பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை தற்போது நடைமுறையில் உள்ள காலாவதியாகாத ஆதாரங்களின் மத்திய தொகுப்பு (என்.எல்.சி.பி.ஆர்.) திட்டத்தை ரூ. 5,300 கோடி நிதி ஒதுக்கி, 90:10 என்ற முறையில் 2020 மார்ச் வரை தொடர ஒப்புதல் அளித்தது. இது தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் நிறைவு பெறுவதை சாத்தியமாக்கும்.
2020 மார்ச் வரை குறிப்பிடப்பட்ட துறைகளில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் உள்ள இடைவெளியைப் போக்கும் வகையில் 100% மத்திய அரசு நிதி உதவியுடன் 2017-18 முதல் “வட கிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்” (என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ்.) என்ற புதிய மத்திய அரசு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ். திட்ட அம்சங்கள்:
கீழ்க்காணும் துறைகளின் கீழ் உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை இந்தப் புதிய திட்டம் உள்ளடக்கும்:-
அ) குடிநீர் விநியோகம், மின்சாரம் மற்றும் குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பான அடிப்படை உள்கட்டமைப்பு
ஆ) சமூகத் துறைகளான கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு
என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ். திட்டப் பயன்கள்
என்.ஈ.எஸ்.ஐ.டி.எஸ். திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்துகள் இந்தப் பிராந்தியத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை பலப்படுத்துவது மட்டுமின்றி, சுற்றுலாவையும் ஊக்குவித்து அதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்தத் திட்டம் வரும் ஆண்டுகளில் இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊக்கியாக இருக்கும்.
*****