Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

24.4.16 அன்று ஒலிபரப்பான மன் கீ பாத் நிகழ்ச்சியின் தமிழாக்கம் – மனதின் குரல்


எனதருமை நாட்டு மக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். விடுமுறை நாட்களில் பல நிகழ்ச்சிகளுக்கு பலர் திட்டமிடுகிறார்கள். விடுமுறை நாட்களில் தான் மாம்பழப் பருவம் வருகிறது, மாம்பழங்களை சுவைத்து மகிழுங்கள்; அதே போல பகல் வேளையில் சில கணங்கள் கண்ணயர்ந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றலாம். ஆனால் இந்த முறை பயங்கரமான வெப்பம் நாலாபுறங்களிலும் அனைத்து வித சந்தோஷத்திலும் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது.
தொடர்ந்து வறட்சி ஏற்படும் போதும், அனைத்து நீர் நிலைகளிலும் நீர் வற்றத் தொடங்கும் போதும் நாட்டில் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். சில வேளைகளில் ஆக்ரமிப்புக்கள் காரணமாக, தூர் வாராததன் காரணமாக, நீர் வரும் வழிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகள் காரணமாக, நீர் நிலைகளும் தங்கள் கொள் திறனை விடக் குறைவான அளவு நீரை சேமிக்கின்றன, பல ஆண்டுக்கால செயல்பாடுகள் காரணமாக அவற்றின் சேமிப்புத் திறன் தொடர்ந்து குன்றி வருகிறது.
வறட்சியை சமாளிக்கவும், நீர் இல்லாமை என்ற சங்கடத்திலிருந்து நிவாரணம் அடையவும் அரசுகள் தங்கள் முயற்சிகளை ஒரு பக்கம் மேற்கொண்டிருந்தாலும், குடிமக்களுமே கூட தங்கள் பங்குக்கு மிகச் சிறந்த வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருவதை என்னால் காண முடிகிறது. பல கிராமங்களில் விழிப்புணர்வு பரவியிருக்கிறது; நீரின் மகத்துவம் என்ன என்பதை நீருக்காக கஷ்டங்களை அனுபவித்தவர்கள் தான் அறிவார்கள்; அதனால் நீர் பற்றி உணர்வுபூர்வமாக ஏதோ ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

மஹாராஷ்ட்ர மாநிலத்தின் அஹமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிவ்ரே பாஜார் கிராம பஞ்சாயத்தும் அங்கிருக்கும் கிராம மக்களும் தண்ணீர் பிரச்சனையை உணர்வுபூர்வமான வகையில் அணுகினார்கள் என்று சில நாட்கள் முன்பாக யாரோ ஒருவர் எனக்குத் தெரிவித்தார். நீரை சேமிக்க வேண்டும் என்று விரும்பும் கிராமங்கள் பல இருக்கலாம், ஆனால் இவர்களோ விவசாயிகளோடு உரையாடிய பிறகு ஒட்டு மொத்த cropping pattern, பயிரிடும் முறையையே மாற்றி விட்டார்கள். எந்தப் பயிர் அதிக நீரைப் பயன்படுத்துகிறதோ, அது கரும்பாகவோ, வாழையாகவோ இருக்கலாம், அத்தகைய பயிர்களை பயிர் செய்யாமல் இருப்பது என்ற முடிவை மேற்கொண்டார்கள்.

கேட்பதற்கு என்னவோ விஷயம் எளிமையானதாக இருக்கிறது, ஆனால் இது அத்தனை சுலபம் இல்லை. அனைவரும் இணைந்து எத்தனை பெரிய தீர்மானம் மேற்கொண்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? ஏதாவது தொழிற்சாலை அதிக நீரைப் பயன்படுத்துகிறது என்றால், அந்த தொழிற்சாலையை மூடுங்கள் என்று கூறினால், என்ன விளைவு ஏற்படும் என்று நீங்களே அறிவீர்கள். ஆனால் எனது விவசாய சகோதரர்களைப் பாருங்கள், கரும்புக்கு அதிக நீர் தேவை என்பதால் கரும்பு நடவு செய்யாதீர்கள் என்றவுடன் உடனே விட்டு விட்டார்கள். முழுக்க முழுக்க அவர்கள் பழங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டார்கள், அதாவது எதற்கு மிகக் குறைந்த அளவு நீர் தேவைப்படுகிறதோ அதை மட்டுமே பயிர் செய்தார்கள்.

அவர்கள் தெளிப்பான், சொட்டு நீர் பாசனம், மழைநீர் சேமிப்பு, water recharging அதாவது மழை நீர் மறுசெறிவு என பல முனைப்புக்கள் மூலமாக இன்று தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க தங்கள் சொந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளார்கள். சரி, நான் சின்னஞ்சிறிய ஒரு கிராமமான ஹிவ்ரே பாஜார் பற்றி பேசியிருக்கிறேன், ஆனால் இப்படி பல கிராமங்கள் இருக்கலாம். அப்படிப்பட்ட கிராமவாசிகளுக்கும், நீங்கள் சாதித்திருக்கும் சிறப்பான செயல்களுக்காக நான் பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரோ ஒருவர் என்னிடம் மத்திய பிரதேச மாநிலத்தின் தேவாஸ் மாவட்டத்தில் இருக்கும் கோர்வா GORVA கிராம பஞ்சாயத்து பற்றிக் கூறினார். பஞ்சயத்தார் முயற்சிகள் மேற்கொண்டு, farm ponds பண்ணைக் குளங்கள் அமைக்க ஒரு இயக்கத்தை நடத்தினார்கள். சுமார் 27 பண்ணைக் குளங்கள் அமைக்கப்பட்டு, அதனால் நிலத்தடி நீர் அளவு அதிகரித்தது, நீர் மட்டம் உயர்ந்தது. எப்போதெல்லாம் பயிர்களுக்கு நீர்த் தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நீர் கிடைத்தது, அவர்களின் விவசாய உற்பத்தியில் சுமார் 20 சதவீத அதிகரிப்பு காணப்பட்டதாகவும் அவர்கள் கணக்குத் தெரிவிக்கிறார்கள்.

நீர் சேமிக்கப்பட்டதோடு நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்தது, நீரின் தரம் மேம்பாடு கண்டது. உள்நாட்டு மொத்த உற்பத்தி என்பது வளர்ச்சி காரணமாகத்தான் ஏற்படுகிறது என்று உலகில் கூறப்படுகிறது இல்லையா, உடல் நலம் பற்றி கேட்கவே வேண்டாம். இந்திய அரசு ரயில்கள் மூலமாக தண்ணீரை லாடூருக்கு கொண்டு சேர்க்கும் போது அது உலகிற்கு ஒரு செய்தியாக ஆவதைப் பற்றி எண்ணமிடுகிறேன்.
மிக விரைவான முறையில் நீரைக் கொண்டு சேர்த்ததில் ரயில்வே துறைக்கு பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்பது என்னவோ உண்மை தான், அதே சமயம் அந்த கிராமவாசிகளும் பாராட்டுக்குரியவர்களே. என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் இன்னும் கூட அதிகம் பாராட்டப் பட வேண்டியவர்கள். ஆனால் இப்படி பல திட்டங்கள் குடிமக்கள் வாயிலாகவே செயல்படுகின்றன, எப்போதும் அவை வெளிச்சத்துக்கு வருவதில்லை. அரசு செயல்படுத்தும் நல்ல விஷயங்களாவது எப்போதாவது தெரிய வருகிறது, ஆனால் நாம் நம்மைச் சுற்றிப் பார்த்தோமேயானால், வறட்சியை எதிர்கொள்ள எந்தெந்த மாதிரியாக, புதுப்புது வழிமுறைகளை மேற்கொண்டு பிரச்சனைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது நமக்குப் புலனாகும்.

எந்த ஒரு சங்கடத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு இடத்திலிருந்து ஒரு நல்ல செய்தி வந்து விட்டால், மொத்த சங்கடமும் தொலைந்து போனதாக உணர்வது தான் மனித இயல்பு. இந்த முறை மழையளவு 106 சதவீதம் முதல் 110 சதவீதம் வரை இருக்கும் வாய்ப்பு உள்ளது என்ற செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, ஏதோ பெரியதொரு மகிழ்வான செய்தி வந்தது போல உணர்கிறேன். மழை பெய்ய இன்னும் காலம் இருந்தாலும், நல்ல மழை பொழிவு பற்றிய செய்தி கூட புத்துணர்வை கொண்டு சேர்த்திருக்கிறது.

ஆனால் எனதருமை நாட்டு மக்களே, நல்ல மழை இருக்கும் என்ற தகவல் எத்தனை ஆனந்தத்தை அளிக்கிறதோ, அதே அளவுக்கு அது வாய்ப்பையும் அமைத்துக் கொடுக்கிறது, சவாலையும் முன்வைக்கிறது. கிராமம் தோறும் நீரை சேமிக்கும் இயக்கத்தை நம்மால் இப்போதே கூட தொடக்க முடியாதா? விவசாயிகளுக்கு மண் தேவைப்படுகிறது, விளை நிலங்களில் இது அவர்களுக்கு உதவியாக இருக்கிறது.
கிராமங்களின் ஏரிகளில் இருக்கும் மண்ணை தூர் வாரி வயல்வெளிகளில் ஏன் நாம் போடக் கூடாது; அப்போது வயல்களின் மண்வளம் பெருகும் அதே வேளை, நீர் நிலைகளின் நீர் சேமிப்பு அளவும் அதிகரிக்குமே! காலியான சிமெண்ட் சாக்குகள், காலி உரமூட்டைப் பைகள் போன்றவற்றில் கல்லையும் மண்ணையும் நிரப்பி நீர் வெளியேறும் வழிகளில் போட்டு அடைத்து விட்டால் என்ன? நீர் 5 நாட்கள், 7 நாட்கள் என்று தேங்கியிருந்தால், நீர் நிலத்தடி நீராக மாறி விடுமே! தானாகவே நிலத்தடி நீர் மட்டம் உயருமே! நமது குளங்களில் நீர் வரத்து ஏற்படும். முடிந்த மட்டில் நீர் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும். மழை நீர், கிராமத்தின் நீராக இருக்கும், இந்தத் தீர்மானத்தை நாம் மேற்கொண்டு ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும், இது ஒட்டுமொத்த சமுதாயமும் இணைந்து ஈடுபடும் போது தான் இது சாத்தியமாகும். இன்று நீர் தட்டுப்பாட்டு பிரச்சனை இருக்கலாம், வறட்சி நிலை இருக்கலாம், ஆனால் நம்மிடம் ஒன்று ஒன்றரை மாத கால அவகாசம் இருக்கிறது; நான் ஒரு விஷயத்தை எப்போதுமே கூறுவதுண்டு, நாம் எப்போதாவது அண்ணல் காந்தியடிகள் பிறந்த இடமான போர்பந்தருக்குச் செல்லும் போது அங்கே பல்வேறு இடங்களை நாம் பார்க்கலாம், அவற்றில் ஒரு இடம் பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது; அதாவது நீரை சேமித்து வைக்க எப்படி வீட்டுக்கு அடியில் குளங்களை 200 ஆண்டுகளுக்கும் முன்பாக அமைத்திருந்தார்கள், அந்த நீர் எத்தனை சுத்தமாக இருக்கிறது என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

திரு. குமார் க்ருஷ்ணா என்ற ஒருவர் mygov இணையதளத்தில் எழுதி இருக்கிறார், ஒரு வகையில் ஏக்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நம் வாழ்நாளில் கங்கையை தூய்மைப்படுத்தும் இயக்கம் முழுமை அடையுமா என்று கேட்டிருக்கிறார். அவரது கவலை மிகவும் இயல்பான ஒன்று தான், ஏனென்றால் சுமார் 30 ஆண்டுக்காலமாக இந்தப் பணி நடைபெற்று வந்திருக்கிறது. பல அரசுகள் வந்தன, பல திட்டங்கள் உருவாயின, ஏகப்பட்ட பணம் செலவானது, இதன் காரணமாக, சகோதரர் குமார் க்ருஷ்ணா மாதிரியாக நாட்டில் பல கோடி மக்களின் மனதில் இது போன்றதொரு கேள்வி எழுவது இயல்பான ஒன்று தான். சமய நம்பிக்கை உள்ளவர்கள், வீடுபேற்றை அளிப்பவளாக கங்கையை கருதுகிறார்கள்.
அந்த மஹாத்மியத்தை நானும் கூட ஏற்கிறேன், ஆனால் அதையும் தாண்டி கங்கையை உயிர் அளிப்பவளாக நான் காண்கிறேன். கங்கைதான் நமக்கு உணவளிக்கிறாள்; கங்கையே நமக்கு வேலை தருகிறாள்; கங்கைதான் நமக்கெல்லாம் வாழத் தேவையான சக்தியை அளிக்கிறாள். கங்கையின் பிரவாஹம் எப்படி அமைகிறதோ, அதை ஒட்டித்தான் நாட்டின் பொருளாதார செயல்பாடுகளிலும் ஒரு வேகம் கிடைக்கிறது. ஒரு பகீரதன் நமக்கு கங்கையை கொண்டு வந்தார், ஆனால் அதைக் காக்க பல கோடிக்கணக்கான பகீரதர்கள் தேவைப் படுகிறார்கள். மக்கள் பங்களிப்பு இல்லாமல் பணியில் வெற்றி காண முடியாது, ஆகையால் நாமனைவரும் தூய்மைக்கான, சுத்தத்துக்கான ஒரு change agentகளாக, மாற்ற செயலிகளாக மாற வேண்டும். திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும், நினைவுறுத்த வேண்டும்.

அரசு தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கங்கைக் கரைகளில் எந்தெந்த மாநிலங்கள் எல்லாம் இருக்கின்றனவோ, அந்த மாநிலங்களின் முழுமையான ஒத்துழைப்பு கோரும் முயற்சி நடந்து வருகிறது. சமூகம் மற்றும் தூய்மை சார்ந்த அமைப்புக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. Surface cleaning, பரப்பை சுத்தப்படுத்தல் மற்றும் தொழில்துறை மாசினை தடுக்கும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் கால்வாய்கள் வழியாக திடக் கழிவுகள் பெரிய அளவில் வந்து கலக்கின்றன. இது போன்ற கழிவுகளை சுத்தம் செய்ய வாராணசி, இலாஹாபாத், கான்பூர், பட்னா போன்ற இடங்களில் செயல்படும் trash skimmer, குப்பை நீக்கி இயந்திரம் நீரில் நீந்தியவாறே நீரில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளும்.
அனைத்து உள்ளாட்சி அமைப்புக்களுக்கும் இது அளிக்கப்பட்டிருக்கிறது இதைத் தொடர்ந்து செயல்படுத்துங்கள், அங்கிருந்து குப்பையை அகற்றுங்கள் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. எங்கெல்லாம் நல்ல முறையில் முயற்சி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் 3 டன்கள் முதல் 11 டன்கள் வரை தினமும் குப்பைகள் எடுக்கப்படுகின்றன. அந்த அளவுக்கு அசுத்தமடைவது தடுக்கப்பட்டிருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். இனி வரும் நாட்களில் மேலும் பல இடங்களில் இந்த குப்பை நீக்கி இயந்திரத்தைப் பொருத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும், இதன் பயன்களை கங்கை-யமுனைக்கரையோரமாக வசிக்கும் மக்கள் உடனடியாக அனுபவிப்பார்கள்.

தொழிற்சாலை மாசுகள் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்த காகித தொழிற்சாலை, வடிசாலைகள், சர்க்கரை ஆலைகள் ஆகியவற்றுடன் இணைந்து ஒரு செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரளவு இது செயல்படுத்தப்படவும் தொடங்கி இருக்கிறது. இதன் வாயிலாகவும் நல்ல விளைவுகள் ஏற்படும் என்று என் மனதுக்கு படுகிறது.
உத்தராகண்ட், உத்திர பிரதேச மாநிலங்களில் இருக்கும் வடிசாலைகளிலிருந்து வந்த வெளியேற்றங்கள், கடந்த சில நாட்களாக zero liquid discharge, அதாவது பூஜ்யம் திரவ வெளியேற்றம் என்ற நிலையில் வெற்றி பெற்றிருப்பதாக சில அதிகாரிகள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள், இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. காகித ஆலைகளிலிருந்து black liquorஇன் வெளியேற்றம் கிட்டத்தட்ட முழுமையாக முடிவுக்கு வந்திருக்கிறது.

நாம் சரியான திசையில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே இவை நமக்குக் காட்டுகிறது, ஒரு விழிப்புணர்வு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. கங்கைக் கரைகளில் மட்டுமல்ல, தொலைவான தென்னாட்டைச் சேர்ந்த யாராவது சந்திக்க நேர்ந்தாலும், ஐயா, கங்கை தூய்மையாகி விடுமல்லவா என்று அவசியம் கேட்கிறார்கள். வெகுஜனங்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமான இது, கண்டிப்பாக கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் வெற்றியைக் கொண்டு சேர்க்கும். கங்கையைத் தூய்மைப்படுத்த மக்கள் தானங்கள் அளித்து வருகிறார்கள். மிக அருமையான முறையில் இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனதருமை நாட்டு மக்களே, இன்று ஏப்ரல் மாதம் 24ம் தேதி. இந்தியா இதை பஞ்சாயத் ராஜ் நாளாக கொண்டாடுகிறது. இன்று தான் பஞ்சாயத் ராஜ் அமைப்பு நம் நாட்டில் தொடங்கப்பட்டு, நாளாவட்டத்தில் இந்த அமைப்பு நம் மக்களாட்சி நிர்வாக அமைப்பில், ஒரு மகத்துவம் வாய்ந்த அம்சமாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி பாபா சாஹேப் அம்பேட்கருடைய 125வது பிறந்த நாளை நாம் கொண்டாடினோம், இன்று ஏப்ரல் மாதம் 24ம் தேதி, பஞ்சாயத் ராஜ் நாளைக் கொண்டாடி வருகிறோம்.

இது தற்செயலாக நடந்திருக்கும் ஒரு நல்ல விஷயம், எந்த மாமனிதர் நமக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தாரோ, அவரது பிறந்த நாள் தொடங்கி, அரசியலமைப்புச் சட்டத்தின் மிகப் பெரிய இணைப்பான கிராமங்கள், இவை இரண்டையும் இணைக்கும் கருத்தூக்கமாக இது அமைந்திருப்பதால், இந்திய அரசு மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு ஏப்ரல் மாதம் 14 தொடங்கி ஏப்ரல் மாதம் 24 வரை பத்து நாட்களுக்கு கிராமோதயம் முதல் பாரத உதயம் வரை என்ற இயக்கத்தை செயல் படுத்தியது. ஏப்ரல் மாதம் 14ம் தேதி பாபா சாஹேப் அம்பேட்கரின் பிறந்த நாளின் போது அவரது பிறந்த இடமான MHOWவில் நான் இருந்தேன் என்பதை பெரும் பேறாகவே கருதுகிறேன். அந்த புனிதமான பூமிக்கு அஞ்சலி செலுத்தும் நல்வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்று ஏப்ரல் மாதம் 24, நமது பெரும்பான்மை பழங்குடி சகோதர சகோதரிகள் வாழும் ஜார்க்கண்டில் பஞ்சாயத் ராஜ் நாளைக் கொண்டாட இருக்கிறேன்,
இந்த இயக்கம் மிகப் பெரிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் கிராம அளவில் ஜனநாயக அமைப்புக்களை எவ்வாறு பலப்படுத்துவது? கிராமங்களை எப்படி சுயசார்புடையவைகளாக ஆக்குவது? தங்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படி கிராமங்கள் தாங்களே தீட்டிக் கொள்வது? கட்டமைப்புக்கான மகத்துவம், சமூக கட்டமைப்புக்கான மகத்துவம் ஆகியன இருத்தல், கிராமங்களில் பள்ளிப்படிப்பை அரைகுறையாக நிறுத்துவது தடுக்கப்படல், பிள்ளைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதைத் தடுத்தல், பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தையைப் படிக்க வைப்போம், ஆகியன வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பெண் குழந்தையின் பிறந்த நாள் கிராம விழாவாக கொண்டாடப் பட வேண்டும், சில கிராமங்களில் உணவுதானத் திட்டம் நடைபெற்றிருக்கிறது. இந்தியாவின் பல கிராமங்களில் பலவகையான நிகழ்ச்சிகள் பத்து நாட்களில் நடைபெற்றிருக்கலாம், இது அளவில் குறைவாக இருக்கலாம். மிக அடிப்படையான வழிகளில் புதுமையான முறையில், இத்தனை நாட்களும் கிராமங்களின் நன்மைக்காக, கிராமங்களின் வளர்ச்சிக்காக, ஜனநாயகம் ஆற்றல் பெற, இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட அனைத்து மாநில அரசுகள், கிராமத் தலைவர்கள் ஆகியோருக்கு என் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது, அது தான் இந்திய உதயத்துக்கான உத்திரவாதம். பாரத உதயத்தின் ஆதாரம் கிராம உதயத்தில் தான் இருக்கிறது; ஆகையால் கிராம உதயத்தின் மீது நாம் அனைவரும் கவனம் செலுத்தி வருவோம், விரும்பிய பலன்களை அடைந்தே தீருவோம்.

மும்பையைச் சேர்ந்த ஷர்மிலா (Dhaarpure) தார்புரே அவர்கள் தொலைபேசி வாயிலாக தனது கவலையைத் தெரிவித்திருக்கிறார்: பிரதம மந்திரி அவர்களே, வணக்கங்கள். நான் உங்களிடம் பள்ளி, கல்லூரிக் கல்வி பற்றி வினாவெழுப்ப விரும்புகிறேன். கல்வித் துறையில் கடந்த பல ஆண்டுகளாகவே மேம்பாடு தேவையாக இருந்து வந்திருக்கிறது. போதுமான பள்ளிகளோ கல்லூரிகளோ இல்லாமை அல்லது கல்வித் தரம் இல்லாமை. பிள்ளைகள் தங்கள் கல்வியை நிறைவு செய்தாலும் கூட, பல வேளைகளில் அவர்களுக்கு அடிப்படை விஷயங்கள் பற்றிய அறிவே இல்லாமல் கூட இருக்கிறது. இதனால் நமது குழந்தைகளின் உலகில், ஓட்டத்தில் அவர்கள் எப்போதுமே பின் தங்கி விடுகிறார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன, இந்தத் துறையில் நீங்கள் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? இதைப் பற்றி தயவு செய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். நன்றி.

இந்தக் கவலை இயல்பான ஒன்று தான். இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் தாய் தந்தையருக்கு முதன்மையான கனவு என்று ஒன்று இருக்குமானால், அது குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும் என்பது தான். வீடு, வாகனம் போன்றவை பற்றிய சிந்தனை எல்லாம் பின்னர் தான். இந்தியா போன்ற நாட்டின் மக்கள் மனங்களில், இந்த உணர்வுதான் மேலோங்கி இருக்கிறது, இது தான் மிகப் பெரிய பலம். குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, நன்கு படிக்க வைப்பது. நல்ல கல்வி கிடைக்க வேண்டும், இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் – இது மேலும் அதிகரிக்க வேண்டும், மேலும் விழிப்புணர்வு ஏற்பட வெண்டும். எந்தக் குடும்பங்களில் எல்லாம் இந்த விழிப்புணர்வு இருக்கிறதோ, அதன் தாக்கம் பள்ளிகள் மீதும் ஏற்படுகிறது, ஆசிரியர்கள் மனங்களிலும் ஏற்படுகிறது, நான் இதைப் பெறவே பள்ளி செல்கிறேன் என்று குழந்தைகள் மனதிலும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆகையால் நான் தாய் தந்தையர் அனைவரிடத்திலும் வைக்கும் விண்ணப்பம், குழந்தைகளிடம் விரிவான முறையில், சற்று நேரம் எடுத்துக் கொண்டு பள்ளிகளின் நடைமுறைகள் பற்றி கலந்து பேசுங்கள் என்பது தான்.

ஏதோ ஒன்று மனதில் எழுந்தால், தாங்களே பள்ளிக்கூடம் சென்று ஆசிரியர்களிடம் வினவுங்கள். இந்த விழிப்புணர்வு தான் நமது கல்வி முறையில் இருக்கும் பல குறைபாடுகளைக் குறைக்க வழி வகுக்கும், மக்களின் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும். நமது நாட்டில் அனைத்து அரசுகளும் கல்வி மீது அதிக கவனம் செலுத்தி வந்திருக்கின்றன, ஒவ்வொரு அரசும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகளும் மேற்கொண்டிருக்கிறார்கள். கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டும், கல்வி அமைப்பு விரிவாக்கம் பெற வேண்டும், பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்தப்பட வேண்டும், ஆசிரியர்கள் சேர்க்கப்பட வேண்டும், அதிகபட்ச குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டும் என்றே கணிசமான காலம் நமது மக்களின் கவனம் இருந்து வந்துள்ளது என்பதும் உண்மை தான்.

ஒரு வகையில் கல்வியைப் பரப்பும் முயற்சி முதன்மை பெற்று விளங்கியது, இது அவசியமானதும் கூட. ஆனால் விரிவாக்கத்தின் மீது இருந்த முக்கியத்துவம் எந்த அளவுக்கு இருந்ததோ, அதை விட அதிக முக்கியத்துவம் நமது கல்வி முறையில் மேம்பாடு மீதும் இருப்பது அவசியம். விரிவாக்கத்தின் மிகப் பெரிய பணியை நாம் செய்து விட்டோம். இப்போது நாம் தரமான கல்வி மீது முனைப்பு காட்ட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கம் வாயிலாக இப்போது நல்ல கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கமாக வேண்டும். இது வரை கணக்கு வழக்குகள் எல்லாம் அமைப்புகளைச் சார்ந்தே இருந்தன, இப்போது நாம் விளைவுகள் பற்றிய முனைப்பில் கவனம் செலுத்த வேண்டும். இது வரை பள்ளிகளில் எத்தனை பேர் வந்தார்கள் என்பதன் மீது நமது கவனம் இருந்தது, இப்போது பள்ளி செல்லுதலை விட, கற்றல் மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். பள்ளியில் சேர்த்தல், சேர்த்தல், சேர்த்தல் – இந்த மந்திரம் தான் சதா சர்வ காலம் ஒலித்து வந்தது, ஆனால் இப்போது எந்தப் பிள்ளைகள் பள்ளிகளுக்கு சென்றிருக்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல கல்வி, தரமான கல்வி ஆகியவை அளித்தல் மீது நமது குவிமையம் அமைய வேண்டும். தற்போதைய அரசு ஒதுக்கியிருக்கும் நிதி அளவை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நல்ல கல்வி மீது கவனம் செலுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். நாம் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டாக வேண்டும் என்பது என்னவோ உண்மை தான். ஆனால் 125 கோடி நாட்டு மக்களும் தீர்மானித்து விட்டோம் என்றால், நீண்ட பயணமும் சாத்தியமாகி விடும். ஷர்மிலா அவர்கள் கூறியபடி அடிப்படை மாற்றங்களை நாம் ஏற்படுத்த வேண்டும் என்பது மிகவும் தேவையாக இருக்கிறது.

இந்த முறை நாம் வாடிக்கையான நடைமுறையிலிருந்து விலகி பணியாற்றி இருக்கிறோம் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பட்ஜெட்டிலேயே, பத்து அரசு பல்கலைக்கழகங்கள், பத்து தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு அரசுக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்களித்து, போட்டிகள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் தலை சிறந்த பல்கலைக் கழகமாக ஆக என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைக் கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் வகையில் திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் பல்கலைக் கழகங்களும் உலக அளவில் போட்டி போடும் திறன் படைத்த பல்கலைக் கழகங்களாக ஆக முடியும், ஆகவும் வேண்டும். கல்விக்கான முக்கியத்துவம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் திறன்களுக்கும் இருக்கிறது, அதே போல கல்வியில் தொழில்நுட்பத்தின் பங்கு மகத்தானதாக இருக்கப் போகிறது. தொலைதூரக் கல்வி, தொழில்நுட்பம் – இவை தாம் நமது கல்வியை எளிதாக்கும், சில காலத்திலேயே இதன் பலன்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

நீண்ட காலமாக ஒரு விஷயம் பற்றி மக்கள் என்னிடம் கேட்டு வருகிறார்கள், சிலர் இணையதளமான mygovஇல் எழுதியும் இருக்கிறார்கள், சிலரோ narendramodiappஇல் தெரிவித்திருக்கிறார்கள், பல இளைஞர்கள் எழுதியிருக்கிறார்கள்.
பிரதமர் அவர்களே வணக்கங்கள். நான் பிஜ்னோரிலிருந்து மோனா கர்ணவால் பேசுகிறேன். இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு கல்வியோடு கூட விளையாட்டும் அதிக மகத்துவமானதாக இருக்கிறது. அவற்றில் team spirit, குழு உணர்வு இருத்தல் அவசியம், நல்ல தலைவராக ஆகும் இயல்பும் இருத்தல் வேண்டும், இதன் மூலமாக அவர்களின் முழுமையான வளர்ச்சி ஏற்படும். இதை நான் என் அனுபவம் வாயிலாகக் கூறுகிறேன், ஏனென்றால், நான் பாரத சாரண சாரணியர் அமைப்பில் இருந்திருக்கிறேன், இது என் வாழ்வில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நீங்கள் அதிக அளவில் இளைய சமுதாயத்துக்கு கருத்தூக்கம் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அரசும் கூட அதிக அளவில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், பாரத் சாரண சாரணியர் அமைப்பு ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் எல்லோரும் எனக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளை அளித்திருக்கிறீர்கள், இதைப் பார்த்த பிறகு, உங்களிடம் உரையாடும் முன்பாக, இந்த அமைப்புக்களிடம் நான் பேச வெண்டும் என்று எனக்குத் தோன்றியது. நீங்கள் அளித்த அழுத்தம் காரணமாக, உங்களின் ஆலோசனைகள் காரணமாக, நான் இப்போது ஒரு கூட்டத்தை கூட்டினேன், அதில் தேசிய மாணவர் படையின் தலைவர் இருந்தார், நாட்டு நலப்பணித் திட்டம், சாரண சாரணியர் அமைப்பு, செஞ்சிலுவை சங்கம், நேரு யுவ கேந்திரம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் பங்கெடுத்தார்கள். இதற்கு முன்பாக நீங்கள் எப்போது சந்தித்தீர்கள் என்று அவர்களிடம் வினவிய போது, இல்லை இல்லை, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இப்போது தான் முதன் முறையாக இது போன்றதொரு கூட்டம் நடைபெறுகிறது என்றார்கள் அவர்கள்.

முதன்மையாக இந்த அனைத்து பணிகள் குறித்து என் மீது அழுத்தம் அளித்த அத்துணை இளைய நண்பர்களுக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். இதன் விளைவாகத்தான் இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த சந்திப்பினால் நன்மை விளைந்தது என்று கருதுகிறேன். அதிக அளவு ஒருங்கிணைப்பு இதற்கு தேவைப்பட்டது. அவரவர்கள் தத்தமது முறையில் நிறைய வேலைகளைச் செய்கிறார்கள், ஆனால் சமூக ரீதியாக, ஒருங்கிணைந்த முறையில் நமது பல்வேறு அமைப்புகள் பணியாற்றும் போது மகத்தான விளைவை ஏற்படுத்த முடியும், இல்லையா? அவர்களின் வீச்சு பரந்ததாக இருக்கிறது, பல குடும்பங்களைச் சென்று அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

இவர்களின் இந்த அளவு பரவலாக்கம் எனக்கு மன நிறைவை அளித்தது. அவர்களிடம் அதிக உற்சாகம் காணப்பட்டது, ஏதாவது செய்தாக வேண்டும். நானே ஒரு காலத்தில் தேசிய மாணவர் படையில் கேடட்டாக இருந்திருக்கிறேன், இவை போன்ற அமைப்புக்கள் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கிறது என்பதை நான் அறிவேன், ஒரு தேசிய கண்ணோட்டம் ஏற்படுகிறது என்பது உண்மை. என் சிறுபிராயத்தில் நான் நன்மைகளை அனுபவித்தேன், இந்த அமைப்புக்களில் ஒரு புதிய சக்தியை நிரப்ப வேண்டும், புதிய ஊக்கத்தை அளிக்க வேண்டும். இந்த முறை நான் அவர்கள் முன்னிலையில் சில விஷயங்களை வைத்திருக்கிறேன்.

இந்தப் பருவ காலத்தில், நமது இளைஞர்களும், அனைத்து அமைப்பினரும் நீர் சேமிக்கும் மகத்தான பணியில் ஏன் ஈடுபடக் கூடாது என்று வினவினேன். எத்தனை வட்டங்கள், எத்தனை மாவட்டங்களில் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதை நம்மால் தடுக்க முடியும். எப்படி திறந்த வெளி மலஜலம் கழிப்பதிலிருந்து விடுதலை அளிக்க முடியும்? நாட்டை இணைக்க எந்த மாதிரியான திட்டங்களை ஏற்படுத்தலாம், அனைத்து அமைப்புக்களின் பொதுவான இளைஞர்கள் பாடல் என்னவாக இருக்க முடியும்? என அவர்களிடம் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம்.
நம்மிடையே இளைஞர்களுக்கான பலவகையான அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றின் செயல்முறை, திட்டங்கள் ஆகியவற்றில் என்ன மாதிரியான புதிய விஷயங்களை நம்மால் இணைக்க முடியும் என்பது குறித்து நீங்கள் எனக்கு மிகச் சரியான ஆலோசனை வழங்குங்கள் என்று நான் உங்கள் அனைவரிடமும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். என் narendramodiappஇல் நீங்கள் எழுதினால், நான் அதை சரியான இடத்துக்கு கொண்டு சேர்க்கிறேன், இந்த சந்திப்புக்குப் பிறகு, அமைப்புக்களின் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும் என்று நான் கருதுகிறேன், நீங்களுமே உங்களை அவர்களோடு இணைத்துக் கொள்ள விரும்புவீர்கள், இந்த மாதிரியான ஒரு நிலை ஏற்படும் என்று நான் நம்புகிறேன்.
எனதருமை நாட்டு மக்களே, இன்று நாமனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் விஷயம் பற்றி நான் பேச வேண்டி இருக்கிறது. இதை நான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகவும் பார்க்கிறேன். எந்தக் கட்சி எத்தனை எரிவாயு சிலிண்டர்களை அளிக்கும் என்பது கடந்த பல தேர்தல்களின் விவாதப் பொருளாக அமைந்திருந்தது என்ற அளவில், நமது நாட்டின் அரசியல் நிலைமை இருந்தது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். 12 சிலிண்டரா இல்லை 9 சிலிண்டரா? இது தான் மிகப் பெரிய தேர்தல் விஷயமாக இருந்து வந்தது. ஒவ்வொரு அரசியல் கட்சியும், மத்தியதட்டு மக்களை தேர்தல் கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும் என்று எண்ணியதால், எரிவாயு சிலிண்டர் மிகப் பெரிய விஷயமாக ஆனது. மற்றொரு புறம், மானியங்களைக் குறையுங்கள் என்று பொருளாதார வல்லுனர்கள் அழுத்தம் அளித்து வந்தார்கள், இதன் காரணமாக பல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை மானியக் குறைப்பு பற்றிய ஆலோசனைகளையும் முடிவுகளையும் அளித்தன. இந்தக் குழுக்கள் செயல்பாட்டில் பல கோடி ரூபாய் செலவானது. ஆனால் நிலைமையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இது அனைவருக்கும் பொதுவான அனுபவமாக விளங்கியது. இதைத் தாண்டி யாருமே சிந்திக்கவில்லை.
இன்று நாட்டுமக்களே, உங்கள் முன்பாக கணக்கு காட்டுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் 3வது வழிமுறையை மேற்கொண்டேன், மக்களின் மீது நம்பிக்கை வைக்கும் பாதை தான் அது. சில சமயங்களில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் எங்களைப் போன்றவர்கள் தங்களை விட, தங்களைச் சார்ந்தவர்கள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும். நான் மக்கள் மீது நம்பிக்கை வைத்தேன், நீங்கள் ஓராண்டு செலவினமாக 1500 முதல் 2000 ரூபாய் வரை ஏற்றுக் கொள்ள முடியுமானால், நீங்கள் ஏன் எரிவாயு மானியத்தைத் துறக்கக் கூடாது, இது ஏதாவது ஒரு ஏழைக்கு உதவியாக இருக்குமே என்று இயல்பான வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் இன்று என் நாட்டு மக்கள் மீது கொண்ட பெருமிதத்தால் என் நெஞ்சு விம்முகிறது. ஒரு கோடி மக்கள், தாமே முன்வந்து தங்கள் எரிவாயு மானியத்தைத் துறந்திருக்கிறார்கள், இந்த ஒரு கோடிப் பேர்கள் அனைவருமே சீமான்கள் அல்ல. இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற குமாஸ்தாக்கள், விவசாயிகள், சிறிய கடை வைத்திருப்பவர்கள் என இவர்களில் மத்திய தட்டு மக்கள், கீழ் மத்திய தட்டு மக்கள் இருக்கிறார்கள்; இவர்கள் இந்த மானியத்தைத் துறந்திருக்கிறார்கள்.
இரண்டாவது சிறப்பைப் பாருங்கள், இந்த மானியத்தை அவர்கள் மொபைல் app மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ, தொலைபேசியில் மிஸ்ட் கால் தருவதன் மூலமாகவோ, பல வழிகளில் செய்திருக்கலாம். ஆனால் கணக்குப் பார்த்தால், இந்த ஒரு கோடிப் பேர்களில் 80 சதவீதத்துகும் அதிகமானோர் தாங்களே விநியோகஸ்தர்களிடம் சென்றார்கள், வரிசையில் நின்றார்கள், எழுத்து வடிவத்தில் கொடுத்து தங்கள் மானியத்தைத் துறந்தார்கள்.

எனதருமை நாட்டு மக்களே, இது சிறிய விஷயம் அல்ல. அரசு ஏதோ ஒரு வரிவிதிப்பில் சற்று விலக்கு அளித்தால், வாரம் முழுவதும் தொலைக்காட்சிகளிலும், செய்தித் தாள்களிலும் அந்த அரசுக்கு பாராட்டு மழை வந்து குவியும். ஒரு கோடி குடும்பங்கள் மானியத்தைக் கைவிட்டிருக்கின்றன, பார்க்கப் போனால் நம் நாட்டில் மானியங்கள் ஒரு வகையில் உரிமையாகவே ஆகியிருக்கின்றன, அப்படிப்பட்ட மானியத்தைக் கைவிட்டிருக்கிறார்கள். நான் முதன் முதலாக, அந்த ஒரு கோடிக் குடும்பங்களுக்கும் என் பல நூறு வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகிறேன். ஏனென்றால் இவர்கள் அரசியல் தலைவர்களை புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஒரு நிகழ்வே கூட, நாட்டின் பொருளாதார வல்லுனர்களை புதிய கண்ணோட்டத்தில் சிந்திக்கும் கட்டாயத்துக்குத் தள்ளியிருக்கிறது. பலவகையான சாத்தியக்கூறுகளை முன்வைக்கும் உலகின் பொருளாதார வல்லுனர்களுக்குமே கூட, இது அவர்களின் எண்ணப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிகழ்வாக அமைந்திருக்கிறது. இது பற்றி ஏதாவது ஒரு கட்டத்தில் சிந்தித்தாக வேண்டும். ஒரு கோடிக் குடும்பங்கள் மானியத்தைக் கைவிடுவது என்பதும், அவர்களுக்கு பதிலாக ஒரு கோடி ஏழைக் குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பது என்பதும், ஒரு கோடிக் குடும்பங்கள் மானியத்தைத் துறந்ததால் மிச்சமாகும் நிதி என்பதும், மேலோட்டமாகப் பார்க்கும் போது சாதாரணமான விஷயமாகத் தோன்றினாலும், மக்கள் மீது நம்பிக்கை கொண்டு செயலாற்றும் போது எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதையே காட்டுகிறது, இது தான் அசாதாரணமான விஷயம். நாம் எங்கெல்லாம் செல்கிறோமோ, அங்கெல்லாம் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கண்டிப்பாக ஒரு விஷயத்தையாவது கூற வேண்டும் என்று நான் அனைத்து அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் சிந்தித்துக் கூட பார்க்க முடியாத பலன்கள் உங்களுக்குக் கிட்டும். நாம் இந்தத் திசையில் பயணிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 3ம் நிலை, 4ம் நிலைப் பணியாளர்களுக்கு ஏன் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும், அவர்களின் தேர்வு மதிப்பெண்கள் மீது நாம் ஏன் நம்பிக்கை வைக்கக் கூடாது என்று ஏதோ என் மனதில் எண்ணம் உதித்தது. சில இரயில் தடங்களில் டிக்கட் பரிசோதகர்கள் இருக்க மாட்டார்கள் என்று அறிவிப்பு செய்யலாமே என்று கூட என் மனதில் எண்ணம் எழுகிறது. செய்து தான் பார்க்கலாமே! நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைப்போமே! இப்படி பல பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். ஒரு முறை நாம் நாட்டு மக்கள் மீது நம்பிக்கை வைத்து விட்டால், அபாரமான பலன்கள் கிட்டும். ஏதோ என் மனதுக்குப் பட்டதைக் கூறி வைத்தேன், அவ்வளவு தான். இதை யாரும் அரசின் விதிமுறையாக ஆக்க முடியாது. ஆனால் சூழலை என்னவோ ஏற்படுத்தலாம். அல்லவா? இந்த சூழலை ஏதோ அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தவில்லை, நாட்டின் ஒரு கோடி குடும்பங்கள் ஏற்படுத்தி இருக்கின்றன.

ரவி என்ற ஒருவர் எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார் – good news everyday, தினமும் நல்ல சேதி. ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல விஷயம் பற்றித் தெரிவிக்க வேண்டும் என்று உங்கள் அதிகாரிகளுக்குக் கூறுங்கள். ஒவ்வொரு செய்தித் தாளிலும், ஊடகத்திலும் மோசமான செய்தி தான் breaking newsஆக தெரிவிக்கப்படுகிறது. 125 கோடி மக்கள் கொண்ட நமது நாட்டில் எந்த ஒரு நல்ல விஷயமும் நடப்பதில்லையா? தயவு செய்து இந்த நிலையை மாற்றுங்கள் என்று ரவி அவர்கள் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரவி அவர்கள் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், அவர் என் மீது கோபம் கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன், நிலைமை மீது கோபம் கொண்டிருக்கிறார். இந்தியாவின் காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் APJ Abdul Kalam அவர்கள் செய்தித் தாள்களின் முதல் பக்கத்தில் நல்ல செய்திகளையே அச்சிடுங்கள் என்று எப்போதும் கூறி வந்திருக்கிறார். சில நாட்கள் முன்பாக ஒரு செய்தித் தாள் எனக்கு கடிதம் கூட அனுப்பி இருந்தது. நாங்கள் திங்கட்கிழமையன்று ஒரு மோசமான செய்தியையும் கூட வெளியிட மாட்டோம், ஆக்கபூர்வமான செய்தியையே வெளியிடுவோம் என்று தெரிவித்திருந்தார்கள். இப்போதெல்லாம் சில மின்னூடகங்கள் ஆக்கபூர்வமான செய்திகளுக்கென்றே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இருப்பதை நான் பார்க்கிறேன். ஆக்கபூர்வமான செய்திகளுக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பது என்னவோ உண்மை தான். நல்ல செய்திகள், உண்மையான செய்திகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று எல்லோரும் உணர்கிறார்கள். ஒரு பிரபலமான நபர் என்ன தான் சிறப்பான தகவலை அளித்தாலும், அதை எத்தனை அழகான சொற்கள் வாயிலாகத் தெரிவித்தாலும், அருமையான முறையில் விளக்கினாலும் அதை விட அதிக பலன் நல்ல செய்தியின் மூலம் கிடைக்கிறது. நல்ல செய்தி நல்ல செயல்களுக்கு கருத்தூக்கமாக அமைகிறது. எந்த அளவுக்கு நாம் நன்மைக்கு வலு கூட்டுகிறோமோ, அந்த அளவுக்கு தீயவைகளுக்கான இடம் குறைகிறது என்பது சத்தியம். நாம் தீபத்தை ஏற்றினால், இருள் தாமாகவே விலகி விடும், கண்டிப்பாக விலகும். அரசு தரப்பில் Transforming India என்ற பெயரிலான ஒரு இணைய தளத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் ஆக்கபூர்வமான செய்திகள் வெளிவருகின்றன. அரசின் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் மட்டுமல்ல, மக்களின் நல்ல பணிகளும் இடம் பெறுகிறது, இந்த portalஇல் நீங்களும் கூட ஏதாவது நல்ல செய்தி இருந்தால், அனுப்பி வைக்கலாம். நீங்களும் அதில் பங்களிப்பு நல்க முடியும். ரவி அவர்களே, நீங்கள் நல்ல ஆலோசனையை அளித்திருக்கிறீர்கள். ஆனால் தயவு செய்து என் மீது கோபம் கொள்ளாதீர்கள். நாமனைவருமாக இணைந்து ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவோம், ஆக்கபூர்வமானவற்றைப் பேசப் பழகுவோம், ஆக்கப்பூர்வமானவற்றைக் கொண்டு செல்லும் முயற்சிகளில் பங்கெடுப்போம்.

கும்ப மேளா நமது நாட்டின் சிறப்பு. கும்ப மேளா சுற்றுலா ஈர்ப்பு மையமாக ஆக முடியும். நதிக் கரையில், பல நாட்களுக்கு கோடிக்கணக்கான மனிதர்கள் வந்து குழுமுகிறார்கள் என்பது உலக மக்களில் பல பேர்களுக்குத் தெரியாமலே இருந்துள்ளது. அமைதியான மனதோடு, அமைதி நிறைந்த சூழலில் விழா நிறைவடைகிறது. இந்த நிகழ்வுகள் அமைப்பு ரீதியாக, நிகழ்ச்சி மேலாண்மைக் கோணத்தில், மக்களின் பங்கெடுப்பு என்ற வகையில், மிகப் பெரிய தரமட்டங்களை சாதிக்கிறது. சிம்ஹஸ்த கும்ப மேளா தொடர்பான படங்களை பலர் தரவேற்றம் செய்து வருவதை கடந்த இரு நாட்களாக நான் கவனித்து வருகிறேன். இந்திய அரசின் சுற்றுலாத் துறை, மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள் இதையொட்டி புகைப்படப் போட்டியை நடத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மிகச் சிறப்பான புகைப்படங்களை நீங்கள் தரவேற்றம் செய்யுங்கள் என்று மக்களிடம் கேட்டுக் கொள்ளலாம். சூழலில் பெரிய மாற்றத்தை நாம் காண முடியும், அதே வேளையில் கும்ப மேளா விழாவின் போது எத்தனை வேறுபட்ட விஷயங்கள் நடக்கின்றன என்று மக்களுக்கும் தெரிய வரும். இதைக் கண்டிப்பாக செய்ய முடியும். இடையில் மத்திய பிரதேச முதல்வர் என்னை சந்தித்த போது, தூய்மையின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக என்னிடம் தெரிவித்தார். தூய்மை என்பது இந்த விழாவின் போது மட்டுமல்ல, அங்கிருந்து தூய்மை பற்றிய கருத்தை மக்கள் தங்கள் மனங்களில் சுமந்து செல்ல வேண்டும் என்பதே நோக்கம். கும்ப மேளா சமயம், ஆன்மீகம் தொடர்பான ஒரு விழா என்பதை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அதுவே கூட ஒரு சமுதாய வாய்ப்பாக ஆக முடியும் என்று நான் கருதுகிறேன். இதை நல்ல பழக்கங்கள் ஏற்படும் வாய்ப்பாகவும் ஆக்க முடியும். அங்கிருந்து நல்ல தீர்மானங்கள், நல்ல பழக்கங்கள் ஆகியவற்றை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கும் காரணியாகவும் அதை உருமாற்ற முடியும். தண்ணீரின் மீது எப்படி நமது நேசத்தை அதிகரிக்கலாம், நீரை எப்படி நாம் போற்றலாம், தண்ணீர் சேகரிப்பு தொடர்பான செய்தியை ஆகியவற்றைப் பரப்ப கும்ப மேளாவை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனதருமை நாட்டு மக்களே, பஞ்சாயத்து ராஜின் இந்த மகத்துவபூர்வமான தினத்தன்று எனது அளப்பரிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போலவே இப்போதும் உங்கள் மனதின் குரல்களோடு எனது மனதின் குரலும் பிரிக்க முடியாதவையாக ஒலித்தன. இது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. மீண்டும் ஒரு முறை பலப்பல நன்றிகள்!!