பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 1) வீட்டுவசதி மற்றும் தொலைபேசி வசதிகள் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) விதிகள் – 1956. 2) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (தொகுதிப்படிகள்) விதிகள் – 1986, 3) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (அலுவலக செலவுப்படி) விதிகள் – 1988 ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம்:
உரிய விதிகளில் திருத்தங்களைச் செய்வதற்காக அமைச்சரவையின் இந்த முடிவு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிக்கான கூட்டுக் குழுவுக்கு தெரிவிக்கப்படும். திருத்தங்களுக்கு மாநிலங்களவையின் தலைவர் மற்றும் மக்களவையின் சபாநாயகரின் ஒப்புதல் பெறுவதுடன் உறுதிசெய்யப்படும். இது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும்.
மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், தொடர் செலவினமாக சுமார் ரூ.39,22,72,800-ம் (39 கோடியே 22 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாய்) மற்றும் தொடராச் செலவினமாக ரூ.6,64,05,400-ம் (6 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரத்து 400 ரூபாய்) கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.
பின்னணி:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கான, ஊதியம் மற்றும் படிகளை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில், நேரத்துக்கு நேரம் நிர்ணயிக்க அரசியல்சாசனச் சட்டத்தின் 106-வது பிரிவு வழிவகை செய்கிறது. இதனைத் தொடர்ந்து, 1954-ம் ஆண்டில் (1954-ம் ஆண்டுக்கான சட்டம் 30) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் சட்டம் (MSA Act) நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ், விதிகளை உருவாக்குவதற்காக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் குழுவை அமைக்க MSA சட்டத்தின் 9-வது பிரிவு வழிவகை செய்கிறது. இந்தப் பிரிவின் படி, அனைத்து வகையான அல்லது குறிப்பிட்ட வகைக்கான அளவை மாற்றியமைப்பதற்காக மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திவிட்டு, விதிகளை உருவாக்க கூட்டுக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
****