Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2018, ஏப்ரல் 24ம் தேதி மத்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் ராஷ்ட்ரீய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2018, ஏப்ரல் 24ம் தேதி மத்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் ராஷ்ட்ரீய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2018, ஏப்ரல் 24ம் தேதி மத்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் ராஷ்ட்ரீய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான 2018, ஏப்ரல் 24ம் தேதி மத்தியப் பிரதேசம் மாண்ட்லாவில் ராஷ்ட்ரீய கிராம் ஸ்வராஜ் அபியான் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்:


மத்தியப் பிரதேச மாநில ஆளுநர் திருமதி.ஆனந்திபென் படேல், மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங், மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், திரு.புருஷோத்தம் ரூபலா, மாநில அமைச்சர் திரு.கோபால், திரு.ஓம்பிரகாஷ், திரு.சஞ்சய், பாராளுமன்ற சக உறுப்பினர்கள் திரு.பக்கன் சிங் குலஸ்தே, திருமதி.சம்பாதியா உய்கி, பாஜக தலைவரும், ஜபல்பூர் எம்பியுமான திரு.ராகேஷ் சிங், மாண்ட்லா ஜில்லா பஞ்சாயத்து தலைவர் திருமதி சரஸ்வதி மராவி அவர்களே. மேலும், இங்கு திரிபுரா துணை முதலமைச்சர் வந்திருப்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். திரிபுரா தேர்தலில் அவர் பாராட்டத்தக்க பணியாற்றி உள்ளார். அங்கு சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. இது திரிபுரா மக்களால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவாகும்.

திரிபுராவின் பெரும்பாலான மக்கள் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். உங்கள் மாநிலத்தில் நீண்ட வரலாற்றை கொண்ட கோண்ட் பழங்குடியினர்களைப் போலவே, திரிபுராவில் பழங்குடி மக்களின் நீண்ட கால ஆட்சி நடந்துள்ளது. திரிபுராவின் புதிய துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.ஜிஷ்ணு தேப் பர்மன், இன்று நம்மிடையே இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதங்களை தூக்கிய அரச குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று அவரை மத்திய பிரதேசத்தின் மண்ணில் வரவேற்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

இன்று நாம் நர்மதைத் தாயின் ஆற்றுப்படுகையில் கூடியிருக்கிறோம். சுமார் 1300 கிமீ நீளமுள்ள நர்மதை தாய் இங்கு இருந்து தொடங்கி, குஜராத்தின் கடலோர பகுதிகளை நோக்கி, கோடிக்கணக்கான மக்கள் மீது அக்கறை செலுத்தி, விவசாய நடவடிக்கைகளுக்கு உதவி செய்து, கால்நடை வளர்ப்பு, கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு உதவி செய்து, பல நூற்றாண்டுகளாக நம் வாழ்வுக்கு ஆதரவளித்து செல்கிறது. அந்த நர்மதை தாயை வணங்குகிறேன்!

இப்போதும், இதற்கு முன்பும் கூட இப்பிராந்தியத்திற்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்தை எனது அதிர்ஷ்டமாகவே நான் கருதுகிறேன். ராணி துர்காவதியின் தைரியமும், தியாகமும் பற்றிய கதைகள் நமக்கு எப்போதும் ஊக்கமளிக்கின்றன. இது நமது நாட்டின் தனித்துவமாகும். ராணி துர்காவதி மற்றும் ராணி அவந்திபாய் ஆகியோரின் கதைகள், சமுதாயத்திற்காக நாம் எப்பொழுதும் போராட வேண்டும் என்பதையும், அந்நிய ஆட்சியாளர்களிடம் இருந்து தோல்வியை ஏற்கக் கூடாது என்பதையும் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளன; நாம் பெருமையுடன் வாழ்வது மட்டுமல்லாமல், இறக்கும் போதும் அதே பெருமையுடன் இருக்க வேண்டும். இன்று இந்த பாரம்பரியத்தை நினைவூட்டியபடி, பழங்குடியின மக்களின் பெருமைகளை கொண்டாடும் இம்மண்ணில் நாம் இந்நிகழ்ச்சியை தொடங்குகிறோம்.

இந்த நாள் பஞ்சாயத்து தினமாகவும் குறிப்பிடப்படுகிறது. மரியாதைக்குரிய பாபுவின் கனவுகளை புரிந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான சந்தர்ப்பம் இது; ஏனெனில் மகாத்மா காந்தி இந்தியாவை அதன் கிராமங்களுடன் அடையாளப்படுத்தினார். மகாத்மா காந்தி கண்டகிராமோதயாவில் இருந்து ராஷ்டிரோதயாகனவை உணர எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார். இன்று பஞ்சாயத்து ராஜ் தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், 2.5 லட்சத்துக்கும் மேலான பஞ்சாயத்துகளுக்கும், அந்த பஞ்சாயத்துகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கும், 30 லட்சத்துக்கும் அதிகமான பஞ்சாத்துகளின் பிரதிநிதிகளுக்கும், அதில் மூன்றில் பங்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள நமது தாய்மார்கள், சகோதரிகளுக்கும் எனது சிறந்த வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கிராமங்களின் அபிவிருத்திக்கும், உங்கள் கிராம மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், உங்கள் கிராமங்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட முழுமையான தீர்வு காணவும் இந்திய அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். எங்களின் கனவுகள் உங்கள் கனவுகளுடன் தொடர்புடையதாக இருக்கும். 125 கோடி இந்தியர்களின் கனவுகளை பூர்த்தி செய்ய நாம் இணைந்திருப்போம். இந்த உணர்வுடன், நாம் கிராமத்தின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

முன்பும் எப்போதும் நாம் மாண்ட்லாவுக்கு வருகை தரும் போது, இப்பகுதி கோண்ட் அரசரால் கட்டப்பட்ட கோட்டையே அடையாளப்படுத்தப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கோண்ட் அரசர்கள் இதுபோன்ற மிகச்சிறந்த கட்டமைப்பை நிறுவினார்கள் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். மன்னராட்சி நடந்த அந்த காலகட்டங்களில், அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் செய்த விஷயங்களும், மக்கள் நலப்பணிகளும் இன்றும் நாம் நினைவு கூர்வதோடு மட்டுமின்றி, அதைப் பற்றி வருங்கால தலைமுறைக்கும் மகத்தான பெருமையுடன் கூறும் வகையில் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒருவகை அமைப்பு அந்த நூற்றாண்டுகளில் இருந்துள்ளது.

நம்மிடத்தில் ஜனநாயகம் உள்ளது. கிராமங்களில் உள்ள மக்கள், நமக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நம் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். தனக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு கால பதவிக்காலத்தில், மக்கள் நலனுக்காக 5 அல்லது 10 அல்லது 15 நல்ல விஷயங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசை இல்லாத பஞ்சாயத்து தலைவர் யாராவது இருக்க முடியுமா? உங்கள் பதவிக்காலத்தில் உங்களின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட குளம், தோண்டப்பட்ட கிணறு, பள்ளிகளில் நடப்பட்ட மரங்களைப் பற்றி 20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் கழித்து, உங்கள் முதிய வயதுப்பருவத்தில், நீங்கள் பஞ்சாயத்து தலைவராக இருந்த போது செய்த இப்பணிகளைப் பற்றி உங்கள் பேரன்களிடமும், பேத்திகளிடமும், தோழர்களிடம் சொல்லக் கொள்ள முடியும். அதோடு, 25 ஆண்டுகள், 30 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தலைமையின் கீழ் செய்யப்பட்ட பணிகள் பற்றி உங்கள் பேரன்களிடமும், பேத்திகளிடமும் கூறும்போது, உங்களுக்கும் முழு திருப்திகரமாகவும் இருக்கும். இதுபோன்ற ஆசை இல்லாத பஞ்சாயத்து தலைவர் யார் இருப்பார்கள்?

உங்கள் இதயத்தில் வலுவான ஆசைகள் வியாபிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். நிர்ணயிக்கப்பட்ட இந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நோக்கம் நம்மில் இருந்தால், அந்த ஆசை மிகவும் வலுவாக இருந்தால், உங்கள் வழியில் வரம் எந்த சவாலையும் அல்லது தடையையும் உங்களால் நிச்சயம் தோற்கடிக்க முடியும்.

சில சமயம், கிராமத்தின் வளர்ச்சி பற்றிய பேச்சு வரும் போது, மக்கள் பட்ஜெட் பற்றி குறிப்பிட்டார்கள். பட்ஜெட் பிரச்னையாக இருந்ததெல்லாம் ஒருகாலகட்டம்; இன்று அது ஒரு பெரிய கவலையாக இல்லை. சரியான பயனாளிக்கு, குறிப்பிட்ட நேர வரம்பிற்குள்ளாக, பணத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் இன்றைய கவலை. கிராமங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளில் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் இருக்க வேண்டும். ஒரு திட்டத்திற்காக செலவிடப்பட்ட பணம் எவ்வளவு என்பதையும், அந்த பணியின் வெளிபாட்டையும் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இங்கே பிரச்னை என்பது நிதிப் பற்றாக்குறை அல்ல, அது முன்னுரிமை அளிப்பது பற்றியது.

இப்போது நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். கிராமங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியருடன் முறையான பள்ளிக் கட்டிடம் உள்ளது; அந்த ஆசிரியர் மாதம் தவறாமல் சம்பளம் பெறுகிறார்; இவை ஒரு வழக்கமான அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் எனது கிராமங்களில் 5 முதல் 25 மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்றால், அவர்கள் போய் விவசாய நிலத்திலோ அல்லது மரத்தின் கீழோ மறைத்து கொண்டு விட்டால், அதன் விளைவு, அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருப்பார்கள், அப்படியென்றால் இதற்கு யாரை குற்றம்சாட்டுவது? இது நிதி பற்றாக்குறை பிரச்சனையா? இது ஆசிரியர்களின் பிரச்சனையா? இல்லவே இல்லை! அங்கே பள்ளிகள் இருக்கின்றன; அப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; பள்ளிக் கட்டணத்தை அரசே செலுத்தி விடுகிறது; மேலும் மாணவர்களுக்கான சீருடைக் கட்டணத்தையும் அரசே கட்டிவிடுகிறது; அதோடு மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படுகிறது என்பதை கிராம மக்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டியது அவசியம். வாருங்கள், எங்கள் கிராமங்களில் ஒரு குழந்தை கூட பள்ளிக்கு செல்லாமல் இருக்கக் கூடாது. கிராமங்களில் ஒரு குழந்தை கூட கல்வியறிவு இல்லாமல் இருக்கக் கூடாது. இந்த உறுதிமொழியை நம்மால் எடுக்க முடியாதா?

வசதி, வாய்ப்புகள் பற்றாக்குறை காரணமாக நமது பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்திருக்கலாம். அந்த சமயத்தில் இருந்த அரசாங்கங்களின் காரணமாகவும், அவர்களுக்கு படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். இருப்பினும், பஞ்சாயத்துகளிலும், மாநிலத்திலும், மத்தியிலும் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மாணவர்களுக்கு குறிப்பாக மகள்களுக்கு கல்வி வழங்குவதில் ஆர்வமாக உள்ளோம். 5 ஆண்டுகள் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இந்த காலகட்டத்தை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும், எந்த ஒரு குழந்தையும் கல்வி அறிவு இல்லாமல் இருக்கக் கூடாது என்பது மக்கள் பிரதிநிதிகளாக நமது கடமை அல்லவா? கற்பனை செய்து பாருங்கள், ஒரு குழந்தை நல்ல கல்வியை பெறுகையில், வளர்ந்த பின்னர், தான் ஒரு விவசாய நிலத்தில் வேலை செய்த ஏழைத் தாயின் மகன் என கூறுவார். விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவனை வெளியில் கொண்டு வந்து, இது நிலத்தில் வேலை செய்வதற்கான நேரமல்ல; அதற்கு பதிலாக பள்ளிக்கு செல்ல வேண்டும், பள்ளியில் படிக்க வேண்டும் என தன்னிடம் கூறியதாகவும் சொல்வார். அதோடு, ‘இன்று நான் டாக்டர், இன்ஜினியர், ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பதற்காக எனது கிராம தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது குடும்பத்தின் வாழ்க்கை மாறி விட்டதுஎன்றும் அவர் கூறுவார். ஒரு தலைவனால் ஒரு தனிநபரின் வாழ்க்கை மாற்றப்பட்டால், முழு நாடும் மாற்றத்தின் திசையில் நகரும்.

எனவே, என் அன்பான பிரதிநிதிகளே, பஞ்சாயத்துராஜ் தினமானது தீர்மானங்களை எடுக்கும் நாளாக இருக்க வேண்டும். சற்று பாருங்கள், இன்றைய காலத்தில், உடல்நலப் பாதுகாப்பு துறையில் பல சாதகமான மாற்றங்கள் வந்துள்ளன. நமது பிள்ளைகளுக்கு போலியோவிற்கு எதிரான தடுப்பூசி சரியான நேரத்தில் கிடைத்தால், அவர்கள் நோயால் பாதிக்கப்பட மாட்டார்கள். நீங்களே சொல்லுங்கள், இன்றும்கூட, 40 அல்லது 50 வயதான நபர், போலியோவின் பாதிப்பால் உடல் ரீதியில் மாற்றுத் திறனாளியாக திவ்யாங்க்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார் தானே. அவரைப் பார்க்கும் போது உங்களுக்கு வேதனை ஏற்படுகிறதா இல்லையா? அவருடைய நிலையை பார்த்து, நீங்கள் அனுதாபமாக உணரவில்லையா? இப்படித்தான் நீங்கள் நிச்சயமாக உணருவீர்கள்.

என் சகோதர, சகோதரிகளே,

ஒருவேளை அந்த 40-50 வயதான நபர், நோய்க்கு எதிராக சரியான நேரத்தில் பாதுகாப்பை பெறக் கூடிய அதிர்ஷ்டம் இல்லாதவராக இருந்திருக்கலாம். ஆனால் இன்று போலியோ தடுப்பூசி உங்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் கொடிய நோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எந்த குழந்தைக்கும் போலியோ வராது. பல்வேறு அரசாங்கங்கள், தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் மூலமாக போலியோவிற்கு எதிரான தடுப்பூசி குறித்த பிரச்சாரத்தை செய்துள்ளன; போலியோ சொட்டு மருந்து தரப்படும் தேதி தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யும் பணியை மேற்கொள்ள நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதியாகதான் இருக்க வேண்டுமா என்ன?

ஆனால் சில நேரங்களில் பிரதிநிதிகள், இந்த வேலையை அதிகாரிகள்தான் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இல்லை எனதருமை சகோதர, சகோதரிகளே. நாம் பொதுமக்களின் வேலையாட்கள், அரசாங்கம் அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். எனவே, நம் சக்தியையும் நேரத்தையும் ஒரே பணிக்காக பயன்படுத்திக் கொண்டால், நம் கிராமங்களின் முகத்தை மாற்றியமைக்க முடியும்.

பொதுவாக மக்கள் பெரிய விஷயங்களைத்தான் பேசுவார்கள், ஆனால் நான் இந்த சிறிய விஷயங்களை வலியுறுத்துகிறேன். ஏனெனில் கிராமங்களை மாற்றக்கூடிய உண்மையான மாற்றங்கள் இந்த சிறிய விஷயங்களைச் செய்வதிலிருந்து வருகிறது.

விவசாய நில மண் ஆரோக்கியமாக இருந்தால், அது விவசாயிக்க மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின் வயிற்றுக்கு தேவையான முழுமையான சாப்பாட்டை தரும் என்ற உண்மையை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஏதோ ஒரு வகையில் அந்த நிலம் மோசமடைந்துவிட்டால், பூமித் தாய் மகிழ்ச்சி அடைய மாட்டாள். அதுபோன்ற நிலத்தை பயன்படுத்தி, போதுமான பயிர்களை உற்பத்தி செய்து தருவதை நிறுத்தி விடுவாள். பட்டினியால் நாம் அனைவரும் மடிந்து விடுவோம். நமது எதிர்கால தலைமுறைகளும் வறுமையில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவார்கள். விவசாயிகள் குழுவைக் கூட்டி, யூரியாவின் கண்மூடித்தனமான பயன்பாடு எவ்வாறு அவர்களின் நிலத்தின் தரத்தை மோசமாக்குகிறது என்பதைப் பற்றி கூற வேண்டுமென நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? சில சமயங்களில், ஒரு விவசாயியைப் பார்த்து மற்றொரு விவசாயியும் தனது நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு பைகள் யூரியாவை அதிகமாக பயன்படுத்துகிறார். சில நேரங்களில் மற்ற விவசாயிகள் பயன்படுத்தும் சிவப்பு பெட்டி உரத்தை பார்த்து தானும் அதை நகலெடுக்கிறார்.

ஒரு கிராமத்திற்கு வழங்கப்படும் 50 பை யூரியாவில் 40 பைகளை மட்டுமே பயன்படுத்துவோம் என கிராமவாசிகள் முடிவு செய்ய முடியாதா? இந்த விதத்தில், கூடுதலாக 10 பைகளுக்காக பணம் சேமிக்கப்படுகிறது என பணத்தை வைத்து பார்த்து மட்டும் யோசிக்காதீர்கள். இந்த வழியில், நாம் மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் ஒரு செயலில் முக்கிய பங்கு வகிக்கின்றோம், யூரியா பயன்பாடு காரணமாக பூமித் தாய் சிதைக்கப்படுகிறாள். அதிகப்படியான யூரியாவை பயன்படுத்தி என்னை கொன்ற வந்த என் மகன், இப்போது தன் தவறை உணர்ந்து விட்டான் என பூமித் தாய் நம் மீது திருப்தி அடைந்து, அவளது ஆசீர்வாதத்தைப் பொழிவாள். இப்போது அவனது வயிற்றை நிரப்ப, நான் அதிக உற்பத்தி செய்வேன். நீங்களே சொல்லுங்கள், நாம் இதை செய்வோமா, வேண்டாமா?

என் பழங்குடி சகோதரர்களை நான் கேட்க விரும்புகிறேன், நாம் இந்த வேலையை செய்யலாமா, வேண்டாமா?

இப்போது அரசாங்கம் ஒரு சிறந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது. இன்று நான் மாண்ட்லா காட்டில் நிற்கிறேன். இங்கு மூங்கில் பயிரிடப்படுகிறது. மூங்கில், மர வகையை சேர்ந்தது என வகைப்படுத்தப்பட்டிருந்த காலம் அது. அப்போது, நான் கோப்புகளை கவனித்துக் கொண்டிருக்கும் போது, எப்படி நீண்ட காலமாக மூங்கிலை ஒரு மரமாக வகைப்படுத்தி இருக்க முடியும் என்பதில் குழப்பம் கொண்டிருந்தேன். இதன் விளைவாக, காட்டில் வாழும் என் பழங்குடி சகோதரர்கள் மூங்கில் வெட்டி அவற்றை விற்க முடியாது. அவர்கள் மூங்கிலை சுமந்து செல்வதை வன அதிகாரிகள் பார்த்தால், சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். இதுதான் அவர்கள் சந்திக்கும் என்கவுன்டர்களுக்கான பிரச்னையின் காரணம்.

எனவே, மர வகையிலிருந்து மூங்கிலை நீக்கி, முக்கியமான முடிவை இந்த அரசு எடுத்துள்ளது. மூங்கில், புல் வகையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளும் தங்களின் நிலத்தில் மூங்கிலை பயிரிட முடியம், அதனை விற்பனையும் செய்ய முடியும். மூங்கிலை பயன்படுத்தி பல்வேறு பொருட்கள் செய்து, அதையும் சந்தையில் விற்பனை செய்யலாம். இது கிராமங்களில் வேலைவாய்ப்புக்கான புதிய வழியை உருவாக்கும்.

நம் நாட்டில் மிகப்பெரிய மூங்கில் காடு இருப்பினும், 12-15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மூங்கிலை இறக்குமதி செய்து வருகிறோம் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஊதுபத்தி, தீக்குச்சி செய்வதற்கும், பட்டம் செய்வதற்கும் கூட நாம் பிற நாடுகளில் இருந்துதான் மூங்கிலை இறக்குமதி செய்கிறோம். நமது வீடுகளை கட்டுவதற்காக, மூங்கிலை வெட்டுவதற்கான அனுமதி கூட நமக்கு இல்லை. இதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நாட்டின் வெளியே பாய்கின்றன.

இப்போது உங்களின் நிலத்தில் நல்ல தரமுள்ள மூங்கில் தாவரங்களை பயிரிட வேண்டுமென என் பழங்குடி சகோதரர்கள் மற்றும் கிராம விவசாயிகளுக்கு வலியுறுத்துகிறேன். அவர்கள் தங்களின் வழக்கமான பயிர்களை பயிரிடுவதுடன், வயல் விளிம்பில் மூங்கில்களை விதைக்க முடியும். இதன் மூலம் அவர்கள் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கூடுதல் வருவாயை சம்பாதிக்க முடியும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அவர்கள இதுவரை பயன்படுத்தாத நிலத்தின் விளிம்புகள் மூலமாக கூடுதல் வருமானத்தை பெறலாம்.

இங்குள்ள பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கும் மற்ற அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுகிறேன். விவசாயத் துறையில் நமது விவசாயிகள் சுய சார்புடன் இருப்பதை நாம் உருவாக்க முடியுமா? இமாச்சலப் பிரதேச ஆளுநர் தேவ் விரத் அவர்கள், பூஜ்ய பட்ஜெட் விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு கற்பிப்பதற்காக நேரத்தை செலவிடுகிறார். எனது பஞ்சாயத்து பிரதிநிதிகளும் இதுபோன்ற விஷயங்களை கற்றுக் கொண்டு, அவர்களின் கிராமங்களில் வாழும் விவசாயிகளை தயார் படுத்த முடியுமா, முடியாதா?

தற்போது நாங்கள் தேன் உற்பத்தி மற்றும் தேனீ வளர்ப்பிற்கான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறோம். ஒரு சிறிய விவசாயி தனது வேளாண் நிலத்தில் தேனீ வளர்ப்பிற்காக 50 பெட்டிகள் வைத்திருந்தால், அவர் தேன் உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ரூ .1.5-2 இலட்சம் வருவாய் பெற முடியும். அவர் அந்த தேனை விற்க முடியாமல் போனாலும் கூட, அதை அவரே உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் அவரது உடல்நலத்திற்கு பயனளிக்கும். நீங்களே சொல்லுங்கள், விவசாயிகளின் வருமானம் அதிகரிக்குமா இல்லையா? இந்த வேலையை பட்ஜெட் மூலமாகத்தான் நிறைவேற்ற வேண்டும் என்பது அவசியமா? இல்லவே இல்லை! இந்த விஷயங்களை ஒருவர் தனது சொந்த முயற்சியில் தானாகவே செய்ய முடியும். நாம் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA) கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நிதியை அரசு வழங்குகிறது. MGNREGA திட்டத்தின் கீழ் பணிகளை 2-3 மாதங்களுக்கு நிறைவேற்றுவதாக தீர்மானித்தால், அதாவது ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்தில் நிறைவேற்ற வேண்டுமெனில், அதற்கு முன்பாகவே அப்பணியை முடித்து தர வேண்டுமென நாம் முடிவு செய்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு குளம் ஆழப்படுத்துதலோ அல்லது தடுப்பணை மூலமாக தண்ணீரை நிறுத்தும் பணியோ அல்லது மழைநீர் பாதுகாக்கும் பணியையோ உதாரணமாக கூறலாம். MGNREGA நிதியை குறிப்பிட்ட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்களே சொல்லுங்கள், கிராமத்தின் நீர் ஆதாரம் பாதுகாக்கப்பட்டால், நிலத்தடி நீர் மட்டம் கீழே இறங்கி விடுமோ என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை, அது மிகப்பெரிய அளவில் உயரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீர் பிரித்தெடுத்தல் செலவு குறைக்கப்படுமா இல்லையா? எனவே, வருங்காலத்தில் குறைவான மழை இருந்தால் கூட, பாதுகாக்கப்பட்ட நீரில் இருந்து விவசாயத்திற்கு புதிய வாழ்வு கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில் கிராமத்தில் பட்டினியே இருக்காது.

திட்டங்களிலோ அல்லது நிதியிலோ பற்றாக்குறை என்பதைப் பற்றி பிரச்சினை இல்லை. எனவே கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் அல்லது விவசாயத்தை நவீனமயமாக்கல் பற்றிய வலுவான முடிவுகளை எடுக்க கிராமிய பிரதிநிதிகளிடம் நான் வலியுறுத்த விரும்புகிறேன். இத்துறைகளில் புதிதாக ஒரு பட்ஜெட் போட தேவையில்லை. புதிய பட்ஜெட் இல்லாமல் கூட கிராம மக்கள் முன்னோக்கி செல்லவும், மாற்றங்களை கொண்டு வரவும் முடியும்.

நான் மற்றொரு அம்சத்தையும் வலியுறுத்த விரும்புகிறேன். ஜன் தன் யோஜனா என்ற வங்கிக் கணக்குகளை தொடங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இரண்டாவது திட்டம் 90 பைசா பிரீமியம் கொண்ட காப்பீடு தொடர்பானது. மிகுந்த வறுமையில் வாழும் ஏழைகள் கூட 90 பைசாவை செலவிட முடியாது என்று நான் நம்பவில்லை. பீடிக்கு அடிமையாக இருப்பின், அந்த பீடிக்காக அவர் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆவது செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, அவரால் காப்பீட்டுக்காக நிச்சயம் 90 பைசாக்களை கொடுக்க முடியும்.

நீங்கள் இங்கு மேடையில் பார்த்திருப்பீர்கள், ஒரு பழங்குடி சமூகத்தை சேர்ந்த தாய்க்கு ரூ.2 லட்சத்திற்கான சலுகையை நான் வழங்கினேன். எதற்காக அந்த ரூ.2 லட்சம்? அவர் 90 பைசா பிரீமியத்தில் ஆயுள் காப்பீட்டை வாங்கியிருந்தார். அவருடைய குடும்பத்தார் அதை எதிர்த்தார்கள். துரதிருஷ்டவசமாக குடும்ப தலைவர் இறந்துவிட, இன்று அவர் ரூ.2 லட்சம் காப்பீடு பணத்தை பெற்றிருக்கிறார். 90 பைசாவுக்கு நன்றி. ஏழை தாய் ரூ.2 லட்சம் பெற்றிருக்கிறார். இப்போது நீங்கள் என்னிடம் சொல்லுங்கள், இந்த முன்மாதிரி திட்டம், ஒருநபரின் மோசமான கட்டத்தில் உதவி செய்யுமா, செய்யாதா?

என் பிரதிநிதிகளே மற்றும் பஞ்சாயத்துதலைவர்களே, ஜன்தன் வங்கி கணக்கு, குறைந்தபட்ச பிரீமியம் 90 பைசா கொண்ட காப்பீடு இல்லாமல் கிராமத்தில் எந்த ஒரு குடும்பத்தினரும் இருக்க மாட்டார்கள். அந்த குடும்பம் துரதிருஷ்டவசமான சம்பவத்தை சந்திக்க நேர்ந்தால், ரூ.2 லட்சம் நிதி உதவி கிடைக்கும். கிராமத்திற்கு அந்த குடும்பம் ஒரு சுமையாக இருக்காது. இந்த வேலையை உங்களால் செய்ய முடியாதா?

சகோதர, சகோதரிகளே,

நான் மூன்று விஷயங்களில் உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்

ஒன்று ஜன் தன், இரண்டாவதாக வன் தன் மற்றும் மூன்றாவது கோபர்தன். இந்த மூன்று விஷயங்கள் மூலம் கிராமங்களில் ஒரு பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வர முடியும். ஜன் தன் யோஜனா உதவியுடன் ஒவ்வொரு குடிமகனையும் பொருளாதார கட்டமைப்புக்குள் கொண்டு வர முடியும்.

வன் தன்நமக்கு ஏராளமான இயற்கை வளங்களும் வன வளங்களும் உள்ளன. ஒருகிராமத்தில் வேப்ப மரங்கள் இருந்தால், அவற்றின் மதிப்பை புரிந்து கொள்வதன் மூலம், பெண்கள் குழு வேப்ப மரங்களில் இருந்து விழும் வேப்பங்காய்களை சேகரித்து, அதன் எண்ணெயை பிரித்தெடுத்து, அவற்றை யூரியா பூச்சாக பயன்படுத்தலாம். இது பெண்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான ஒரு புதிய ஆதாரமாக இருக்கும். ஒருகாலத்தில் மண்ணில் வீணாக கொட்டப்படும் வேப்பங்காய்களை இப்போது ஒரு வருவாய் ஆதாரமாகக் கொள்ளலாம்இதுவே வன் தன். இந்த மாற்றங்களை நம்மால் கொண்டு வர முடியாதா?

அரசாங்கத்திலும், வனத்திலும் வாழும் எனது அனைத்து பழங்குடியின சகோதர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன், இன்று மத்திய பிரதேச மாநில அரசு வன் தன் என்ற பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, பழங்குடியின சமுதாயத்தினருக்கான மிகப்பெரிய திட்டம் ஒன்றை துவக்கி இருக்கிறது.

மூன்றாவதாக, கோபர்தன் யோஜனாகிராமங்களில் ஏராளமான கால்நடைகளும் உள்ளன. அவர்களதுகோபர்அல்லது கழிவுகளை விஞ்ஞான ரீதியில் பயன்படுத்தப்படவில்லை. கிராமங்களின் கழிவுப்பொருட்களையும் குப்பைகளையும் ஒரு சொத்தாக நாம் பார்த்தால், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரங்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த வழியில், யூரியா இல்லாமல் கூட, கிராமத்தில் நல்ல தரமான உரத்தை தயாரிக்க முடியும். மேலும், கிராமங்களை பாதிக்கும் நோய்களையும் இது தடுக்கிறது, பணமே இல்லாமல் இதை செய்யவும் முடியும். அரசாங்கத்தின் திட்டங்களை சாதகமாக பயன்படுத்தி இதை செய்ய முடியும்.

ஆகையால் சகோதரர்களே மற்றும் சகோதரிகளே,

தாயார் துர்காவதியின் ஆசீர்வாதத்துடன், மண்ட்லா, நர்மதை தாயின் மண்ணில் இருந்து வந்த 2.4 லட்சம் கிராமங்களிடமும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிடமும் கேட்டுக் கொள்கிறேன், இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு விழாவை குறிக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக உறுதிமொழியை அனைவரும் முன்வந்து ஏற்க வேண்டும். அந்த ஆண்டு, அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளையும் குறிக்கிறது. சிறந்த கிராமங்கள் வேண்டுமென்ற காந்தியின் கனவை பூர்த்தி செய்ய நம் அனைவருக்கும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். கிராமங்களை மாற்றுவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். நாம் அனைவரும், கிராமங்களின் நிதியை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

 

நான் இன்று ஒரு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். அதில் ஒரு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், குடிமக்கள் தங்களின் செல்போன் மூலமாக அரசின் திட்டப்பணிகளை கண்காணிக்க முடியும், அத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும், எந்த காரணத்திற்காக அந்த பணி ஒதுக்கப்பட்டது, அந்த பணி முடிக்கப்பட்டு விட்டதா இல்லையா, முடிக்கப்பட்டது என்றால் எந்த இடத்தில் செய்யப்பட்டுள்ளது, எங்கு பணி நடக்கிறது, நடக்கப் போகிறது என்ற தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு பார்த்தோமானால், ஒரு கிணறு வெட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அந்த இடத்தில் நிறைவேற்றப்படவில்லை எனில், நீங்கள் அதைப் பற்றி அரசு அதிகாரிகளிடம் கேள்வி கேட்கலாம். அடுத்த ஒரு மாதத்திற்குள் அவர்கள் அதை செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். நீங்கள் சொல்லுங்கள், இந்த முறையில் கணினி வெளிப்படையானதா இல்லையா? மேலும், நேர்மையான சூழலை கிராமங்களில் நிலவச் செய்யும். அரசாங்க அதிகாரிகள் பொறுப்புடன் இருப்பார்கள்.

என்அன்பான சகோதர, சகோதரிகளே,

நாம் சரியான நேரத்தில் சரியானதை செய்ய வேண்டும். இந்த 5 ஆண்டு கால உங்கள் ஆட்சி, ஒரு பொற்காலமாக மாறும். கிராமத்தின் நிலையை மாற்றியமைத்த உங்கள் பணியை கிராமம் என்றென்றும் நினைவில் கொண்டிருக்கும். இந்த தீர்மானத்துடன் நாம் தொடர்ந்து முன்னேறுவோம். இன்று இங்கே ஒரு எல்பிஜி தொழிற்சாலையை திறக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது எரிவாயு சிலிண்டர்களுக்கான தொழிற்சாலைகளை நிறுவுகிறோம். இந்த தொழிற்சாலை ரூ.120 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ளது. இனி சத்னா, ரேவா, சிங்க்ராலி, ஷாதோல், உமாரியா, திண்டோரி, அனுப்பூர், மாண்ட்லா, பாலாகட், ஜபல்பூர் கத்னி, தாமோ போன்ற அருகில் உள்ள மாவட்டங்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணி எளிதாகி விடும். இங்குள்ள மக்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடனே இப்பணியை செய்வதற்கான வாய்ப்பை நான் பெற்றுள்ளேன்.

சகோதர, சகோதரிகளே,

நாம் பல தலைப்புகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் கிராமங்களில் உள்ள ஜெய் ஜவான், ஜெய் கிஷான், ஜெய் விக்யான்என்ற தாரக மந்திரத்துடன் நாம் அனைவரும் முன்னேற வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

மகள்களை துன்புறுத்தும் பயங்கரமான மனிதர்களுக்கு மரண தண்டனையை வழங்கும் ஒரு சட்டத்தை இந்திய அரசாங்கம் இப்போது கொண்டு வருவதாக சிவ்ராஜ் அவர்கள் கூறக் கேட்டேன். முதலமைச்சர் இதைப் பேசிய போது, முழு அரங்கத்திலும் மக்களின் கரகோஷம் எதிரொலித்ததை நான் பார்த்தேன். இந்த கைதட்டல் மறைந்து போகாது. டெல்லியில் உள்ள அரசு, முதலில் உங்கள் இதயத்தை கேட்டு, பின்னர் முடிவுகளை எடுக்கிறது.

நமது குடும்பத்தில், நம் மகள்களை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கூறுவேன். நமது குடும்பத்தில் உள்ள மகள்களுக்கு முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு பொறுப்பாளியாக இருக்க வேண்டுமென நமது மகன்களுக்கும் கற்பிக்க தொடங்கினால், நமது மகள்களை பாதுகாப்பாக வைத்திருப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. கொடூரமான குற்றத்தை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். ஆனாலும், நமது குடும்பங்களிலும், நம் மகள்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பொறுப்பை நாம் எடுத்தாக வேண்டும். இதற்காக நாம் ஒரு மக்கள் இயக்கத்தை தொடங்க வேண்டும். நாம் அனைவரும் இத்தகைய சிக்கலை நாட்டை விட்டு வெளியேற்றுவோம். இத்தகைய விஷயங்களை நீங்கள் முன்னெடுக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

அரசாங்கம் ஒரு முக்கியமான பணியைத் திட்டமிட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, சுதந்திரத்திற்கான போராட்டம் ஒரு சிலருக்கும் மற்றும் சில குடும்பங்களுக்கும் மட்டுமே என வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையான தியாகங்களின் கதைகள் வரலாற்றின் பக்கங்களில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

காலனித்துவ காலத்தில் 1857க்கு முன்பும் கூட பலஆண்டுகளாக, இந்தியாவில் இருந்து பல முன்னோர்கள் சுயமரியாதை, கலாச்சாரம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றிற்கு தியாகங்களை செய்துள்ளனர். 1857-க்குப் பிறகும் கூட, எனது பழங்குடியின சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தியாகங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை வெகு சிலர் மட்டுமே அறிவார்கள். ஏனெனில் அவை மக்களின் நினைவில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கௌரவத்திற்காக அவர்கள் பல பெரிய போர்களை நடத்தியுள்ளனர். துர்காவதி, அவந்திபாய், பிர்ஸா முண்டா போன்ற தலைசிறந்த நபர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

 

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடி சமூகத்திலிருந்து வந்த மூதாதையர்களுக்காக ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டும் என்பது தான் எனது கனவு. பள்ளி மாணவர்களை இந்த அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்; நமது நாட்டு கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்காக தியாகம் செய்த பழங்குடி சகோதரர்களைப் பற்றி அவர்களிடம் விளக்க வேண்டும். இப்பணி எதிர்காலத்தில் மத்தியப்பிரதேசத்திலும் கூட மேற்கொள்ளப்படும்.

ஆகையால் என் சகோதர மற்றும் சகோதரிகளே,

மாண்ட்லாவின் மண்ணிலிருந்து துர்காவதி தாயை நினைவு கூர்ந்து, பஞ்சாயத்து ராஜ்ஜியை மேம்படுத்துவதற்காக பழங்குடி திருவிழாவை ஏற்பாடு செய்த மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாயத்து ராஜ்கள் நம் கிராமங்களையும், தாய் மண்ணின் நலனுக்காகவும், ஜனநாயகத்திற்கும் வலு சேர்க்கும். திரு. தோமர், ருபாலா மற்றும் இத்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும், ஒட்டுமொத்த நாட்டில் கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தை தொடங்குவதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏப்ரல் 30 ம்தேதி, ஆயுஷ்மான் பாரத் பற்றி ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும். மே 2 ம் தேதி விவசாயிகளுக்கு ஒரு பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்படும். அதில், கிராம வாழ்க்கை தொடர்பான அனைத்து பிரச்னைகளும் எடுத்துக் கொள்ளப்படும். அந்நிகழ்ச்சியில் நீங்கள் அனைவரும் புதிய உற்சாகம் மற்றும் நம்பிக்கையுடன் பங்கேற்க வேண்டுகிறேன்.

இந்த எதிர்பார்ப்புடன், உங்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டம் உரித்தாகட்டும் என விரும்புகிறேன். மிக்க நன்றி!