சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை தொடர்பான உச்சிமாநாட்டின் நிறைவு அமர்வுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
சமூக உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுத்தல், பொது மக்களின் பங்கேற்பிற்கான புதுமையான அணுகுமுறைகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அமைச்சர்களையும் மூத்த அதிகாரிகளையும் இந்த உச்சிமாநாடு ஒன்றிணைத்தது.
இந்த நிகழ்ச்சியின்போது விரிவான ஆலோசனைகளைப் பாராட்டிய பிரதமர், உச்சிமாநாட்டின் வாயிலாக உருவான கலந்துரையாடல்களும் செயல்பாட்டுத் திட்டங்களும் மத்திய, மாநில அரசுகளிடையே நிலவும் பொதுவான நோக்க உணர்வைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். போட்டித்தன்மை, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தின் உணர்வுகள் செயலாக்கத்திற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தங்களது அனுபவங்கள், புதுமையான முன்முயற்சிகளிலிருந்து மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.
மக்கள் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் குறித்தும், அத்தகைய குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம் குறித்தும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சமூகப் பங்களிப்பு முக்கியப் பங்காற்றக்கூடும் என்று குறிப்பிட்டார். பெரும்பாலும், தயக்கம், சமூக அவலம் குறித்த அச்சம், விழிப்புணர்வின்மை போன்றவை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குறைபாடுகளை உணர்ந்துகொள்வதையோ, உரிய நேரத்தில் அதற்கான உதவியைப் பெறுவதையோ தடுப்பதாக அவர் குறிப்பிட்டார். பெற்றோரின் தயக்கத்தைக் களைவதற்கும், ஆரம்பகாலத் தலையீட்டை மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மாற்றுவதற்கும் சமூக அடிப்படையிலான அணுகுமுறை உதவக்கூடும் என்று அவர் கூறினார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குப் புதுமையான அணுகுமுறைகளை வலியுறுத்திய அவர், முக்கியமான செய்திகளை எளிமையான, அணுகக்கூடிய வழிகளில் தெரிவிப்பதற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், இயக்கம், அணுகல், விளையாட்டு, அன்றாட செயல்பாடுகளில் ஈடுபடுவதை மேம்படுத்துவதற்காக, மலிவு விலையிலான உதவி உபகரணங்களை உருவாக்க இளம் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநிலங்கள் புத்தொழில் நிறுவனங்களுக்கான போட்டிகளை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம் குறித்துப் பேசிய பிரதமர், போதைப்பொருள் பயன்பாட்டுப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் வெறும் வழக்கமான அல்லது அடையாளச் செயல்பாடுகளாக அமையக் கூடாது என்று வலியுறுத்தினார். இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமூகத்தின் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கவும், பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள், விவாதங்கள், பேச்சுப் போட்டிகள், இதர செயல்பாடுகளை முன்னெடுக்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார். மேலும், போதைப் பழக்கத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இலக்கை அடைவதற்கான முயற்சிகளில், ஒட்டுமொத்த தேசத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், இதில் சமூகங்கள், ஆன்மீக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைச்சகங்கள் கூடுதல் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சமூகம், இந்த இயக்கத்தில் ஒரு தீவிர பங்கேற்பாளராக மாறும்போது மட்டுமே, மக்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2338781®=3&lang=1
****
TV/BR/SH
Chaired the valedictory session of the Departmental Summit on Social Justice and Empowerment. Key focus areas: Greater Jan Bhagidari in social schemes. Encouraging StartUps to build affordable assistive technologies. A whole-of-society approach towards a Nasha Mukt Bharat. https://t.co/e0HTNYb8hc
— Narendra Modi (@narendramodi) November 19, 2026