பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை சந்தையால் தீர்மானிக்கப்படும் விலை இல்லாத ஒளிக்கற்றை வரிசையை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்வதை எளிமைப்படுத்துவதற்கான கொள்கையில் மாறுதல்களை மேற்கொள்ள தனது ஒப்புதலை வழங்கியது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, ஒளிக்கற்றைகளை பகிர்ந்து கொள்வது, ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்வது போன்றவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஒளிக்கற்றைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்த முயற்சி உதவும்.
ஏலத்தால் தீர்மானிக்கப்பட்ட விலை இல்லாத நிலையில் ஒளிக்கற்றைகளை நிர்வாக ரீதியாக ஒதுக்கீடு செய்வதை எளிமைப்படுத்த, மிகச் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்ட காப்பு விலையானது தற்காலிக விலையாக எடுத்துக் கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து நடைபெறும் ஏலத்தின் மூலம் ஏலம் அடிப்படையிலான விலை கிடைக்கும்போது, ஏற்கனவே பெறப்பட்டு வரும் இந்த தற்காலிக விலையானது ஏலத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். இது இவ்வாறு எளிமைப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து அளவிற்கு ஏற்ற வகையில் அமலுக்கு வரும்.
இத்துறையில் ஒழுங்கமைப்பான டிராய் (தொலைத் தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம்) அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய நடவடிக்கையின் மூலம் தோராயமாக ரூ. 1300 கோடி கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.