பி.எம்.இந்தியா
வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமர், அனைத்துச் சீர்திருத்தங்களிலும் குடிமக்களின் நலனுக்கு முக்கிய முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படும் சீர்திருத்தங்கள், உண்மையான உத்வேகத்துடன், ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். அரசின் செயல்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதும் சீர்திருத்தங்களின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு ஒட்டுமொத்த அரசையும் உள்ளடக்கிய அணுகுமுறை தேவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா எனும் கனவு ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும், இந்தியாவின் இளைஞர்களே இக்கோட்பாட்டின் அடித்தளமாக அமைய வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு என்ற தீவிரமான பிரச்சினையை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை பிரதமர் அடிகோடிட்டுக் காட்டினார். இளைஞர் நலன் சார்ந்த முன்முயற்சிகளில், பல்வேறு துறைகளுக்கு இடையிலான தனித்தனிச் செயல்பாட்டு முறைகளைத் தகர்த்து, துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுச் செயல்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஒரு நிறுவன ரீதியான கட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக, ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். விளையாட்டுச் சுற்றுலா, ஒரு முக்கியக் கவனத்திற்குரிய துறையாக உருவெடுத்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய விளையாட்டு மையமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் வகையில், முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இலக்கை இந்தியா நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விளையாட்டுத் துறையில் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மூலம் புதுமைகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமரின் குசும் (சூரிய சக்தி மூலம் இயங்கும் மோட்டார் பம்ப்) திட்டம் போன்ற முன்முயற்சிகளை விவசாயிகள் பரவலாக ஏற்றுக்கொள்வது, வேளாண் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார். மேலும், சர்வதேச வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்பத் திறன்களைச் சிறப்பாக ஒருங்கிணைப்பதை உறுதிசெய்ய, திறன் தேவைகள் குறித்த உலகளாவிய செயல்திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
செயலாளர்கள் தங்கள் துறைகளின் பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் சவால்கள் குறித்த தங்களது அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் பகிர்ந்துகொண்டனர். எதிர்கால செயல் திட்டத்திற்கான தனது ஆலோசனைகளையும், தொலைநோக்குப் பார்வையையும் பிரதமர் முன்வைத்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலாளர், முக்கிய அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287957®=3&lang=1
****
TV/BR/SH
Chaired a meeting of Secretaries to the Government of India, in which we discussed progress in rural development, agriculture, social welfare-related sectors and more.
— Narendra Modi (@narendramodi) July 22, 2026
Highlighted the need to strengthen reforms that further the welfare of the people. We also discussed how to…