பி.எம்.இந்தியா
ஆசிய பசிஃபிக் வணிக ஒப்பந்தத்தின் நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டிருந்த வரிச்சலுகை பரிமாற்றத்தில் முன்னுரிமை அளவின் அடிப்படையில் கையெழுத்திட இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய பசிஃபிக் வணிக ஒப்பந்தம் (முன்னர் பாங்காக் ஒப்பந்தம் என இது அழைக்கப்பட்டது) என்பது ஆசியா மற்றும் பசிஃபிக் பகுதிகளில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் முனைப்பால் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஆசிய பசிஃபிக் பகுதிகளில் உள்ள வளரும் நாடுகள் தங்களுக்குள் வரிச்சலுகை செய்து கொண்டு வணிகத்தை வளர்த்துக் கொள்ள முடியும். தற்போது இதில் உறுப்பினர்களாக/பங்கெடுப்பவர்களாக வங்காள தேசம், இந்தியா, சீனா, இலங்கை, கொரியக் குடியரசு, லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசு ஆகிய ஆறு நாடுகள் இருக்கின்றன.
இவை விருப்பத்தின் அடிப்படையில் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் ஆகையால் இங்கே வரிச்சலுகை, பொருட்கள் ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவை அவ்வப்போது நடக்கும் வணிகப் பேச்சுவார்த்தைகளின்போது அதிகரிக்கப்படும். இதுவரை மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. மூன்றாவது சுற்று வரை இந்தியா கிட்டத்தட்ட 570 கட்டண வரைவுப் பட்டியலை 23.9 சதவீத முன்னுரிமை அளவின் அடிப்படையிலும், வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு கூடுதல் 48 கட்டண வரைவுப் பட்டியலை 39.7 சதவீதம் வரையிலும் வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளது. மூன்றாவது சுற்றில் எல்லா நாடுகளும் சேர்ந்து 4,270 பொருட்களை சுமார் 27.2 சதவீத முன்னுரிமை அளவீட்டில் சலுகைகள் பெறுகின்றன.
வரிச்சுமை உள்ள இந்திய பொருட்களில் கிட்டத்தட்ட 28.01% பொருட்களுக்கு சராசரியாக 33.45% அளவுக்கு முன்னுரிமை அளவின்படி சலுகைகள் கொடுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்த்தின் கீழ் சலுகைகள் இன்னும் அதிகரிக்க இது வகை செய்யும். ஏழாவது ஆசிய பசிஃபிக் வணிக ஒப்பந்தத்தின் ஏழாவது உறுப்பினர் நாடாக மங்கோலியாவை சேர்த்துக் கொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பொருட்களின் உற்பத்தி இடம் தொடர்பான விதிகள் சார்ந்த திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
மேற்படி முடிவுகள் எல்லாம் விரைவில் நடைபெற இருக்கும் ஆசிய பசிஃபிக் வணிக ஒப்பந்தத்தின் நான்காவது மந்திரிசபைக் குழுவின் நான்காவது சந்திப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.