பி.எம்.இந்தியா
மேதகு பிரதமர் அண்டோனியோ கோஸ்டா அவர்களே, மரியாதைக்குரிய பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
முதலில் கடந்த வாரத்தில் போர்த்துகலில் பேரழிவை நிகழ்த்திய காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களுக்க்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதில் உயிரிழந்தோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்காவும் பிரார்த்தனை செய்கிறோம்.
நண்பர்களே,
ஆழமான வரலாற்றுத் தொடர்புகளையும், வலுவான பொருளாதாரத் தொடர்புகளையும், மக்களுக்கு இடையேயான உறவுகளையும் கொண்டதாக நம் இரு நாடுகளும் விளங்குகின்றன. எனவே, இருதரப்பு முறையில் இதுவரையில் எந்தவொரு இந்தியப் பிரதமரும் போர்த்துகலுக்கு பயணம் மேற்கொண்டதில்லை என்பதை அறிந்து நான் மிகவும் வியப்படைந்தேன். எனினும் கடந்த ஆறுமாத காலத்தில் இந்தியாவிற்கும் போர்த்துகலுக்கும் இடையேயான இரண்டாவது சந்திப்பாக இது அமைகிறது என்பது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது. மிகக் குறுகிய கால அவகாசத்தில் என்னை அன்போடும் கனிவோடும் வரவேற்ற பிரதமர் கோஸ்டாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த ஜனவரி மாதத்தில் பிரதமர் கோஸ்டா அவர்களை இந்தியாவில் வரவேற்பதில் நாங்கள் மிகவும் பெருமை கொண்டோம். அந்தப் பயணம் இரு தரப்பு உறவுகளின் அடிப்படையில் மட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் தினமாகக் கொண்டாடப்படும் ப்ராவாஸி பாரதிய திவஸ் நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராகவும் அவர் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதிலும் உள்ள இந்திய வம்சாவளி இந்தியர்களின் பிரதிநிதியாகவும் பிரதமர் கோஸ்டா விளங்குகிறார்.
நண்பர்களே,
பிரதமர் கோஸ்டாவும் நானும் இன்று விரிவான கலந்துரையாடலை நடத்தியதோடு, திருப்புமுனையாக அமைந்த அவரது இந்திய வருகைக்குப் பிறகு ஏற்பட்டுள்ல முன்னேற்றம் குறித்தும் நாங்கள் பரிசீலனை நடத்தினோம். நமது பொருளாதார உறவுகள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டில் நம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மிகக் குறைவாக இருப்பினும் கூட, 2016-17ஆம் ஆண்டில் போர்த்துகலிலிருந்து இந்தியாவிற்கு வந்த நேரடி அந்நிய முதலீடு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. எனினும், நம் இரு நாடுகளின் பொருளாதாரத்தில் சரக்குகள், சேவைகள், மூலதனம், மனித வளம் போன்றவற்றின் பரிமாற்றத்தை அதிகரிக்க நாம் இன்னும் அதிகமாகவே செய்ய முடியும். இந்த வகையில் போர்த்துகலின் மீண்டு எழுந்துள்ள பொருளாதாரம், இந்தியாவின் வலுவான வளர்ச்சி ஆகியவை நம் இரு நாடுகளும் இணைந்து வளர்வதற்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
நண்பர்களே,
ஐரோப்பாவில் மிகச் சிறந்த தொழில் முனைவிற்கான துடிப்பான சூழலைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக போர்த்துகல் உருவாகியுள்ளது. இந்தியாவும் கூட துடிப்பான, வலுவான புதிய தொழில்முனைவுத் துறையின் இருப்பிடமாக விளங்குகிறது. இந்தத் தொழில்முனைவுத் துறை என்பது இளைஞர்களுடன், கருத்துக்கள், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் ஆகியவற்றை இணைக்கும் உற்சாகம் மிக்கதொரு களமாகவும் திகழ்கிறது. அவரது இந்தியப் பயணத்தின்போது பிரதமர் கோஸ்டாவும் நானும் இந்திய-போர்த்துகல் சர்வதேச தொழில்முனைவு மையம் குறித்து விவாதித்தோம். மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே அந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் கோஸ்டாவுடன் இணைந்து அதைத் துவக்குவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். வரிவிதிப்பு, நிர்வாகச் சீர்திருத்தங்கள், அறிவியல், விண்வெளி, இளைஞர்கள் விவகாரங்கள், விளையாட்டு ஆகிய துறைகளில் இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் நமது கூட்டணியை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளன. அறிவியல்-தொழில்நுட்பத் துறையிலும் நமது ஒத்துழைப்பு வேகமெடுத்துள்ளது. உயர்நிலை தொழில்நுட்பத்தில் நமது ஒத்துழைப்பிற்கு உதவி செய்யும் வகையில் அறிவியல்-தொழில்நுட்பத்திற்கான கூட்டு நிதியை 4 மில்லியன் யூரோ அளவிற்கு உருவாக்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். நுண்ணிய தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல் மற்றும் கடலியல் ஆகிய துறைகளிலும் போர்த்துகீசிய திறனிலிருந்து கற்றுக் கொள்ளவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். நம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பில் விண்வெளி புதியதொரு பகுதியாக அமைகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் பிரதமர் கோஸ்டா இந்தியாவிற்கு வந்திருந்த போதுதான் இந்த கருத்து உருவாகியது. விண்வெளி மற்றும் கடல்சார் அறிவியல் துறைகளில் அட்லாண்டிக் சர்வதேச மையத்தில் போர்த்துகலுடன் இணைந்து செயல்படுவதிலும் நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளோம்.
நண்பர்களே,
மக்களுக்கு இடையேயான உயிர்த்துடிப்பான, வளரும் உறவுகளை நம் இரு நாடுகளும் தங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்கின்றன. இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் போர்த்துகலில் உள்ள இந்திய வம்சாவளியினர் முக்கியமானதொரு பங்கினை வகித்துள்ளனர். கால்பந்து விளையாட்டில் போர்த்துகீசியர்களுக்கு உள்ள விருப்பம் அபரிமிதமானது. பிரதமர் கோஸ்டாவும் கூட மிகப்பெரும் கால்பந்து ரசிகர்தான். நமது சமூகங்களை இணைப்பதற்கு இதுவும் கூட மற்றொரு சங்கிலியாக அமையக் கூடும். நம் இரு நாடுகளின் கலாச்சார தொடர்புகளும் கூட விரிவாகிக் கொண்டே வருகின்றன. லிஸ்பன் பல்கலைக்கழகத்தில் இந்தியாவைக் குறித்த படிப்புகளுக்காக இருக்கை ஒன்றையும் நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். இந்திய திரைப்படங்களும் கூட போர்த்துக்கீசிய மொழியில் துணைத் தலைப்புகளோடு வெளியாகின்றன. நமது பரஸ்பர வசதிக்காக இந்தி-போர்த்துக்கீசிய அகராதியும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவாவிற்கும் போர்த்துகலுக்கும் இடையே 17 ஆம் நூற்றாண்டில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்களை உள்ளடக்கி 12,000 ஆவணங்களின் டிஜிட்டல் வடிவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்காக நான் போர்த்துகலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முக்கியமான ஆவணம் எமது ஆய்வாளர்களுக்கு பெருமளவிற்கு உதவி செய்வதாக இருக்கும்.
நண்பர்களே,
சர்வதேச அரங்கிலும் இந்தியாவும் போர்த்துகலும் வலுவான கூட்டாளிகளாக உள்ளன. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்த உறுப்பினர் தகுதிக்காகவும், பல தரப்பு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு அமைப்புகளிலும் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக நாங்கள் போர்த்துகலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை நிரம்பிய தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நமது இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதிலும் நாங்கள் முனைப்புடன் உள்ளோம்.
மேதகு பிரதமர் அவர்களே,
உங்களின் கனிவான வரவேற்பிற்கும், கருணைமிக்க விருந்தோம்பலுக்கும் உங்களது இடைவெளியற்ற வேலைகளுக்கு நடுவே நேரமெடுத்துக் கொண்டு எங்களை கவனித்தமைக்காக மீண்டும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
முயிடோ ஒப்ரிகடோ (மிக்க நன்றி!)