Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே டென்மார்க் நாட்டின் பொறுப்பு  பிரதமரை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.


பிரதமர் திரு நரேந்திர மோடி, டென்மார்க் நாட்டின் பொறுப்பு பிரதமர் திருமதி மெட்டே ஃப்ரெடெரிக்சனை மூன்றாவது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே இன்று ஆஸ்லோவில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் இந்தியா–டென்மார்க் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்து, கூட்டு செயல் திட்டங்களில் எட்டப்பட்ட முன்னேற்றத்திற்கு திருப்தி தெரிவித்தனர். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறைகளில் இணைந்து செயல்படுவதையும், இரு நாடுகளிலும் பசுமை மாற்றத்தை முன்னெடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதையும் முக்கியமாகக் கொண்ட இந்தியா–டென்மார்க் “பசுமை உத்திசார் கூட்டாண்மை” யின் முன்னேற்றத்தை இரு தரப்பும் வரவேற்றனர்.

2020-ம் ஆண்டு இந்தக் கூட்டாண்மை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் உயர்மட்டப் பரிமாற்றங்களை நினைவுகூர்ந்த தலைவர்கள், புதிய மற்றும் உருவெடுத்து வரும் தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு, மேம்பட்ட ஆராய்ச்சி, புத்தொழில்  முயற்சிகள் மற்றும் கல்வி பரிமாற்றங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தீர்மானித்தனர். பாதுகாப்புத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு  தொடர்பான ஒத்துழைப்புகளையும் அவர்கள் விவாதித்தனர். மேலும், குஜராத்தின் கிப்ட் நகரில் டென்மார்க் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை  ஏற்படுத்துமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்திற்கு பசுமைத் தீர்வுகளை வழங்கும் டென்மார்க் தொழில்நுட்பங்களை இந்தியா வரவேற்கத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். நீர்வளத் துறையில், வாராணசியில் “தூய்மையான நதிகளுக்கான ஸ்மார்ட் ஆய்வகம்” அமைப்பதில் இந்தியா மற்றும் டென்மார்க் இணைந்து மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியை தலைவர்கள் பாராட்டினர். இது இந்திய அரசு, இந்திய தொழில்நுட்பக் கழகம் – பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் டென்மார்க் அரசு ஆகியவற்றின் தனித்துவமான முத்தரப்பு முயற்சியாகும். இரு தலைவர்களும் மக்கள் புலம் பெயர்வு மற்றும் இயக்க ஒத்துழைப்பு  குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

பரஸ்பர நலனுக்குரிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக டென்மார்க் மேற்கொண்டு வரும் பதவிக்காலம் வெற்றியடைய பிரதமர் மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

(Release ID: 2262928)

****

TV/PKV/SH