Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பாரீசில் நடைபெற உள்ள சிஓபி-21 மாநாட்டை முன்னிட்டு ஒத்த கருத்துடைய வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்களை பிரதமர் சந்தித்தார்

பாரீசில் நடைபெற உள்ள சிஓபி-21 மாநாட்டை முன்னிட்டு ஒத்த கருத்துடைய வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்களை பிரதமர் சந்தித்தார்


பாரீசில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தட்பவெட்ப மாற்றம் குறித்த சி.ஓ.பி.-21 மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ஒத்த கருத்துடைய வளர்ந்து வரும் நாடுகளின் பிரதிநிதிக் குழுத் தலைவர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புதுதில்லியில் சந்தித்தார். இந்நாடுகளுக்கான பிரதிநிதிக் குழுத் தலைவர்களின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

பிரதிநிதிக் குழுக்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாடும் போது தட்பவெட்ப நிலையில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் அந்த சவாலை சந்திக்க வேண்டியது அவசியம் என்பதையும் உலக நாடுகள் அறிந்துள்ளன என்றார். இதோடு தட்பவெட்ப நிலைக்கான நீதியை அளிக்க வேண்டும் என்ற கொள்கையையும் நாம் உணர வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படும் வளர்ச்சியும், மேம்பாடும் சுற்றுச்சூழலுக்கு பகையானவை என்றும், அதனால் அந்த நாடுகள் குற்றம் செய்வதாக கருதப்படுவதாகவும் சில நாடுகள் கூறிவருவதை எதிர்க்க வேண்டியது அவசியம் என்றார். ஆனால் வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுச்சூழலுக்கு பகையானவை அல்ல என்பதை அந்நாடுகள் உணர வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும் சுற்றுச்சூழலைப் பற்றிய பொதுவான பாடத்திட்டங்கள் பள்ளிக்கூட அளவிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். அப்போதுதான் இளைய தலைமுறையினர் வளரும் போதே தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கு எதிராக செயல்பட முடியும் என்று கூறினார்.

தட்பவெட்ப நிலை மாற்றத்திற்கு எதிராக செயல்பட வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவியை வளர்ந்த நாடுகள் அளிப்பதோடுகூட தூய்மையைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தையும் அளிக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட பிரதமர் அதேநேரத்தில் வளரும் நாடுகளின் நியாயமான விருப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறினார். வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுகளை நீக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றும் வளர்ந்து வரும் நாடுகள் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி, மாசுகள் அற்ற கட்டிடங்களைக் கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு அதற்கான இலக்குகளை அடைய வேண்டும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.

எரிசக்தி பயன்பாட்டை குறைப்பதற்கு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது அவசியம் என்றும் பிரதமர் கூறினார். தட்பவெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஒத்தக் கருத்துக்களைக் கொண்ட வளர்ந்து வரும் நாடுகளுடன் தோளோடு தோள் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் உடனிருந்தார்.


******