பி.எம்.இந்தியா
குஜராத் மாநிலத்தில் நிலவும் வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திருமதி. ஆனந்திபென் பட்டேல், மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நீரை சேமிப்பது, நீர் மீளூட்டம், புதிய குடிநீர் வடிகால்களை உருவாக்குவது ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளை முதலமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். அப்போது அவர், மாநிலத்தில் 1.68 லட்சம் தடுப்பணைகள், 2.74 லட்சம் வேளாண் குளங்கள் அமைக்கப்பட்டதாகவும், 1.25 லட்சம் பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி நீரை சேமித்ததாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம், 42.3 பில்லியன் கனஅடி நீரை சேமித்ததால், 6.32 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயனடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் 77 சதவீத குடும்பத்தினருக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக போதுமான அளவு மழைப்பொழிவு இல்லாத நிலையிலும், மாநில நீர்த் தொகுப்பில் நீரை சேர்க்க மேற்கொண்ட பணிகளால், தொலைதூரப் பகுதிகளுக்கு குடிநீரை விநியோகிக்க 568 டேங்கர்கள் மட்டுமே தேவைப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்த முயற்சிகளுக்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர், டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியதன் தேவையை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நுண்ணீர் பாசனத்தில் குஜராத் மாநிலம் சிறந்த முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. 3,789 கிராமங்கள் முழுமைக்கும் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் நீண்டகால சராசரி மழை அளவில் 80 சதவீதம் அளவுக்கு மழை குறைந்துள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் போதிய மழைப்பொழிவு இல்லாத நிலையிலும், மாநில அரசு மேற்கொண்ட முயற்சியின் மூலம், நிலைமையை ஓரளவுக்கு சமாளித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வறட்சி நிலவியபோதும், மாநிலத்தில் வேளாண் உற்பத்தி, இயல்பான அளவில் 95 சதவீதம் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்தார் சரோவர் நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ், விரிவான நீர்வழித் தடங்களை உருவாக்கியதன் மூலம், வேளாண் பயிர்கள் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது. மேலும், விவசாய வருமானமும் அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார். இந்தக் கருத்துக்களை கேட்டுக் கொண்ட பிரதமர், தோட்டக்கலை மற்றும் பணப் பயிர் உற்பத்தியில் மதிப்பைக் கூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் மீன்பிடி பணிகள், தேனீ வளர்ப்பு, முத்து உற்பத்தி, கடற்பாசி உற்பத்தி ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில், மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்றும் முடிவுசெய்யப்பட்டது.
CM @anandibenpatel & officials met me to discuss drought mitigation & water scarcity situation in parts of Gujarat. https://t.co/TIFWuEGyFq
— Narendra Modi (@narendramodi) May 16, 2016
Was briefed about the extensive efforts towards water conservation in Gujarat. Glad to see progress being made in micro-irrigation.
— Narendra Modi (@narendramodi) May 16, 2016
Emphasised on value addition in agriculture, cash crops & discussed measures to boost fishery, bee-keeping, pearl culture & seaweed farming.
— Narendra Modi (@narendramodi) May 16, 2016