பி.எம்.இந்தியா
வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தை மாற்றியமைப்பதற்கான யோசனைகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விளக்கம்:
இந்த வாரியம் இனிமேல் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்களோடு செயல்படும். இந்த வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கோ அல்லது 65 வயது அடையும் வரையிலோ இருக்கும்.
இந்த அமைப்பு சுயேச்சையாக, பொறுப்புணர்வுடன் திறமையான வகையில் செயல்படுவதற்கு வசதியாக, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் கீழ் செயல்படும்.
இந்த வாரியத்திற்கான நிதிஒதுக்கீடும், இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையிலிருந்து பிரிக்கப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி துறையுடன் இணைக்கப்படும். வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியம் நிர்வாக பணியாளர்களோடு சுயேச்சையான நிர்வாக கட்டுப்பாடுகளுடன் செயல்படும்.
விளைவு:
வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி பணி மற்றும் செயல்பாடுகளை, நான்கு உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் துரிதப்படுத்துவார்கள். வேளாண் விஞ்ஞானிகள் தேர்வினை துரிதப்படுத்துவதன் மூலம் வேளாண் சமுதாயத்திற்கு இந்த நடவடிக்கை மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையில் பல்வேறு விஞ்ஞானிகள் பதவிக்கு திறமை மற்றும் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதை இது உறுதி செய்யும்.
பின்னணி:
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கல்வி வாரியத்தில் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் பதவிகளுக்கு ஆள்சேர்ப்பதற்கு தன்னிச்சையான தேர்வு அமைப்பை ஏற்படுத்துவதற்கு 1973 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த தேர்வு வாரியத்தின் பணிகள் கணிசமாக அதிகரித்ததை அடுத்து, 1986 ஆம் ஆண்டு இந்த வாரியத்தை மாற்றியமைக்க அப்போதைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த முடிவின் மூலம் ஒருநபர் தேர்வு வாரியம் 3 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வு வாரியமாக மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு பின்னரும் இந்த தேர்வு வாரியத்தின் பணிச்சுமைகள் கணிசமாக அதிகரித்ததோடு, வேளாண் அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதால், தேர்வு வாரியத்தை மேலும் விரிவுபடுத்தவும், வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நிபுணத்துவத்தை விரிவுபடுத்தவும் அவசியம் ஏற்பட்டது.