Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஸ்ரீ சாய் பாபா சமாதி நிலை அடைந்ததன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை:


மகாராஷ்டிரா ஆளுனர் திரு.வித்யாசாகர் ராவ்ஜ அவர்களே, மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு. தேவேந்திரா அவர்களே, சபாநாயகர் ஹரிபாபு அவர்களே, எனது அமைச்சரவை உறுப்பினர் சுபாஷ் பாம்ரே  அவர்களே, ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை தலைவர் சுரேஷ் ஹவாரே அவர்களே, மகாராஷ்டிராவின் அனைத்து அமைச்சர்கள், எனது சக பாராளுமன்ற உறுப்பினர்கள், மகாராஷ்டிராவின் அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் பெரும்திரளாக இங்கு கூடியிருக்கும் என் அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே. ஒட்டுமொத்த மகாராஷ்டிரா மற்றும் இந்திய மக்களுக்கு எனது விஜயதசமி மற்றும் தசரா வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நம் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் விழாக்களை கொண்டாட நாம் முயற்சி செய்கிறோம். நானும் கூட ஒவ்வொரு விழாவையும் என் நாட்டு மக்களுடன் கொண்டாடவே முயற்சி செய்கிறேன். இந்த உணர்வுகளுடன் இன்று, உங்களிடையே இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தசரா கொண்டாடும் இந்நன்னாளில், நீங்கள் பெரும்திரளாக இங்கு கூடி, உங்கள் ஆசீர்வாதங்களை எனக்கு வழங்கியிருக்கின்றீர்கள். இங்கு அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் கீழ் துளி இடமும் இல்லாததை நான் பார்க்கிறேன். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கூடாரத்தின் வெளியே வெயிலில் நிற்கிறார்கள். இந்த பந்தம் மற்றும் நெருக்கம் தொடர்ந்து எனக்கு பலம் தருகிறது, உங்கள் அன்பும் பாசமும் எனக்கு புத்துயிரையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

நண்பர்களே,

தசராவைத் தவிர,  ஷீரடி என்ற இந்த புனித பூமியில் நாம் இன்னொரு நல்ல சந்தர்ப்பத்தை சந்திக்கிறோம். சாய்பாபா சமாதி நிலை அடைந்து நூறு ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை இந்நாள் குறிக்கிறது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு, சாய்பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. சாய்பாபாவின் ஆசீர்வாதங்களைப் பெற வாய்ப்பைப் பெறும் போதெல்லாம் எண்ணற்ற பக்தர்களைப் போலவே, எனக்குள்ளும் மக்களின் நலனுக்காக என்னை நானே அர்ப்பணிப்பேன் என்ற உணர்வு ஏற்படுகிறது.

சகோதர சகோதரிகளே,

ஷீரடியின் ஒவ்வொரு மூலை, முடுக்கிலும்  சாய்பாபாவின் மந்திரமும், போதனைகளும் நிறைந்திருக்கிறது. மக்கள் சேவை, தியாகம், தவம் ஆகியவற்றைப் பற்றி நாம் பேசும் போதெல்லாம், அனைவரும் ஷீரடியை உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றனர். தத்யா பாட்டீன் நகரம் ஷீரடி. இது டாடா கோட் பாட்டீலின் நகரமும் கூட. இந்த மண் மாதவராவ் தேஷ்பாண்டே மற்றும் மெல்சாபாட்டி போன்ற பெரிய மனிதர்களை உருவாக்கியுள்ளது. காசிராம் சிம்பி மற்றும் அப்பா ஜக்ளே ஆகியோர் தங்களின் கடைசி மூச்சு வரை சாய்பாபாவுக்கு சேவையாற்றி உள்ளனர். கோண்டா, கவா  மற்றும் துகாராம் ஆகியோரை யாரால் மறக்க முடியும்? மறக்கலாம், இந்த மண்ணுக்காக தியாகம் செய்த மண்ணின் மைந்தர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

சாய்பாபாவின் மந்திரப்படி, அனைத்து மக்களின் கடவுளும் ஒன்று. அவரது இந்த நான்கு வார்த்தைகளும் சமுதாய ஒற்றுமையை கோர்க்கும் நூல் ஆகும். சமூகத்திற்கு சொந்தமானவர் சாய், இந்த சமூகம் சாயிக்கு சொந்தமானது. சமூக சேவைக்கான சில வழிகளை சாய் காட்டி உள்ளார். சாய்பாபா காட்டிய அந்த வழியைக் கடைப்பிடித்து இடைவிடாமல் இந்த சமூகத்திற்காக பாடுபட்டு வரும் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையை எண்ணி மகிழ்ச்சி அடைகிறனே். ஆன்மீகத்தின் மூலம் கல்வி, மேம்பாடு அல்லது சமூகத்தில் சமூக ஒற்றுமைக்கான செய்தியை பரப்புதல் ஆகியவற்றின் மூலம் உங்கள் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. இன்றும்கூட, நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பல திட்டங்கள் இந்தமண்ணில் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஏழைகளுக்கு மிகப்பெரிய நலத்திட்டத்தை வழங்குவதில் இதை விட சிறந்த இடம் வேறில்லை என்பதால், இங்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சாய்பாபாவின் காலடியில் அமர்ந்து, ஏழைகளுக்காக சேவை செய்வதை விட மிகுந்த மகிழ்ச்சி எது? எனவே, மகாராஷ்டிரா அரசாங்கத்தை நான் பாராட்டுகிறேன். பக்தர்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சாய்பாபா ஆங்கில வழிப் பள்ளியான கன்யா வித்யாலயா மற்றும் கல்லூரியின் அடிக்கல்லும் இதே நாளிலேயே நாட்டப்பட்டுள்ளது. சாய்பாபாவின் போதனைகள் மற்றும் வாழ்க்கையை தொடர்புபடுத்தி அமைக்கப்படும் சாய் அறிவுப்பூங்கா, சாயியின் போதனைகளை மக்கள் எளிதாகவும், ஆழமாகவும் புரிந்துள்ள உதவும் வகையில் இருக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன்.

நண்பர்களே,

10 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி திறன் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும். சுத்தமான மின்சாரத்தை வழங்குவதில் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும். இது, விஜயதசமி கொண்டாடும் வேளையில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சாய் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் பரிசாகும்.

நண்பர்களே,

பொதுவாக இந்தியர்கள் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை சமயத்தில் வீடு, கார்கள் மற்றும் நகைகள் போன்றவற்றை வாங்குகின்றனர். மக்கள் தங்களுடைய திறமைக்கேற்ப செலவழிப்பதுடன் அவர்களது குடும்பத்திற்கும் பரிசளிக்கிறார்கள். அதே போல தசரா கொண்டாடும் இந்த சமயத்தில், மகாராஷ்டிராவின் 2.5 லட்சம் சகோதர, சகோதரிகளுக்கு வீடு வழங்குவதற்கான வாய்ப்பை நான் பெற்றுள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

என் சகோதர, சகோதரிகள் அவர்களுக்கென சொந்த வீடு உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நீண்டநாளைய கனவாகும். தசரா சமயத்தில் சிறப்பான இந்த விழாவில் அந்த குடும்பங்களுக்கு வீடு வழங்கி, எனது ஏழை சகோதர, சகோதரிகளுக்கு செய்யும் இந்த மகத்தான சேவையை விட பெரிது ஒன்றுமில்லை என்றே நம்புகிறேன். பிரதம மந்திரி வீட்டு வசதிக் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீடுகளை பெறும், உங்கள் வாழ்வின் மங்களகரமான இந்த நேரத்தில், உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த புதிய வீடுகள் உங்கள் கனவுகளை அடையாளப்படுத்துகின்றன. இவை உங்கள் அபிலாஷைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கின்றன. இப்போது உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை ஆகியவை நேர்மறையான மாற்றத்தின் பாதையில் முன்னேறி இருக்கின்றன . இது வறுமைக்கு எதிரான வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் ஒரு பெரிய முதல் படியாகும்.

நண்பர்களே,

வீட்டை சொந்தமாக வைத்திருப்பது வாழ்க்கையை எளிதாக்குவதுடன், வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு உத்வேகத்தையும், மேம்பாட்டையும் வளர்த்து வருகிறது. அதோடு மரியாதை என்ற உணர்வும் உள்ளடங்குகிறது. இதை மனதில் வைத்து, இந்தியா சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் 2022ம் ஆண்டுக்குள், ஒவ்வொரு வீடற்ற குடும்பத்துக்கும் ஒரு வீட்டை கொடுக்கும் முயற்சியை நோக்கி நாங்கள் பணியாற்ற முடிவு செய்துள்ளோம்.

இந்த குறுகிய காலத்திலேயே எங்களின் முயற்சியில் பாதி இலக்கை எட்டியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். சகோதர, சகோதரிகளே, ஏழை வர்க்கத்தை சேர்ந்த குடும்பம், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம் என எதுவாயினும், அவர்களை குடிசையிலிருந்து வெளிக்கொண்டு வருவதில் இந்த 4 ஆண்டு காலத்தில் அரசு மிகத்தீவிரமாக பணியாற்றி, அவர்களுக்கு வாடகைக் குடியிருப்பு வசதிகளையும், சொந்த வீடுகளையும் கட்டிக் கொடுத்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்களின் நோக்கமானது, ஏழைகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு பதிலாக, இலவச வீடுகளை வழங்கி, அதன் மூலம் ஒரு குடும்பத்தின் பெயரை மட்டுமே மகிமைப்படுத்துவதாகத்தான் இருந்தது. அவர்களுடைய நோக்கம் வாக்கு வங்கியை உருவாக்குவதுதான். மின்சாரம், கழிப்பறை, நீர் மற்றும் எரிவாயு இணைப்பு போன்ற வசதிகளுடன் நல்ல தரமான வீடுகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்ததில்லை. எந்தவொரு திட்டத்திற்கும் அரசியல் நலன்களே மையமாக இருந்திருந்தால், எவரும் எந்தவொரு கவனத்தையும் செலுத்தமாட்டார்கள். அரசியல் ஆர்வங்களுக்கு பதிலாக, ஏழைகளின் நலன் ஒரு திட்டத்தின் மையமாக இருந்தால், அது அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும்; உத்வேகத்தை அளிக்கும். பின்னர், பணியை முடிக்கும் வேகம் சிறப்பான வேகத்தில் இருக்கும். இதுவே தேச முன்னேற்றத்திற்கான ஓர் உதாரணமாகும்.

நண்பர்களே,

முந்தைய அரசாங்கம், அவர்களின் 4 ஆண்டுகால ஆட்சியில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியது. 4 ஆண்டுகளில் அவர்கள் கட்டியது வெறும் 25 லட்சம் வீடு மட்டும் தான். எத்தனை? என்ன நடந்தது? சத்தமாக சொல்லுங்கள். 4 ஆண்டுகளில் எத்தனை வீடுகள் கட்டினார்கள்? 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன; மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, நான்கு ஆண்டுகளுக்குள் 1 கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டி முடித்துள்ளோம். அவர்கள் 4 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளை கட்டிய நிலையில், நாங்கள் அதே 4 ஆண்டில் 1 கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டி உள்ளோம். முந்தைய அரசாங்கமே தற்போது இருந்திருந்தால், கூடுதலான வீடுகளை கட்டி முடிக்க 20 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டிருக்கும். நீங்களும் வீட்டை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். துரித கதியில், நலத்திட்டங்களை மிக விரைவில் ஏழைகளுக்கு வழங்க இந்த அரசாங்கம் எப்படி வேகமாக பணியாற்றுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். அதோடு எல்லாம் ஒரே மாதிரியானவை. அதே வர்க்கம், அதே வளங்கள் மற்றும் அதே மக்கள்; ஆனால் ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடன் பணி செய்தால், அதன் முடிவுகளும் விரைவில் பின்பற்றப்படும்.

சகோதர, சகோதரிகளே,

முந்தைய அரசாங்கம் ஒரு வீட்டை கட்டி முடிக்க 18 மாதங்கள் அல்லது 1.5 ஆண்டுகள் எடுத்துக் கொண்ட நிலையில், இந்த அரசாங்கம் ஒரு வீடு கட்ட 12 மாதங்களுக்கும் குறைவாகவே எடுத்துக் கொண்டுள்ளது. காலக் குறைப்பைத் தவிர, வீட்டின் பரப்பளவையும் அதிகரித்துள்ளது. மேலும், வீடுகள் கட்ட அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி உதவி ரூ .70 ஆயிரத்தில் இருந்து ரூ .1 லட்சத்து 20 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, நிதி நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பயனாளிகள் தேர்வு ஒரு விஞ்ஞான மற்றும் வெளிப்படையான முறையில் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீடுகளில் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நீடித்திருப்பதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகளை பெறும் பயனாளிகளுக்கு மீண்டும் ஒருமுறை என் ஆழ்மனதில் இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சில குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த சகோதரிகளின் முகங்களில் சுய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் பார்த்து, எனக்குள் எழும் உணர்ச்சியை யாரும் யூகிக்க முடியாது. ஏழை குடும்பங்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண இந்த வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. இது பணியாற்றுவதற்கான புதிய ஆற்றலை எனக்கு தந்துள்ளது. சகோதரிகளிடம் இருந்து கிடைத்த ஆசீர்வாதங்களுடன், உங்களுக்கு சேவை புரிய எங்களின் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணிப்போம் என்ற தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை அமைப்பதற்கான பிரச்சாரம் இறுதிகட்டத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி உள்ளது. நீங்கள் அனைவரும், ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் திறந்தவெளி கழிவறை இல்லாத மகாராஷ்டிராவாக அறிவிக்கப்பட்டுள்ளீர்கள். மாநிலத்தின் 11 கோடி மக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மகாராஷ்டிராவின் தெருக்களையும் கிராமங்களையும் சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல்,  வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களைத் தடுப்பதன் மூலம் ஏழை விவசாயிகளின் குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாக்கும்.

நண்பர்களே,

ஏழை மக்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் குறித்த பேச்சுகள் எழும்போது, உலகெங்கிலும் உள்ள அனைவருமே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, அதாவது பிரதமரின் ஜன் ஆரோக்ய யோஜனா (PMJAY) பற்றி பேசுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் சுமார் 50 கோடி மக்கள் கடுமையான நோய்களுக்கு இலவச சிகிச்சை பெற முடியும்.

இந்த திட்டத்தின் பலன்கள், மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான குடும்பங்களை சென்றடைகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், இன்று வரை நாடெங்கிலும் சுமார் 1 லட்சம் நோயாளிகள் இத்திட்டத்தின் பலனை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் சிலர் அவர்களின் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல்லை வெளியேற்றி உள்ளனர், சிலர் கட்டிகளை அகற்ற சிகிச்சை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், சிலருக்கு ரூ.50 ஆயிரத்திற்கான மருத்துவ செலவு கிடைக்கப் பெற்றுள்ளது, வேறு சிலருக்கோ ரூ.3 லட்சத்திற்கான மருத்துவ  செலவு கிடைத்துள்ளது.

நண்பர்களே,

இதுவரை, ஒரு நபருக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் திருப்பித் தரப்பட்டுள்ளது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், முன்பெல்லாம் ஏழைகளுக்கு சொந்த சட்டைப் பையில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்து தருவது என்பது மிகக்கடினமான காரியமாக இருந்தது. அதனாலேயே மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்தார்கள். இப்போது அரசாங்கம் ஏழைகளின் பின்னால் நிற்கிறது; அவர்கள் பணம் பற்றி கவலைப்படத் தேவையில்லை; முதலில் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும்.

நண்பர்களே,

ஆயுஷ்மான் பாரத் திட்டம் காரணமாக, நவீன மருத்துவ உள்கட்டமைப்பின் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2ம் தர, 3ம் தர நகரங்களில் பல புதிய மருத்துவமனைகளை அமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.

சகோதர, சகோதரிகளே,

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சுலபமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்படுகிறது. எனக்கு கிடைத்த தகவலின் படி, வருண பகவான் இந்த மாநிலத்திற்கு அருள் காட்டவில்லை. மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு மிகக்குறைவு. எனவே, பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நீங்கள் விரைவில் நிவாரணம் பெறுவீர்கள் என்று உறுதி அளிக்கிறேன். தவிர, அதன் மூலம் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் கைகோர்த்து செல்கிறது.

சகோதர, சகோதரிகளே,

பிரதமரின் கிருஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் மூலம், நிலுவையில் உள்ள திட்டப்பணிகளை முடித்து, தண்ணீர் பிரச்சினையிலிருந்து நாட்டின் விவசாயிகளை மீட்டெடுக்கும் முயற்சியை நோக்கி இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், மகாராஷ்டிராவில் பல முக்கிய திட்டங்களுக்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா அரசாங்கமும், தண்ணீர் பற்றாக்குறையை கையாள தனது ஜல்யுக்த் ஷிவார் அபியான் திட்டத்தின் மூலம் தன்னிகரில்லா முயற்சியை எடுத்து வருகிறது. இந்த திட்டம் 16,000 கிராமங்களை வறட்சி இல்லாததாக மாற்றியிருப்பதுடன், மேலும் 9000 கிராமங்களை வறட்சியிலிருந்து விடுவிப்பதற்கான பணிகள் ஒரு விரைவான வேகத்தில் நடைபெற்று வருவது திருப்திகரமாக உள்ளது.

பாசன குளங்களை தூர்வாரும்திட்டம் மூலம், வண்டல் மண்ணை அப்புறப்படுத்துவதை வெற்றிகரமாக செயல்படுத்திய மகாராஷ்டிரா மக்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாசன குளங்களில் இருந்து 9 கோடி சதுர மீட்டர் பரப்பிலான வண்டல் மண்ணை சுத்தப்படுத்துவது எளிதான வேலை அல்ல. எவ்வாறாயினும், கடினமான இப்பணியை பொதுமக்கள் பங்களிப்புடன் நிறைவேற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டி இருக்கிறீர்கள். இதே பணி ஒரு ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டால், ரூ.600 கோடிக்கு மேல் செலவாகி இருக்கும்; ஆனால் நீங்கள் அனைத்து தடைகளையும் முறியடித்து பணியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளீர்கள்.

நண்பர்களே,

அதிகப்படியான விளைச்சல் காலத்திலும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைத்திட உறுதி செய்வதில் நாங்கள் இடையறாது பணியாற்றி வருகிறோம். குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான நீண்ட கால கோரிக்கையை எங்கள் அரசு நிறைவேற்றி உள்ளது. கரும்பு உட்பட 21 ரபி மற்றும் காரிஃப் பயிர்களுக்கு உற்பத்தி செலவை காட்டிலும் 50 சதவீதம் அதிகமாக லாபத்தை அரசு நிர்ணயித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவின் மூலம், இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் கிடைப்பதை உறுதி செய்துள்ளது.

நண்பர்களே,

விவசாயத் துறையைத் தவிர, சுற்றுலா துறையிலும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. மகாராஷ்டிராவில் ஷீரடி போன்ற ஆன்மிக தலங்களுக்கும், அஜந்தா, எல்லோரா போன்ற அதிகம் கவரக்கூடிய இடங்களுக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்பட்டுள்ளனர். பக்தி, ஆன்மிகம் மற்றும் வரலாறு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை இணைக்க பிரமாண்ட இயக்கத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.

நாடு முழுவதும் சுற்றுலா தலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. கடந்த முறை நூற்றாண்டு விழாவை தொடங்கி வைப்பதற்காக ஷீரடிக்கு நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் வந்திருந்த போது, ஒரு விமான நிலையத்தை இங்கு தொடங்கி வைத்தார். வருங்காலத்தில் இங்கு அதிகப்படியான விமானங்களை இயக்குவதன் மூலம், நாட்டின் ஒவ்வொரு சாய்பாபா பக்தரும், வெளிநாடுகளில் இருந்தும்  மிக எளிதாக ஷீரடிக்கு வந்து செல்ல முடியும்.

சகோதர, சகோதரிகளே,

மகாராஷ்டிராவின் நிலப்பகுதி எப்போதும் நாட்டிற்கு சமூக ஒற்றுமைக்கு பாடம் புகட்டுகிறது. சிவாஜி, பாபா சாகிப் பீம்ராவ் அம்பேத்கர்  அல்லது மரியாதைக்குரிய மகாத்மா ஜோதிபா புலே போன்ற மிகச்சிறந்த தலைவர்கள், சமத்துவம் மற்றும் ஒற்றுமையின் மதிப்பை நிலைநாட்டி, அதன் மதிப்புகளே சமூகத்தின் வலிமையைக் கொண்டிருப்பதாக நம்பினர். இந்த பெரிய புனிதமான மனிதர்களால் போதிக்கப்பட்ட பாடங்களை மனதில் வைத்து, எப்போதும் சுயநலநலன்களுக்காக சமுதாயத்தை பிளவுபடுத்தும் ஒவ்வொரு தீமையையும் சக்தியையும் தோற்கடிக்க வேண்டும். பிரிப்பது எளிதானது, ஆனால் ஒன்றிணைப்பது மிகவும் கடினம். ஒற்றுமையின் அதிகாரத்தை வலுப்படுத்தி, நம்மைப் பிரிக்கும் சக்தியை நாம் தோற்கடிக்க வேண்டும். இந்த விஜயதசமியில், ‘அனைவரும் இணைந்து, அனைவருக்குமான முன்னேற்றம்’ மற்றும் ‘ஒரே பாரதம், வலிமையான பாரதம்’ என்ற உறுதிமொழிகளை நாம் எடுக்க வேண்டும். ஆகையால், இந்த செய்தியை நீங்கள் முன்னோக்கி நகர்த்த மற்றும் இந்த செய்தியின் பாதையில் நடக்க வேண்டுமென அனைவரையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். சாய்பாபா காட்டிய பாதையில் நாம் நடக்க வேண்டும். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

நண்பர்களே,

இன்று நான் ஒரு புனித இடத்தில் இருக்கிறேன் மற்றும் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். அக்டோபர் 31 அன்று, உங்கள் மாநில அரசாங்கம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும். நான் தேவேந்திர பட்னாவிஸ்  மற்றும் அவரது முழு அணியினரைமுன்கூட்டியே வாழ்த்துகிறேன். இதே போன்ற அனைத்து சக்திகளுடனும், மகாராஷ்டிர மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். மாநிலத்தின் ஒவ்வொரு நபரின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்வீர்கள் என்றும் நான் நம்புகிறேன்.

இந்த நம்பிக்கையுடன், மீண்டும் ஒருமுறை இன்று தங்கள் கனவு வீடுகளை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனவுகளை முழுமைப்படுத்திக் கொள்ளவும், உங்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் மற்றும் உங்களின் குழந்தைகள் வெற்றியின் புதிய உச்சத்தை எட்டுவதற்கும் ஒரு கருவியாக இந்த புதிய வீடுகள் இருக்கும் என நம்புகிறேன். இந்த எதிர்பார்ப்புகளுடன் நான் என் உரையை நிறைவு செய்கிறேன். ஸ்ரீ சாய் அறக்கட்டளைக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நேரத்தில் என்னை அழைத்ததற்காகவும், சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் அனைத்து பண்டிகைகளும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்! இந்த நல் வாழ்த்துக்களுடன், அனைவருக்கும் நன்றி.

நன்றி!

= = = = = = = = = =