Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

51-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்

51-வது பிரகதி கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்


மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளைத் தடையின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், முனைப்பான ஆளுகையையும் குறித்த நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த, பல்முனைத் தளமான பிரகதியின் 51-வது கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2026 மே 27) தலைமை வகித்தார்.

கூட்டத்தின் போது, பிரதமர் ரயில்வே, மின்சாரம், சாலைத் துறைகளில் ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய சுமார் ₹30,000 கோடி மதிப்பிலான ஏழு முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்தார். பொருளாதார வளர்ச்சிக்கும் பொது நலனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டங்கள், காலக்கெடு, முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, உரிய நேரத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் ஆய்வு அமைந்தது. மேலும், கென் பெட்வா இணைப்புத் திட்டம், இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவற்றையும் பிரதமர் ஆய்வு செய்தார்.

மின்சாரத் துறைத் திட்டங்களை ஆய்வு செய்தபோது, நகர்ப்புறங்களில், குறிப்பாக நகரங்கள், குடியிருப்புப் பகுதிகள், பொது நிறுவனங்களில் மேற்கூரை சூரியசக்தி அமைப்புகளைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். மின்சாரச் செலவுகளைக் குறைக்கவும், எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சமூக அளவில் தூய்மையான எரிசக்தியை ஊக்குவிக்கவும் மேற்கூரை சூரியசக்தித் திட்டத்தை ஒரு இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

சாலை, துறைமுக இணைப்புத் திட்டங்களை ஆய்வு செய்தபோது, வதாவன் துறைமுகமானது, துறைமுகத்தை மையமாகக் கொண்ட, பன்முகப் போக்குவரத்து மேம்பாட்டிற்கான ஒரு முன்மாதிரியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும், அங்கு ஒவ்வொரு முக்கியப் போக்குவரத்து முறையும் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டு, எதிர்காலத்திற்குத் தயாரான ஒரு சூழலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இரண்டாம் கட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் திறம்பட செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். மேலும், இந்த இயக்கம் உள்கட்டமைப்பு உருவாக்கத்தைத் தாண்டி, தொடர்ச்சியான கண்காணிப்பு, மக்கள் பங்கேற்பு, பல்வேறு தரப்பினரிடையே ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் அளவிடக்கூடிய விளைவுகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டத்தை ஆய்வு செய்தபோது, ஒத்துழைப்பு, உரிய நேரத்தில் அனுமதி பெறுதல், தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு, திட்டமிட்ட செயலாக்கம் ஆகியவற்றின் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான நீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, கென்-பெட்வா திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார். நீண்டகால நீர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நதி இணைப்பு, நீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல், திறமையான நீர்ப்பாசனம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளக்கூடிய இதுபோன்ற வாய்ப்புகளைக் கண்டறியுமாறு மாநிலங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தின் தொடக்கத்தில், பிரதமரின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மாநில அளவில் சமூகத் துறைத் திட்டங்களை மாதந்தோறும் ஆய்வு செய்யும் ஒரு முறையும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சரவைச் செயலாளர் தெரிவித்தார். இந்த வழிமுறையானது, மாநில, மாவட்ட அளவில் வழக்கமான கண்காணிப்பை உறுதி செய்வதையும், திட்டச் செயலாக்கச் சிக்கல்களுக்கு விரைவான தீர்வு காண்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266065&reg=3&lang=1

***

TV/PLM/SE