பழங்குடியினர் கௌரவ தின விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2026 நவம்பர் 15) பங்கேற்கிறார். மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக அவர் உரையாற்ற உள்ளார். பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் பகவான் பிர்சா முண்டாவின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த விழா நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம், சமூகக் கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் சுமார் ₹3,000 கோடி மதிப்பிலான 246 வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இவற்றில் 173 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், எஞ்சிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தொடங்கி வைக்கப்படும் திட்டங்களில் பழங்குடியின மாணவர்களுக்கான 38 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளும், குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான பிரதமரின் பெருந்திட்டத்தின் (பிரதமரின் ஜன்மன் – PM-JANMAN) கீழ் அமைக்கப்பட்டுள்ள 100 பல்நோக்கு மையங்களும் அடங்கும். இந்த மையங்கள் அரசு நலத்திட்டச் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இடங்களாகவும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான மையங்களாகவும் செயல்படும். இதுதவிர, பிரதமரின் ஜன்மன், மண்ணின் மைந்தன் பழங்குடியின கிராம வளர்ச்சித் திட்டம் (தர்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்) ஆகிய திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பிற வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
முக்கியத் திட்டங்களின் ஒரு பகுதியாக, அருணாசலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் அமைக்கப்பட்டுள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனக் கட்டடமும், மிசோரம் மாநிலம் அய்சாலில் அமைக்கப்பட்டுள்ள ரோபுயிலியானி பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகமும் திறக்கப்பட உள்ளன.
மிசோ பழங்குடியின மக்களின் பண்பாடு, வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிசோ பெண் தலைவரான ரோபுயிலியானியின் பெயர் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. அவரது துணிச்சல், போராட்டம், தியாகத்தை நினைவுகூரும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. மிசோ மக்களின் வளமான கலாசாரப் பாரம்பரியத்தையும் இது எடுத்துரைக்கும்.
மேலும், பழங்குடியினக் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கும் நோக்கில் 19 புதிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பழங்குடியின உற்பத்தியாளர்கள் தங்களது பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க 12 பல்நோக்கு சந்தைப்படுத்தல் மையங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதனுடன் பிரதமரின் ஜன்மன் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மேலும் 42 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
நாடு முழுவதும் 2026 நவம்பர் 01 முதல் 15-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படும் பழங்குடியினர் கௌரவ இருவார விழாவின் நிறைவு நிகழ்ச்சியாகவும் இது அமைகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2336214®=3&lang=1
(Release ID : 2336214)
****
AD/PLM/SH