Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகளாவிய அலைபேசி தொலைத்தொடர்பு சங்கத்தின் வாரிய உறுப்பினர்களுடன் பிரதமர் உரையாடல்


இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று காலை சேவா தீர்த்தத்தில் உலகளாவிய அலைபேசி தொலைத்தொடர்பு சங்கத்தின் (ஜிஎஸ்எம்ஏ) வாரிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். ஜிஎஸ்எம்ஏ என்பது செல்பேசி சூழலியலை ஒருங்கிணைக்கும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.

 

கூட்டத்தில் பேசிய பிரதமர், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சிக்குத் தொழில்நுட்பம் ஒரு கருவியாக மாற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். சமூகத்தின் எந்தப் பிரிவும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்ய, தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக வளரும் நாடுகளின் மக்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை மலிவானதாகவும் எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதன் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், விரிவடைந்து வரும் டிஜிட்டல் இடைவெளியைத் தடுக்க, தொழில்நுட்பத்தை கடைக்கோடி வரை கொண்டு செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

 

வளரும் நாடுகளுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் ஆற்றலை பிரதமர் சுட்டிக்காட்டினார்.பல்வேறு உலகத் தலைவர்களுடன் டிபிஐ குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் அதன் வளர்ந்து வரும் உலகளாவிய முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய தளங்கள் வளரும் நாடுகளுக்கு ஒரு உந்துசக்தியாக அமையக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

அதிகரித்து வரும் டிஜிட்டல் மற்றும் இணையவழி மோசடிகள் தொடர்பான சவால் பற்றிப் பேசிய பிரதமர், இதற்குத் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் தேவை என்று வலியுறுத்தினார். மோசடி அழைப்புகளின் அபாயங்கள் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில், பயனர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வுச் செய்திகளை வழங்குமாறு அவர் பரிந்துரைத்தார்.

 

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு உலகளாவிய தரநிலைகளும் பொதுவான விதிகளும் தேவை என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். டீப்ஃபேக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்து, பயனர்கள் அதன் ஆதார வேரை உடனடியாக அடையாளம் காண உதவும் வழிமுறைகளை ஆராயுமாறு அவர் அறிவுறுத்தினார்.

 

டிஜிட்டல் மற்றும் செல்பேசி இணைப்புத் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய தலைமையாக உருவெடுத்துள்ளதை ஜிஎஸ்எம்ஏ வாரிய உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். 4ஜி, 5ஜி சேவைகளின் விரைவான விரிவாக்கம், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் பிரம்மாண்டமான வளர்ச்சி, தொலைத்தொடர்பு மற்றும் செல்பேசி உற்பத்திச் சூழலியலின் மேம்பாடு ஆகியவற்றை அவர்கள் குறிப்பிட்டனர். இந்தியாவின் முதலீட்டுக்கு உகந்த கொள்கை கட்டமைப்பை அவர்கள் பாராட்டியதுடன், தொடர்ச்சியான டிஜிட்டல் வளர்ச்சியை ஆதரிப்பதில் பாதுகாப்பான, உறுதியான, நம்பகமான டிஜிட்டல் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இணையமைச்சர் டாக்டர் சந்திரசேகர் பெம்மாசனி, ஜிஎஸ்எம்ஏ வாரிய உறுப்பினர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2319810&reg=3&lang=1

****

TV/BR/SH