Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் பயனடைந்தவர்களுடன் “நரேந்திர மோடி” செயலி மூலம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை


இந்த மக்கள் அனைவரும், உரிய நேரத்தில் சரியான முடிவை எடுத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு சவால்களையும் எதிர்கொள்ள தனக்குத் தானே தயாராகியுள்ளவர்கள். இன்று அவர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களை ஊக்குவிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்க்கையில் ஒன்று மட்டும் மிகவும் நிலையானது என்று நம் அனைவருக்கும் தெரியும். அது வாழ்க்கை நிலையில்லாதது என்பதுதான். நமது வாழ்க்கையில் அடுத்ததாக என்ன நடைபெறும், நாளை என்ன நடக்கப் போகிறது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து மீண்டுவருவதற்கும் சமூக பாதுகாப்புத் திட்டங்கள் நமக்கு பலத்தை அளிக்கின்றன. இது பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் (ஆயுள் காப்பீட்டு திட்டம்) அல்லது பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டம் (விபத்துக் காப்பீட்டு திட்டம்) அல்லது அடல் ஓய்வூதியத் திட்டம் அல்லது பிரதம மந்திரியின் வய வந்தனா திட்டம் (மூத்த குடிமக்களுக்கான நீண்டகால வருமான திட்டம்) என எதுவாக இருந்தாலும், இந்தத் திட்டங்கள் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது.

சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சாதாரண மக்கள், குறிப்பாக சமூகத்தில் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மக்களை மேம்படுத்துகின்றன. இதன்மூலம், நெருக்கடியான நேரங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியும். வாழ்க்கைக்கான போராட்டத்தில் தோற்றுப் போகமாட்டார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ஏழை மக்களுக்கு வங்கிக்கணக்கு கூட கிடையாது. எந்த வகையான நிதி ஆதரவும் கிடைப்பது என்பது எளிதானதாக இல்லை.

நாங்கள் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தினோம்: தலித்கள், ஒடுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், பின்தங்கியவர்கள், பழங்குடியினர், பெண்கள் என வங்கி சேவை கிடைக்காத மக்களை மேம்படுத்த, அவர்களுக்கு வங்கி சேவைகளை வழங்குவது; சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு நிதி உதவி வழங்குவது; நிதியளவில் பாதுகாப்பு இல்லாமல் உள்ள மக்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்குவது ஆகியவையே அவை. இதன் பொருள் என்னவென்றால், வங்கி சேவை இல்லாதவர்களுக்கு வங்கி சேவை வழங்குவது, நிதி கிடைக்காமல் உள்ள மக்களுக்கு நிதி வழங்குவது, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மக்களுக்கு நிதி அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவது ஆகியவையே ஆகும்.

     உலக வங்கியின் பின்டேக்ஸ் அறிக்கையில் (FinTax Report), நிதியமைப்பிற்குள் மக்களை சிறப்பான முறையில் கொண்டுசேர்க்கும் வெற்றிகரமான திட்டம் என பிரதம மந்திரியின் மக்கள் நிதி திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இந்தத் திட்டத்தின்கீழ், 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டுவரையான மூன்று ஆண்டு காலத்தில் புதிதாக 28 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக்  காலகட்டத்தில் உலகம் முழுவதும் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்குகளில் இது 55% ஆகும். அதாவது, பாதிக்கும் மேலான வங்கிக்கணக்குகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. நமது நாட்டில் இதற்கு முன்னதாக Ek Baju Ram Aur Ek Baju Gaon என்று கூறுவார்கள். அதாவது, தாம் ஒரு பக்கம், ஊர் ஒரு பக்கம் என்று பொருள்.

மேலும், உலக வங்கியின் அறிக்கையில், நமது அரசு கடந்த 2014-ம் ஆண்டில் பொறுப்பேற்பதற்கு முன்னதாக இந்தியாவில் வங்கிக்கணக்கு வைத்துள்ள மக்களின் எண்ணிக்கை 50-52%-ஆக இருந்ததையும், இந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 80%-ஐத் தாண்டிச் சென்றதையும் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சமூக பாதுகாப்பு வழிமுறைகள் இருப்பதையும், இந்தியாவில் இது இல்லை என்பது குறித்தும் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது.

     நாங்கள் ஆட்சி அமைத்தபோது, இதுபோன்ற சூழ்நிலையே இருந்தது. சமூக பாதுகாப்பு இல்லாமல், சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இந்தியா பாரம்பரியமாக கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை கொண்டிருந்தது என்பது உண்மை. 20-25 பேர் அல்லது 30 பேர் வரை ஒரே குடும்பமாக ஒன்றாக வாழ்ந்தபோது, சமூக கட்டமைப்பே சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. ஆனால், குடும்ப அளவு இளைக்கத் தொடங்கியது. வயதான பெற்றோர் தனியாக வசிக்கத் தொடங்கினார்கள். வாரிசுகள் தனியாக வாழ்கிறார்கள். சமூக அமைப்பு மாறியுள்ளது.

இந்த சூழ்நிலையில், மாற்றத்தை கொண்டுவருவதற்காக, புதிய சூழலுக்கு ஏற்ப பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்க, இன்று பிரதம மந்திரியின் மக்கள் நிதித் திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு, ரூபே கார்டு, விபத்துக் காப்பீடு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, சமூகப் பாதுகாப்பு திட்டங்களாக ஓய்வூதியத் திட்டம் மற்றும் இரண்டு காப்பீட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டன.

இதன் காரணமாக, கடந்த 2014-ம் ஆண்டில் அரசு காப்பீட்டுத் திட்டங்களின் பலனைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 4.8 கோடி அல்லது 5 கோடிக்கும் குறைவாக இருந்த நிலையில், இன்று இது சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 10 மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 50 கோடி பேர் இந்தத் திட்டங்களால் இணைந்துள்ளனர்.

இந்தத் திட்டங்கள், சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ், பல்வேறு சூழ்நிலைகளை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டன. மிகவும் குறைந்தபட்ச பிரீமியத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம், இந்தத் திட்டங்களின் பலன்களை நாட்டில் உள்ள வெவ்வேறு பிரிவினர், பல்வேறு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள், பல வயது வரம்பில் உள்ளவர்கள் என அனைத்து தரப்பினரும் பெறுவார்கள். 

இன்று அந்த மக்களுடன் நான் பேசப் போகிறேன். இந்தத் திட்டங்கள் வலி மற்றும் வேதனையுடன் தொடர்புடையது, வலியுடனான வேதனையுடன் தொடர்புடையது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும்,  கடுமையான சூழ்நிலைகள், சிக்கலான காலகட்டத்தை எதிர்கொண்டவர்களுக்கு, இந்தத் திட்டங்கள் எவ்வாறு பயனளித்தன என்பது குறித்த அனுபவங்களை நாட்டில் உள்ள ஏழை மக்கள், சாதாரண மக்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, அவர்களும் ஊக்குவிக்கப்பட்டு, இந்தத் திட்டங்களின் பலன்களைப் பெற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். வலி நிறைந்த நினைவுகளை மீண்டும், மீண்டும் திரும்பிப் பார்ப்பது, துயரத்தை ஏற்படுத்தும். இருந்தாலும், நெருக்கடியான காலத்தில் சில வகையான உதவிகளை சிலர் பெற்றது குறித்த அனுபவங்களை, மற்றவர்கள் கேள்விப்படும்போது, எதிர்காலத்தில் ஏற்படும் நெருக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை அவர்களும் தெரிந்துகொள்வார்கள். 

எனது அருமை நாட்டு மக்களே, இந்த இழப்புகள் குறித்து நீங்கள் கேட்டறிந்தபிறகு, நாம் அனைவரும் வலியை உணர்வோம். ஏனெனில், ஒரு உறுப்பினரை இழந்த குடும்பத்திற்கு யாரும் ஈடுசெய்ய முடியாது. இந்த இழப்புக்கு இறைவன் கூட, ஈடுசெய்ய முடியாது. இருந்தாலும், அந்தக் குடும்பத்துக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் குறிப்பிட்ட அளவு நிதியுதவி கிடைக்கும்போது, அதிலிருந்து மீண்டு, பழைய நிலைக்கு அவர்களால் வர முடியும். இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் (ஆயுள் காப்பீட்டு திட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தின்கீழ்… வெறும் ரூ.330-க்கு ரூ.2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீட்டை எனது நாட்டுமக்கள் பெறுவார்கள் என்பதை நான் உணர்கிறேன். ஓர் ஆண்டுக்கு ரூ.330 என்பது, நாள்தோறும் ஒரு ரூபாய்க்கும் குறைவு. இன்று, சந்தையில் இந்த அளவுக்கு குறைவான தொகைக்கு வேறு எதனையும் உங்களால் காண முடியாது. இந்தத் திட்டத்தின் பலனை எவ்வாறு பெற முடியும் என்பதை  புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் பலனை 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் நம்மிடம் உள்ளனர். அவர்களிடம் கேட்போம், அவர்களின் அனுபவங்களை கேட்டுத் தெரிந்துகொள்வோம்.

     இடர்பாடு என்பது முன்கூட்டியே எச்சரிப்பது கிடையாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். பிரச்சினைகள் வருவதற்கு முன்பு யாரையும் எச்சரிக்காது. நீங்கள் செல்வந்தராக இருந்தால், பிரச்சினைகள் வரும், ஏழைகளாக இருந்தால் பிரச்சினைகள் வராது என்பது போன்றும் இல்லை. வேறு விதத்தில் சொல்வதானால், ஏழைகளாக இருந்தால், உங்களுக்கு பிரச்சினை வரும்,  செல்வந்தராக இருந்தால் பிரச்சினை வராது என்றும் கூற முடியாது. பிரச்சினை என்பது, உங்களுக்கு எங்கு இருந்தாலும் வரும். எனினும், இந்த நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள முடியும். நமது நிதி பாதுகாப்பை நம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

     இந்த இலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டம் (விபத்து காப்பீட்டு திட்டம்) தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி, ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீட்டைப் பெறலாம். அதாவது, மாதத்துக்கு ரூ.1 மட்டுமே பிரீமியம் செலுத்த வேண்டும். இதுவரை இந்தத் திட்டத்தில் சுமார் 13-14 கோடி பேர் சேர்ந்துள்ளனர். மெக்சிகோ அல்லது ஜப்பானின் மக்கள் தொகையை நாம் எடுத்துக் கொண்டோமென்றால், அந்த நாடுகளின் மக்கள் தொகையைவிட, அதிக அளவிலானோர் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளனர். மிகவும் குறுகிய காலத்துக்குள் இத்தனை பேர் இந்தத் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள் என்பது, காப்பீடு மற்றும் அதன் பலன்களை மக்கள் தெரிந்துவைத்திருப்பதையே காட்டுகிறது.

ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அவரது ஒட்டுமொத்த குடும்பமுமே மிகப்பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அனைத்து கனவுகளும் சீர்குலைந்துவிடும். அடுத்த ஆண்டில் நாம் இதனை செய்வோம்; அடுத்த 3 ஆண்டுகளில் இதனை செய்வோம் என்று யாராவது திட்டமிட்டிருந்தால் கூட, இவை அனைத்தும் நிறைவேறாமலேயே இருக்கும். இந்த நிலைமை இருந்தபோதிலும், காப்பீட்டை பொதுமக்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதே நமது பொதுவான அனுபவமாகும். சில நேரங்களில் இதுபோன்றும் கூறுவார்கள். அதாவது, “நாம் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வோம். நிச்சயம் சேரத்தான் போகிறோம். நமக்கு நிறைய காலஅவகாசம் உள்ளது. காப்பீட்டுக்கான தேவை என்ன?” என்றெல்லாம் கூறுவார்கள். இன்று ஒட்டுமொத்த நாடும் இதனை பார்த்துக் கொண்டிருக்கிறது. காப்பீட்டு விவகாரத்தில் இதுபோன்ற சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சமூக பாதுகாப்புத் திட்டங்களில் அதிக அளவிலான மக்கள் இணைய வேண்டும்.

     சில ஆண்டுகளுக்கு முன்பு, தினக்கூலி தொழிலாளர்கள், காப்பீடு குறித்து சிந்தித்ததில்லை. இதற்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்துவதற்கு பணம் தேவை என்பதே காரணமாக இருந்தது. தற்போதைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக பணத்தை செலவிட வேண்டுமா அல்லது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக செலவிட வேண்டுமா என்ற குழப்பம் எப்போதுமே இருந்துவந்தது. காய்கறி விற்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது தினக் கூலி தொழிலாளர்கள் அல்லது மற்ற சிறிய பணிகளில் ஈடுபட்டு, தங்களது வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு, காப்பீடு குறித்து சிந்திப்பதற்கு கூட வாய்ப்பு இல்லை.

வாய்ப்பு இல்லை என்ற நிலை, இன்று வாய்ப்பு இருப்பதாக மாறியுள்ளது. நமது தலித்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்கள், பின்தங்கிய மற்றும் ஏழை மக்கள் மற்றும் நமது சகோதரிகள், மகள்களுக்கு தற்போது முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. மாதத்துக்கு வெறும் ஒரு ரூபாய் செலுத்துவதன் மூலம், மக்களுக்கு ஆயுள் காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. சமூகத்தில் இறைவனின் கருணையில் வாழும் பிரிவினருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் பாதுகாப்பு தற்போது சென்றடைந்தள்ளது. சில மக்களுடன் நாம் பேசுவோம்.

     வயது முதிர்வு என்பது வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம். சில விஷயங்களுக்காக நாம் மற்றவர்களை சார்ந்திருந்த காலம் இருந்தது. அந்த வயதில், நிதி அடிப்படையில் சுயசார்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஓய்வூதிய வசதி கொண்டுவரப்பட்டது. நமது மூத்த குடிமக்களிடம் நாம் தொடர்ந்து ஆசியைப் பெறுவோம். நமது மூத்த மக்களின் வாழ்த்துக்களால், நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். மூத்த குடிமக்களின் நலனில் இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் காரணமாகவே, நிதி விவகாரம் முதல் சுகாதார விவகாரங்கள் வரை அவர்களது வாழ்க்கையை எளிதாக்குவதற்கான பணிகளை இந்த அரசு செய்துள்ளது.

     வயது முதிர்ந்தவர்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை இந்த அரசு வகுத்துள்ளது. கடந்த ஆண்டில் பிரதம மந்திரியின் வய வந்தனா திட்டத்தை (மூத்த குடிமக்களுக்கான நீண்டகால வருமான திட்டம்) அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தின்கீழ், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு 8 சதவீதம் வீதம் உறுதியளிக்கப்பட்ட வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், வட்டி வீதம் அதிகரிப்பது அல்லது குறைவது அனுமதிக்கப்படுவதில்லை.

           வட்டிவீதம் 8%-க்கும் குறைவாக செல்லும்போது, அந்த வேறுபாட்டை அரசே வழங்குகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள், தங்களது விருப்பத்துக்கேற்ப மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வட்டியைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்தத் திட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள், ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதுவரை இந்தத் திட்டத்தின் பலனை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெற்று வருகின்றனர். அதோடு, மூத்த குடிமக்களுக்கு வரி ஊக்கத்தொகை சலுகைகளையும் அரசு வழங்கிவருகிறது. மூத்த குடிமக்களுக்கான வரிவிலக்கு உச்சவரம்பை, ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதுபோக, வட்டி வருமானத்தை கழித்துக் கொள்வதற்கான உச்சவரம்பு, ரூ.10,000-லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், தங்களது டெபாசிட்டுகள் மூலம் கிடைக்கும் வட்டி வருவாயில், ரூ.50,000 வரை வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

 

இதேபோல, மூத்த குடிமக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் பலன்கள் என்ன? இதனை எண்ணிக்கை அடிப்படையில், மூத்த குடிமக்களுக்கான பலன்களை பார்த்தோமானால், நமது அரசு பொறுப்பேற்றதற்கு முன்னதாக, 2013-14-ம் ஆண்டில் மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம், ரூ.5 லட்சமாக இருந்தால், அவர்கள் சுமார் ரூ.13,000 அல்லது ரூ.13,500 அல்லது சுமார் ரூ.13,390 வரி செலுத்த வேண்டியிருந்தது. இருந்தாலும், நமது அரசு பதவியேற்றபிறகு, இந்த ஒட்டுமொத்த வட்டி கணக்கிடும் முறையையும் மாற்றியுள்ளோம்.

2018-19-ம் ஆண்டில் இது வெறும் ரூ.2,600-ஆக குறைந்துள்ளது. அதாவது, இதற்கு முன்னதாக ரூ.13,000-க்கும் அதிகமாக செலுத்த வேண்டியிருந்தது. இது தற்போது வெறும் ரூ.2,600. அதாவது, தற்போது வெறும் மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளது. இது மிகப்பெரும் மாற்றம். நிதி விவகாரங்களில் மட்டுமல்லாமல், மூத்த குடிமக்கள் மற்றும் அவர்களின் நலன் தொடர்பான விவகாரங்களுக்கு திட்டமிடப்பட்ட வகையில் அரசு பணியாற்றியுள்ளது.

     வயது முதிர்ந்த நிலை தொடங்குவதிலிருந்தே உடல்நலன் குறித்த பிரச்சினைகள் தொடங்குவதை நாம் அனைவரும் அறிவோம். சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கான செலவு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே, மக்கள் மருந்தகம் திட்டம் (Jan Aushadhi scheme) தொடங்கப்பட்டது. இதன்மூலம், மருந்துகள், மலிவான விலையில் கிடைக்கும். இதேபோல, ஸ்டென்ட்-களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மூட்டு மாற்று சிகிச்சைக்கான செலவும், ஏற்கனவே இருந்ததைவிட குறைந்துள்ளது.

     இதற்கு முன்னதாக, மூத்த குடிமக்கள், தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற ஏதுவாக, தாங்கள் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை இருந்தது. தற்போது, இதனை எளிதாக்குவதற்காக மக்கள் ஆதாரம் (ஜீவன் பிரமான்) என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான வசதிகள், தங்களுக்கு அருகேயே எளிதாகவும், வசதியாகவும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம். இதன்மூலம், இங்கும், அங்கும் அவர்கள் அலைய வேண்டிய தேவை இருக்காது. இதனால், அவர்கள் ஆரோக்கியமாக வாழவும், சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்தவும் முடியும். இதனை உறுதிப்படுத்துவதற்கான பாதையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

     தங்களது வயதுமுதிர்ந்த காலத்தில், அவர்கள் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது. அவர்களது வாழ்க்கை முழு கவுரவத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக தொடர்ந்து பெற வேண்டும்; இதனை உறுதிப்படுத்துவதற்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தை அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சந்தாதாரர்களாக உள்ளனர். இதில், சுமார் 40% பேர், நமது சகோதரி அர்ச்சனா-வைப் போல பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டத்தின்கீழ், ரூ.4,000 டெபாசிட் செய்யப்படுகிறது.

            நாம் பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தோமேயானால், கடந்த 3 ஆண்டுகளில் பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா திட்டம் (விபத்து காப்பீட்டு திட்டம்), பிரதம மந்திரியின் ஜீவன் ஜோதி திட்டம் (ஆயுள் காப்பீட்டு திட்டம்), அடல் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் மூலம், சுமார் 20 கோடி பேர், பாதுகாப்பு மற்றும் காப்பீட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். பயனாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோரான 52% பேர், நமது கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நமது ஊரகப்பகுதியில் இருப்பவர்கள். 

     ஒவ்வொரு திட்டத்திலும், இரண்டு அடிப்படை நோக்கங்கள் உள்ளன. முதலாவது, ஒவ்வொருவரும் காப்பீட்டு வசதியைப் பெற வேண்டும் மற்றும் குறைந்த அளவு பிரீமியத்தில் அவர்கள் அதைப் பெற வேண்டும். இதன்மூலம், இந்தத் திட்டத்தின் பலனை ஏழைகளில் ஏழை மக்கள் பெற முடியும். ஏழை மக்கள் மீது இந்த அரசு கவனம் கொண்டுள்ளது. ஏழை மக்களின் நலனை வலியுறுத்தி வருகிறது. அவர்களை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

     பல்வேறு திட்டங்களின் மூலம், நெருக்கடியான நேரத்தில் அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் நிதி அடிப்படையில் பலனடைந்தனர், எந்த மாதிரியான ஆதரவைப் பெற்றனர் என்பதை பயனாளிகளிடமிருந்து நாம் கேட்டறிந்தோம்.

     அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள், நம் அனைவருக்கும் உந்துசக்திக்கான ஆதாரமாக உள்ளது என்று நான் நம்புகிறேன். நம் அனைவருக்கும் காப்பீடு எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. இந்த காப்பீட்டுத் திட்டங்களின் பலனைப் பெற வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்களைச் சுற்றி யாராவது இருந்தால், உங்களது அலுவலகத்தில் யாராவது இருந்தால், இந்தத் திட்டங்கள் குறித்து அவர்களிடம் எடுத்துரையுங்கள். இந்தத் திட்டங்களின் பலனைப் பெறுமாறு அவர்களை ஊக்குவியுங்கள்.

            இங்கு கூடியுள்ள அனைத்துப் பயனாளிகளுமே, இந்தத் திட்டத்தின் பலன்களுக்கான வாழும் உதாரணமாக திகழ்கிறீர்கள். இதனைப் பெறுவதற்காக உங்களைச் சுற்றியுள்ள மக்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று உங்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பிரதம மந்திரி சுரக்ஷா பீமா திட்டம், பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டம் ஆகியவற்றுக்கு வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் உங்களை பதிவுசெய்துகொள்ள முடியும் என்று உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்; நீங்களாகவே உங்களை பதிவுசெய்துகொள்ள முடியும்.

     எந்தவொரு வங்கிக் கிளைக்கும் சென்று அடல் ஓய்வூதியத் திட்டத்துக்கு உங்களை பதிவுசெய்துகொள்ள முடியும். பிரதம மந்திரியின் வயா வந்தனா திட்டத்தின் பலன்களை, நாடு முழுவதும் உள்ள எந்தவொரு எல்ஐசி அலுவலகத்துக்கும் சென்று பெற முடியும்.

     மேலும் ஒரு விஷயத்தை உங்களிடம் தெரிவிக்க நான் விரும்புகிறேன். மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதன்மூலம், தங்களது வாழ்க்கையை கவுரவத்துடன் அவர்கள் வாழ முடியும். இருந்தாலும், நமது நாட்டின் மூத்த குடிமக்கள், மரியாதைக்குரிய மக்கள். அவர்கள் ஏராளமான ஊக்குவிப்பை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து நீங்கள் உணராமல் இருக்கலாம். ஏனெனில், இதுகுறித்து வெளியில் பேசுவதில்லை. சமையல் எரிவாயு மானியத்தை ஏன் பெற வேண்டும் என்பது குறித்து செங்கோட்டை கொத்தளத்தில் பேசி, நீங்கள் அதனை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு நான் கோரிக்கை விடுத்தேன். இதனைத் தொடர்ந்து, நாட்டு மக்களில் ஒரு கோடியே 25 லட்சம் பேர், சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

     ரயில் டிக்கெட்டுகளைப் பெறுவதில், தற்போது நமது மூத்த குடிமக்கள் சில சலுகைகளைப் பெறுகின்றனர். இருந்தாலும், ரயில்வே துறை, தனது விண்ணப்பத்தில் இந்தக் கருத்தையும் சேர்த்துள்ளது: “உங்களது மானியத்தை விட்டுக் கொடுக்க விரும்புகிறீர்களா? உங்களது டிக்கெட்டுக்கான ஒட்டுமொத்த தொகையையும் செலுத்த விரும்புகிறீர்களா?”

     இந்தப் பலன்களைப் பெற்றுவரும், நமது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மூத்த குடிமக்கள், தாங்களாகவே முன்வந்து, ரயில் டிக்கெட்டுக்கான மானியம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். தங்களது பயணத்துக்கான முழு கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். இதுகுறித்து பொதுப்படையாக விளம்பரம் செய்யப்படவில்லை. இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கவோ அல்லது இதுகுறித்து நான் இதுவரை விவாதிக்கவோ இல்லை. விண்ணப்பத்தில் மட்டும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. கவுரவத்துடன் வாழ்ந்துவரும் நமது மூத்த குடிமக்கள், இதுபோன்ற மாபெரும் தியாகத்தை செய்துள்ளனர். இது நாட்டுக்கு சிறிய செய்தி கிடையாது.

     இதேபோன்று நமது நாட்டு மக்கள், பல செயல்களை செய்யும்போது, நமது மூத்த குடிமக்கள் இந்த செயல்களை செய்யும்போது, நாம் அனைவரும் சிலவற்றை செய்யலாம், மக்களாகிய உங்களுக்கு நல்ல விஷயங்களை ஒவ்வொரு நாளும் செய்யலாம் என்ற எண்ணம் ஏற்படும். தயவுசெய்து  முன்னோக்கி வாருங்கள், இதன்மூலம், நமது நாட்டில் உள்ள ஏழை மக்களின் நலனுக்காக தொடர்ந்து நம்மால் பணியாற்ற முடியும். இதன்மூலம், நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனை உறுதிப்படுத்த முடியும். நமது மூத்த குடிமக்கள், மிகவும் வயது முதிர்ந்த குடிமக்கள், மதிப்பளிக்கப்பட வேண்டிய அனைத்து மக்களும் கவுரவத்துடன் வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற முடியும். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

*******