பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, இந்திய விண்வெளித் துறை / இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றுக்கு இடையே, விண்வெளியில் அமைதி நோக்கத்துக்காக ஆராய்ச்சியில் ஈடுபட கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
(1) இந்திய செயற்கைக் கோள்களின் மூலம் கிடைக்கும் தொலை உணர்வு தகவல்களை குவைத் அமைப்போடு பகிர்ந்து புதிய திட்டங்களை முன்னெடுப்பது, (2) பயிற்சி (3) வணிக ரீதியில் தொலை உணர்வு மற்றும் செயற்கைக் கோள்களை ஏவ நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் ஈடுபடு இந்த ஒப்பந்தம் உதவும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு ஏற்படுத்தப்படும். அந்தக் குழு, அடுத்த கட்ட திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் குறித்தும் முடிவெடுக்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், குவைத் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தோடு ஏற்படும் கூட்டு நடவடிக்கைகள், மனித குலத்துக்கு பயனளிக்கும் வகையில், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும். இதன் மூலம் நாட்டின் அனைத்துப் பகுதியில் உள்ளவர்களும் பயனடைவார்கள்.
தொலை உணர்வு, செயற்கைக் கோள் தொடர்புகள், செயற்கைக் கோள் ஏவுதல், விண்வெளி அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி ஆகிய துறைகளில் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட, இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவியாக இருக்கும்
.