Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாமில் போகிபீல் பாலத்தின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

அசாமில் போகிபீல் பாலத்தின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

அசாமில் போகிபீல் பாலத்தின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்

அசாமில் போகிபீல் பாலத்தின் துவக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் சாராம்சம்


பேராசிரியர் ஜெகதீஷ் முகி அவர்களே, முதல்வர் சர்பானந்த சோனோவால் அவர்களே, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேம கண்டு அவர்களே, சகோதரர் ஹேமந்த் விஷ்வ ஷர்மா அவர்களே, எனது அமைச்சரவை சகா சகோதரர் ரஜேன் கோஹைன் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் பிரமுகர்களே, எனது சகோதர சகோதரிகளே,

உங்களது ஆசிகளை எனக்கு அளிப்பதற்காக பெருமளவில் இங்கு வந்திருக்கும் மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒட்டு மொத்த வடகிழக்கு இந்தியாவிற்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். நாட்டின் நீண்ட சாலை ரயில் பாலத்திற்காக நான் உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.

பாலத்திலிருந்து இப்போதுதான் வந்தேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

ஒட்டு மொத்த உலகமும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறது. அசாம் உள்ளிட்ட வடகிழக்குப் பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் எனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். அஹோம் இனத்திற்காக தன்னை அர்ப்பணித்த ஸ்வர்கதேவ் சலங் சுகபாவை நான் வணங்குகிறேன். லச்சிட் போர்புகன், பிர் சிலராய், ஸ்வர்கதேவ் சர்பானந்த சின்ஹா, பிரங்கனா சத்தி சதானி, போடோசா, வீர் ராகவ் மோரன், மானிக் ராஜா, சத்தி ஜோய்மோட்டி, சத்தி ராதிகா போன்ற துணிச்சல்மிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன்.

விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து அசாமையும், இந்தியாவையும் கட்டமைப்பது வரையில் பலர் பங்களித்திருக்கிறார்கள். அரசியலிலிருந்து சமூக சேவை வரை, கல்வி, தொழில்நுட்பம், விளையாட்டுக்கள் போன்ற துறைகளில் பங்களித்து அசாமையும், நம் நாட்டையும் பெருமைகொள்ள செய்த ஒவ்வொருவருக்கும் எனது அஞ்சலிகள்.

அசாமின் நைட்டிங்கேலான மறைந்த பத்மஸ்ரீ தீபாலி பர்தக்கூர் அவர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அசாம் மக்களுக்காக குரல் எழுப்பிய அவரை நாம் இழந்து விட்டோம்.

நண்பர்களே

நமது நாட்டின் சிறந்த நிர்வாகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, தமது அன்பிற்குரிய மிகச் சிறந்த ஆளுமையான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாள் சிறந்த நிர்வாக நாளாக நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது.

சகோதர சகோதரிகளே

சிறந்த நிர்வாகம் என்பது மக்களிடம் பரிவு காட்டுவது. எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பண்பாடு. சிறந்த நிர்வாகமானது சுய ராஜ்யத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அப்பொழுது நாட்டின் வளமான எதிர்காலத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும், சுயநலங்களை மீறி தீர்மானங்கள் எடுக்கப்படும். சிறந்த வாழ்க்கை உருவாக்கப்படும். “அனைவரும் ஒன்றுபடுவோம், அனைவரும் இணைவோம்” என்ற முழக்கத்துடன் பணியாற்றும் போது சிறந்த நிர்வாகமானது சுயராஜ்யத்தை நோக்கிச் செல்லும். கடந்த நான்கரை ஆண்டுகளாக மத்திய அரசும், தற்போது அசாம், அருணாச்சலப் பிரதேச அரசுகளும் இந்த திசையில் அயராது பாடுபட்டு வருகின்றன. இன்று, சிறந்த நிர்வாகத்தின் உன்னத குறியீடான, வரலாற்றுச் சிறப்புமிக்க போகிபீல் ரயில் சாலைப் பாலத்தின் திறப்பு விழாவில் நாம் கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் மிக நீண்ட ரயில் சாலைப் பாலமான இது முழுக்க எஃக்கினால் உருவாக்கப்பட்டுள்ளது. நீருக்கு மேலே 30 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நமது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் திறனை பறைசாற்றுகிறது. ரயிலின் வேகத்தையும், பளுவையும் தாக்குப் பிடிக்கக் கூடிய இந்த பாலம் நமது நாட்டின் உத்திசார் ஆற்றலையும் வலுப்படுத்தும்.

சகோதர சகோதரிகளே

இது இந்த பிராந்தியத்தின் மக்களை இணைக்கக் கூடிய பாலம் மட்டுமல்ல, அசாமுக்கும், அருணாச்சலப்பிரதேசத்திற்கும் இடையேயான தூரத்தையும் குறைக்கிறது. இடா நகருக்கும், திப்ரூகருக்கும் இடையிலான தூரம் 700 கிலோ மீட்டரிலிருந்து 200 ஆக குறைந்துள்ளது. 24 மணி நேர ரயில் பயணம் தற்போது 5-6 மணி நேரமாக சுருங்கி உள்ளது.

முன்பு தேமாஜி, லக்கிம்பூர் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தின் பிற மாவட்ட மக்கள் பிரம்மபுத்திரா ஆற்றை கடப்பதற்கு படகுகளை பயன்படுத்தினார்கள்; இல்லையென்றால் நாள் முழுக்க பல ரயில்கள் மாறியும், சாலையிலும் பயணிக்க வேண்டியிருந்தது. இன்று துவக்கப்பட்டுள்ள ரயிலானது 14 பெட்டிகளுடன் நேரடியாக செல்லக் கூடிய ரயிலாகும்.

தற்போது ஆற்றின் வடக்கு கரையில் வசிப்பவர்கள், சில நிமிடங்களில் திப்ரூகர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்தை அடைந்து விடலாம்.

இந்தப் பாலத்தைக் கட்டுவதற்காக, கடினமான சூழ்நிலையில் அல்லும், பகலும் பாடுபட்ட பொறியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

சென்ற மாதம் பூபென் அசாரிகா பாலத்தை திறந்து வைத்தேன், இன்று (25.12.2018) போகிபீல் பாலத்தை திறக்க வந்துள்ளேன், இது நாலரை ஆண்டுகளில் பிரம்மபுத்திராவின் மீது கட்டப்பட்டுள்ள 3-வது பாலம். மேலும் 5 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் பிறகு பிரம்மபுத்திராவின் தெற்கு, வடக்கு கரைகள் சிறப்பான இணைப்பை பெறும்.

சகோதர சகோதரிகளே

2014-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின், இந்தத் திட்டத்திற்கு தடையாக இருந்தவற்றையெல்லாம் அகற்றி, பணியை விரைவுபடுத்தி தற்போது போகீபீல் பாலம் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முந்தைய அரசு பல்வேறு திட்டங்களை பாதியில் நிறுத்தியது. எமது அரசு நாடு பெற்று வரும் புதிய தலைமுறை கட்டமைப்பு வசதிக்கு பெயர் பெற்றுள்ளது.

நல்ல ஆளுகை தினமான இன்று நாட்டின் பணிப் பண்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளோம் என்பதை சொல்வதில் பெருமையடைகிறேன்.

இன்றைய நிலையில் திட்டங்களை உரிய காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட செலவில் நிறைவு செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இத்தகைய பண்பாட்டைக் கடைபிடிக்கும் சோனோவால் அரசுக்கு எனது பாராட்டுக்கள்.

அசாமில் ரூ.3000 கோடி மதிப்பிலான 700 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் நான்கரை ஆண்டில் முடிவடைந்துள்ளது. மேலும் ரூ.6000 கோடி மதிப்பிலான 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. விமான நிலைய முனைய கட்டிடம், மின்சார ரயில் பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அல்லது நிறைவடையும் நிலையில் உள்ளன.

நண்பர்களே

கிழக்கு இந்தியா முன்னேறினால் இந்தியா முழுவதும் முன்னேறுகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். வடகிழக்கு இந்தியா, கிழக்கு இந்தியாவின் முக்கியப் பகுதி. எனவே அசாம் உள்ளிட்ட மொத்த வடகிழக்குப் பகுதியிலும் அடிப்படை வசதி விரிவாக்கப்படுகிறது. வடகிழக்கு பகுதியில் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான 5500 கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 2500 கிலோ மீட்டர்தூரத்திற்குப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சர்வதேச சாலைப் போக்குவரத்து கிழக்கு நோக்கிய கொள்கையின் கீழ் 1000 கிலோ மீட்டருக்கும் கூடுதலான சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 800 கிலோ மீட்டர் சாலைப் பணிகள் பல்வேறு நிலைகளில் விரிவு செய்யப்பட்டு வருகின்றன. ரயில் பாதைகளைப் பொறுத்தவரை, வடகிழக்கு இந்தியாவின் மாநில தலைநகரங்கள் அனைத்தையும் இணைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளில் இவை அகல ரயில்பாதை மூலம் இணைக்கப்படும். ரூ.47 ஆயிரம் கோடி செலவில் 15 புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1000 கிலோ மீட்டர் ரயில்பாதை அதாவது வடகிழக்கின் மொத்த ரயில் பாதையும் அகல ரயில்பாதையாக மாற்றப்படுகிறது. முன்னதாக ரயில் பாதைகளை அமைப்பது அல்லது அவற்றை அகல ரயில்பாதையாக மாற்றுவது ஆகியன ஆண்டுக்கு 100 கிலோ மீட்டர் என்ற அளவிலேயே நடைபெற்று வந்தன.  கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆண்டுதோறும் 350 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன அல்லது அகல ரயில் பாதையாக மாற்றப்படுகின்றன. மேலும் 19 நீர்வழிப்பாதைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன அசாமிலும் கூட பிரம்மபுத்திரா மற்றும் பாரக் நதிகளுக்கு இடையே சிட்டகாங்குக்கும், மோங்லா துறைமுகங்களுக்கும் இடையே புதிய உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சகோதர சகோதரிகளே,

அடிப்படை வசதித் திட்டங்கள் தவிர மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அமல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் அசாம் மாநில அரசு விரைவுபடுத்தி வருகிறது. இதனையடுத்து குழந்தைகளின் கல்வி, இளைஞர்களின் வருமானம், முதியோருக்கான மருந்துகள், விவசாயிகளுக்கான பாசன வசதி, மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் ஆகியன உறுதி செய்யப்படுகின்றன. உஜ்வாலா திட்டத்தின் கீழ்அசாமின் ஏழை சகோதரிகளுக்கு 24 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அசாமில் 4 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு பயன்படுத்திய வீடுகள் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்து தற்போது 2 மடங்காக அதாவது 80 சதவீதமாக உயர்ந்துள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் அசாமில் 32 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தூய்மை சதவீதம் 38-லிருந்து 98 ஆக உயர்ந்துள்ளது. சவுபாக்யா திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குள் அசாம் மாநிலத்தில் 12 லட்சம் குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அசாம் மாநில மின்மயமாதல் நிலைமை 50 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சகோதரர்களே சகோதரிகளே

மத்திய அரசு அமல்படுத்தும் திட்டங்களை அசாம் மாநில அரசு விரைவுபடுத்தி வருகிறது. அசாமில் தற்போது சமையல் எரிவாயு இணைப்பு உள்ள வீடுகள் 80 சதவீதமாக உயர்ந்துள்ளன. இலவச மின்சார வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 12 லட்சம் ஆகியுள்ளது. ஜன்தன் திட்டத்தின்படி 7 லட்சம் தொழிலாளர்களுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஏழை மக்களை அதிகம் பாதிக்கக் கூடியது ஊழல். எனவே இந்தப் பிரிவு மக்கள் தங்கள் உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் வகையில் கருப்புப் பணத்துக்கும், ஊழலுக்கும் எதிராக அரசு பாடுபட்டு வருகிறது.

சகோதர சகோதரிகளே

முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ரூ. 7 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ வசதி குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளி இப்போது சிறையில் உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன் நினைத்துக் கூட பார்க்க முடியாத இதனை சாதித்தது எமது அரசின் பணிப்பண்பாடு.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருந்தால் ஊழலுக்கு முடிவு கட்டப்படுகிறது. இதன் பலன் ஒவ்வொரு துறையிலும் எதிரொலிக்கிறது. இதனால் ஹிமாதாஸ் போன்ற சாதனையாளர்கள் தோன்றியுள்ளனர். அமைப்புகளை மாற்றியமைத்து நாட்டுக்கு அதிகாரம் அளிக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். எதிர்காலத்திற்கு தேவையான சாலைகள், பள்ளிகள் போன்றவை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகின்றது.

நண்பர்களே

அடல்ஜி ஏற்படுத்திய அடித்தளத்தில் புதிய இந்தியாவை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். உங்களுடைய ஆசிகளுடன் அன்னை இந்தியாவை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். இங்கு பெரும் எண்ணிக்கையில் வந்திருந்து ஆசி வழங்கிய உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

மிக்க நன்றி

உங்கள் இரு கரங்களையும் மேலே தூக்கி என்னுடன் சேர்ந்து உரத்த குரலில் சொல்லுங்கள்.

அன்னை இந்தியாவுக்கு வெற்றி உண்டாகட்டும்

அன்னை இந்தியாவுக்கு வெற்றி உண்டாகட்டும்

அன்னை இந்தியாவுக்கு வெற்றி உண்டாகட்டும்

அன்னை இந்தியாவுக்கு வெற்றி உண்டாகட்டும்