குறித்த கலந்தாலோசனை மற்றும் ஒத்துழைப்பு, முக்கியமான துறைகள் மற்றும் திட்டங்களில் முத்தரப்பு ஒத்துழைப்பு மீதமுள்ள இரு தூண்களாகும்.
பின்னணி
தெற்கு பகுதியில் சர்வதேச அளவில் தொடர்பு மற்றும் தாக்கம் கொண்ட மூன்று ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பு குழுவாக இ.பி.தெ.ஆ யின் பேச்சுவார்த்தைக் குழு ஜூன்2003 ல் அமைக்கப்பட்டது. வளர்ந்து வரும் மூன்று நாடுகளும் பல வகையான, பன்முக கலாச்சாரம், பல வகையான மொழிகள் மற்றும் பல வகை மத சமூகங்கள் கொண்டுள்ளது.