பி.எம்.இந்தியா
அண்மையில் முடிவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள், டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர். அப்போது, பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
பதக்கங்களை வென்ற அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பதக்கங்களை வெல்லாதபோதும், சிறப்பான முறையில் செயல்பட்டவர்களுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் செய்யும் சாதனைகள், ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் தங்களது சாதனைகள், இந்தியாவின் நிலையை உயர்த்தியுள்ளதாக பதக்கம் வென்ற வீரர்களிடம் பிரதமர் கூறினார். உலக விளையாட்டு அரங்கில், இந்திய விளையாட்டு வீரர் வெற்றிபெறும்போதெல்லாம், இந்திய தேசியக் கொடி உயரே பறப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில், விளையாட்டு வீரர்களின் காலம், சில ஆண்டுகள் மட்டுமே இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த சூழலில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும்கூட, தங்கப்பதக்கங்களை மேரி கோம் வென்றுள்ளதை உதாரணமாக பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டு வீரராக மிகவும் வெற்றிகரமாக செயல்பட்ட புல்லேல கோபிசந்த், பல்வேறுபட்ட வீரர்களுக்கு ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார்.
இன்றைய சூழலில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திறமை, பயிற்சி, ஒருநிலைப்படுத்துதல் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றுடன் மன தைரியமும் முக்கியம் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த சூழலில், யோகா-வின் பலன்களை அவர் குறிப்பிட்டார்.
குழந்தைப்பருவம் முதலே ஆலோசனைகளை வழங்கிய ஆசான்கள், ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்ந்து தொடர்புவைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) கலோனல் ராஜ்யவர்த்தன் ராத்தோரும் உடனிருந்தார்.
***