பி.எம்.இந்தியா
வாரணாசியில் உள்ள தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின், தெற்காசிய பிராந்திய மையத்தை (ISARC) அமைக்க, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்கீழ், வாரணாசியில் அரிசியின் மதிப்பை கூட்டுவதற்கு உயர்திறன் மையம் அமைக்கப்படும். இதில், அரிசி மற்றும் நெற்பயிரின் தரத்தையும், எடையையும் மதிப்பிடும் திறன் பெற்ற நவீன மற்றும் சிறப்புவாய்ந்த ஆய்வகமும் அமைக்கப்படும். அரிசியின் மதிப்பை கூட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பணிகளை இந்த மையம் மேற்கொள்ளும்.
இது கிழக்கு இந்தியாவில் அமைக்கப்படும் முதலாவது சர்வதேச மையமாக இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் அரிசி உற்பத்தியை அதிகரிக்கவும், அதனை நீடித்திருக்கச் செய்யவும் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கும். இது கிழக்கு இந்தியாவிலும், இதேபோன்ற சுற்றுச்சூழலைக் கொண்டுள்ள மற்ற தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்காசிய பிராந்திய மையத்தால் கிடைக்கும் பயன்கள்:
சிறப்பு அரிசி ரகங்களை உருவாக்குவதற்காக இந்தியாவின் அரிசி உயிரிபரவலாக்கலை பயன்படுத்திக் கொள்ள இந்த மையம் உதவும். இது, ஒவ்வொரு ஹெக்டேருக்கும் அதிக அளவில் விளைச்சலைப் பெறவும், ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கவும் இந்தியாவுக்கு உதவும். இந்தியாவின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கும் தீர்வுகாணப்படும். நாட்டில் மதிப்புக் கூடுதல் அமைப்பு அடிப்படையிலான உற்பத்தி முறையை செயல்படுத்தச் செய்யவும் இந்த மையம் உதவும். இது சேதங்களைக் குறைத்து, மதிப்பைக் கூட்டி, விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை ஏற்படுத்தும். தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் விவசாயிகள் மட்டுமன்றி, குறிப்பாக கிழக்கு இந்திய விவசாயிகள் பயனடைவார்கள்.
தெற்காசிய பிராந்திய மையத்தின் மேலாண்மை
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்தை, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறங்காவலர்கள் வாரியம் நிர்வகிக்கும். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊழியரை இயக்குநராக அறங்காவலர்கள் வாரியம் நியமிக்கும். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநரைத் தலைவராகவும், இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறையின் செயலாளரை இணைத் தலைவராகவும் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும். இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் மற்ற உறுப்பினர்களாக இந்திய வேளாண் ஆய்வுக் கவுன்சிலின் (ஐசிஏஆர்) துணை இயக்குநர் (பயிர் அறிவியல்), என்எஸ்ஆர்டிசி-யின் இயக்குநர், இந்தியாவில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதி, உத்தரப்பிரதேச மாநில அரசின் பிரதிநிதி, நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளின் பிரதிநிதிகள், தனியார் துறை பிரதிநிதிகள் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
இந்த மையத்தை அமைப்பதற்காக இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கும், பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாரணாசியில் உள்ள தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் உள்ள கட்டமைப்பு மற்றும் நிலத்துடன் ஆய்வகம், அலுவலகங்கள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றுக்கான இடங்களை இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை வழங்கும். இந்த மையம், 6 மாதங்களுக்குள் அமைக்கப்படும்.