Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பீகாரில் ரூ. 34,470 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி


பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2026 நவம்பர் 21) பீகார் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு வைஷாலி மாவட்டத்தில் பிற்பகல் 1.15 மணியளவில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நிதிஷ் பாலத்தைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் சுமார் ரூ.34,470 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

சாலைப் போக்குவரத்து, மின்சாரம், நகர்ப்புறக் கட்டமைப்பு, நீர்வளம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

சுமார் ரூ.4,280 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நிதிஷ் பாலம், 19.7 கிலோ மீட்டர் நீளத்திலான திட்டமாகும். 9.7 கிலோ மீட்டர் நீள பிரதான பாலத்தையும், 10 கிலோ மீட்டர் நீளத்துக்கான இணைப்புச் சாலைகளையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பாட்னா மாவட்டத்தின் கச்சி தர்காவையும் வைஷாலி மாவட்டத்தின் பிடுபூரையும் இணைக்கும் இந்த ஆறு வழிப் பாலம், வடக்கு பீகார் – தெற்கு பீகார் இடையிலான போக்குவரத்தை எளிதாக்கும். பல்வேறு பாலங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். குறிப்பாக ரகோபூர் தியாரா பகுதி மக்கள் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளை எளிதில் பெற இது உதவும். விவசாயப் பொருட்கள், தொழிற்சாலைப் பொருட்களைக் கொண்டு செல்வதும் எளிதாகும்.

மேலும், ரூ.15,600 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதில் பல தேசிய நெடுஞ்சாலைகளை ஆறு வழிச்சாலைகளாக மாற்றும் பணிகள், பக்சார் அனல் மின் நிலையத்தின் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது அலகு, கால்வாய்கள் சீரமைப்பு, நவாடாவில் மிதக்கும் சூரிய மின்சாரத் திட்டம், கழிவுநீர் கட்டமைப்புப் பணிகள் ஆகியவை அடங்கும்.

சுமார் ரூ.14,450 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட உள்ளது. இதில் ரூ.3,800 கோடிக்கும் அதிகமான செலவில் சாஹேப்கஞ்ச்–அரேராஜ்–பெட்டியா நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும், ரூ.3,350 கோடி மதிப்பிலான பிர்பைன்டி அனல் மின் நிலையத்துக்கான திட்டமும் முக்கியமானவை.

மேலும், 12 நகரங்களில் குடிநீர், கழிவுநீர் திட்டங்கள், கால்வாய்கள் நவீனமயமாக்கல், கல்வி நிறுவனங்கள், ஐஐடி பாட்னாவின் ஆராய்ச்சிப் பூங்கா, விடுதி ஆகியவற்றுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 100 மின்சாரப் பேருந்துகளையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் வீடுகள் பெற்றுள்ள 26,900-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்கும் விழாவும் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2339070&reg=3&lang=1

(Release ID : 2339070)

****

TV/PLM/SH