Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழுக் கூட்டம் விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கான தனது ஒப்புதலை வழங்கியது. நாடு விடுதலை பெற்ற பிறகு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைந்த விமானப் போக்குவரத்துக் கொள்கையை கொண்டு வந்தது இதுவே முதன் முறையாகும்.

சிறப்பு அம்சங்கள்:

இக்கொள்கையானது கீழ்கண்டவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது:

• தற்போதுள்ள 9 வது இடத்திலிருந்து 2022ஆம் ஆண்டிற்குள் உலகத்தின் மூன்றாவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியா உருவாகவிருக்கிறது.

• 2015ஆம் ஆண்டில் 8 கோடியாக இருந்த உள்நாட்டு விமான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டிற்குள் 30 கோடியாக உயரும்.

• திட்டமிடப்பட்ட வணிக விமான போக்குவரத்தில் ஈடுபடும் விமான நிலையங்களின் எண்ணிக்கையானது 2016இல் 77 ஆக உள்ளது 2019ஆம் ஆண்டிற்குள் 127ஆக அதிகரிக்கும்.

• 2027ஆம் ஆண்டிற்குள் விமான போக்குவரத்து கையாளும் சரக்குகளின் அளவு நான்கு மடங்கு அதிகரித்து 1 கோடி டன்களை எட்டும்.

• இதுவரையில் பயன்படாத விமான நிலையங்களை பயன்படுத்துவதன் மூலம் பிரதேச வாரியான தொடர்பு அமைப்பின் கீழ் ஒரு மணிநேர பயணத்திற்கு ரூ. 2,500 என்ற விகிதத்தில் இந்தியர்கள் பறந்து செல்வதற்கு உதவுவதன் மூலம் விமானப் போக்குவரத்தை மக்களிடம் கொண்டு செல்வது..

• சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளை மேற்கொள்ள 5 ஆண்டுகள் உள்நாட்டு விமான சேவையை நடத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது.

• நெகிழ்வான, தாராளமாக்கப்பட்ட “சுதந்திர வான்வெளி”, “குறியீடு பகிர்வு” ஒப்பந்தங்கள்.

• விமானங்களை பராமரிப்பது – பழுது பார்ப்பது – விமான சேவையை நடத்துவது ஆகியவற்றுக்கான துறைக்கு ஊக்கமளிப்பதன் மூலம் தெற்கு ஆசியாவில் இத்தொழிலில் ஒரு முக்கிய மையமாக இந்தியாவை உருவாக்குவது.

• 2025ஆம் ஆண்டிற்குள் இதற்குத் தேவைப்படுகின்ற தரமான, சான்றளிக்கப்பட்ட 3.3 லட்சம் திறன்பெற்ற ஊழியர்கள் இத்துறைக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவது.

• பசுமை விமான நிலையங்கள் மற்றும் ஹெலிகாப்டர் சேவைக்கான நிலையங்கள் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது.

• கட்டுப்பாடுகளை தளர்த்துவது, எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள், இணைய தளம் மூலமான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் எளிதான வர்த்தக சூழலை உயர்த்துவது.

• விமானப் போக்குவரத்துத் துறையில் ‘இந்தியாவில் உருவாக்குவது’ என்பதை வளர்த்தெடுப்பது.

இக்கொள்கையில் அடங்கியுள்ள பகுதிகள்:

1. பகுதி வாரியான தொடர்பு ஏற்பாடு

2. பாதுகாப்பு

3. விமானப் போக்குவரத்து நடவடிக்கைகள்

4. பயணப் பாதையை பகிர்ந்தளிப்பது குறித்த வழிகாட்டுதல்கள்

5. சர்வதேச விமான சேவைக்கு 5/20 என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்துவது

6. இருதரப்பு போக்குவரத்து உரிமைகள்

7. குறியீடு பகிர்வுக்கான ஒப்பந்தங்கள்

8. நிதி உதவி

9. மாநில அரசு, தனியார் துறை அல்லது பொது-தனியார் கூட்டு பங்கேற்பு முறையில் விமான நிலையங்களை வளர்த்தெடுப்பது

10. இந்திய விமான நிலைய ஆணையம்

11. விமான கட்டுப்பாட்டு சேவைகள்

12. விமான போக்குவரத்திற்கான பாதுகாப்பு, குடியுரிமை மற்றும் சுங்க ஏற்பாடுகள்

13. ஹெலிகாப்டர்கள்

14. தனிப்பட்ட விமான சேவைகள்

15. பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் முழுமையாக மாற்றியமைத்தல்

16. விமான தரைக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள்

17. விமான சரக்கு போக்குவரத்து

18. விமானம் சார்ந்த தொழில்களை இந்தியாவில் உருவாக்குவது

19. விமான போக்குவரத்து குறித்த கல்வி மற்றும் திறன் மேம்பாடு

20. நிலைத்து நிற்கும்படியான விமானப் போக்குவரத்து

21. இதர துறைகள்

22. 1968ஆம் ஆண்டின் அத்தியாவசிய பணிகள் பராமரிப்புச் சட்டம்.

கொள்கையின் சிறப்பு அம்சங்கள்:

1. நிலைபெறுவதற்கு அவசியமான இடைவெளியை நிரப்பத் தேவையான நிதியானது தரவரிசை 2/2ஏ, ஆர்சிஎஸ் பாதைகள் மற்றும் சிறு விமானங்கள் ஆகியவை தவிர்த்து இதர உள்நாட்டு விமானப் பாதைகள் அனைத்தின் மீதும் ஒவ்வொரு புறப்பாட்டிற்கும் ஒரு சிறிய கட்டணம் விதிப்பதன் மூலம் உருவாக்கப்படும். இந்த கட்டண விகிதமானது விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் அவ்வப்போது இறுதிப்படுத்தப்படும். இது தொடர்பானவர்களுடன் ஆலோசிப்பதற்கான பொதுவெளியில் விரிவானதொரு திட்டம் அறிவிக்கப்படும்.

2. சர்வதேச விமானப் போக்குவரத்தைத் துவக்குவதற்காக 2004ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 5/20 விதியானது மாற்றியமைக்கப்படுகிறது. இதன்படி பழைய, புதிய விமான சேவை நிறுவனங்கள் உள்நாட்டில் செயல்படுவது குறித்த ஒரு சில கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றுமேயானால் அவை சர்வதேச விமான சேவைகளை துவக்குவதற்குத் தேவையான சம வாய்ப்புகளை அளிக்கும் ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இருக்கைகளில் 20 சதவீதம் (அனைத்துப் புறப்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் சராசரி இருக்கைகளில் 20 சதவீதம்) அல்லது 20 விமானங்கள், இதில் எது அதிகமோ, அதை உள்நாட்டு விமான சேவைகளுக்காக ஒதுக்குவது என்ற வகையில் அவை செயல்படுமானால் அனைத்து விமான சேவை நிறுவனங்களும் சர்வதேச விமானப் போக்குவரத்தை துவக்கலாம் என்பதே இந்தப் புதிய விதிமுறையாகும்.

3. விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்காக வெளிப்படையானதொரு ஒற்றைச் சாளர முறையை உருவாக்கவும், சிறப்பான விமானப் போக்குவரத்திற்கான பாதுகாப்புகளை மேற்பார்வையிடுவதற்கான அமைப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் வகையில் விமான போக்குவரத்திற்கான டைரக்டர் ஜெனரலுக்கு தேவையான நிர்வாக மற்றும் நிதி குறித்த அதிகாரங்கள் வழங்கப்படும்.

4. தரவரிசையில் முதல் பிரிவுப்பாதையாக ஒரு பாதையை அறிவிப்பதற்கான அடிப்படை நிபந்தனைகளை அறிவிப்பதன் மூலம் பயணப்பாதையை ஒதுக்குவது குறித்த வழிமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இந்த முதல் பிரிவில் ஒரு குறிப்பிட்ட சதவிகித அளவில் இரண்டு மற்றும் இரண்டு ஏ பிரிவுகளில் போக்குவரத்தை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையானது தொடர்கிறது. 700 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரம், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட சராசரி இருக்கை அளவு மற்றும் ஆண்டுக்கு 5 லட்சம் பயணிகளை எடுத்துச் செல்வது ஆகிய அம்சங்களின் அடிப்படையில் இந்த முதல் தர பிரிவு அமையும். பகுதி வாரியான தொடர்பு ஏற்பாடுகளுக்கான திட்டம் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் நிலையில் மூன்றாவது தர வரிசையானது குறைக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவை இரண்டாவது தர வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.

5. இருதரப்பு உரிமைகள் மற்றும் குறியீடு பகிர்வு ஒப்பந்தங்கள் ஆகியவை மேலும் தாராளமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எளிதான வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் பயணிகளுக்கு விரிவான தேர்வுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றுக்கு வழியேற்படும். சார்க் நாடுகள் மற்றும் புதுதில்லியிலிருந்து 5000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள நாடுகள் ஆகியவற்றுடன் பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் ‘சுதந்திர வான்வெளி’ திட்டம் அமல்படுத்தப்படும். குறிப்பிட்ட இந்திய விமான நிறுவனங்கள் தங்களது இருதரப்பு உரிமைகளில் 80 சதவீதத்தை பயன்படுத்தாத அதே நேரத்தில், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்களது பங்கை பயன்படுத்தி விட்டு, கொள்திறனை அதிகரித்துக் கொள்ளக் கோரும்போது கூடுதல் கொள்திறனை வழங்க அமைச்சரவை செயலர் தலைமையிலான ஒரு குழு இதற்கான ஓர் முறையை பரிந்துரைக்கும்.

6. மாநில அரசுகள் அல்லது தனியார் துறை அல்லது பொது-தனியார் கூட்டு முயற்சி ஆகியவற்றின் மூலம் விமான நிலையங்களை வளர்த்தெடுக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்பதோடு நிச்சயமான ஒழுங்கமைவை வழங்கவும் முயற்சிகளை மேற்கொள்ளும். பாதுகாப்பு ஏற்பாடுகளில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் குறைந்த செலவில் சிறப்பாகச் செயல்படும் வகையில் வரவிருக்கும் கிரீன்ஃபீல்ட் மற்றும் பிரவுன் ஃபீல்ட் விமான நிலையங்கள் செயல்படும்.

7. இந்திய விமான நிலைய ஆணையம் தொடர்ந்து தனது விமான நிலையங்களை நவீனப்படுத்தவும், உருவாக்கவும், சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் செயல்படும். தற்போது ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையம் அதன் கொள்திறனை முழுமையாக எட்டாத நிலையில் 150 கிலோமீட்டர் சுற்றளவில் ஒரு புதிய க்ரீன் ஃபீல்ட் விமானநிலையத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுமானால் ஆணையத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

8. உலக அளவில் நிலவும் போக்குகளுக்கு ஏற்ப விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவைகள் நவீனப்படுத்தப்படுவதோடு, மேம்படுத்தப்படும். சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் உலகாளவிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் நவீன செயலடிப்படையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகள் ஆகியவற்றுக்கு இணங்க முழுமையானதொரு ஒழுங்கமைந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை இந்திய விமான நிலைய ஆணையம் வழங்கும்.

9. துவக்கத்தில் நான்கு ஹெலிகாப்டர் மையங்களை வளர்த்தெடுப்பது மற்றும் ஹெலிகாப்டர்களுக்கென தனியானதொரு விதிமுறைகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஹெலிகாப்டர் பயன்பாட்டை வளர்க்க அரசு முயற்சி செய்யும். ஹெலிகாப்டர் மூலமான அவசர மருத்துவ சேவைகளை ஊக்குவிக்க, இது தொடர்பான அனைத்து தரப்பினருடனும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும்.

10. 2016-17 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பராமரிப்பு- பழுதுபார்ப்பு- விமான சேவை துறைக்கான சுங்க வரிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு, இதற்கான பொருட்களை, குறிப்பாக கருவிகள் மற்றும் கருவிப் பெட்டகங்கள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறித்த செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இத்துறைக்கு மேலும் ஊக்கம் தரும் வகையில் இந்தக் கொள்கைத் திட்டத்தில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

• பராமரிப்பு – பழுதுபார்ப்பு – சேவை துறை நடவடிக்கைகள் மீதான வாட் (VAT) தீர்வையை முற்றிலுமாக அகற்ற மாநில அரசுகளை அமைச்சகம் கேட்டுக் கொள்ளும்.

• எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் புதிய விமான நிலையங்களுக்கான/ ஹெலிகாப்டர் சேவை நிலையங்கள் அனைத்திலும் இத்தகைய சேவைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கக் கூடிய இடங்களில் இத்தகைய சேவை வழங்குவருக்கு போதுமான நிலத்தை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.

• இந்தக் கொள்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு விமான நிலைய ராயல்டி மற்றும் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படமாட்டாது.

11. நியாயமான போட்டியை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதுள்ள தரைக் கட்டுப்பாட்டு செயல்பாடுகள் குறித்த கொள்கையானது மாற்றப்பட்டு ஒரு புதிய கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டின் ஏ இ ஆர் ஏ சட்டத்தில் வரையறுக்கப்பட்ட வகையில் அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் ஏர் இந்தியாவின் துணைநிறுவனம்/கூட்டு முயற்சி உள்ளிட்டு, மூன்று தரைக் கட்டுப்பாட்டு செயல்பாடுகளுக்கென மூன்று நிறுவனங்கள் இருப்பதை விமான சேவையை மேற்கொள்ளும் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். சிறிய விமான நிலையங்களில், போக்குவரத்தை, நிலையத்தின் கொள்திறனையும் அடிப்படையாகக் கொண்டு, எத்தனை தரைக் கட்டுப்பாட்டு செயல்பாட்டு நிறுவனங்கள் தேவை என்பதை விமான நிறுவனங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்கள் உள்ளிட்டு வழக்கமான உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்து விமான நிலையங்களிலும் தேவையானால் தாங்களே தரைக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். வேலைக்கு ஊழியர்களை அனுப்பி வைக்கும் நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிப்பது அனுமதிக்கப்பட மாட்டாது.

*******