Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

20-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 51,000 பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்

20-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 51,000 பேருக்குப் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்


பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (19.09.2026) நடைபெற்ற 20-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கார் மேளா), பல்வேறு அரசு நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இது ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும், இது  பல்வேறு அரசு நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கடின உழைப்புக்கும், அவர்களின் பெற்றோர்கள் செய்த பெரும் தியாகங்களுக்கும் ஒரு மரியாதையாக அமைவதாகவும் கூறினார்.

மத்திய அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களை வரவேற்ற பிரதமர், 2047-ம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறும் மகத்தான மைல்கல்லை நோக்கி இந்தியா முன்னேறி வரும் வேளையில்,  ஒவ்வொரு நிர்வாக முடிவின் மூலமும் வளர்ந்த, தற்சார்பு இந்தியா என்ற இரட்டை இலக்குகளுக்குத் தொடர்ந்து வலுவூட்டுவதில் இளைஞர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். நமது இளைய தலைமுறையின் திறமைகளும் ஆற்றல்களும் உலகின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும், இது உலகளாவிய எதிர்பார்ப்புகளைத் தூண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நிறைவடைந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டைப் பற்றிப் பேசிய பிரதமர், பாரம்பரியமாக அரசுகளுக்கு இடையேயான தொடர்புகளுக்கு அப்பாற்பட்டு சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதே நிர்வாகத்தின் உத்தி என்று கூறினார். பிரிக்ஸ் கனெக்ட், பிரிக்ஸ் குறு, சிறு, நடுத்தர தொழில் ஒத்துழைப்பு இணையதளம் போன்ற முன்முயற்சிகள், தொழில்முனைவோர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரை உலக அளவில் நேரடியாக ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அவர் விளக்கினார். இதில் அனைவரும் தீவிரப் பங்கேற்பாளர்களாக மாற வேண்டும் என்று திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

சுமார் 40 நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் முன்னெப்போதும் இல்லாத தொழில் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார். இந்த ஒப்பந்தங்கள் உள்நாட்டு தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளை உருவாக்குவதோடு, இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகின்றன என்று அவர் கூறினார். இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் நமது இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்கின்றன என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை, திறன் இந்தியா இயக்கம், பிரதமரின் திறன் மேம்பாட்டு இயக்கம், தொழிற்பயிற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சிகள் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளைப் பிரதமர் பட்டியலிட்டார். நேரடித் தொழில் துறைப் பங்கேற்புடன் 60,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரம் அரசு ஐடிஐ-களை நவீனமயமாக்கும் பிரதமரின் சேது திட்டத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். மாறிவரும் பொருளாதாரத்தின் தேவைகளுக்கு ஏற்ப இளைஞர்களின் கல்வியும் திறன்களும் மேம்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்று திரு நரேந்திர மோடி கூறினார்.

உள்நாட்டு புத்தொழில் சூழலமைப்பின் அசுர வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக இந்தியா திகழ்கிறது என்றார். புத்தொழில் நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதி, இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் யோசனைகளில் தீவிரமாகப் பணியாற்றி, நிறுவனங்களை உருவாக்கி, தங்கள் சகாக்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் அவர் பாராட்டினார். இப்போது கிராமங்கள், நகரங்கள், சிறு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இந்தியாவின் புதிய பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

தனியார் துறை வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான உத்தியை விவரித்த பிரதமர், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மாபெரும் திட்டமான பிரதமரின் வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை எடுத்துரைத்தார். இத்திட்டம், முதல் முறையாகப் பணியில் சேருபவர்களுக்கு 15,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்குவதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் நிதி வெகுமதி அளிக்கிறது என்று அவர் விளக்கினார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசு அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வருகிறது என்று திரு நரேந்திர மோடி உறுதிபட தெரிவிடுத்தார்.

வேகமாக மாறிவரும் உலகில் வாழ்நாள் முழுவதும் கற்கும் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில், கர்மயோகி இயக்கக் கட்டமைப்பின் மூலம் புதிய பணியாளர்கள் தங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களில் தேர்ச்சி பெறவும் பிரதமர் அறிவுறுத்தினார். ஐஜிஓடி தளத்தில் ஏற்கனவே உள்ள 1.7 கோடி ஊழியர்களுடன், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களும் இந்த அமைப்பை எளிதாகப் பயன்படுத்த உதவும் வகையில் ‘கர்மயோகி பிராரம்ப்’ தொகுப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். அரசு ஊழியர்கள் தங்களை எவ்வளவு அதிகமாக மேம்படுத்திக்கொள்கிறார்ளோ, அந்த அளவிற்கு நாட்டு மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ய முடியும் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

மக்கள் சேவையைத் தேசிய சேவைக்கு இணையாகக் கருதி, மக்களே கடவுள் என்ற தத்துவத்தைத் தங்களின் அன்றாடப் பணியில் கடைப்பிடிக்குமாறு புதிததாகப் பணியில் சேரும் ஊழியர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டு தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2312366&reg=3&lang=1

****

SS/PLM/RJ