Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இசைவுத்தீர்ப்பு மற்றும் அமலாக்கத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

இசைவுத்தீர்ப்பு மற்றும் அமலாக்கத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதற்கான  தேசிய நிறுவனத்தின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


இந்தியாவின் தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் அவர்களே,

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் மாண்புமிகு நீதிபதிகளே,

சிறப்புமிகு விருந்தினர்களே, நண்பர்களே,

பெரியோர்களே, தாய்மார்களே,

இந்த உலகளாவிய மாநாட்டை ஏற்பாடு செய்த நித்தி ஆயோக்கை முதலில் பாராட்டி எனது உரையை தொடங்குகிறேன்.

இசைவு தீர்ப்பு என்பதற்கு மகாத்மா காந்தி பின்வரும்   எளிய விளக்கத்தை அளித்தார்;

வழக்கறிஞர் தொழிலின் உண்மையான நடைமுறையை நான் கண்டறிந்தேன்.  மனிதர்களின் சிறந்த பண்பை கண்டுபிடித்து அவர்களின் இதயத்தில் இடம்பிடிக்கும் கலையை நான் கற்றுக்கொண்டேன்.  ஒரு வழக்கறிஞரின்  உண்மையான செயல்பாடு  தாவாவில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் ஒன்றுபடுத்துவதுதான் என்று நான் புரிந்துகொண்டேன்.  இந்தப் புரிதல் எனக்குள் ஆழமாக பதிந்ததால் எனது இருபது ஆண்டுவழக்கறிஞர் தொழிலில் தாவாவுக்குள்ளான  நூற்றுக்கணக்கான வழக்குகளில்  தனிப்பட்ட முறையில் சமரசம் செய்து வைத்திருக்கிறேன்.  இந்த முயற்சியால் எனக்கு எந்த இழப்பும் இல்லை, பணத்தையோ என் ஆன்மாவையோ நான் இழக்கவில்லை.

நண்பர்களே,

இந்தியா தற்போது வேகமான பொருளாதார வளர்ச்சியுள்ள நாடாக திகழ்ந்து அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் தலைசிறந்த ஒன்றாக திகழ்கிறது. உலக பொருளாதாரத்தில் நாம் ஒளிர்ந்து காணப்படுகிறோம் ஜனநாயகம், மக்கள் அமைப்பு, தேவை என்ற இந்தியாவின் அடிப்படை அம்சங்களின் பலன் இது.  இந்த அம்சங்களை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நிறுவனங்களின் நீண்டகால முதலீடு காரணமாக உருவாகும் வேலைவாய்ப்பு, நீடித்த பொருளாதார வளர்ச்சி மூலமாகவே இது சாத்தியமாகும்.

நமது உள்நாட்டு தேவை சிதைந்து கிடக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறுவிதமாக சரக்கு மற்றும் சேவைவரி விதிக்கப்படுவது செலவை அதிகரிக்கிறது. இதன்காரணமாக மாநிலங்களுக்கிடையிலான வர்த்தக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. தேசிய அளவில் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கவே சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை கொண்டுவருகிறோம்.  இதன்காரணமாக உள்நாட்டு தேவை ஊக்குவிக்கப்பட்டு இந்திய தொழில்களுக்கு வாய்ப்பு பெருகி வேலை வாய்ப்பு உருவாகும்.

இந்தியா இப்போது டிஜிட்டல் புரட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் புரட்சி இந்திய சமுதாயத்தில் பொதுவாகவும் கிராமப்புறங்களை சிறப்பாகவும் பொருளாதாரத்துடன் இணைக்கிறது.  இதன்மூலம் ஊரகப் பொருளாதாரம் ஊக்குவிக்கப்பட்டு இந்திய பொருளாதாரத்தை உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும்.

வர்த்தகத்தில் அறிமுகமாகும் புதிய கண்டுபிடிப்புகளும்  செயலி பயன்பாடு மூலம் உருவாகும் தொழில்களும் இந்தியர்களிடம் தொழில்முனைவுக்கான உணர்வை ஊட்டியுள்ளது.  கடந்த காலத்தில் வேலை தேடியவர்கள் இப்போது வேலைகளை உருவாக்குவோராக மாறியிருக்கிறார்கள். சட்டம் தொடர்பான தொழில்களும் டிஜிட்டல் உலகுக்கு மாறிவருகிறது. நூலகத்தில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய,  வழக்குக்குத் தேவையான விவரங்களை வழக்கறிஞர்கள் கையிலிருக்கும் மொபைல் தொலைபேசியில் ஒரு பொத்தானை அழுத்துவதன்  மூலமாகவே பெற்றுவிட முடியும்.

நண்பர்களே,

இந்திய சந்தையில் சட்டத்தின் ஆட்சி இருக்கவேண்டும் என்று தொழில் முனைவோர் எதிர்பார்க்கிறார்கள்.  தன்னிச்சையாக விதிமுறைகள் மாற்றப்பட மாட்டாது என்ற  உறுதி அவர்களுக்கு தேவைப்படுகிறது.  மேலும், வர்த்தக ரீதியாக எழும் தாவாக்கள் திறம்பட தீர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு.  இதற்கு துடிப்பான இசைவுத்தீர்ப்பு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட சிறந்த சட்ட வடிவம் தேவை.

இந்த நோக்கத்துடன்தான் நாம் தொலைநோக்கு பார்வையுடன் சட்டத்தில்  சீர்திருத்தங்களை தொடங்கியிருக்கிறோம்.  ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.  இதற்காகத்தான் 2016 ம் ஆண்டு திவால் மற்றும் நொடித்துப்போதல் தொடர்பான ஒருங்கிணைந்த சட்டங்களை வகுத்திருக்கிறோம், தேசிய கம்பெனிகள் சட்ட நடுவர் மன்றத்தை அமல்படுத்தியிருக்கிறோம்.  சட்டப்பூர்வமான பணக்கொள்கை குழுவை உருவாக்கி பண்டங்களுக்கும் செக்யூரிட்டி சந்தைக்கும் இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

நொடித்துப்போவது பற்றிய விதிகளை சீரமைக்கும் வகையிலும் மாறிவரும்  கடன் வசதி சூழ்நிலையில்  தொழில்கள் சிரமமின்றி நடக்க  ஏதுவாகவும்   கடனை மீட்பதற்கான சர்ஃபேசி, டி.ஆர்.டி சட்டங்களில் இந்த ஆண்டு திருத்தம் செய்திருக்கிறோம்.

தாவாக்களுக்கு தீர்வுகாண திறம்பட்ட முறை இருந்தால்தான் சட்ட சீர்திருத்தம் தேவையான பலனை அளிக்கும்.  இந்திய அரசியல் சட்டத்தில் நீதித்துறை என்பது சுதந்திரமானது.  சாதாரண மக்களும், தொழில்களும் நீதித்துறைமீது அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள்.  நீதித்துறையில் கட்டமைப்பையும் நிர்வாகத்தையும் மேம்படுத்த எங்கள் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தொழில்களில் ஏற்படும் தாவாக்களுக்கு துரிதத்தீர்வு காணும் வகையில் தொழில் நீதிமன்றங்களையும்,  .  உயர்நீதிமன்றங்களில்  வர்த்தகப்பிரிவு, வர்த்தக மேல்முறையீட்டுப் பிரிவை உருவாக்கும் வகையில் 2015 உயர்நீதிமன்ற சட்டம் வகுத்துள்ளோம்.  நாடுமுழுவதும் மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் பற்றிய விவரங்களை பதிவு செய்வதற்காக தேசிய நீதித்துறை புள்ளியியல் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் மின்னணு முறையில் பதிவு செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நடுவர் மன்றங்களை ஒருங்கிணைப்பதற்கான உத்தியும் வகுக்கப்படுகிறது.  தற்போது நடுவர் மன்ற முறையில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு கண்டு அதனை எளிமையாக்க இது உதவும்.

தாவாக்களுக்கு தீர்வு காண இசைவான தீர்ப்பு, மத்தியஸ்தம், சமரசம் உள்ளிட்ட துடிப்பான மாற்றுவசதியை ஏற்படுத்துவது அவசியமாகிறது.  முதலீட்டாளர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் இது  கூடுதல் வசதியை அளிக்கும்.

இசைவான தீர்ப்பு மூலம் தாவாக்களுக்கு தீர்வு காண்பது நமக்கு புதிதல்ல.  பண்டைக்கால இந்தியாவில் தாவாக்களுக்கு தீர்வு காண பல முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.  குலானி என்ற கிராமசபை, ஸ்ரேனி அல்லது நகரசபை, புகா அல்லது சட்டமன்றம் ஆகியவை இதில் ஈடுபட்டுள்ளன.  அதேபோல் வணிக ரீதியான தாவாக்கள் பெரியோர்களாலும் வர்த்தக அமைப்புகளாலும் தீர்க்கப்பட்டுள்ளன.

இப்போது தொழில் தாவாக்களில் சட்ட நிபுணர்களின் உதவியை கார்ப்போரேட் அமைப்புகளும் நிதிநிறுவனங்களும் எதிர்பார்க்கிறார்கள்.  ஏதேனும் தாவா எழுமானால் நீதிமன்றத்துக்கு செல்லாமலேயே துரிதமாக தீர்வு காண கார்ப்போரேட் அமைப்புகள் விரும்புகின்றன.  இதற்கு இசைவுத்தீர்ப்பில் நிபுணத்துவம் கொண்ட வழக்கறிஞர்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.  நீதிமன்றம் அல்லாத இந்த மாற்ற தீர்வு முறைகள் தனி நபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான உறவு கெடாமல் பாதுகாக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவை ஆசியாவில் இசைவுத்தீர்ப்பு மையங்களாக மலர்ந்து வருகின்றன.  தொழில் நடத்துவதற்கான மையங்களாகவும் எளிதாக  தொழில் துவங்குவதற்கு ஏற்ற இடமாகவும் அவை வளர்ந்துள்ளன.  இதன்படி தொழில்கள் துவங்குவதற்கான முறையை எளிமைப்படுத்துவதற்கு தரமான இசைவுத்தீர்ப்பும் அவசியம் என்பது உறுதியாகிறது.  அதை சாதிக்க எங்கள் அரசு உறுதி கொண்டுள்ளது.

நண்பர்களே,

தொழில்நிறுவனங்களின் தாவாக்களை அவர்கள் மட்டத்திலேயே தீர்வு காண்பதற்கேற்ற துடிப்பான முறையை உருவாக்குவதே அரசின் முன்னுரிமை திட்டமாக உள்ளது.  இசைவுத்தீர்ப்பு மற்றும் சமரசத்துக்கான சட்டத்தில் அண்மையில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இது இசைவுத்தீர்ப்பு முறையில் சிக்கலை போக்கி எளிதாக்க உதவுகிறது.  நிறுவனங்களுக்கிடையே தாவாக்களுக்கு தீர்வு காண ஐ.நா  ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நமது சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இயல்பான சூழ்நிலையில் 12 மாதங்களுக்குள் தீர்வு காண்பதை இசைவுத்தீர்ப்பு முறை உதவுகிறது.  விரைவாக தீர்வு வேண்டுமானால் 6 மாதத்திற்
குள் பெற முடிவும். இசைவு தீர்ப்பாளரை நியமிப்பதற்கு நீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் காலம் 6 மாதம்தான். தீர்ப்பு வழங்குவதில் ஏற்கனவே இருந்த தடைகள் இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், வழங்கப்படும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படுமானால் ஓராண்டுக்குள் நீதிமன்றம் முடிவை அறிவித்தாக வேண்டும் என்பது புதிய சட்டம்.  இசைவுத்தீர்ப்பை சர்வதேச நடைமுறைகள் அடிப்படையில்தான் நீதிமன்றம் நிராகரிக்க முடியும்.  சர்வதேச நடைமுறைகளை ஒட்டி நமது இசைவுத்தீர்ப்பு முறைகளை கொண்டுவரும் வகையில் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.  இதன்மூலம் தாவாக்களுக்கு இசைவுத்தீர்ப்பு காண்பதில் நாம் முன்னோடியாக விளங்குவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.  பெரிய வாய்ப்புகள் வரும்போது சவால்களும் வருவது இயற்கை.  நேத்திமிகு, தரமான, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தீர்ப்பாளர்கள் கிடைப்பது ஒரு சவால்.  நடுநிலை தவறாமல் உரிய நேரத்தில் அதிக செலவின்றி இசைவுதீர்ப்பு அளிப்பது மற்றொரு சவால்.

நண்பர்களே,

இந்தியாவில் தலைசிறந்த வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பஞ்சமில்லை.  பல்வேறு துறைகளிலும் இசைவுத் தீர்ப்பளிக்க பொருத்தமான ஓய்வு பெற்ற நீதிபதிகள், பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் நமது நாட்டில் ஏராளம்.  இத்தகைய அனுபவமிக்க தீர்ப்பாளர்கள், வழக்கறிஞர்கள் சேவையால் இந்தியாவில் பொருளாதார நலன்கள் பேணப்படும்.  இதற்கு நமது சட்டக்கல்வி முறை விரிவாக்கப்பட வேண்டும்.  இசைவுத்தீர்ப்பு முறையில் தனித்தன்மை பெற்ற வழக்கறிஞர் அமைப்புகள் உருவாக வேண்டும். நியாயமான செலவில், சர்வதேச தரத்தில், நிபுணத்துவத்துடன் இசைவுத்தீர்ப்பு அளிக்கும் மன்றங்கள் தேவை.  இதற்கு சர்வதேச அளவில் அங்கீரிக்கப்பட்ட நிறுவனங்களை வரவேற்கிறோம்.

நீதித்துறையில் இசைவுத்தீர்ப்பாயங்களும் செயல்படுவதற்கான வழிமுறைகளுக்கு உதவுவது பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.  சமரசம் செய்வது அந்த முறையில் ஒன்று, அதற்கான வாய்ப்பு நமது நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

நண்பர்களே

இத்தகைய மாற்று தீர்வு முறை ஒன்று இன்றைய இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  இந்தியாவை உலகளவில் இசைவுத்தீர்ப்பு மையமாக நாம் மேம்படுத்த வேண்டும். சட்டமேதை ரோஸ்கோ பவுண்டு  ஒருமுறை குறிப்பிட்டது போல சட்டம் நிலையானதாக இருக்கவேண்டுமேயன்றி ஸ்தம்பித்து நிற்கக்கூடாது.  நமது நாட்டின் எல்லைக்கப்பால் இருந்தும் நாம் பாடங்களை பெற வேண்டும்.  அதற்குத்தேவையான ஒழுங்குமுறை, கொள்கை, சிந்தனைஓட்டம் ஆகியவற்றை இந்த மாநாடு வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டில் நடக்கும் விவாதம் இந்தியாவின் இசைவுத்தீர்ப்பு முறைக்கு மேலும் செறிவூட்டி, உலக மையமாக உயர்த்தி சர்வதேச வழக்கறிஞர்களும் சட்ட நிபுணர்களும் கார்ப்போரேட் நிறுவனங்களும் விரும்பும் மையமாக மாற்ற உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.  உங்களது பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறோம்.

நன்றி,