Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபராக்கா தடுப்பணைத் திட்டத்தின் நிலத்தை தேசிய உள்ளூர் நீர்வழிப்பாதை ஆணையத்துக்கு மாற்றி அந்த இடத்தில் புதிய வழித்தடத்தை அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல்.


பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஃபராக்கா தடுப்பணை திட்டத்தின் 14.86 ஏக்கர் நிலத்தினை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் இந்திய உள்ளூர் நீர்வழிப் பாதை ஆணையம், தற்போது ஃபராக்காவில் உள்ள வழித்தடத்திற்கு அருகே புதிய வழித்தடம் அமைப்பதற்காக நிலம் மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.

அதன் விபரங்கள் பின்வருமாறு :

1) மத்திய நீர் வளத்துறை அமைச்சகம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள ஃபராக்கா தடுப்பணை திட்டத்துக்கு சொந்தமான 14.86 ஏக்கர் நிலத்தினை, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தின் கீழ், ஃபராக்காவில் புதிய வழித்தடம் அமைப்பதற்காக மாற்றுவது.

2) இந்த நிலத்தின் மதிப்பு ரூபாய் 2,35,80,160/- (ரூபாய் இரண்டு கோடியே, முப்பத்தைந்து லட்சத்து எண்பது ஆயிரத்து நூற்று அறுபது ரூபாய் ஆகும்). இந்திய உள்ளூர் நீர்வழிப் பாதை ஆணையம் இந்த தொகையினை செலுத்தும்.

3) ஃபராக்காவில் வழித்தடம் அமைப்பது, நீர் வழிப்பாதை திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த புதிய வழித்தடம் கப்பல் போக்குவரத்தை எளிதாக்கும்.

ஃபராக்காவில் புதிய வழித்தடம் அமைப்பதன் பலன்கள் பின்வருமாறு :

1) தற்போது உள்ள வழித்தடம் மூலமாக, அவ்வழியே வரும் கப்பல்களை சரியாக கையாள முடியவில்லை. தற்போது உள்ள வழித்தடத்தின் வழியே கப்பல் செல்ல அதிக நேரம் ஆகிறது. ஆகையால் அதன் அருகே ஒரு கூடுதல் வழித்தடத்தை கட்டுவது கப்பல்கள் எளிதாக சென்று வர உதவுவதோடு, அவ்வழியே வரும் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சரக்கு போக்குவரத்தையும் அதிகரிக்கும். நீர் வழிப்பாதைத் திட்டம் நிறைவேறினால் போக்குவரத்து கூடும்.

2) தற்போது உள்ள வழித்தடத்தை சரி செய்வதோ, மேம்படுத்துவதோ, நவீனப்படுத்துவதோ, அதிக நேரம் பிடிப்பதோடு, அந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாமலும் போகும். புதிய வழித்தடம் அமைப்பது கப்பல் போக்குவரத்துக்கு தடை ஏற்படாமல் புதிய வழித்தடம் அமைக்க உதவும்.

3) கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும், இந்திய உள்ளூர் நீர்வழிப் பாதை ஆணையம் உள்ளூர் நீர்வழிப் பாதையில் கப்பல் போக்குவரத்து போன்றவற்றை கட்டுப்படுத்தும் ஆணையமாகும். ஆகையால், புதிய வழித்தடத்தை கட்டவும், பராமரிக்கவுமான அதிகாரம் அந்த ஆணையத்துக்கு உண்டு.

இந்த புதிய வழித்தடம் அமைக்கும் பணி, ஃபராக்காவில், பங்களாதேஷுடன் கங்கை நீரை பகிர்ந்து கொள்ளும், 1996-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கங்கை ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை, மத்திய நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை தூய்மைப்படுத்தும் அமைச்சகத்தோடு இணைந்து ஃபராக்காவில் புதிய வழித்தடம் அமைக்கும் பணி கப்பல் போக்குவரத்துக்கு இடையூறின்றி செயல்படுத்தப்பட வேண்டும்.

பின்னணி : உலக வங்கி உதவியுடன், இந்திய உள்ளூர் நீர்வழிப் பாதைகள் ஆணையம், நீர் வழிப்பாதை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலம், அலகாபாத் – ஹால்தியா பகுதியில் கங்கை – பாகீரதி ஹூக்ளி பாதையை பெருக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஃபராக்கா தடுப்பணைத் திட்டத்தின் கீழ், ஏற்கனவே ஒரு வழித்தடம் 1987 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடம் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

2014 ஆகஸ்ட் மாதம் நடந்த உலக வங்கியின் ஆய்வு, தற்போது உள்ள வழித்தடத்தை மேம்படுத்தவும், புதிய வழித்தடம் அமைக்கவும் ஆலோசனை கூறியது. நீர் வழிப்பாதைத் திட்டத்தின் நோக்கத்தினை நிறைவேற்ற, தற்போது உள்ள வழித்தடம் நீரின் போக்குக்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும். ஃபராக்காவில் புதிய வழித்தடம், சரியான இடத்தில் அமைக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

*****